ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!
Published on

ங்க உறவினரின் மகள் நந்தினி, ஜெர்மனியில் மேற்படிப்புப் படிக்கிறாள். அவளிடம் பேசியபோது, சாப்பாடு பற்றிப் பேச்சு வந்தது.

"சமைக்கிறதுகூட பெரிய விஷயம் இல்ல, ஆன்ட்டி… சமைச்சதுக்கு அப்புறம் பாத்திரம் கழுவுறதுதான் கொடுமையா இருக்கு. அதுக்கு பயந்துகிட்டே ரெடிமேட் உணவு, ஹோட்டல்னு சமாளிக்கிறேன்"" என்றாள்.

நந்தினியின் பேச்சில் உண்மை இல்லாமல் இல்லை.

புளி, செங்கல் பொடி, கோல மாவு, சாம்பல், தேங்காய் நார், பூந்திக்கொட்டை சகிதம் பெண்கள் அடுக்களைப் பாத்திரங்களை 'தேயோ தேய்' என தேய்த்தக் காலங்கள் என் நினைவில் வந்து போனது. கரி பிடித்த பித்தளைப் பாத்திரங்கள், செம்புக் குடங்கள், இரும்பு வாணலிகள்… என எப்படித்தான் துலக்கினார்களோ… அதுவும் கிணற்றில் தண்ணீர் இறைத்து…?

இப்போது லிக்விட் சோப்பில், எவர்சில்வர் பாத்திரம் தேய்க்கவே கடுப்ஸ் ஆகுது!

  • முப்பொழுதும் பாத்திரம் தேய்த்து கைரேகை தேய்ந்து போன இந்தியப் பெண்கள் போல, அமெரிக்கப் பெண்களும் பாத்திரம் கழுவக் கஷ்டப்பட்டார்கள் போலும்! அதைக் காண சகிக்காத ஓர் அமெரிக்கப் பெண் "யாரும் கண்டுபிடிக்கலைன்னா… நான் கண்டிப்பா செய்வேன்னு" சவால்விட்டு கண்டுபிடிச்சதுதான் 'டிஷ் வாஷர்!' 'Josephine Garis Cochrane' (இனிமே சுருக்கி 'ஜோ'னு கூப்பிடுவோம்!) வீட்டுல எல்லாருமே கண்டுபிடிப்பாளர்கள், இன்ஜினியர்கள். 19 வயசுல கல்யாணம். ஜோவின் கணவர் பிஸினெஸ் மேன் என்பதால, அவங்க வீட்டுல அடிக்கடி பெரியப் பெரிய பார்ட்டிகள் நடக்குமாம்!

அப்ப, திருமதி ஜோ, தனக்கு குலதனமா வந்த அபூர்வமான சீன பீங்கான் தட்டு, பாத்திரங்கள்ல விருந்து பரிமாறுவாராம். விலையுயர்ந்த அந்தப் பாத்திரங்களின் அருமை, பெருமை தெரியாத வேலைக்காரங்க, பலசமயம் அவற்றைக் கொத்திக் கீறிப் பாழ்படுத்தி விடுவதும், கவனக்குறைவாக உடைப்பதும் செய்யவே, ஜோவுக்கு வெறுப்பான வெறுப்பு!

"சுத்தமாகவும், சேதமில்லாமலும், அதே சமயம் விரைவாகவும் பாத்திரங்களைக் கழுவ ஏதாவது வழி இருக்கா?"ன்னு யோசிச்சுக்கிட்டே இருப்பாங்களாம்.

45 வயசுல, ஜோவை, பெரும் கடனாளி ஆக்கிவிட்டு, அவரது கணவர் இறந்து போகவே, திருப்புமுனை போல ஜோவுக்கு ஓர் ஐடியா!!

கவலையை மறக்க விஞ்ஞானக் கண்டுப்பிடிப்பில் இறங்கிவிட்டார்; அதுவும் எப்படி? தமது பழைய கனவுடன்!  வீட்டுக்குப் பின்புறம் ஒரு ஷெட்டைப் போட்டு, அயராமல் உழைத்து, கடைசியில் அவரது எண்ணப்படியே, பாத்திரம் கழுவும் மிஷினைக் கண்டுபிடித்தே விட்டார்.

ஏற்கெனவே, நிறைய பேர் ஆங்காங்கே டிஷ்வாஷர்களைக் கண்டுபிடித்திருந்தாலும், ஜோவின் கண்டுபிடிப்பு நிறைய சிறப்புகளைக் கொண்டிருந்தது. தனி அடுக்குகள், வெந்நீர் ஜெட் பைப், செம்பு பாய்லர் என அவரது மாடல் கொஞ்சம் அட்வான்ஸ்டாக இருக்கவே 'கிளிக்' ஆகிவிட்டது. பேடன்ட் உரிமை வாங்கி, மார்க்கெட்டிங் செய்வது வரை, அடுத்தடுத்து ஜோ சந்தித்த சவால்கள், சங்கடங்கள், தடைகள் கொஞ்ச நஞ்சமல்ல; நீண்ட நெடியப் போராட்டத்துக்குப் பிறகு 'கிச்சன் எய்ட்' என்ற பெயரில் ஜோவின் டிஷ் வாஷர் பிரசித்திப் பெற்றது. (பின்னாளில் தற்போதைய 'வர்ல்பூல்' கம்பெனி அதை வாங்கிக் கொண்டது தனிக்கதை!)

இதற்காக 2006ல் அமெரிக்காவின் 'National Inventor's Hall of Fame'ல் ஜோவின் பெயர் இடம் பெற்றதோடு, ரோமானிய அரசு 2013ல் ஜோவுக்கு சிறப்புத் தபால்தலை வெளியிட்டும் கெளரவித்தது.

"பெண்களுக்குப் பாத்திரம் கழுவுவது ஒரு சலிப்பான விஷயம்… யாருக்குத்தான் பிடிக்கும் சொல்லுங்க? சமைத்துப் பரிமாறி, களைத்துப் போன கைகளுக்கு உதவவே இதைக் கண்டுப்பிடித்தேன்.

இந்த டிஷ் வாஷரைக் கண்டுபிடிக்க, நான் இவ்வளவு எல்லாம் கஷ்டப்படணும்னு மொதல்லியே தெரிஞ்சுருந்தா, நான் துணிஞ்சுருக்கவே மாட்டடேனோ என்னவோ? ஆனா, நான் நிச்சயமா ஓர் அருமையான அனுபவத்தை இழந்திருப்பேன்!" என்கிறார் ஜோ.

பிராவைக் கண்டுபிடித்தது, 'பார்பி' பொம்மையை உருவாக்கியது என்பதெல்லாம் மட்டுமல்ல… பாத்திரம் கழுவும் மிஷினைக் கண்டுபிடித்ததும் ஒரு பெண்தான்! ஏன்னா, ஒரு பெண்ணின் தேவைகளை ஒரு பெண்ணால்தானே உணர முடியும்?

இன்னொரு முக்கியமான விஷயம் கண்மணீஸ்!

கரெக்டா 183 வருஷத்துக்கு முன்னால, உழைக்கும் மகளிருக்காக, ஓர் ஒத்தாசையான கருவியைக் கண்டுபிடிச்ச ஜோ பிறந்தது ஒரு மார்ச் 8 தினத்தன்று. (மார்ச் 8 – 1839) என்ன ஓர் ஆச்சரியமானப் பொருத்தம்!

அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்து!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com