0,00 INR

No products in the cart.

“நெசவும் கவிதையும் என் இரு கண்கள்” –நெசவுக் கவிஞர் சேலம் சீனிவாசன்

– சேலம் சுபா

 “நான் நெசவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் நெசவுக் கவிஞர் என்று அறியப்படுவதில் பெருமிதமும் கொள்கிறேன்…” என்று தலைநிமிர்ந்து சொல்லும் சீனிவாசன் தன்னை வளர்த்து, அடையாளம் தந்த குலத்தொழிலை உலகறியச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கு அவர் எடுத்துக்கொண்ட யுக்தி கவிதைகள். கவிதை பாடி நெசவைப் பற்றிய விழிப்புணர்வைத் தந்து வருகிறார் இவர்.

ஒரு மனிதனுக்கு அத்தியாவசியத் தேவையான உணவு, உடை, இருப்பிடம். இம்மூன்றில் விவசாயத்திற்கு அடுத்து இடம் பிடிப்பது உடை. அந்த உடைகளை அழகழகான வண்ணங்களில் மனதைக் கவரும் வடிவமைப் புகளில் தங்களின் முழு உழைப்பைத் தந்து உருவாக்கும் கைத்தறி நெசவாளர்களின் பிரதிநிதியாக அவர்களின் இன்ப துன்பங்களைத் தனது கவிதைகளில் வடித்து, நெசவாளர்கள் மட்டுமின்றி மக்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளார் சேலத்தைச் சேர்ந்த சீனிவாசன்.

இவர் நெசவு குறித்த செய்திகளுடன் ‘நெசவதிகாரம்’ மற்றும் ‘தறியின் மொழி’ எனும் சுவாரஸ்யமான கவிதை நூல்களை வெளியிட்டு சமூகத்திலும் நெசவாளர்களின் இடையிலும் தனக்கென ஒரு அங்கீகாரத்தைப் பெற்றவர். நெசவின் பெருமைகளைப் படம்பிடித்துக் காட்டும் இசை ஆல்பத்தில் தனது கவிதைகளால் தாக்கத்தைத் தந்தவர். தற்போது நெசவின் மகத்துவத்தை உணர்த்தும் ‘ஜரிகை மீன்கள்’ எனும் நாவலையும் எழுதி வருபவர்.

ஆங்கிலேயர் ஆட்சியில் நிகழ்ந்த அந்நியத் துணிகளைப் புறக்கணிப்போம் என்ற போராட்டத்தின் அடையாளமாக சுதேசி இயக்கம் துவங்கப்பட்ட நாளான ஆகஸ்ட் ஏழாம் தேதி ‘தேசிய நெசவாளர் தினம்’ அல்லது ‘தேசிய கைத்தறி தினம்’ கொண்டாடப்படுகிறது. தன்னைப்பற்றி மட்டுமல்லாமல் தற்கால நெசவாளர்களின் நிலை மற்றும் நெசவாளர்களின் வாழ்க்கை குறித்த பல விசயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் சீனிவாசன். இனி அவர்…

“என் சொந்த ஊர் சேலம்தான். எட்டாவது வரைதான் படித்தேன். எட்டாவது விடுமுறையில் மிதிப்பலகையின் மீது ஏறி நின்று மிதிக்கத் துவங்கினேன். அதன்பின் படிப்பின் மேல் நாட்டம் வரவில்லை. அன்றே பள்ளி நூல்களுக்கு விடுதலை தந்து வண்ண நூல்களே என் வாழ்க்கை ஆயிற்று. சிறு வயதில் இருந்தே தமிழின் மீது அதிகப் பற்றும் ஆர்வமும் இருந்தது. கவிதைகள் எழுதும் பழக்கமும் இருந்ததால்  இந்த 35 வருசமா நெசவோடவும், கவிதை களோடும் என் வாழ்க்கை பயணித்து வருகிறது.

அன்றாட வாழ்விலும், திரைப்படங்களிலும், நெசவு என்றாலே வறுமை என்று சித்தரித்து, நெசவுத்தொழில் என்றால் வருமானமற்றது எனும் ஒரு பக்க நிலையை மட்டும் இன்றைய இளைஞர்கள் மனதில் விதைத்து விட்டார்கள். ஆனால், அவர்களின் மகிழ்ச்சியான பக்கங்களை வெளிப் படுத்த தவறிவிட்டனர். உழைப்பு இருந்தால் வாழ்க்கைக்குப் போதுமான வருமானம் கண்டிப்பாக நெசவில் காணலாம் என்பதுதான் உண்மை.

பலரும்  இடையில் சில தொழில்களுக்குச் சென்று நெசவுதான் சிறந்தது என்று உணர்ந்து திரும்ப நெசவுக்கே வந்தவர்கள்தான்.

 “பல தொழில் செய்தும் பலனில்லை என்பார்
குலத்தொழிலாய் நெய்த பலர்”

இந்தப் போக்கை எப்படியாவது நீக்கி வருங்காலத்தில் நிறைய இளைஞர்கள் நெசவுக்கு வரவேண்டும் என்பது என் குறிக்கோள். அதற்கு என்ன வழி என்று சிந்தித்ததில் தமிழ் எனக்கு கைகொடுத்தது. இதுவரை நெசவு குறித்த படைப்புகள் அதிகம் மக்களிடையே சென்று சேரவில்லை எனும் குறையும் இதனால் நிறைந்தது.

நெசவாளர் என்று அறியப்பட்ட திருவள்ளுவர் வாழ்வின் அனைத்தையும் திருக்குறள் மூலம் வெளிப்படுத்தி இருந்தாலும் நெசவு எனும் அதிகாரத்தை அவர் எழுதவில்லை என்பது எனக்குள் பெரும் குறையாகத் தெரிந்தது. அந்த தாக்கத்தினால்தான் குறள் வெண்பாவைப் பயின்று தறிக்குறள்கள் என்ற தலைப்பில் நெசவதிகாரம் நூல் எழுதினேன். மேலும், எனக்கான
தனி அடையாளத்தையும் இந்தக் கவிதைகளும் குலத்தொழிலும் பெற்றுத் தந்துள்ளது பெருமிதமே.

ஆந்திராவில் செம்மரக் கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்கள் நம் தமிழகத்தைச் சேர்ந்த வேலூர், ஆரணி, திருவண்ணாமலைப் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் என்பது செய்தி.  இதுபோன்ற நெசவு சார்ந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தகுந்த தொழில் வாய்ப்புகள் இருந்தால் ஏன் தவறான தொழிலை நாடிச் செல்லப்போகிறார்கள்? அந்தப் பகுதிகளில் நெசவுத்தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தினால் இது போன்ற குற்றங்களில் நம் தமிழர்கள் ஈடுபடாமல் தடுக்கலாமே?  நெசவைக் கற்றுத் தரும் ஆசான்களும் இன்று குறைந்துவிட்டனர் என்பதும் வேதனையே.

இதைத் தவிர்க்க ஒவ்வொரு ஊருக்கும் நெசவுத்தொழில் பழகும் பயிற்சிப்பட்டறைகளை அரசு உருவாக்கினால் நெசவினால் மேலும் பல குடும்பங்கள் வாழ வழிவகுக்கும். முக்கியமாக படித்தும் வேலையின்றித் திண்டாடும் இளைஞர்கள் நெசவில் இறங்கி வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். சமூகத்தின்பால் கொண்ட அக்கறையால் இடைவிடாமல் பேசி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தவர்  சற்று நிறுத்தி, மேலும் சில ஆதங்கங்களை வெளிப்படுத்தினார்.

“அன்று இருந்ததுபோல் கைத்தறி நெசவாளர்களின் நிலை இன்று மதிப்புமிக்கதாக இல்லை என்பது ஒரு சாராரின் கருத்து. அறிவியல் முன்னேற்றத்தினால் பாதிக்கப்பட்டது பெரும்பாலும் கைத்தறி நெசவுத் தொழில்தான் எனலாம். விசைத்தறிகளின் ஆதிக்கம் பெருகிவிட்ட காரணத்தினால் உண்மையான கைத்தறியின் விலை அதிகம்போன்ற ஒரு மாயத்தோற்றம் மக்களிடையே இருப்பதால் அதை விரும்புபவர்களும் நம்பிக்கை இழக்கிறார்கள்.

இன்னொரு காரணம் அசல் கைத்தறிகளின் இடையே ஊடுருவும் தரமற்ற போலிகள் விற்பனை செய்யப்படுவதால் ஏமாற்றம் அடைகிறார்கள். பெரிய பெரிய ஜவுளிக்கடைகளில் விசைத்தறி ரகங்கள், கைத்தறி ரகங்கள் எனப் பிரிவுகளை ஏற்படுத்தினால் இது போன்ற போலிகளை வாங்காமல் தவிர்க்க முடியும். குறிப்பாக எது கைத்தறி என்பதை கண்டறிவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் இரக ஒதுக்கீடு சட்டத்தை இன்றைய காலத்திற்கேற்ப மறுசீராய்வு செய்வது அவசியமாகிறது.

இது போன்ற போலி ரகங்களை விற்பனை  செய்பவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இதனால் பாதிக்கப் படும் உண்மை கைத்தறி நெசவாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைவர். ஆனாலும் பாரம்பர்ய மிக்க கைத்தறி ரகங்களுக்கு மக்களிடையே இன்றும் நல்ல வரவேற்பு உள்ளது.

ஜாதி மத பேதமின்றி அனைவரையும் கைத்தறி நெசவுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். நெசவுக்கு உகந்த பகுதிகளைக் கண்டறிந்து அங்கு பயிற்சிப் பட்டறைகள் கொண்டுவந்து நெசவை ஊக்கப்படுத்தினால் பல குடும்பங்கள் வாழ்வாதாரம் அடையும். இதனால் அந்தப் பகுதியே நெசவின் அடையாளமாகத் திகழும்.

அனைத்துத் துறைகளிலும் நவீன மாற்றங்கள் வந்து முன்னேறியுள்ள நிலையில், கைகளினால் நெய்யப்படும் கைத்தறி தொழிலிலும் நவீன உத்திகளை இயந்திரங்கள் மூலம் புகுத்தினால் இளைய தலைமுறையும்  இதற்குள் ஆர்வத்துடன் வருவார்களே” என்கிறார் இவர்.

நெசவாளிகளுக்காக தனிப்பட்ட கவனம் எடுத்து, பல நல்ல திட்டங்களைக் கொண்டு வர ஆட்சியாளர்களின் கவனத்திற்கு தனது கவிதைகளையே முன் வைக்கிறார் சீனிவாசன்.

பஞ்சும் பட்டும் விண்ணை முட்டி
விலையேறிக் கிடக்கிறது
பதுக்கல் பேர்வழிகளின் காட்டில்
பெருமழையாய் பொழிகிறது
தேனும் பாலும் ஆறோட கேட்கவில்லை
பாவும் நூலும் மலிவாய்க்
கிடைத்தால் போதும்
என்று பணிவாய்க் கேட்கிறார் கவிதையில்

இவரின் பெற்றோரான ஹரிராமன் –  ராஜாமணி அம்மாவுக்கு சிறந்த மகன் என்று பெயர் பெற்றுத் தந்திருக்கும் சீனிவாசனின் மனைவி மல்லிகா. மகள் லலிதா ராணி, மகன் கிருஷ்ணசங்கர்.

தாயாருடன் சீனிவாசன்

கைத்தறியும் இசைத்தறியும் இணைந்த வாழ்வில் மகிழ்ச்சியாக வாழும் நெசவாளர் சீனிவாசன் போன்றவர்களால் நம் நாட்டின் பாரம்பர்யமான கைத்தறி மேலும் மேன்மையடையும் என்பது உறுதி.

தனது படைப்புகளுக்காக தமிழ்ச்சங்கங்கள் தந்த பல விருதுகளையும், பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்றிருக்கும் நெசவுக்கவி சேலம் சீனிவாசனை வாழ்த்தி விடைபெற்றோம்.

சேலம் சுபா
பெயர் சுபா தியாகராஜன். பிறந்த ஊர் சேலம் என்பதால் சேலம் சுபா எனும் பெயரில் முன்னணி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். கதை கவிதை கட்டுரைகள் எழுதினாலும் தன்னம்பிக்கையாளர்களின் நேர்காணல் இவரது சிறப்பு. கல்கி குழும இணையதளம், கல்கி ஆன்லைன்.காம் மற்றும் கல்கியின் வலையொலி, காணொளி வாயிலாகவும் பங்கேற்பதில் பெருமிதம் இவருக்கு.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...