0,00 INR

No products in the cart.

போற்றி செல்வனும் போளியும்!

-ஆர். மீனலதா, மும்பை
ஓவியம்: பிரபுராம்

ஆவணி அவிட்டம் 11.08.22

“பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?”

லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து,

“என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!”

“நோ குழைசல்! நோ வழிசல்! ஆவணியாவட்டம் வரது!”

“வருஷா வருஷம் வரதுதானே! இந்த வருஷம் வரது அதிசயமா?”

“குதர்க்கமா பேசாதே! இந்த வருஷம் போளி செய்யேன்!”

“போ…ளியா? 67 வயசுல என்ன திடீர் ஆசை?”

“ஆசை வரக் கூடாதா என்ன? உனக்கு 64. எனக்கு 67. நம்ம கல்யாணம் முடிந்தபிறகு வந்த முதல் ஆவணியாவட்ட சமயம், நீ போளி பண்ணியது. அப்புறம் கிட்டத்தட்ட 40 வருஷங்களா போளி அம்பேல்.”

“அப்ப, உங்க அம்மாகூட இருந்து சொல்லிக் கொடுத்தாங்க. தனியா எனக்குச் செய்யத் தெரியாது. அதுக்குப் பிறகு, ஆஃபீஸ், வேலை, டூர்னு நீங்க பிஸி. சமூகசேவை, லேடீஸ் க்ளப்னு நான் பிஸி. சமையல் எல்லாம் ருசியாகத்தானே செய்யறேன். போளி மட்டும் ஆர்டர் பண்ணிட்டா போச்சு!”

“வேண்டாம்! ஏதோ மனசுல தோணினதைச் சொன்னேன். நீதான் பெரிய டெக்கி (Techie) ஆச்சே! கூகுள்ல பாத்து…!”

“வேற வேலை இல்லை. கடந்த வருஷமா, கோவிட், லாக்டெளன்னு லேடீஸ் க்ளப்ல, மெம்பர்ஸ்ஸுக்கு ஒரு ப்ரோகிராமும் நடத்த
முடியலை!”

“நடத்தேன்! அதுக்கும் போளிக்கும் என்ன சம்பந்தம்?”

“ம்! சம்பந்தம் இருக்கே!  இப்ப Restrictions முடிஞ்சுட்டதால வரப்போற பிள்ளையார் சதுர்த்தி சமயம், பிள்ளையார் சுழி போட்டு ப்ரோகிராம் பண்ணறதா ப்ளான்!”

“பிள்ளையார் சுழிதானே! தாராளமா போடு! டைம் இருக்கே. ஆனா ஆவணியாவட்டம் இப்ப வருது. போ…ளி…!”

“அதெல்லாம் முடியாது. பொன்மலர் ஒரு தரம் சொன்னா, சொன்னதுதான். Zoom மீட்டிங் அது – இதுன்னு எக்கச்சக்க வேலை. வி.ஐ.பிக்களை மீட் பண்ண அப்பாயிண்ட்மென்ட் வாங்கியிருக்கேன். செகரட்டரி போஸ்ட்ன்னா சும்மாவா? இனிமேல் பிஸியோ – பிஸிதான். உங்களுக்குப் போளி சாப்பிட ஆசையா இருந்தா, ஃபேமஸ் ஸ்வீட்ஸ் கடைல வாங்கிச் சாப்பிடுங்க. எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு. நா கிளம்பறேன். சமையல் ரெடி. சாப்பிட்டு உங்க வேலையைப் பாருங்க. பை! பை!”

பொன்மலர் சென்றுவிட்டாள். இவளைப் போய்த் தாங்கித் தடுக்கிடுவானேன். யோசித்தார். பக்கத்து வீட்டு அனந்து, அவரது சொந்தக்காரர் வீட்டு விசேஷத்திற்காக ஒரு வாரம் வெளியூர் சென்றிருக்க, அவர் வீட்டுச்சாவி தன் கையில்தானே. போளி செய்வதென்ன பெரிய வேலையா? பொன்மலர் ரொம்பத்தான் அலட்டிக்கொள்கிறாள். தாமாகவே செய்யத் தீர்மானித்து விட்டார்.

கூகுளில் பார்த்து தேவையான சாமான்களை வாங்கி, வந்து அனந்து வீட்டு கிச்சனில் வைத்து போளி செய்து விடலாமென ப்ளான் பண்ணினார். அப்படியே சாமான்களை எடுத்துக்கொண்டு அனந்து வீட்டுக்குச் செல்லும் முன்பாக,

“தன்னுடைய பழைய சிநேகிதர்களைப் பார்க்கச் செல்வதால் வர லேட்டாகும். உன்னுடைய அருமையான சமையலைச் சாப்பிட்ட பின் செல்கிறேன்” என பொன்மலருக்கு வாட்ஸ்அப் மெசேஜ் போட்டார்.

எப்படியோ கூகுளில் பார்த்து – பார்த்து 10 போளிகளை செய்தபின், ஒன்றை எடுத்து டேஸ்ட் செய்கையில், பரவாயில்லை. ருசியாக இருந்தது. “சபாஷ்டா போற்றி!” தன்னைத் தானே தட்டிக் கொடுத்தார். போளிகளை ஒரு டப்பாவில் எடுத்துக்கொண்டு, “போற்றியா? கொக்கா? போற்றி போளி போற்றி!” என சந்தோஷத்தில் குதிக்கையில், கால் சுளுக்கியது. நொண்டியவாறே வீடு திரும்பியவர், போளி டப்பாவை, தனது அலமாரியினுள் ஒளித்து வைத்து, மீண்டும் அனந்து வீடு சென்று படுத்து தூங்கியவர் எழுந்திருக்கையில் மாலை மணி ஆறு.

அப்போதுதான் வெளியிலிருந்து வருவதுபோல மெதுவாக வீட்டினுள் நுழைகையில், பொன்மலர் வீட்டில் இருந்தாள்.

“என்ன  நொண்டியாட்டம்? டென்னிஸ் விளையாடினீங்களா? விம்பிள்டன்தான் முடிஞ்சு போச்சே!” என்றவளிடம்,

“கேலி செய்யறயா? பரவாயில்லை. கல் தடுக்கிடுத்து. அதான்!” அவளின் பதிலை எதிர்பார்க்காமல், உள்ளே சென்றார்.

றுநாள் ஆவணியாவட்டம். வடை, பாயசத்துடன் சமையல் செய்திருந்தாள் பொன் மலர். போற்றிச் செல்வன் அருகாமையில் உள்ள கோயிலுக்குச் சென்று பூணூல் மாற்றி வந்த பிறகு, ஸர்ப்ரைஸாக போளி டப்பாவை எடுக்கலாமென எண்ணியிருந்தார்.

ஆனால், அவர் வீட்டினுள் நுழைகையில், பொன் மலரின் நெருங்கிய தோழி பத்மினியும் அவளது 2 பேத்திகளும் வந்திருந்ததால், போளி டப்பாவை எடுக்கவில்லை.

“எல்லோரும் சேர்ந்தே சாப்பிடலாம்” என பத்மினி கூற, சாப்பிட ஆரம்பித்தனர். இடையே உள்ளே சென்ற பொன்மலர் வெளியே வந்து, போளியை இலையில் வைக்கையில், திடுக்கிட்டு நிமிர்ந்தார் போற்றி. பொன்மலரை முறைத்தார். அவளோ அதைக் கண்டுகொள்ளாத மாதிரி, “பத்து! போளி எப்படி?” என்கையில், “சூப்பர் டேஸ்ட்” என்றாள் பத்மினி. வாய் பேசாமல் சாப்பிட்டார் போற்றி.

“அடிப்பாவி! சிரமப்பட்டு நான் செய்து ஒளித்து வைத்திருந்ததை எப்படியோ மோப்பம் பிடித்து, எடுத்து வந்து, தான் செய்ததாக காட்டிக்கொண்டு விட்டாளே. தில்லாலங்கடிதான்!” மனதிற்குள் பொருமினார்.

அவர்கள் சென்றதும், உள்ளே அவசர அவசரமாகச் சென்று அலமாரியைத் திறந்து பார்க்கையில், போளி டப்பா, போளியுடன் அப்படியே இருந்தது.

“அப்ப…? அது…! பொன் சாப்பிட கொடுத்தது? ஃபேமஸ் ஸ்வீட்ஸ் ஆ? பொறுக்க முடியாமல் பொன்மலரிடம் கேட்க, “போற்றி! நீங்க இவ்வளவு வருஷம் கழிச்சு ஆசைப்பட்டுக் கேட்டதால, என் ஃப்ரண்ட் சியாமளி வீட்டிற்குச் சென்று, கூகுளில் பார்த்து 10 போளி நானே செய்துகொண்டு வந்தேன். சியாமளி 2 மாசமா வெளிநாட்டுல இருக்கறதால, அவள் வீட்டுச் சாவி என் கையில்தான். சர்ப்பரைஸா இருக்கட்டுமேன்னுதான் அங்க போய் செஞ்சேன்! என்ன…! டேஸ்ட்டியா இருந்ததா?”

“டேஸ்ட்டிதான் பொன்! அவள் கைகளைப் பிடித்து, கண்களில்
ஆனந்தக் கண்ணீர் பெருக அன்புடன் முத்தமிட்ட போற்றி, மெதுவாக, தான் செய்த போளியை அவளிடம் கொடுத்து விபரம் சொன்னார்.

அந்த வருட ஆவணியாவட்டம் டபுள் தமாக்கா போளி கொண்டாட்டம்!

2 COMMENTS

மீனலதா
ஆர். மீனலதா, தொலைபேசி நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். விருதுகள் பல பெற்றவர். சிறந்த நாடக நடிகர், பேச்சாளர், எழுத்தாளர், சினிமா, இசை, கவிதை, சமையல், Ad.supervision, விளையாட்டு என பல்வேறு துறைகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்கும் ஆல்ரவுண்டர். நிகழ்ச்சி அமைப்பாளரும்கூட.. பழகுவதற்கு இனிமையான பண்பாளர். பலருக்கும் முன்னோடியாக விளங்குபவர். மங்கையர் மலரின் மும்பை நிருபர். உற்சாக ஊற்று.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...

மணிமேகலையும் வைகாசி பெளர்ணமியும்!

0
வே. இராமலக்ஷ்மி, திருநெல்வேலி ஒவியம் : லலிதா  வைகாசி பெளர்ணமியோடு கூடிய மற்றோர் வரலாறு மணிமேகலை என்னும் நூலில் உள்ளது. மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களில் ஒன்று இந்த மணிமேகலை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின்...