வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவப் பயணம்!

வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவப் பயணம்!
Published on
தொகுப்பு: எம்.கோதண்டபாணி

 கல்கி குழும 'பொன்னியின் செல்வன்' டீசர் வெளியீடு

மரர் கல்கி அவர்களின் அழியாப் புகழ் காவியமான, 'பொன்னியின் செல்வன்' சரித்திர நாவல், உலகமெலாம் வாழும் தமிழ் அறிந்த நல் உள்ளங்கள் அனைவர் மனதிலும் அகண்ட காவிரியாகப் பாய்ந்து, ஆகாச கங்கையாகப் பொங்கிப் பிரவாகித்து, நீக்கமற நிறைந்து வாழ்கிறது என்பதை அனைவரும் அறிவோம். சோழர் பெருமை பேசும் அந்த நாவலை இனி வரும் இளைய தலைமுறையினர் அறியவும், அந்த சரித்திரப் புதினத்தை முன்னெடுத்துச் செல்லும் விதமாகவும், 'பொன்னியின் செல்வன்' பிறந்தகமான கல்கி குழுமம், 'பராக்! பராக்! கல்கியின் பொன்னியின் செல்வன்-வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவப் பயணம்' என்ற ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது.

கல்கி அவர்கள், 'பொன்னியின் செல்வன்' நாவலில் குறிப்பிட்டுள்ள வரலாற்றுப் புகழ்மிக்க இடங்களுக்கு வந்தியத்தேவன் சென்ற ராஜபாட்டையில் மக்கள் பயணித்து அவற்றைக் கண்டு களித்து, சரித்திர நிகழ்வுகளை அனுபவித்து மகிழ வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இந்த ஆவணப் படத்தை கல்கி குழுமம் காணொளித் தொடராக தனது Kalki Online You Tube Channel வழியாக வெளியிட உள்ளது.

'பொன்னியின் செல்வன்' டீசர் வெளியீடு
'பொன்னியின் செல்வன்' டீசர் வெளியீடு

மிகத் துல்லியமாக, உயரிய தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப் பட்டுள்ள அந்த ஆவணப் படத்தை அறிமுகப்படுத்தும்விதமாக, பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகத்தினர் சந்திப்பு, Le Magic Lantern ப்ரிவியு திரையரங்கில் 03.08.2022 அன்று மாலை கல்கி குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்டது. விழாவுக்கு வருகை தந்த அனைத்து பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகத்தினரை கல்கி குழும தலைமை செயல் நிர்வாகி  லக்ஷ்மி நடராஜன்  வரவேற்றுப் பேசினார்.

பின்னர், அந்த சரித்திரப் பயணத்தின் அனுபவத்தை 'காலச்சக்கரம்' நரசிம்மா அவர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார். ஆவணப் படத்தின் முன்னோட்டத்தை திருமதி சீதா ரவி அவர்கள் வெளியிட, அந்த அகண்ட திரையில் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்ட, 'பராக்! பராக்! கல்கியின் பொன்னியின் செல்வன்-வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவப் பயண'த்தின் டீசர் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. தமது ஓவியங்கள் வாயிலாக இறைப்பணி செய்துவரும் ஓவியர் பத்மவாசனின் ஓவியங்கள் இந்த ஆவணப்படத்தில் ஆங்காங்கே சேர்க்கப்பட்டிருந்தது பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இனி, அந்த சந்திப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்ட முக்கியமான சில தகவல்களைக் காண்போம்.

லக்ஷ்மி நடராஜன்
லக்ஷ்மி நடராஜன்

ல்கி குழும தலைமை செயல் நிர்வாகி  லக்ஷ்மி நடராஜன் அவர்கள் தமது வரவேற்புரையில் பேசும்போது, இந்த படப்பிடிப்பிற்கான எண்ணம் எவ்வாறு தோன்றியது என்று விளக்கிக் கூறினார். 'நம் உடலை வருத்திக் கொண்டாலும் பரவாயில்லை, ரசிக உள்ளங்களை உற்சாகப்படுத்த வேண்டும். ஊர் ஊராகச் சென்றாலும் பரவாயில்லை, உன்னத வெளியீடு ஒன்றைத் தயாரிக்க வேண்டும். பணப்பை சிறிது கிழிந்தாலும் பரவாயில்லை, பார் போற்றும் படைப்பு ஒன்றை ஆவணப்படுத்த வேண்டும். பார்ப்போர் மனதை அது ஈர்க்க வேண்டும், பயணிப்போருக்கு நல்ல வழிகாட்ட வேண்டும் என்று இம்முயற்சியின் நோக்கத்தையும் தெளிவாக எடுத்துரைத்தார்.

'பொன்னியின் செல்வன்' தொடக்கம் ஆடிப்பெருக்கு. அதே ஆடிப்பெருக்கு அன்று இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பும் பட வெளியீட்டின் தொடக்கமும் அமைவதன் பொருத்தத்தையும் குறிப்பிட்டார். சரித்திரம், இலக்கியம், பயணம் என்ற முப்பரிமாண தயாரிப்பாக வெளியாகவிருக்கும் இந்த அனுபவப் பயணம் குறித்த விரிவான செய்திகளை கல்கி குழும இணையதளத்தில் அனைவரும் கண்டு களிக்கலாம் என்று தெரிவித்து, தமது எண்ணங்களை செயல்முறைப்படுத்தி கல்கி குழுமத்துடன் கைகோர்த்து பயணிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும், அழைப்பை ஏற்று வருகை தந்த சக ஊடக அன்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஊடக அன்பர்கள்…
ஊடக அன்பர்கள்…

விழாவின் கேள்வி நேரத்தில், ''பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுக்கும் முன்பு உங்களிடம் அனுமதி கோரப்பட்டதா?" என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கல்கி குழுமத்தின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் திருமதி சீதா ரவி அவர்கள், "பொன்னியின் செல்வன் நாவல் எப்போதோ நாட்டுடைமையாக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் பலர் அதை நாடகமாகப் போட்டார்கள். வீடியோ வடிவிலும் வந்தது. இப்போது திரைப்படமாகவும் எடுக்கிறார்கள். பொதுவுடைமையாக்கப்பட்ட பிறகு யாரிடமும் எதற்கும் அனுமதி பெறத் தேவையில்லை. பொன்னியின் செல்வன் நாவல் சம்பந்தமாக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்" என்று கூறியது அனைவரின் மனதையும் தொட்டது.

ரலாற்றின் மீதுள்ள உண்மையான நேசத்துடனும், ஆர்வத்துடனும், ஆழ்ந்த ஆராய்ச்சியுடனும் இந்தப் பயணத்தை தானே வழிநடத்திச் செல்கிறார் பத்திரிக்கையாளரும், சரித்திர நாவலாசிரியருமான 'காலச்சக்கரம்' நரசிம்மா என்கிற டி.ஏ.நரசிம்மன்.

முப்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, சுவாரஸ்ய தகவல்களுடன் கூடிய விளக்கவுரை, கண்கவர் காமெரா காட்சிகள், நேர்த்திமிகு இசை, பத்மவாசனின் ஓவியங்கள், பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கான பயணக் குறிப்புகள், பயண ஏற்பாடுகள் என்று மிகுந்த ஈடுபாட்டுடனும், கவனத்துடனும், 'போஸ்ட் ப்ரொடக்‌ஷன்' வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

உலகளாவி திரண்டிருக்கும், 'பொன்னியின் செல்வன் ரசிகர்களை ஒன்று திரட்டி, கால யந்திரத்தில் அவர்களைக் கூட்டிச் சென்று சோழர் சரித்திரத்தை நேரடியாக நுகரச் செய்வதும் இம்முயற்சியின் இன்னொரு நோக்கம். ஒன்பது நாட்கள், பத்து மாவட்டங்கள், எட்டு முக்கிய நகரங்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்கள் என அமையும் இப்பயணம், பொன்னியின் செல்வன் தொடங்கும் வீராணம் ஏரியில் ஆரம்பித்து, 'திருகடல்மல்லை' என்கிற மாமல்லபுரத்தில் நிறைவடைவதாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள, 'பொன்னியின் செல்வன்' ரசிகர்கள்  இந்தப் பிரயாணத்திற்கான பதிவினை செய்துகொள்ளலாம். கல்கி குழுமம் வெளியிடவிருக்கும் இந்தக் காணொளித் தொடர்களே அவர்களை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்லும்.

Parry Travels நிறுவனத்தினர்
Parry Travels நிறுவனத்தினர்

இந்த வரலாற்று அனுபவப் பயணத்திற்கான ஏற்பாடுகளை Parry Travels நிறுவனத்தினர் செய்துத் தர முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 03.08.2022 முதல் இந்த சரித்திரப் பயணத்திற்கான முன்பதிவுகள் தொடங்கி விட்டன. செப்டம்பர் மாதம் 10ம் தேதிக்கு முன்பாக பதிவு செய்தால் பயணக் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.

'பராக்! பராக்! கல்கியின் பொன்னியின் செல்வன்-வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவப் பயணம்' ஆவணப்படத்தின் நான்கு மணி நேர பிரம்மாண்ட தயாரிப்பான பதினைந்து வீடியோ தொகுப்பின் வெளியீட்டு விழா செப்டம்பர் 24, 2022 சனிக்கிழமையன்று நடைபெற உள்ளது. 'உள்ளங் கையில் பிரம்மாண்டமாக' விளங்கப்போகும் இந்தக் காணொளிகளை கல்கி ஆன்லைன் யூ-டியூப் சேனல் வழியாக தொடராக அனைவரும் இலவசமாகக் கண்டு மகிழும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பலரும் தத்தம் கண்ணோட்டத்தில் இந்த சரித்திரக் காவியத்தை அணுகினாலும், அமரர் கல்கியின் பார்வையில் இருந்து தடம் புரளாமல், கல்கி குழுமம் இந்தப் படப்பிடிப்பை மிகுந்த கவனத்துடன் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படக் குழுவினருடன் லக்ஷ்மி நடராஜன்
படக் குழுவினருடன் லக்ஷ்மி நடராஜன்

முப்பது நாட்களுக்கும் மேலாக, ஐம்பத்து ஐந்து இடங்களுக்குச் சென்று  படப்பிடிப்பு நடத்திய Busiupadvt. ராஜ்கமல் குழுவினரின் முயற்சியை பாராட்டியே தீர வேண்டும். அத்துடன் செவிகளுக்கு விருந்தாக தம் இசையை சேர்த்துள்ளார் மோகன்ராம்.

மேலும் தகவல்களுக்கும் பயணப் பதிவிற்கும் www.kalkionline.com என்ற இணையதளத்தை அணுகலாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com