0,00 INR

No products in the cart.

அழிந்து வரும் தொழில்! மீட்டெடுக்கும் வழி என்ன?

-சேலம் சுபா

சேலத்தின் அதிமுக்கியமான பகுதி அது. ஒருபுறம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மறுபுறம் தீயணைப்புத்துறை அலுவலகம்,  அரசு மருத்துவமனை என்று மக்கள் அதிகமாக வந்து போகும் இடம். அங்கு நூறு வருடங்கள் பழமையான மரத்தின் நிழலில், கொளுத்தும் வெயிலிலும் தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று நித்தமும் மூங்கிலும் கையுமாக உழைக்கும் அந்தத் தம்பதியை அறியாதவர்கள் குறைவு. காரணம் அவர்கள் செய்யும் மூங்கில் பொருட்கள்.

அந்தக் காலத்தில் நம் பாட்டி வீடுகளில் வெங்காயம், பூண்டு, முட்டை, போன்ற பொருட்களை போட்டு வைக்கும் கூடைகளையும் அதன் மணத்தையும் இன்றும் நம்மால் மறக்க முடியாது . ஆனால் இத்தொழில் செய்பவர்கள் குறைந்து வரும் சூழலில்  இனி வரும் சந்ததிகளுக்கு இந்த பாக்கியம் கிடைக்குமா என்பது சந்தேகமே.

மூங்கிலால் கூடைகள், தட்டு, முறம், பிரமனை, விசிறி,ஜன்னல் பாய்கள் என்று இவர்கள் முடையும் நேர்த்தியான பொருட்களைத் தேடி சேலத்தில் பெரும்பாலோனோர் இங்கு வருகின்றனர். கடும் வெயிலையும் குளிர் காற்றாக மாற்றும் சக்தி இந்த மூங்கிலுக்கு உண்டு. இந்தத் தொழிலில் கடந்த அறுபது வருடங்களுக்கும் மேல் இதே இடத்தில நீடித்து நிலைப்பது என்பது இந்தக் காலத்தில் சாத்தியமா? எனும் ஆச்சரியக் கேள்வியுடன் அங்கு சென்றோம்.

படு பிசியாக ஜன்னல் பாய்களை தயார் செய்து கொண்டிருந்த வெங்கடேசனும் அவர் மனைவி சாந்தவள்ளியும் கிடைத்த சொற்ப ஓய்வில் நம்மிடம் பகிர்ந்தவை இதோ…

ங்க அப்பா காலத்திலிருந்தே இதே தொழில்தான். அப்பா சீனிவாசன், அம்மா கமலம்மாள். இருவரும் இங்கதான் தொழில் செய்தாங்க, அப்படியே நானும் இதுக்கே வந்துட்டேன். இது எங்க பரம்பரைத் தொழில். தரமான  மூங்கிலை அதெற்கென உள்ள மண்டிகளில் வாங்கி அதை நீளவாக்கில் வெட்டி காய வைத்துப் பதப்படுத்தி தேவைக்கேற்றவாறு அவற்றை செதுக்கி முடைவதற்குத் தயாராக்குவோம். அதிக உழைப்பும் கவனமும் தேவைப்படும் தொழில் இது.

குல தெய்வத்துக்கு பூஜைக் கூடை, தவத்துக்கு சீர் கூடை, கல்யாணங் களுக்கும், தீபாவளிப்பண்டிகை, வரலெட்சுமி நோன்பு, போன்ற சுமங்கலிப் பண்டிகைகளுக்கும்,  கூடை, முறம் போன்றவைகள் அதிகம் விற்பனையாகும். கோவில்களில் விழாக் காலங்களில் என்ன வேண்டும் என்பதை ஆர்டர் தந்து விடுவார்கள்.

ஒருவர் மூலம் ஒருவராக எங்களைப் பற்றி கேள்விப்பட்டு ஒருமுறை  இங்கு வந்து வாங்கிச்செல்பவர்கள் மீண்டும் இங்குதான் வருவார்கள். ஆர்டர்கள் வருமளவுக்கு எங்களால் உற்பத்தி செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.

இந்தத் தொழிலில் உழைப்பு மிக அதிகம்,  ஆனால் வருமானம் மிகக் குறைவு என்பதால் யாரும் இதை துணிந்து செய்ய முன் வருவதில்லை. அதிலும் இளைஞர்கள் விரும்புவதே இல்லை. இன்னொன்று, இதை நினைத்தவுடன் கற்றுக்கொள்வதும் அவ்வளவு சுலபமில்லை. சிறு வயதிலிருந்தே இதை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

நானே என் தந்தையிடம் இருந்து பார்த்துப்பழகி பன்னிரண்டு வயசுல இருந்தே பின்னி வருகிறேன். இதோ என் மனைவி, பத்து வருசமா என்னோட வந்து கத்துக்கிட்டு மேல் வேலைகளை செய்துத் தருகிறார். என் மகள்கள் சாரதா தேவியும், கோகிலவாணியும் தற்போது படித்துக்கொண்டிருப்பதால் இதை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. நமது பாரம்பர்யமான இந்தக் கைத்தொழில் வெகு விரைவாக மறைந்து வருவதைக் குறித்த வருத்தம் இருக்கிறது. என்ன செய்ய? அது மட்டுமல்ல, நாகரீகங்கள் வளர வளர பிளாஸ்டிக்கில் மக்களுக்கு ஆர்வம் வந்ததும் இது போன்ற தொழில்கள் குறைய ஒரு காரணம். ஆனால் சமீபகாலமாக  இந்தக் கலைகளின் மீதான விழிப்புணர்வு வந்து மக்கள் ஆர்வத்துடன் வாங்க வருகின்றனர். ஆனால் தரத்தான் முடியவில்லை. ஏனெனில் செய்வதற்கு ஆட்கள் இல்லை.

இப்பொது வீடு கட்டுபவர்கள் ஜன்னல்களுக்கு மூங்கில்பாய்களை அதிக அளவில் வாங்கிச் செல்கிறார்கள். அழகுக்கு அழகும் குளிர்ச்சியும் சேர்க்கிறது இந்த ஜன்னல் பாய்கள்.  ஒரு பாய் செய்ய எப்படியும் மூன்று நான்கு நாட்கள் ஆகும். இந்த மூங்கில் பாய்களை உங்கள் விருப்பத்துக்கு அளவெடுத்து அதன்படி சதுர அடிக்கு இவ்வளவு என்று பேசி செய்வோம் . வீடு, உணவகங்கள், விழாக்கள் போன்றவைகளுக்குத் தகுந்தாற் போல் தரமான கயிறுகளில் மூங்கிலைப் பின்னி, பிடித்து இழுத்தால் திறப்பது மூடுவது போன்ற வசதியுடன் செய்துத் தருகிறோம். எங்களுக்கு வரும் ஆர்டர்களை எங்காளால் செய்ய முடியாத பட்சத்தில் எங்கள் உறவினர் களிடம் தந்து செய்யச்சொல்லி வாங்குவோம்.

ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, அரூர், போன்ற ஊர்களில் எங்கள் உறவினர்கள் இதேத் தொழில் செய்கின்றனர்.

நாங்கள் பின்னும் பாய்கள், கூடைகள் போன்றவை தரமாக இருப்பதால் பலர் நாங்கள் கேட்கும் தொகையைத் தந்து வாங்கிச் செல்வார்கள் மனமகிழ்ச்சியுடன். இன்னும் சிலர் ‘என்ன உங்க உழைப்பு அதிகம், கூலி கம்மியா தெரியுதே,’ என்று சொல்லிச் சற்று அதிகமாகவே தருவார்கள். என் தந்தை கட்டிய வீடு இருப்பதால் என்னால் இந்த வருமானத்தில் சமாளிக்க முடிகிறது. நானும் வேறு தொழில்களுக்கு சென்று பார்த்தேன், ஆனால் என் மனம் இதில்தான் வந்து நிற்கிறது.

உங்களுக்கென்று சங்கங்கள் இல்லையா ?
ருக்கு. ஒவ்வொரு ஊரிலும் கைவினைக் கலைஞர்கள் சங்கம் இருக்கு . ஆனால், எங்கள் தொழிலில் ஓய்வுக்கே இடமில்லை. இருக்கும் ஒரு சிலர் மட்டும் என்ன செய்ய முடியும. எங்கள் குலத்தொழில் தெய்வமான மல்லம்மா சாமிக்கு பொங்கல் படையலிட்டு விழா எடுப்போம். அப்ப மட்டும் எங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றாக கூடி  மகிழ்வோம். பொருள் தேடி ஓடும் இந்த அவசரக் காலத்தில் சங்கத்தை எல்லாம் எதிர்பார்த்தால் முடியுமா ? உழைப்பு உழைப்பு இதுதான் இந்தத் தொழிலின் தாரக மந்திரம். இதனால்தான் பிள்ளைகள் யாரும் இதைக் கத்துக்க முன்வருவதில்லை என்பது மட்டுமே கவலை.

படு பிசியாக பாய்களைப் பின்னிய படியே பேசிய அவர்களுக்கு நன்றி கூறி திரும்ப, என் கண்களில் குனிந்த தலை நிமிராமல் தட்டி பின்னிக்கொண்டு இருந்த அந்த முதிய தம்பதியான கந்தசாமியும் ஆனந்தியும். அவர்கள் என் ஆச்சர்யத்தை மேலும் எகிற வைத்தனர். முப்பது வயதிலேயே முழங்கால் வலி என்று சேரில் சொகுசாக அமர்ந்து தீனியைக் கொறிக்கும் நாம் எங்கே ? எண்பது வயதிலும் கீழே அமர்ந்து தட்டி பின்னி சம்பாதித்து நேர்மையாக வாழும் இவர்கள் எங்கே?

சேலம் வழியே செல்லும்போது அவசியம் இங்கு சென்று இவர்களைப் பார்த்து, உழைப்பின் மகிமையைத் தெரிந்து, மூங்கில் பொருட்களின் மகத்துவத்தையும் பார்த்து வாருங்கள் பிளீஸ்…

இவர்களிடம் வாங்கி வந்த முறம்  மற்றும்  கூடையில், பூண்டு இத்யாதி களைக் கொட்டி வைத்து மகிழ்ந்த அதே நேரம் அடுத்த சந்ததிக்கு பாரம்பர்யமான இந்தக் கலைகளை கொண்டு செல்லும் கவலையும் வந்தது.

சேலம் சுபா
பெயர் சுபா தியாகராஜன். பிறந்த ஊர் சேலம் என்பதால் சேலம் சுபா எனும் பெயரில் முன்னணி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். கதை கவிதை கட்டுரைகள் எழுதினாலும் தன்னம்பிக்கையாளர்களின் நேர்காணல் இவரது சிறப்பு. கல்கி குழும இணையதளம், கல்கி ஆன்லைன்.காம் மற்றும் கல்கியின் வலையொலி, காணொளி வாயிலாகவும் பங்கேற்பதில் பெருமிதம் இவருக்கு.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

இல்லத்தரசியின் கனவு!

முயன்றால் எதுவும் முடியும்...     - சேலம் சுபா நல்லதொரு குடும்பம் அமைந்த பெரும்பாலான  பெண்கள் தங்களிடம் திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஆர்வமின்றி குடும்பம் எனும் பாதுகாப்பான கூட்டுக்குள் இருந்து வெளியே வர விரும்ப...

சவால்களை சந்தித்து சாதித்த சதரூபா!

உரையாடல் : பத்மினி பட்டாபிராமன்   ஸ்வப்னோபூரண் - பூர்த்தியாகும் கனவுகள் மேற்கு வங்காள  எல்லையை ஒட்டிய, கல்வி வசதி அவ்வளவாக இல்லாத, சுந்தர்பன்ஸ் தீவு கிராமங்களில் ஆங்கில மீடியம் பள்ளிகளை அமைத்து, அந்த ஏழைக் குழந்தைகளுக்கு...

அன்னையர் தின சிறப்புக் கவிதை! 

-மாலதி ஜெகந்நாதன்   விசித்திரத் துறவி    சுமப்போம் என்று தெரிந்தே சுமக்கும்  'சுமைதாங்கி'! அறுப்போம் என்று உணர்ந்தே குலை தள்ளும் 'வாழை '! மிதிப்போம் என்று அறிந்தே கிடக்கும் ' மிதியடி' ! வெறுப்போம் என்று தெரிந்தே அன்பூட்டும் ' பிறவி '! இன்றும் பொறுப்போம் என்றாவது...

மாதவி என்னும் மாதரசி!

-ரேவதி பாலு மாதவி என்று சொல்லும்போதே 'மாதவி பொன்மயிலாள். தோகை விரித்தாள்' என்னும் பாடல் வரிகள் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு  பேரழகு, ஆடல் பாடல் கலைகளில் தேர்ச்சி என்னும் விஷயங்களாலேயே அவள்...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...