ஹெலென்ஸ்பர்க் சிவா விஷ்ணு ஆலயம், ஆஸ்திரேலியா

ஹெலென்ஸ்பர்க் சிவா விஷ்ணு ஆலயம், ஆஸ்திரேலியா
Published on
பயணம்!
தரிசித்து எழுதி அனுப்பியவர் ராஜி ரகுநாதன்.

ஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் 'ஹெலென்ஸ்பர்க்' என்ற இடத்தில் எழும்பியுள்ளது சிவா விஷ்ணு ஆலயம். பூமியின் தென் கோளத்தில் உள்ள புகழ்ப் பெற்ற இந்த முக்கியமான ஆலயம் சிட்னியிலிருந்து தெற்காக 45 கி.மீ. தொலைவிலும், உல்லங்காங் என்ற இடத்திலிருந்து 34 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் பகுதியிலிருந்து மட்டுமல்லாது ஆஸ்திரேலியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்களின் மனதைக்கவர்ந்திழுக்கும் விதத்தில் இந்த ஆலயம் அமைந்திருப்பது இதன் சிறப்பு. ஹெலென்ஸ்பர்க் நகரம் சிறியதாகவும் ஒதுக்குப்புறமாகவும் இருந்தாலும் இது இந்து மதத்திற்கான முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது.

1978ல் சில பக்தர்கள் ஒரு குழுவாக சேர்ந்து தமக்கு ஒரு ஆலயம் தேவை என்று எண்ணிய போது 'ஹெலென்ஸ்பர்க்' என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். வெங்கடேஸ்வரப்  பெருமாள், மகாலட்சுமி மற்றும் திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌலீஸ்வரர் கொலுவிருந்து அருள் புரியும் பிரதேசமாக வேத தர்மத்தின்படி இவ்விடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பொதுவாக ஒரு இந்து கோவிலைக் கட்டவேண்டுமானால் ஐந்து தகுதிகள் அந்த இடத்திற்கு இருக்க வேண்டும் என்று பிரஹத்சம்ஹிதை கூறுகிறது.

  • அது கன்னி நிலமாக இருக்க வேண்டும். அங்கு அதற்கு முன் எந்த கட்டடமும் கட்டப்பட்டிருக்கக் கூடாது.அது தீவாக இருப்பது உசிதம். உலகிலேயே ஆஸ்திரேலிய கண்டமே ஒரு பெரிய தீவு அல்லவா?
  • காடுகளால் சூழப்பட்டிருக்க வேண்டும். ஹெலென்ஸ்பர்க் அதற்கு ஏற்ற இடம்.
  • நீர் நிலைக்கு அருகில் இருக்க வேண்டும். இவ்விடத்திற்கு அருகில் அழகிய கெல்லீஸ் அருவி உள்ளது. மேலும் இவ்விடம் சிற்றோடைகளால் சூழப்பட்டுள்ளது.
  • கடலுக்கு அருகில் இருக்க வேண்டும். புகழ்பெற்ற 'ஸ்டான்வெல் பார்க் பீச்' ஆலயத்திலிருந்து பத்து நிமிட கார் சவாரி தூரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • டெம்பிள் ரோடு, ஹெலென்ஸ்பர்க், நியூ சவுத் வேல்ஸ் என்ற முகவரி கொண்ட இந்த ஆலயம் அமைத்துள்ள இடம் மேற்சொன்ன ஐந்து தகுதிகளையும் பூர்த்தி செய்து அனைத்து பக்தர்களாலும் ஆராதிக்கப்படுகிறது.

இன்னும் சொல்லப்  போனால், இவ்விடத்தின் இயற்கை அழகோடு கூடிய மலைகளும், சோலைகளும் பெருமாளையும் தாயாரையும் மட்டுமின்றி சிவபிரானையும்  அம்பாளையும் கூட வரவேற்று,  பக்தர்களுக்கு அருள் பாலிக்கச் செய்தது என்றே கூற வேண்டும். ஹெலென்ஸ்பர்க் பகுதியின் இயற்கை அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் அரிதான மணிமகுடம்போல இந்தக் கோவில் ஜொலிக்கிறது. இக்கோவில் கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் மலைப்பாங்கான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. கோவிலை வந்தடைய சாலை மற்றும் ரயில் வசதிகள் உள்ளன.

இந்த ஆலயம் இந்து அறநிலைய மரபுப்படி ஆகம  சாஸ்திரத்தின் விதிகளோடு சோழர்கால கட்டடக் கலையை  நினைவூட்டும் விதமாக சிரத்தையுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது சிவா விஷ்ணு ஆலயம் என்பதால் இரண்டு ராஜகோபுரங்கள் உள்ளன.

இக்கோவிலுக்கு 1985,  ஜூன் 30ல் ஆஸ்திரேலிய மற்றும் உலகெங்கிலுமுள்ள இந்துக்களின் ஏகோபித்த உற்சாக வரவேற்போடும் உதவியோடும் புனித நீர்களால் விமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது. இத்திருப்பணிக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் பணமும் பொருளும் உதவி  உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா வாழ் இந்துக்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாகவும் ஆறுதலளிக்கும் பக்தி ஊற்றாகவும் ஒளி வீசும் இவ்வாலயம் உலகத் தரத்துடன் நிர்வகிக்கப்படுகிறது. ஆலயம் வாரத்தின் ஏழு நாட்களும் காலை 8 முதல் மதியம் 12 வரையும், மாலை 4 முதல் 7 வரையும் திறந்திருக்கிறது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 7 முதல் மாலை 8 வரை திறந்திருக்கிறது.

இந்துக்களின் காலெண்டரின்படி இங்கு கோயில் கொண்டுள்ள தெய்வங்களுக்கு பூஜை, அர்ச்சனை, அபிஷேகம், ஆரத்தி,  போன்றவை  நடத்தப்படுகின்றன. பாஞ்சராத்ர ஆகம முறைப்படி வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஸ்ரீபாலாஜி ஆலயத்திலும், சைவ ஆகமத்தின்படி சிவாலயத்திலும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மேலும் ஹோமம், சகஸ்ரநாமம், கல்யாண உற்சவம் மற்றும் பல திருவிழாக்களும் முறையாக நடக்கின்றன.

நான்கு பிராகாரங்களோடு கூடிய இந்தஆலயத்தில் அனுபவமும் ஆழ்ந்த ஞானமும் கொண்ட அர்ச்சகர்களால் பக்தியோடும் சமர்ப்பணத்துடனும் பூஜைகள் நிகழ்த்தப்படுகின்றன. பக்தர்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்று அனைத்து திருவிழாக்களும் கோலாகலமாக இங்கு  நடைபெறுகின்றன. நவராத்திரி பிரம்மோற்சவங்கள் ஒவ்வோர் ஆண்டும் பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

சந்நிதிகள்:

ஸ்ரீவேங்கடேஸ்வரர்

வ்வொரு மாதத்தின் முதல்சனிக்கிழமைகளும் மற்றும் உகாதி, புத்தாண்டன்றும் ஸ்ரீனிவாச கல்யாணம் நடக்கிறது. ஒவ்வோர் ஆண்டும்  பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அபிஷேகம் ஆனபின் துளசி மாலைகளும், பூ மாலைகளும், பூஅங்கியும் முத்தங்கியும் சாற்றி அலங்கரிக்கப்படுகிறார் பாலாஜி.

லட்டு, அடை, புளியோதரை, தயிர் சாதம், வடை மற்றும் உலர்ந்த திராட்சை வேங்கடேஸ்வரருக்கு நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

ஸ்ரீ மகாலக்ஷ்மி

ங்கு ஸ்ரீமஹாலட்சுமி தனி சந்நிதி கொண்டு செந்தாமரையின் மீது கொலுவீற்றுள்ளாள். திருக்கரத்தில் தாமரையைத் தாங்கி அருள் பாலிக்கிறாள். சிராவண வெள்ளி, வரலட்சுமி விரதம்,  தீபாவளி, நவராத்திரியின் மூன்று நாட்கள் இங்கு மிக விமரிசையாக பூஜைகள் நடத்தப்படுகின்றன. சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு விசேஷ ஹோமங்கள் நடைபெறுகின்றன. தாயாருக்கு பாயசம், லட்டு போன்ற இனிப்புகள், பழங்கள்,பால் நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர்

ர்மதா நதியிலிருந்து எடுத்து வரப்பட்ட சிவலிங்கம் இங்கு வழிபடப்படுகிறது.   திங்கள் கிழமைகள், பிரதோஷம், திரயோதசி தினங்கள், மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம் போன்றவை இங்கு சிறப்பு வழிபாட்டுக்குரிய நாட்கள்.

அபிஷேகப் பிரியனான சிவனுக்கு ருத்ராபிஷேகம், ருத்ர ஹோமம், மிருத்யுஞ்ஜய ஹோமம் போன்றவை முறையாக நிகழ்கின்றன. வில்வம், எருக்கு, தும்பை, ஓலியண்டர் மலர்கள் சிவனுக்குப் பிரியமாக சாற்றப்படுகிறது.

ஸ்ரீ திரிபுரசுந்தரி

பார்வதி தேவி திரிபுரசுந்தரியாக தனி சந்நிதி கொண்டுள்ளாள். வெள்ளிக் கிழமைகளும் நவராத்திரியும் இங்கு சிறப்பு பூஜைகளுக்கான நாட்கள். கௌரி கல்யாணமும், சித்ரா பௌர்ணமியன்று மீனாக்ஷி கல்யாணமும் நடைபெறுகின்றன. மகர, கர்காடக மாதங்களில் கேரள முறைப்படி பகவதி சேவை நடைபெறுகிறது. தீப பூஜையும், அபிஷேக அலங்காரங்களும் நடத்தி மலர்களும்  மஞ்சளும் சமர்ப்பிக்கிறார்கள்.வடையும் பாயசமும் நைவேத்தியத்தில் இடம் பெறுகின்றன.

கணேசர்

லயத்தின் உள்ளே வரசித்தி விநாயகர் தனி சந்நிதி கொண்டுள்ளார். மேலும் சந்நிதிக்கு வெளியே இரு புறமும் அநேக பிள்ளையார்கள் பல வடிவில் அமர்ந்துள்ளனர்.

சதுர்த்தசி, செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் இவருக்கு உகந்தவை. சங்கட ஹர சதுர்த்தசியும், விநாயக சதுர்த்தியும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கணபதி ஹோமம் முறையா, அடிக்கடி நடக்கிறது. மோதகம் சமர்பிக்கப்பட்டு, தூர்வா புல் மாலை சாற்றப்படுகிறது. விபூதி, மஞ்சள், சந்தனத்தால் கணபதி அலங்கரிக்கப்படுகிறார்.

ஸ்ரீசுப்பிரமணியர்

ஸ்ரீமுத்துக் குமார ஸ்வாமியாக வள்ளி, தேவசேனா சமேதராக தரிசனமளிக்கிறார் முருகன். இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முருகனாக அறியப்படுகிறார். வைகாசி விசாகத்தன்று வள்ளி கல்யாணமும், ஸ்கந்த ஷஷ்டி, தைப்பூசம், மாசி மகம், ஆடி கிருத்திகையும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பஞ்சாமிருதம், பால், சந்தனம், பன்னீர் இவற்றால் அபிஷேகம் செய்விக்கப்படுகிறார். விபூதி, சந்தனத்தால் விசேஷ அலங்காரமும், பூ காவடிகளும்  இங்கு சிறப்பானவை.

பிற சந்நிதிகள்

மேலும் நந்தீஸ்வரர், சண்டிகேஸ்வரர், துர்காம்பிகை, ஸ்ரீதட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், நாயன்மார்கள், ராமர், ஆஞ்சநேயர், ஆண்டாள், கிருஷ்ணர், பிரம்மா, கருடன், சுதர்ஷனர், நரசிம்மர், விஷ்வக்சேனர் முதலிய கடவுள்களும் ஆலயத்தில் வீற்றிருந்து பக்தர்களை அருள் பாலிகின்றனர்.

சிறப்புகள்:

லயத்தில் நன்கு கற்றறிந்த அர்ச்சகர் குழாம் உள்ளது. பக்தர்களின் வீட்டு கிருகப் பிரவேசம் போன்ற பூஜைகளுக்கும் கூட இவர்கள் சென்று உதவி வருகிறார்கள். இந்த அர்ச்சகர்கள் ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், சம்ஸ்கிருதம் போன்ற இந்திய மொழிகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்.

சிவா விஷ்ணு ஆலயத்தில் முக்கிய பெரிய நிகழ்ச்சிகளாக சங்கர ஜெயந்தி, அன்னமாச்சாரிய ஜெயந்தி, சிறப்பு பஜனைகள், கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி சங்கீத நிகழ்ச்சிகள், மற்றும் குழந்தைகளுக்கான நடன , நாட்டிய நிகழ்ச்சிகள், கீதை, உபநிஷத் உபன்யாசங்கள் போன்றவற்றை தவறாமல்  நிகழ்த்துகிறார்கள். இந்தியாவிலிருந்து சிறந்த  உபன்யாசகர்கள், ஸ்வாமிஜிகள் அனைவரும் இங்கு வந்து சொற்பொழிவாற்றி பக்தர்களுக்கு ஆன்மீக விருந்து அளிப்பது   குறிப்பிடத்தக்கது.

சேவைகள்:
பூமாலை சேவை

வ்வொரு வியாழக் கிழமையும் காலையில் பெண்மணிகள் பலர் ஒரு குழுவாக சென்று மார்க்கெட்டிலிருந்து பல நிற சிறப்பான மலர்களை வாங்கி வந்து கோவிலில் அமர்ந்து மாலைகள் தொடுக்கின்றார்கள். கோவில் விக்கிரகங்களுக்கு தேவையான மாலைகளை வாடாமல் பசுமையாக வைப்பதற்கு ஆலயத்தில் ஒரு பெரிய குளிர் பதன அறை உள்ளது. ஆலயத்திலேயே பூந்தோட்டம் அமைத்தும் பராமரிக்கிறார்கள்.

கேன்டீன் சேவை

லய வளாகத்தில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 10 முதல் மாலை 4 வரை கேன்டீன் திறக்கப்பட்டு பக்தர்களின்  உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. சுவையான சிற்றுண்டிகளும்  பக்ஷணங்களும் பக்தர்களால் ருசித்து பாராட்டப்படுகின்றன.

மேலும், ஆலய வளாகத்தில் நவீன குளியல் அறைகளும், பாலூட்டும் அறைகளும், முதலுதவி வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்து திருமணம் மற்றும் பல குடும்ப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான கல்யாண மண்டப ஹாலும் கேடரிங் வசதிகளும் இங்கு செய்து தரப்படுகிறது.

ஹெலென்ஸ்பர்க் ஆலயத்திற்கு ஆர்வத்தோடு வந்து வணங்கிச் செல்வதை அனைத்து பக்தர்களும் விரும்பி வரவேற்கின்றனர். பலதரப்பட்ட கலாசாரங்கள் கொண்ட இந்துக்கள் கூடி வழிபடும் இடமாக இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்து மதம் பற்றி மேலும் அறிவதற்கும், ஆலயத்தின் சிற்ப வேலைப்பாட்டை கண்டு மகிழவும் சுற்றியுள்ள இயற்கை அழகை ரசித்து ஆனந்திப்பதற்கும் பக்தர்கள் இங்கு பெருந்திரளாக வருகன்றனர்.

ஹிந்து தர்மத்தைப் போற்றி பாதுகாப்பதில் மும்முரமாக உள்ள இந்த ஆலயம் உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கான ஆன்மீகப் பொது அரங்கமாகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com