0,00 INR

No products in the cart.

 ‘யுவர் ஆனர் ரோபோட் அவர்களே!’

 பகுதி -2

-ஜி.எஸ்.எஸ்.

ரோபோட் என்றதும் ஏதோ மனிதன் போன்ற உருவம் ஒன்று உங்களுக்கு மனதில் தோன்றியிருக்கலாம்.  ஆனால் மருத்துவமனைகளில் ஆபரேஷன் செய்யும் ரோபோட் வேறு ஜாதி.  ஒரு ஆக்டோபஸைப் போன்று தோற்றமளிக்கும். இதன் கைகள் மெலிதாகக் காட்சியளிக்கும். மிக நுட்பமான அசைவுகளைக்கூட இதனால் செய்ய முடியும்.

இந்த ரோபோக்களால் மனிதத் திசுக்களை தனது ‘விரல்களால்’ நன்கு உணர முடிகிறது. பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்குவதிலும் இவை கில்லாடியாக செயல்படுகின்றன. அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் அறுவை சிகிச்சையின் போது  ரோபோட்களை பயன்படுத்துவது பரவலாகி வருகிறது.

இந்தியாவில்கூட சோதனை முயற்சியாக ரோபோட்களின் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.  மிகத்துல்லியமாக தேவைப்படும் இடத்தை மட்டும் கிழிக்கவும், தையல் போடவும் இந்த ரோபோட்கள் பெரிதும் பயன்படுகின்றனவாம்.

இப்படி முதன்முதலில் ஆபரேஷனுக்கு உதவிய ரோபோட்டின் பெயர் “டாவின்சி”.  கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு இது.  நான்கு கரங்கள் கொண்ட இந்த ரோபோட் மாற்று இதயவால்வு ஒன்றை  பொருத்தப் பயன்பட்டது.   இந்தக் கருவி பத்துவிதமான அறுவைச் சிகிச்சை செய்ய உதவுகிறது.  இதய பைபாஸ் சிகிச்சையும் இதில் அடக்கம்.

ரோபோட்டை அறுவை சிகிச்சையில் பயன்படுத்துவது பாதுகாப்பானதும் கூட என்று கண்டறிந்திருக்கிறார்கள்.  பொதுவாக பிராஸ்டேட் சுரப்பியில் பெரும் பாதிப்பு ஏற்படும்போது அதை மருத்துவர்கள் நீக்கி விடுவதுண்டு.  அப்படி நீக்கும்போது ஒரளவாவது சிறுநீரகப்பாதையில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது.  ஆனால் ரோபோட் மிக துல்லியமாக செயல்படுவதால் வேறெந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

பொதுவாக இதயத்தில் அறுவை சிகிச்சை என்றால் பத்து இன்ச் நீளத்திற்கு  துளையிடுவார்கள்.  இதனால் பின்னர் கடும் வலியும்,  அதிக ரத்த இழப்பும் ஏற்படும்.  காயம் ஆறுவதற்கும் நாளாகும்.  ஆனால் ரோபோட்டைக் கொண்டு மூன்றே இடங்களில் சிறு துளைகளை ஏற்படுத்துவதின் மூலமே இதுபோன்ற அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்வதுண்டு.  இதனால் பல சிக்கல்கள் தவிர்க்கப்படுகின்றன.

சீக்கிரமே குணமடைந்து விடுவதால் நோயாளிகள் விரைவிலேயே மருத்துவ மனைகளிலிருந்து வீட்டிற்கும் சென்று விடலாம்.

ஏதோ மருத்துவ உலகில்தான் என்று இல்லை, வேறு பல நடைமுறை சங்கதிகளிலும் கூட நவீன ரோபோட்கள் உட்புகுந்து விட்டன.

‘சமையலறையிலேயே என் வாழ்நாளில் பெரும்பகுதி கழிந்து கொண்டிருக்கிறது’ என்று பல பெண்கள் அலுத்துக் கொள்வதுண்டு.  ரோபோட் ஒன்று முழு சமையலையும் செய்தால் எப்படி இருக்கும்? இஸ்ரேல் நாட்டு நிறுவனம் ஒன்று இதையும் சாதித்திருக்கிறது. அதாவது ஒரு தானியங்கி சமையலறை. இதில் சமைப்பது மட்டுமல்ல குளிர்பதனப் பெட்டி, மைக்ரோ ஓவன், பாத்திரங்கள் போன்றவற்றை சுத்தம் செய்வது கூட ரோபோட்கள்தான். பீட்சா தயாரிப்பதற்கான அத்தனை செயல்முறைகளையும் இது செய்துவிடுகிறது. (நம்மூர் சமையலுக்கு இன்னும் இந்த ரோபோட்கள் பக்குவப்படவில்லை!)

ஹாம்பர்க் நகரில் ஆறு சக்கரங்கள் கொண்ட  ரோபோட்களை ஸ்டார்ஷிப் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.  கேமரா, ஜிபிஎஸ், ராடார் போன்ற பலவித தொழில் நுட்ப உதவிகளுடன் இது மளிகை சாமான்களை கடைகளில் இருந்து நேரடியாக வாடிக்கையாளர் வீட்டுக்கு எடுத்துச்சென்று கொடுக்கின்றன.  சீனாவிலும் இது போல இருபது ரோபோட்கள் இயங்கத் தொடங்கிவிட்டன.  ஒவ்வொன்றிலும் பல அறைகள்.  ஆர்டர் கொடுத்தவர் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள சங்கேத எண்ணை அழுத்தி அந்த அறையைத் திறந்து தங்களுக்கான சாமான்களை எடுத்துக் கொள்ளலாம்.

நவம்பர் 24, 2021இல் யுனெஸ்கோ நிறுவனம் அமைப்பு உலக அளவில் செயற்கை நுண்ணறிவை நல்லொழுக்க அடிப்படையில் செயல்பட சில கோணங்களை நிர்ணயித்திருக்கிறது.  இதன் காரணமாக மனித உரிமைகளும் மனிதர்களின் கண்ணியமும் மேம்படுத்தப்படும் என்கிறது அந்த அமைப்பு.  டிஜிட்டல் உலகில் தான்தோன்றித்தனம் பரவி அது மனித குலத்துக்கு எதிராக அமைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த சட்டம்.

செயற்கை நுண்ணறிவு என்பது என்ன?  மனிதர்கள் தர்க்கரீதியாக யோசிப்பார்கள்.  பயிற்சி பெறுவார்கள். திட்டமிடுவார்கள்.  இதையெல்லாம் ஒரு இயந்திரத்தால் செய்ய முடியும்போது அதை செயற்கை நுண்ணறிவு என்பார்கள்.  அதாவது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்.

இது தொடர்பான வழிகாட்டல்களை சமீபத்தில் யுனெஸ்கோ நிறுவனம் வடிவமைத்திருக்கிறது.  செயற்கை நுண்ணறிவை தார்மீகப் பொறுப்புடன் நாடுகளில் பயன்படுத்த வேண்டும் என்கிறது இந்த வழிகாட்டல்கள்.  செயற்கை நுண்ணறிவைக் கொண்டு தங்கள் நாட்டில் நடைபெறும் செயல்களை அவ்வப்போது அறிக்கையாக தங்களுக்கு தர வேண்டும் என்கிறது யுனெஸ்கோ.

இதற்கு இப்போது என்ன அவசியம் என்று அறிய வேண்டுமென்றால் செயற்கை நுண்ணறிவு குறித்த அடிப்படைத் தெளிவு வேண்டி இருக்கும்.

வருங்கால தொழில்நுட்பத்தை இதுதான் வடிவமைக்கப் போகிறது.  நிகழ் காலத்திலேயே இது குறித்த தெளிவு இல்லாமலேயே நம்மில் கணிசமானவர்கள்  இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

நம் தினசரி வாழ்க்கையிலேயே செயற்கை நுண்ணறிவு பெரிதும் புகுந்துவிட்டது.  கூகுள் தேடுபொறி ஓர் எடுத்துக்காட்டு.  நமக்கு தேவைப்படும் விஷயங்களில் உள்ள முக்கிய வார்த்தையை பதிவிட்டால்,  அந்த வார்த்தை  அடங்கிய எந்தெந்த ஆவணங்கள் இருக்கின்றன என்பதைப் பட்டியல் போட்டு நமக்கு கொடுக்கிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றொரு எடுத்துக்காட்டு.  கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் செயலிகள் வந்துவிட்டன.  காரில் செல்லும்போது எங்கெங்கு போக்குவரத்து நெரிசல், எப்படிப் போனால் கொஞ்சம் முன்னதாகவே செல்ல முடியும் என்பதையெல்லாம் செயற்கை நுண்ணறிவு மூலம் அறிந்து கொள்ள முடியும்.

நாம் செலுத்தும் தகவல்களை மொழி பெயர்க்கும் வேலையை கருவிகள் செய்கின்றன.  இதைக்கொண்டு திரைப்படங்களுக்கு அனாயசமாக சப்டைட்டில் களை உருவாக்க முடிகிறது. தானாக இயங்கும் கார்களை இன்னும் சில ஆண்டுகளிலேயே சகஜமாகக் காணமுடியும்.

லகம் வெப்பம் அடைந்து கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு மூலம் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்பான நிலவரத்தை அறியவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் நடந்து கொள்ளவும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் உதவுகிறது.  எங்கெங்கெல்லாம் இயற்கை அதிக அளவில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவுத் துறை இப்போது 33 லட்சம் பேர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறது.  இதன் உதவியுடன் கல்வித்துறையில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பலன் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் செயற்கை நுண்ணறிவை அழிவுக்கும் பயன்படுத்த முடியும் என்பதுதான் சங்கடமான உண்மை.  அதனால் பாதிப்புகளும் உண்டு.  எனவே மனிதத் தன்மை கொண்ட செயற்கை நுண்ணறிவு தேவை என்கிற குரல் அதிகமாக எழுந்து வருகிறது.  மனித குலத்துக்கு செயற்கை நுண்ணறிவு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது  என்பவர்கள் அதிகமாகி வருகிறார்கள்.

அந்தரங்கம் பாதிக்கப்படுகிறது, தகவல்கள் திருடப்படுகின்றன ஆகியவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டுகள்.

டெர்மினேட்டர், மாட்ரிக்ஸ் ஆகிய திரைப்படங்கள் 1,2,3 என்று அடுத்தடுத்து ரிலீஸாகி வசூலில் சாதனை படைத்தவை.  இத்திரைப்படங்களில் யந்திரங்கள் மனிதகுலத்தை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்காகப் புறப் படுகின்றன.  மயிரிழையில் மனித குலம் தப்பிப்பதாக இந்தத் திரைப்படங்கள் முடிகின்றன.  என்றாலும் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன இதுபோன்ற படங்கள்.

இயந்திரங்களுக்கு மேலும் மேலும் சக்தியைக் கொடுத்துக் கொண்டிருந்தால் என்னவாகும்? ஒருவேளை அவை மனிதர்களையே அழிக்க முற்படுமோ?

மின்னணு மற்றும் கணினித் துறை அசுர முன்னேற்றம் அடைந்த பிறகு, ரோபோட்கள் அதிக அளவில் உலகை வலம் வரத் தொடங்கின.

பிற மின்னணுப் பொருள்களுக்கும் ரோபோட்களுக்கும் என்ன வித்தியாசம்?  இரண்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால்தான் ஒரு கருவியை ரோபோட் என அழைக்க முடியும்.  அந்தக் கருவி தனது சுற்று சூழலை இனம் கண்டு தகவல்களை அறியும் திறமை படைத்திருக்க வேண்டும்.  தவிர ஓரளவாவது அதன் உடல் இயங்க வேண்டும்.

இப்போதைக்கு இயந்திரங்களை நமது அடிமையாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இயந்திரங்களின் ‘புத்திசாலித்தனத்தை’ அதிகமாக்கிக் கொண்டு போனால் ஒரு கட்டத்தில் இயந்திரங்கள் சிந்திக்கும் திறன் பெற்றால்? இதற்கு விடை கூறுவது கஷ்டம்.  ஆனால் மனித இனத்தை அவை தன் கட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய காலம் வருமானால் அதில் பெரிதாக வியக்க எதுவுமில்லை.

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பறக்கும்  பாவைகள்!

 பகுதி -1 எங்களாலும் பறக்க முடியும்!  -ஜி.எஸ்.எஸ் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ மாநிலத்தில் உள்ளது சிலிக்கான் பள்ளத்தாக்கு.  இங்கு மிக அதிக எண்ணிக்கையில் பிரபல மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. அதேபோல் இந்தியாவில் கர்நாடகத் தலைநகரில் அதிக...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 4 இந்தப் பாடலைக் கேட்கும்போது அன்றைய சென்னையின் பஸ் பயணம் நம் கண்முன்னே அழகாய் நிழலாடும். இந்தப் பாடலில் ஒரு புதுமையை புகுத்தி இருப்பார். இரண்டு குரல்கள் ஒரே...

அன்னையர் தின சிறப்புக் கவிதை! 

-மாலதி ஜெகந்நாதன்   விசித்திரத் துறவி    சுமப்போம் என்று தெரிந்தே சுமக்கும்  'சுமைதாங்கி'! அறுப்போம் என்று உணர்ந்தே குலை தள்ளும் 'வாழை '! மிதிப்போம் என்று அறிந்தே கிடக்கும் ' மிதியடி' ! வெறுப்போம் என்று தெரிந்தே அன்பூட்டும் ' பிறவி '! இன்றும் பொறுப்போம் என்றாவது...

மாதவி என்னும் மாதரசி!

-ரேவதி பாலு மாதவி என்று சொல்லும்போதே 'மாதவி பொன்மயிலாள். தோகை விரித்தாள்' என்னும் பாடல் வரிகள் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு  பேரழகு, ஆடல் பாடல் கலைகளில் தேர்ச்சி என்னும் விஷயங்களாலேயே அவள்...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...