அழகோ அழகு!

அழகோ அழகு!
Published on

வாசகர்களின் கேள்விகளுக்கு அழகுக்கலை
நிபுணர் Dr.வசுந்தராவின் பதில்கள் – பகுதி – 1

செயற்கையாக பல பற்பசைகள்‌ இருக்கும்போது இயற்கையான பற்பொடி‌களை எப்படி அடையாளம் காண்பது?
– அ.சம்பத், சின்னசேலம்
மூலிகைப் பற்பொடியை வீட்டிலேயே தயாரிப்பது பற்றிப் பார்க்கலாம். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் திரிபலா பொடி. நாட்டு மருந்துக் கடைகளில் இது கிடைக்கும். 50கிராம் திரிபலா பொடியுடன் கருவேலம்பட்டை பொடி 15 கிராம் (பல் உறுதிக்கு), பட்டை பொடி 5 கிராம், கிராம்பு பொடி 10 கிராம் (பற்களில் தொற்று ஏற்படாது; வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்), படிகாரத் தூள் 5 கிராம் (பற்காரையை நீக்கும்) மற்றும் இந்துப்பு, சாதாரண உப்பு, புதினா இலைப் பொடி தலா 5 கிராம் இவை எல்லாவற்றையும் கலந்து வைத்துக் கொண்டு, கைகளினாலோ அல்லது மென்மையான பிரஷ் கொண்டோ பற்களைத் தேய்த்து வந்தால், பற்கள் உறுதியாகவும், வெண்மையாகவும் பளிச்சிடும். இதைச் செய்துவிட்டால், செயற்கை பற்பசைகள் பின் ஓடுவதைத் தவிர்க்கலாம்.

நாடி பகுதியில் ஒரே ஒரு முடி இருந்தது. அதை வெட்டி விட்டேன். இப்போது நிறைய முடி வளருது. இதைப் போக்க என்ன செய்ய வேண்டும்?
– வி.கலைமதி சிவகுரு, புன்னைநகர்
தாடையில் முடி வளர்வது ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகளினால் ஏற்படுவது. நம் உடலில் ஆஸ்ட்ரோஜன்(ASTROGEN) ஹார்மோன் அதிகரிப்பதால் இவ்வாறு தேவையில்லாத இடங்களில் முடி வளர்கிறது. குறிப்பாக, பெண்களுக்கு மேல் தாடையிலும், உதடுகளுக்கு மேலும் காணப்படும். இதற்கு இரண்டு டீஸ்பூன் கடலை மாவு, அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், அரை டீஸ்பூன் வேப்பிலைப்பொடி ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து, முடி உள்ள இடத்தில் தடவி ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் கழித்து வாஷ் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால், முடியின் வேர்கள் பலவீனமாகி வளர்வது நின்றுவிடும். நேரம் இல்லாதவர்கள், பப்பாளி கலந்த க்ரீம் பயன்படுத்தலாம். முடி வளர்வதைத் தடுக்கும் ரிடார்ட் (RETARD) க்ரீம்கள் கிடைக்கின்றன. அவற்றையும் உபயோகிக்கலாம்.

இந்தக் குளிருக்கு என்னுடைய கை, கால்களில் தோல் சிவந்து, வலியும் அரிப்புமாக உள்ளது. இதற்குத் தேங்காய் எண்ணெய் தடவினால் போதுமா? அல்லது வேறு என்ன செய்து நிவாரணம் பெறலாம்?
– ஜெயா சம்பத், கொரட்டூர்
றண்ட சருமம் என்பது நீர்ச் சத்தும், கொழுப்புச் சத்தும் குறைவதால் ஏற்படுவது. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை தலை, உடம்பு முழுவதும் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிய பின் தலைக்கு சீயக்காய் பொடியும், உடலுக்கு பச்சைப்பயறு அல்லது கடலை மாவு தேய்த்துக் குளிக்கலாம். செடாஃபில் (CETAPHIL) மாய்ஸ்சரைசர் அல்லது லோஷன் பயன்படுத்தலாம். ஒரு முறை தேங்காய் எண்ணெய், ஒரு முறை செடாஃபில் லோஷன் என்று மாற்றி மாற்றிச் செய்தால் சரும வறட்டுத் தன்மை நீங்கும்.
மற்றொரு தீர்வு, தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு கலந்து மசாஜ் செய்து பின் நலங்கு மாவு தேய்த்துக் குளிக்கலாம். வறண்ட சருமத்துடன் அரிப்பும் இருந்தால், லிக்விட் பாராஃபின் (LIQUID PARAFFIN) தடவலாம்.


என் வயது 71. எனது முகத்தின் வலதுபுறம் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட பகுதியில் வெகுநாட்களாக கறுப்பாக இருக்கிறது. என்ன செய்தும் போகவில்லை. மேலும், கழுத்தைச் சுற்றி நிறைய சின்னச் சின்ன மருக்கள் இருக்கின்றன. இதற்கான தீர்வைச் சொல்லுங்களேன்!
– பொன்.இந்திராணி, ஈக்காட்டுதாங்கல்
ண்களுக்கும் காதுக்கும் இடையே கருமை படர்ந்திருப்பதற்குக் காரணம், ஒரே பக்கமாகப் படுத்து உறங்குவதால் ஏற்படுகிறது. அடிக்கடி திரும்பிப் படுக்க வேண்டும். மேல் நோக்கிப் படுப்பது நல்லது. மிருதுவான தலையணை பயன்படுத்தலாம். விட்டமின் ஏ அல்லது சி கலந்த க்ரீம்களை தொடர்ந்து பயன்படுத்துவது அவசியம். பாலாடை இரண்டு டீஸ்பூனுடன் எட்டு துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து தடவினால் நல்ல பலன் கிட்டும். பாலில் உள்ள லாக்டிக் அமிலமும் (LACTIC ACID) எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலமும் (CITRIC ACID) கருமையை நீக்கும் தன்மை கொண்டவை.

எலக்ட்ரானிக் கார்டரைஸேஷன் மூலமாகவும் சரி செய்யலாம். முதல்ல உங்களுக்கு சுகர் இருக்கான்னு செக் பண்ணிட்டு, அதுக்கப்புறம்தான் இதைச் செய்யணும். ஹெர்பல் முறைல செய்யணும்னா ஆப்பிள் சிடார் வினிகரை காட்டன்ல தொட்டு, அந்த இடத்துல வச்சு எடுத்தா மருக்கள் தானா சுருங்கிவிடும். இதேபோல, ஒரு மாசம் அல்லது ரெண்டு மாசம் செய்யணும். லெமன் ஆயில் பயன்படுத்தி வந்தாலும் மருக்கள் சுருங்கி விழுந்துவிடும்.

கத்தாழையை வீட்டில் வளர்க்கிறோம். அதன் உள்ளே இருக்கும் சதைகளை முகத்தில் தேய்த்துக்கொள்வது போல, அந்த சதைகளை எடுத்தபின், தோலினை மிக்ஸியில் அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்கலாமா?
– உஷா முத்துராமன், திருநகர்
ம் உடலில் இருப்பது போலவே கற்றாழையிலும் PH (POTENTIAL HYDROGEN) அளவு காணப்படுவதால், கற்றாழை நம் உடலுக்கு மிகவும் நல்லது. கற்றாழை ஜெல்லை எடுத்து நீரில் அலசி பின் நன்கு மசித்தோ அல்லது அரைத்தோ தலைக்கும் உடலுக்கும் தடவலாம். கற்றாழையை தனியாகவோ அல்லது அரைத்த வெந்தயம், தயிர் மற்றும் வேறு எந்த மூலிகையையும் கலந்து பயன்படுத்தலாம். இள நரை உள்ளவர்கள் ஒரு டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலைப் பொடியுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம்.

57வயதான எனக்கு உதடு உள்ளடங்கி, தாடை சதைப்பகுதி டபுள்சின் போல உள்ளது. இதற்கு வீட்டிலேயே செய்துகொள்வது போல் தீர்வு தாருங்கள் மேடம்…
 மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்
ரட்டைத் தாடை (DOUBLE CHIN) பிரச்னைக்கு தகுந்த உடற்பயிற்சி அவசியம். முகத்தை மேல் நோக்கி உயர்த்தி, பின் கீழ் நோக்கி முகம் நெஞ்சில் படுவதுபோல செய்ய வேண்டும். காலை, மாலை தலா முப்பது முறை தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.

  • ஃபேஸ் பேக் (FACE PACK) – நன்கு அடிக்கப்பட்ட முட்டையின் வெள்ளைக் கருவுடன் இரண்டு டீஸ்பூன் கடலை மாவு கலந்த கலவையை முகத்தில் கீழிருந்து மேல் நோக்கி தடவி அரை மணி ஊறியபின் வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யலாம். ஃபேஷியல் (FACIAL) செய்து கொண்டால் அதிகப்படியான கொழுப்பு குறையும். க்ரீம் தடவி மசாஜ் செய்வது போல் மேல் நோக்கி லேசாகத் தட்டத் தட்ட கொழுப்பு குறையும்.

முன் நெற்றியில் முடி கொட்டி, வழுக்கை அதிகமாகத் தெரிகிறது. இதற்கு என்ன செய்வது?
மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்
பொதுவாக, முன் நெற்றியில் முடி குறைதல் என்பது முப்பதில் இருந்து நாற்பது வயதில் தொடங்கும். முடி கொட்டிய இடங்களில் திரும்பவும் முடி வளராமல் இருப்பதால் இக்குறை உண்டாகிறது. எண்ணெய் குளியல் மிகவும் நல்லது. நூறு மில்லி நல்லெண்ணெயுடன் நெல்லி, கறிவேப்பிலை, வெந்தயம், செம்பருத்தி பொடிகள் தலா பத்து கிராம் கலந்து மசாஜ் செய்து, பத்துப் பன்னிரெண்டு நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். தினமும் எண்ணெய் மட்டும் தடவியும், வாரத்தில் ஒரு நாள் பொடிகள் கலந்தும் குளிக்கலாம். உணவுப் பழக்கத்திலும் கவனம் தேவை.

ஸ்கிப்பிங் செய்வது நல்லதா? இதனால் எடை குறையுமா?
– மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்
டல் எடை குறைய ஸ்கிப்பிங் செய்வது நல்லது. ஏற்கெனவே செய்து கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து செய்யலாம். புதிதாகத் தொடங்குபவர்கள் முதல் நாள் ஐம்பது முறை அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையில் தொடங்கி, பின் மெதுவாக அதிகப்படுத்தலாம். உணவுக் கட்டுப்பாடு மிக அவசியம். உட்கொள்ளும் உணவின் கலோரி அளவும், ஸ்கிப்பிங் மூலம் எரிக்கப்படும் கலோரி அளவும் சமமாக இருக்க வேண்டும். இல்லையேல் ஸ்கிப்பிங் செய்தும் எந்த பலனும் இல்லாமல் போகும்.
– தொகுப்பு : மங்கை ஜெய்குமார்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com