spot_img
0,00 INR

No products in the cart.

எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்?

அத்தியாயம் – 5

– நிரஞ்சன் பாரதி


பா
ரதியாருக்கு இருக்கும் இன்றியமையாத முகங்களில் ஒன்று அவரது, ‘மறை’முகம். மறை எனில், வேதம் என்று பொருள். இந்த முகம் அவருக்குள் ஒருபோதும் மறைந்திருக்கவில்லை. மாறாக, அவருடைய எழுத்துக்களில் எல்லாம், அவரது திருமுகமாக, அது வெளிப்பட்டபடியே இருந்தது.
எட்டயபுரத்தில் அறிமுகம் ஆகியிருந்தாலும் வேதங்களுக்கும் பாரதியாருக்கும் புதுச்சேரியில் தான் காதல் மலர்ந்தது. மறைகளுக்கும் மகாகவிக்கும் இடையே தூது போனவர் மகான் ஸ்ரீ அரவிந்தர்.

புதுச்சேரியில் வசித்தபோது 1910ஆம் ஆண்டில் பாரதியாருக்கு ஸ்ரீ அரவிந்தர் அறிமுகமானார். ஸ்ரீ அரவிந்தர் போன்றதொரு பழுத்த ஆன்மாவின் பழக்கம் பாரதியாரின் ஆத்ம சக்தியைக் கூட்டியது.

நிரஞ்சன் பாரதி

வேதமகள் பாரதியாரை முற்றாக ஆட்கொண்டாள். அதன் விளைவாக, வேதங்களிலேயே மிகவும் பழைமையான, ‘ரிக்’ வேதத்தில், 178 செய்யுள்களை அவர் தமிழில் மொழிபெயர்த்தார். வேதங்களின் சாரமான உபநிடதங்களில் ஈசாவாஸ்ய உபநிடதத்தின் அத்தனை செய்யுள்களையும் கேநோபநிடதத்தில் பதினாறு செய்யுள்களையும் பாரதியார் தமிழாக்கம் செய்தார்.

வேதங்கள் பாரதியாரை உயிருக்கு உயிராக நேசித்தன. அவரது படைப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவரது மண் விடுதலைக்கான பாடல்களிலும் வேதமகள் ஆட்சி செய்தாள். பெண் விடுதலைக்கான பாடல்களிலும் நடுநாயகமாக வீற்றிருந்தாள்.
முக்கியமாக, புதுமைப்பெண் என்ற கோட்பாட்டை மீட்டெடுக்க அவள் பாரதியாருக்கு உதவினாள். ஆம்… மீட்டெடுப்பு என்பதே சரியான வார்த்தை. ‘புதுமைப்பெண்’ என்கிற கருத்தாக்கத்தை பாரதியார் புதிதாக உருவாக்கவில்லை.

கி.மு. 1500 முதல் கி.மு.500 வரையிலான காலகட்டம் வேதகாலம் என்று அழைக்கப்படுகிறது. பாரத தேசத்தில் அப்போது வாழ்ந்த பெண்கள், கல்வி கேள்விகளில் சிறப்புற்றிருந்தனர். ஆண்களுக்கு நிகரான மதிப்போடு சமூகத்தில் போற்றப்பட்டனர். லோபமுத்ரா, கோஷா, இந்திராணி, சூர்யா, ரோமஷா என இருபதுக்கும் மேற்பட்ட பெண் கவிஞர்கள் எழுதிய செய்யுள்கள் வேதங்களில் இடம்பெற்றுள்ளன.

வேத காலத்தில் வாழ்ந்த பெண்களில், ஞானத்தின் இரு கண்களாக கார்க்கி மற்றும் மைத்ரேயி திகழ்ந்தனர். வேதம், தத்துவம், உபநிடதம் உள்ளிட்டவற்றில் அவர்கள் ஆழ்ந்த தேர்ச்சி பெற்றிருந்தனர். புகழ்பெற்ற ஆண் வேத விற்பன்னர்களோடு நேருக்கு நேர் சொற்போர் செய்யும் ஆற்றல் அவர்களுக்கிருந்தது. இவர்களின் படிப்பறிவால் பாரத தேசமே பூலோகத்தின் சூரியனாய்ச் சுடர்ந்தது.

ஆனால், காலம் செல்லச் செல்ல அந்தப் பெருமையை பாரதம் தொலைக்கத் தொடங்கியது. ஆணாதிக்கம் மேலோங்க, அன்னியப் படையெடுப்பு கைகொடுக்க, பெண்களின் நிலை தாழத் தொடங்கியது. பெண்களுக்கும் கல்விக்கும் இருந்த தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. பெருமை இழந்ததைக் காட்டிலும், இப்படியெல்லாம் நாம் இருந்தோமா என்பதையே நாட்டு மக்கள் அறியாமல் இருந்தனர்.

பாரதியார் இல்லம் பாண்டிச்சேரி

இவற்றினால் மனம் வாடிக் கொதிப்படைந்த பாரதியார், இருபதாம் நூற்றாண்டு இந்தியாவில் உதயமாகும் புதுமைப்பெண்ணின் சித்திரத்தை மிகத் தெளிவாகத் தீட்டினார். வேத காலத்து பெண் மேதைகளைப் போல் அவள் கம்பீரமான கல்வியறிவோடும் இருக்க வேண்டும். அதேசமயம் நவீன சாஸ்திர கலையறிவும் பெற்றிருக்க வேண்டும்.

பொய்மை ததும்பும் கலியுகத்திற்கு வேண்டுமானால், ‘புதுமைப்பெண்’ புதிதாக இருக்கலாம். ஆனால், பாரத தேசத்திற்கு அவள் ஏற்கெனவே அறிமுகமானவள்.
‘புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்
மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்.’
1915ஆம் ஆண்டில், ‘நியூ இந்தியா’ என்கிற ஆங்கில இதழில் இதைப்பற்றி கனல் பறக்கும் கட்டுரை ஒன்றையும் பாரதியார் எழுதினார். அதில்,
‘Ages ago, in the Vedic times, our nation had produced women like Maitreyi and Gargi, who were able to take part in the discussions and debates of the highest thinkers of the land. But, to-day, what is a woman’s status in our country? There is no use shrinking from strong language when we have to deal with terrible facts. Our women to-day are slaves…’
என்ற அவரது இடிமுழக்கம் பல ஆண்களின் மனசாட்சியில் ஓங்கி அறைந்தது.

கல்வியறிவு தரும் நிமிர்வு மட்டும் போதாது, வீழாத வீர உணர்ச்சியும் புதுமைப்பெண்ணின் அணிகலனாய் இருக்க வேண்டும் . ‘புதுமைப்பெண்’ என்பவள் பெண் விடுதலைக்கான அடையாளச் சின்னம் மட்டும் அல்லவே?! மண் விடுதலைக்கான அடையாளச் சின்னமும்தானே! ஆண்களின் அடிமைத்தனத்திலிருந்து பெண்களை மீட்க நினைப்பது, அவர்கள் பாரத மாதாவையும் அடிமை நிலையிலிருந்து மீட்க வேண்டும் என்ற நோக்கத்தினால்தானே!

கல்வியறிவின் கட்டாயத்தை அறிவுறுத்த வேத காலப்பெண்களின் பெருமையைப் பேசிய பாரதியார், வீரத்திறலின் மாட்சியை எடுத்துரைக்க ஈராயிரம் ஆண்டு பழைமையான சங்க காலப்பெண்களின் உதவியை நாடினார். 1907ஆம் ஆண்டு மதுரை செந்தமிழ் இதழில் அதன் ஆசிரியரும் சிறந்த தமிழறிஞருமான மு.இராகவையங்கார் எழுதிய, ‘வீரத்தாய்மார்’ என்ற கட்டுரை வெளியானது. பாரதியாரின் கண்களில் படுவதற்காகவே அந்தக் கட்டுரை பிரசுரமானது போலும்!

சங்ககாலத் தாய்மார்கள் எப்படித் தங்கள் பிள்ளைகளுக்கு வீரப்பால் ஊட்டி வளர்த்தனர் என்பதை பல இலக்கியச் சான்றுகளோடு மு.இராகவையங்கார் விதந்து எழுதியிருந்தார்.

ண்டையத் தமிழகத்தில் வாழ்ந்த அன்னையர்கள் வீரத்தின் மேன்மையை உணர்ந்திருந்தனர். தங்கள் மகவுகள் வீரத்தில் சிறந்திருக்க வேண்டும் என்றும் நாட்டுக்காக உயிரையே உதிர்க்கச் சித்தமாயிருக்க வேண்டுமென்றும் விழைந்தனர். அதனால் சத்தும் சுவையும் மிக்க தாய்ப்பாலில் வீர சக்தியையும் கலந்து ஊட்டினர்.
‘ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமமுருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’
என்கிற புறநானூற்றுப் பாடலை எழுதியவர் பொன்முடியார் என்ற பெண்பாற் புலவர். தான் பெற்றெடுக்கும் மகவு களத்தில் களிற்றோடு பொருதும் வீறு கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு தாய் விரும்புவதாக இப்பாடல் அமைந்திருப்பதைப் படித்தால் நெஞ்சில் நெருப்பு பற்றுகிறது.
‘என் மகன் போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தான் என்னும் செய்தியைக் கேட்கையில், ஈன்ற பொழுதினும் நான் பேருவகை எய்துவேன்’ என்றொரு தாய் கூறுவதாக ஒரு புறநானூற்றுப் பாடல் உண்டு.
‘மீனுண் கொக்கின் றூவி அன்ன
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறெறிந்து பட்டனன் என்னும் முவகை
யீன்ற ஞான்றினும் பெரிதே…’
இப்பாடலை எழுதியவரும் பூங்கணுத்திரை என்னும் பெண்பாற் புலவரே! வீரத்தாய்மார்களைக் காட்சிப்படுத்தும் கவிதைகளைப் பெரும்பாலும் பெண் கவிஞர்களே எழுதியுள்ளனர் என்னும் உண்மை இங்கு கூர்ந்து நோக்கத்தக்கது.

மு. இராகவையங்கார்

மேலே சொன்ன செய்திகளைத் தன் கட்டுரையில் மு.இராகவையங்கார் சொன்ன பாங்கு, பாரதியாரைக் குதூகலிக்க வைத்தது. அதனால் இந்த வரலாற்றைத் தற்காலத் தமிழ்ப்பெண்டிரும் அறிய வேண்டும் என்று பாரதியார் அவாவினார். மு.இராகவையங்கார் எழுதிய கட்டுரையை, தான் ஆசிரியராக இருக்கும், ‘இந்தியா’ இதழில் மீள் பிரசுரம் செய்தார். அவரைப் பாராட்டி ஒரு கடிதமும் எழுதினார்.

“வீரத்தின் அருஞ்சிறப்பை உணர்ந்த அன்னையர்களால்தான் வீரம் செறிந்த மக்களைப் பெற்றெடுக்க முடியும். அத்தகைய ஆளுமைகளால்தான் அன்னியரை எதிர்த்துப் போரிட முடியும்.” இந்தக் கருத்தில் பாரதியார் தீவிர பற்றுக் கொண்டிருந்தார். அதேசமயம் வீர சுதந்திரம் வேண்டிப் போராடும் புதுமைப்பெண்ணின் பாத்திரப் படைப்பில் ஒரு முக்கியப் புதுமையையும் செய்தார்.

ங்ககால வீரப்பெண்டிர் அச்சமற்ற ஆண் மக்களைப் பெற்றெடுத்து களத்துக்கு அனுப்பினாலும், அவர்கள் எவரும் களம் நின்று போர் செய்யவில்லை. ஆனால், பாரதியாரின் நவீன புதுமைப்பெண் வீரப்புதல்வர்களைப் பெற்றெடுக்கும் தைரியலட்சுமி மட்டுமல்லள்; ஆங்கிலேயரை அஞ்சாமல் களம் புகுந்து நேருக்கு நேர் சமர் செய்யும் வல்லமையும் மிக்கவள்.

இத்தனை செய்த பின்னும் பாரதியாரின் பசி தணியவில்லை. அவரது இதயம், வேத, சங்க காலங்களைத் தாண்டி இதிகாச காலத்துக்கு வந்து நின்றது.
(அறிவோம்)

4 COMMENTS

 1. கி.மு.1500 முதல் கி.மு.500 வரை ஆண்களுக்கு நிகராக இருந்த பெண்கள் பிற்காலத்தில் கல்வி கற்பதில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் தங்கள் பெருமையை இழந்தது கொடுமை. வேதகாலத்து பெண் மேதைகள் போன்று பெண்கள் கல்வி அறிவு பெற்று மேம்பட தனது வாழ்நாளில் 20ம் நூற்றாண்டு புதுமைப்பெண்கள் குறித்து பாரதி பாடியது எக்காலத்திலும் நிலைத்து நிற்கும்.

  ஆ. மாடக்கண்ணு
  பாப்பான்குளம்.

 2. பாரதி யின் ஆன்மாவை வெளிக்காட்ட முயலும் கட்டுரைகள். வாழ்த்துக்கள் . நிரஞ்சன்.
  – பிருந்தா சாரதி

 3. வேத கால பெண்கள் பெற்றிருந்த ஞானமும் வீரமும் பிற்காலத்திலும் தொடர்ந்தது. அயலவர் படையெடுப்புகள், நமது சநாதன தர்மம் போல் அல்லாமல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் பெண் அறிவு வளர்ச்சி வெளி உலகுக்கு தெரியவில்லை மற்றும் பாதுகாப்பு காரணமாக உரிமைகள் மறுக்கப்பட்டு.
  விளைவு பெண்கள் அடிமைத்தனம் தோன்றியது.
  பெண்விடுதலை குறித்து பாரதியாரின் குரலுக்கு பெண்களும் ஞானியும் காரணமாக இருந்ததன் விளைவு, பாரதியாரின் கவிதைகள் சாகாவரம் பெற்றன.
  வாழ்க தமிழ்
  வாழ்க பாரதம்
  வாழ்க பாரதி

  கவிஞர் நிரஞ்சன் பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்.
  மங்கையர் மலர் இதழுக்கு பாராட்டுகள்

நிரஞ்சன் பாரதி
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் எள்ளுப்பேரன். புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் ராஜ்குமார் பாரதியின் மகன். கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர், பேச்சாளர். MYTAMILGURU என்ற இணைய வழி தமிழ்ப்பள்ளியை நண்பர்களுடன் இணைந்து நிறுவி உலகெங்கும் உள்ள மாணாக்கர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்து வருகிறார். இதுமட்டுமல்லாது "பசுமைக் கவிஞன்" என்ற YOUTUBE CHANNEL ஐயும் நடத்திவருகிறார். படித்தது பொறியியலும் மேலாண்மையும் என்றாலும் பிடித்தது தமிழும் இயற்கையும்தான்.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,884FollowersFollow
3,230SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

உப்புச் சுரங்கத்தின் உள்ளே…

பயணம் - கிழக்கு ஐரோப்பா - 10 - பத்மினி பட்டாபிராமன் ‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ படம் எடுத்த அழகான சால்ஸ்பர்க் பார்க்கப் போகிறோம் என்று நாங்கள் ஆவலாகக் காத்திருக்க... பார்த்திருக்க, ஒரு சுரங்க வாசலில்...

கடைசி வரை யாரோ…?

0
சிங்கப் பெண் காவலர்கள் குற்றம் - வழக்கு - விசாரணை - 5 - பெ.மாடசாமி ஓவியம் : தமிழ்  ‘மற்றவர்கள் உங்களை நேசிக்கின்ற விதத்தில் நடந்து கொள்வதுதான் நீங்கள் செய்யக்கூடிய மகத்தான காரியமாகும்’ (நாஜி படையினரிடமிருந்து தப்பிப்...

இதற்காகவா ஒரு கொலை?

0
புதிய தொடர் - 1 - ஜி.எஸ்.எஸ். நிலத் தகராறுகள் கொலையில் முடிந்த சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். முறை தவறிய உறவுகள் கொலைகளில் முடிந்ததுண்டு. கௌரவக் கொலைகள் (அல்லது ஆணவக் கொலைகள்) குறித்தும் கேள்விப்படுகிறோம். ஆனால்,...

எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்?

அத்தியாயம் - 7 - நிரஞ்சன் பாரதி பராசக்தியின் அம்சங்கள்! பாரதியாருக்கு ஒரு தனித்துவமான குணமிருந்தது. தான் எழுதிய பாடல்களின் பரிசோதனைக் கூடமாக அவர் தன்னையே அவ்வப்போது மாற்றிக்கொள்வார். ஒரு மகாகவிஞனுக்கு இருக்கும் விநோதமான இலக்கணங்களில் இதுவும்...

சார்ல்ஸ் பிரிட்ஜில் பொடிநடை!

- பயணம் கிழக்கு ஐரோப்பா - 9 - பத்மினி பட்டாபிராமன் கடந்த 2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில், உலகின் மிக அழகிய நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, செக் ரிபப்ளிக் நாட்டின் தலைநகரமான ப்ராக். ‘நூறு...