0,00 INR

No products in the cart.

வீட்டிலிருந்தே வியாபாரம்! நல்ல பிஸினஸ் எது?

FB பகிர்வு : மங்கையர் மலரில்
வீட்டிலிருந்தே வியாபாரம்! நல்ல பிஸினஸ் எது?
மங்கையர் மலர் வாசகியர் பதிவுகள்!

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

ம் எல்லோருக்கும், குறிப்பாகப் பெண்களுக்கு சமையல் என்பது கைவந்த கலை மட்டுமல்ல; கைகொடுக்கும் கலையும் கூட. தினமும் வெளியில் போய் வேலை செய்யப் பிடிக்காதவர்கள் அல்லது வீட்டை விட்டுப் போக முடியாதவர்களுக்கு கேட்டரிங் நல்ல பிஸினஸ். எல்லோருக்கும் உணவு அவசியமான தேவை. ஆனால், அவர்களால் தினப்படி சமையல் செய்ய முடியாமல் இருக்கும். உதாரணமாக, வயதானவர்கள், நோயாளிகள், குடும்பத்தை விட்டு வெளியூரில் இருப்பவர்கள், மருத்துவமனையில் இருப்பவர்கள், பணியில் இருக்கும் பெண்கள் என்று பலருக்கும் உணவை வெளியில் வாங்கும் நிலை. அப்படிப்பட்டோர்க்கு சுவையான, சத்தான, தரமான உணவை நம் வீட்டிலிருந்து தயார் செய்து கொடுப்பது இன்றைய காலகட்டத்தில் நல்ல பிஸினஸ். லாபகரமானதும் கூட. நம் வீட்டில் செய்யும் சமையலை சிறிது அதிகமாகச் சேர்த்து மற்றவர்களுக்குக் கொடுத்து பணம் சம்பாதிக்கலாம். நம்மால் எவ்வளவு செய்து கொடுக்க முடியுமோ அதை மட்டுமே செய்யலாம். அதிலும், சிற்றுண்டி மட்டுமோ அல்லது முழு சாப்பாடு அல்லது குழம்பு, ரசம், பொரியல் மட்டும் என்று நம் சக்திக்கும், இட, பண வசதிக்கும் ஏற்ப தீர்மானித்துக் கொண்டு செய்யலாம். சிறிய அளவில் செய்ய நம் வீட்டில் உள்ள குழந்தைகள், பெரியவர்களையே காய் நறுக்க, பொட்டலம் கட்ட என்று உதவிக்கு அழைக்கலாம். கொஞ்சம் அதிகப்படிக்கு ஆளை வைத்துக் கொள்ளலாம். இந்தத் துறையில் போட்டி அதிகம் என்பதால் நம் வெற்றி பெற கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

 •  சுவையும், தரமும் முக்கியம். இதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நம் உணவின் சுவையே நம்மிடம் தொடர்ந்து வாங்க வைக்கும் மந்திரம்.
 • மற்றவர்களுக்கும் சமைத்துக் கொடுக்கும்போது, அதைச் சாப்பிடுபவர்கள் ஆரோக்கியத்தை மனதில் வைத்து சத்தான உணவைத் தயாரிக்க வேண்டும்.
 • சுகாதாரமான இடத்தில், சுத்தமான பாத்திரங்களில் சமைத்து நன்றாக மூடிவைக்க வேண்டும். உணவைக் கட்டிக்கொடுக்க இலை, பாத்திரம் உபயோகிக்கலாம்.
 • குறித்த நேரத்தில் உணவை பட்டுவாடா செய்ய வேண்டும்.
 •  பண்டத்துக்கு ஏற்ற நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும்.
  இந்த வியாபாரத்தில் மற்றவர் தேவையே நமக்கு மையக்கரு. அந்தத் தேவையை பூர்த்தி செய்வது லாபத்திற்கான சூட்சுமம்.
 • லாபம் பெருக்க சில யோசனைகள் :
  எவ்வளவு சாப்பாடு செய்ய முடியும் என்பதை மனதில் கொண்டு, அதற்குத் தகுந்தபடி ஆர்டரை எடுக்க வேண்டும். இதனால் பற்றாக்குறை அல்லது உணவு வீணாவதைத் தடுக்கலாம். கடைசி நேரப் பரபரப்பும் தவிர்க்கப்படும். அன்றாடத் தேவைக்கு காய்கறி, மளிகைகளை முன்கூட்டியே திட்டமிட்டு வாங்கி வைக்க வேண்டும்.
 •  சமையலுக்குத் தேவையான காய், மளிகைகளை மொத்தமாக வாங்குவதால் செலவு குறையும்.
 • அதிக வாடிக்கையாளர்கள் டோர் டெலிவரி கேட்பதால், அதை குறித்த நேரத்தில் கொண்டு சேர்க்க ஆள் ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போது இதற்கு நிறைய செயலிகள் உள்ளன. அவற்றில் இணைந்து செய்யலாம். (ஸ்விக்கி, ஜோமாட்டோ, டன்ஜோ போன்றவை.)4. எப்போதும் ஒரேமாதிரி சமைத்துக் கொடுக்காமல், புதிய சுவையில் முயற்சி செய்தால் அதிக வரவேற்பு இருக்கும். சுவைக்கு அடிமை ஆகாதவர் கிடையாது.

‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பதற்கேற்ப
இந்தத் தொற்று, ஊரடங்கு
நேரத்தில் நிறைய நல்ல உள்ளங்கள் உணவுசமைத்து வியாபாரமாகவும், இலவசமாகவும் கொடுத்தார்கள்
என்று கேள்விப்பட்டோம்.
அதனால் தோழிகளே, நீங்களும் வீட்டிலிருந்தே சுவையாகச்
சமைத்து மற்றவர்களை மகிழ்வித்து, உங்கள் வருமானத்தையும் பெருக்கிக் கொண்டு அன்னபூரணியாக வாழ வாழ்த்துக்கள்.
– ராதிகா ரவீந்திரன், சென்னை

…………………………

அப்பளம்… வடாம்… வற்றல்!

மூன்றாம் தலைமுறையாக எங்கள் வீட்டில் சிறுதொழில் வியாபாரம் நடத்தி வருகிறோம். அப்பளம், வடாம், வற்றல் என்றால் குறிப்பிட்டு அந்தத் தெருவில் சொல்லும் அளவிற்கு என் பாட்டி, அம்மா, தற்போது நான் மிகவும் பிரபலம். நுகர்வோரின் தேவையை சரிவரப் புரிந்து கொள்வது; குறிப்பிட்ட நேரத்தில் நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்வது; தரமான, சுகாதாரமான மூலப்பொருட்கள் பயன்படுத்துவது; நியாயமான விலை, செய்யும் விதத்தில் தெளிவான போக்கு இவைதான் ஒரு சிறுதொழில் வெற்றிப்பாதையை நோக்கிச் சென்று கொண்டே இருக்க அடிப்படை மூலதனம்.

இரண்டாவது, நாம் குடும்பத்தலைவி எனில் நாம் தொழிலுக்காக செலவிடும் நேரம் எக்காரணம் கொண்டும் தினசரி வாழ்க்கை முறையை பாதிக்கவே கூடாது. நேர மேலாண்மை (TIME MANAGEMENT) என்பதை சரியாய் தெரிந்து வைத்திருக்க வேண்டும் .

என் சிறு வயது முதலே இதனுடைய லாப, நாட்டங்கள், காலாவதி நேரம் ஆகியவற்றை சரிவர துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தபடியால் என்னால் கட்டப்படாமல், நட்டப்படாமல் செய்ய முடிகிறது. ஆகையால், முன் அனுபவம் என்பது வரப்பிரசாதம். அதுவும், உணவு சார்ந்த பிஸினஸுக்கு.

ற்போது நான் படித்த பட்டதாரி என்பதால், அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப உணவு தரச்சான்றிதழ் (FSSAI) பெற்று பிசினஸ் செய்வது, மேற்கொண்டு வங்கிக் கடன் பெறுவது, பிசினஸை விரிவுபடுத்துவது போன்றவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மிகவும் முக்கியமான காரணம், நமது உடல் ஆரோக்கியம். பிசினஸ் என்ற பெயரில் ஓய்வு நேரத்தினை மூலதனமாக எக்காரணம் கொண்டும் செலவு செய்யக் கூடாது.

இது ஆரோக்கியத்தை விற்று மருந்து வாங்குவது போல, நம் வீட்டுச் சூழலையே பாதித்து விடும். இதனால் நம்மையும், நம் பிஸினஸையும் குடும்ப உறுப்பினர்கள் சீக்கிரம் வெறுத்து , எதிர்ப்பு தெரிவித்து விடுவார்கள். நாம் அடுத்த படிக்கட்டில் அடி எடுத்து வைக்க முதல் கடைக்கால் நமது ஆரோக்கியம்தான்.

இன்னும் ஒரு விஷயம்… உணவு சம்பந்தப்பட்ட பிசினஸ் எனில், பேக்கிங் செய்யும் விதம் கூட நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதுதான் நுகர்வோரை கவர்ந்திழுக்கும் முதல் உத்தி. நன்றாகச் செய்யத் தெரிந்தும், பேக்கிங் செய்வது நன்றாக இல்லை எனில், வாடிக்கையாளரை அதிகப்படுத்த முடியாது.
ஆகவே, குடும்ப உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பு, உடல் ஆரோக்கியம், நேர மேலாண்மை, தொழில் முன் அனுபவம், உற்சாகமான மனநிலை இவைதான் சிறு தொழிலுக்கு ஆணிவேர்.
– ஸ்ரீவித்யா பிரசாத், சென்னை.

…………………………

பினாயில் தயாரிப்பு!

வீட்டிலிருந்தபடியே சுலபமாகச் செய்யக்கூடிய தொழில் பினாயில் தயார் செய்வது. அதற்கான மூலப்பொருட்கள், நம்மூரில் உள்ள எஸென்ஸ் கடைகளில் கிடைக்கிறது. இன்றைய சூழ்நிலைக்கு எல்லோர் வீட்டிலும் வாங்கக்கூடிய ஒரு பொருள் பினாயில். வீடு சுத்தம் செய்ய மற்றும் வீட்டை சுற்றிலும் பாத்ரூம், டாய்லெட் என எல்லா இடங்களிலும் பினாயில் கொண்டு சுத்தம் செய்கிறோம் கண்டிப்பாக ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தது மூன்று லிட்டர் பினாயில் தேவைப்படும்.

பிளாஸ்டிக் பாட்டில்கள்
கடைகளில் கிடைக்கிறது.
அதை நிரப்பி நம் நண்பர்கள் வீடு,
அக்கம் பக்க வீடு என நம் சுற்றுவட்டாரத்தில் வியாபாரம்
செய்தாலே போதும்.
கணிசமான தொகை கிடைத்துவிடும். அதையும் தாண்டி நாம் கடைகளுக்கு
அதை விற்பனைக்கு அனுப்பினால்
கூடுதல் லாபமும் கிடைக்கும்.
இன்றைய சூழ்நிலைக்கு
பெண்கள் வீட்டில் இருந்தபடியே
செய்யஏற்ற தொழில்களில்
இதுவும் ஒன்று.
– கவிதா பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.

…………………………

மிக்ஸ்… மசாலா… மாவு தயாரிப்புகள்!

கொரோனாவுக்குப் பிறகு, மூலிகைப் பொருட்களுக்கான வரவேற்பும் தேவையும் அதிகமாக உள்ளது. மசாலா பொருள்கள், ஹெல்த் மிக்ஸ், சிறுதானிய மிக்ஸ் போன்ற ஹோம்மேடு தயாரிப்புகளுக்கு நிறையத் தேவைகள் உள்ளன.

குழம்பு செய்வதற்குத் தேவையான அடிப்படை மசாலா மற்றும் இதர உணவுப் பொருட்களைச் சேர்த்து, பவுடராகப் பண்ணி விற்பனை செய்யலாம். இந்தப் பவுடரை வைத்து, பத்தே நிமிடங்களில் குழம்பு தயாரித்து விடலாம். வேலைக்குச் செல்லும் மகளிர் அதிகம் பேர் இந்தப் பவுடரை வாங்குவார்கள்.

வல்லாரை, பிரண்டை, முடக்கத்தான் கீரை போன்ற பல்வேறு மூலிகைகளைப் பவுடர் செய்து, சிறுதானிய மாவில் கலந்து, ‘தோசை மிக்ஸ்’ என்று விற்பனை செய்யலாம். இந்த மிக்ஸை வாங்கி, அதில் தண்ணீர் சேர்த்துக் கரைத்துத் தோசையாகச் சுட்டு சாப்பிடலாம். இதேபோல் அடை மிக்ஸ், சூப் மிக்ஸ், புட்டு மிக்ஸ், மூலிகை சாதப்பொடி மிக்ஸ் என்று தயாரிக்கலாம்.

முளை கட்டிய சிறு தானியங்களை அரைத்துப் பவுடராக்கி ஊட்டச்சத்து மாவாக விற்பனை செய்யலாம். சிறு தானியங்கள் உடல் நலனுக்கு எவ்வளவு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் கண்டிப்பாக வாங்குவர்.
வீட்டிலேயே அப்பளம், வற்றல், ஊறுகாய், தின்பண்டங்கள், இனிப்புகள் செய்து விற்கலாம். அடிப்படையில் பக்குவத்துடன் சமைக்கத் தெரிந்திருந்தால் போதும்.

மசாலாக்கள் அரைத்ததும் மாவில் இருக்கும் சூடு தணிந்ததும், பாக்கெட்டுகளில் போட்டு விட வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து, சாவகாசமாக பாக்கெட் செய்தால் விரைவில் வண்டு வந்து விடும். பிறகு மக்கள் வாங்க யோசிப்பார்கள்.

கிராமத்து விவசாயிகளிடம் நேரடியாக மூலிகைகள், சிறு தானியங்கள் மற்ற உணவுப் பொருட்களை குறைந்த விலையில் கொள்முதல் செய்யலாம். மூலிகைகளைப் பயன்படுத்தி, சோப்புகள், குளியல் பொடிகள் போன்றவையும் தயாரிக்கலாம்.

நமக்கு என்னென்ன தேவை என்று பார்த்தால்… மூலிகைகள், சிறு தானியங்கள், அடிப்படை உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், அடுப்பு. தேவை என்றால் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் நபர்களிடமும், வேளாண் கல்லூரிப் பயிற்சி வகுப்புகளிலும் பயிற்சி பெறலாம்.

மக்கள் அதிகம் கூடும் சந்தை, பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம், கோயில்கள் போன்ற இடங்களில் நேரடியாக விற்பனை செய்யலாம். மளிகைக் கடைகள், இயற்கை அங்காடிகளுக்கு ஆர்டர் வாங்கியும் விற்பனை செய்யலாம்.

மக்களுக்கு நம் மீது நம்பிக்கை வந்து விட்டால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடத் தொடங்கும். ஹோம்மேடு தயாரிப்புகளுக்கு என்றுமே தேவை உண்டு. அதனால் தைரியமாக இந்த பிஸினஸை வீட்டில் இருந்து பண்ணி, நல்ல லாபம் பெறலாம்.
– ஜெயா சம்பத், சென்னை

1 COMMENT

 1. வீட்டிலிருந்தபடியே பெண்கள் வியாபாரம் செய்து பொருளீட்டுவது குறித்து தொகுத்து வழங்கியுள்ளது மிகவும் பயனுள்ளதாகும். சமையல் தொழிலை வெற்றிகரமாக நடத்த வழக்கியுள்ள ருசி, ஆரோக்கியம், சுகாதாரம் குறித்த டிப்ஸ்கள் மிகக் சிறப்பு, அப்பளம், வடகம், வற்றல் தயாரித்தல் குறித்த பக்குவம் அருமை. படித்து பயன்பெற வேண்டிய கட்டுரை . செய்முறைகளை பகிர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.

  ஆ . மாடக்கண்ணு
  பாப்பான்குளம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...