முக்கோடி ஏகாதசி!

முக்கோடி ஏகாதசி!
Published on

ஜனவரி 13 – வைகுண்ட ஏகாதசி

– ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

'மாதங்களில் நான் மார்கழி' என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. அத்தகு புனிதமான மார்கழியில் வரும் ஒப்பற்ற விரதம்தான் வைகுண்ட ஏகாதசி விரதம். பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப் பகுதியை நாம், 'பட்சம்' என்றழைப்போம். ஒவ்வொரு நாளையும், 'திதி' என்று கூறுவர். இதில் அமாவாசையை அடுத்து வரும் பதினைந்து நாட்கள் வளர்பிறை, அதாவது 'சுக்லபட்சம்' எனவும், பெளர்ணமிக்கு அடுத்து வரும் பதினைந்து நாட்கள் தேய்பிறை, அதாவது 'கிருஷ்ண பட்சம்' எனவும் அழைக்கப்படும். இப்படி சுக்லபட்சம், கிருஷ்ணபட்சம் இரு காலங்களிலும் பதினோராவது திதியாக வருவது ஏகாதசி. இந்நாளே விஷ்ணுவுக்குரிய திருநாளாக விரதத்தோடு அனுஷ்டிக்கப்படுகிறது.

அப்படி, பதினோராவது திதியான ஏகாதசிக்கு தர்மமே தேவதையாகத் திகழ்கிறது என்பார்கள். எனவே, இந்நாளில் விரதம் அனுஷ்டித்து விரதம் இருந்தால் கோடி புண்ணியம் உண்டு. அதிலும் மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி திருநாள் முக்கோடி மடங்கு பலன்களைத் தரும். எனவேதான் இந்நாளை, 'முக்கோடி ஏகாதசி' என்பர்.

கிருத யுகத்தில் சந்திரவதி எனும் நகரில் முரன் எனும் அசுரன் வாழ்ந்து வந்தான். வரம் பல பெற்ற இந்த அசுரனின் கொடுமைகள் தாங்காது, தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று முரனோடு போரிடச் சென்றார் திருமால். யுத்தம் பல்லாண்டுகள் நீடித்தது. களைப்படைந்த பெருமாள் பத்ரிகாச்ரமம் சென்று ஒரு குகையில் படுத்துக்கொண்டார். திருமாலை தேடி வந்த அரக்கன் அவர் உறங்குவதைப் பார்த்து தாக்கத் தொடங்கினான். அப்போது பெருமாளின் உடலில் இருந்து மகத்தான சக்தி ஒன்று பெண் வடிவில் தோன்றி, அசுரனை அழித்தது. இதனால் மகிழ்ந்த எம்பெருமான் அசுரனை அழித்து, அந்தப் பெண் தன் திருமேனியில் இருந்து வந்த பதினோராவது நாளான, 'ஏகாதசி திருநாள் தமக்குகந்த விரத நாள் என்றும், அன்று விரதம் இருந்து தம்மை வழிபடுவோர்க்கு கோடானுகோடி புண்ணியங்கள் கிடைக்கும்' என்றும் அருளினார்.

வைகுண்ட ஏகாதசியன்று திருமால் பாற்கடலில் பக்தர்களுக்கு பள்ளிகொண்டு இருப்பதைப் போல் காட்சியளிப்பதுடன், சொர்கத்துக்குச் செல்லும் வழியையும் காட்டுகிறார் என்பது நம்பிக்கை.

முக்கோடி பிரதட்சண வாசல்
திருப்பதி திருமலை கோயிலில் சொர்க்க வாசல் என்று ஒன்று கிடையாது. அதற்கு பதில் முக்கோடி பிரதட்சண வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசித்த பின் வெளியில் வந்தவுடன் இருக்கும் பிராகாரத்திற்கு, 'விமான பிரதட்சணம்' என்று பெயர். இதற்கும் வெங்கடாஜலபதி அருள் தரும் கருவறைக்கும் நடுவில் ஒரு பிராகாரம் உண்டு. இது திருப்பதியில் மட்டுமே இருக்கும் அபூர்வ பிராகாரம். இதை வலம் வந்தால் மகாபுண்ணியம் கிடைக்கும்.

வேங்கடவனை தரிசித்து வாயிலைக் கடந்ததும் இருப்பது ஸ்தாபன மண்டபம். இதையடுத்து ராமர் மேடை பகுதி உண்டு. இந்த ராமர் மேடைக்கு இடப்பாகம் ஆரம்பித்து மூலவரான வெங்கடாஜலபதியை வலம் வந்து உண்டியல் இருக்கும் இடத்துக்கு அருகில் வெளிவருவது முக்கோடி பிரதட்சண வாயில். இது மார்கழி வைகுண்ட ஏகாதசியின் முதல் நாளான தசமியன்று திறக்கப்படும்.

அம்பரீசன் சிறந்த திருமால் பக்தன். அவன் ஏகாதசி விரதத்தை விடாது கடைபிடித்து வந்தான். ஒருமுறை அவன் ஏகாதசி விரதம் கடைபிடித்த நாளன்று அரண்மனைக்கு துர்வாச முனிவர் வந்தார். முனிவரை உபசரிக்க எண்ணினான் மன்னன். முனிவரும், 'தான் நீராடி வரும் வரை உண்ணாமல் காத்திரு' எனக் கூறி சென்றார். ஆனால், அவர் வருவதற்குத் தாமதமானது. மன்னனோ, பாரணை முடித்து விரதத்தைப் பூர்த்தி செய்யும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. நெடுநேரம் காத்திருந்து மன்னன் இறுதியில் பகவான் மீது பாரத்தைப் போட்டுவிட்டு துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதத்தைப் பூர்த்தி செய்தான். ஆனால், அவனது உண்மையான பக்தியை அறியாத துர்வாசர் கோபம் கொண்டு, அவனை சபிக்க முற்பட்டு ஒன்றும் செய்ய இயலாத நிலையில் சக்ராயுதம் மன்னனைக் காத்து நின்றது. காரணம், அம்பரீசனின் ஏகாதசி விரத பலனே ஆகும். இதிலிருந்து ஏகாதசி விரதத்தினால் மலை போல் வரும் துன்பம் பனி போன்று மறைந்து விடும் என்பதை உணரலாம்.

சொர்க்க வாசல்


சொ
ர்க்க வாசலான வைகுண்ட வாசலில் வடக்கு தெற்கு திசைகளை நோக்கியவாறு கதவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. கதவுகளின் முன்பாகம் வடதிசையை நோக்கியும் பின்பாகம் தென்திசையை நோக்கியும் அமைந்துள்ளன. தென்திசை எமனுக்குரிய திசையாகக் கருதப்படுவதால், வடதிசையை நோக்கி கதவுகள் அமைக்கப்படுவதாக கருதப்படுகிறது. கதவுகளின் முன்பாகத்தில் உள்ள பகுதி பூலோகம் என்றும் பின்பாகத்தில் உள்ள பகுதி பரமபதம் என்றும் கூறுவர். மண்ணுலகில் இருந்து மக்கள் மோட்ச உலகமாகிய பரமபதம் சென்றடைதலை இவை குறிப்பால் உணர்த்துவதாக ஐதீகம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com