
தேவையானவை : துவரம் பருப்பு – கால் கப், சேப்பங்கிழங்கு – 5, உருளைக்கிழங்கு – 3, கேரட், வெண்டை, கத்தரிக்காய், பீன்ஸ் – சிறு துண்டுகளாக வெட்டியது – 2 கப், முருங்கைக்காய் – 1, புளி – சிறிது, உப்பு, பெருங்காயம் – சிறிது, கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் – தாளிக்க.
வறுக்க : வரமிளகாய் – 4, தனியா, கடலைப் பருப்பு – 2 ஸ்பூன், தேங்காய் துருவல் – கால் கப்.
செய்முறை : துவரம் பருப்பை வேக வைக்கவும். கிழங்குகளை தனியாக வேக வைத்து துண்டாக்கவும். மற்ற காய்கறிகளை விட்டு தனியா, மிளகாய், கடலைப் பருப்பு, பெருங்காயம், தேங்காய் போட்டு வறுக்கவும். ஆறியதும் நைசாக அரைக்கவும்.
புளிக்கரைசலை வடிகட்டி, உப்பு சேர்த்து கொதித்ததும் அரைத்த விழுதையும், வேக வைத்த காய்கறிகளைச் சேர்த்துக் கொதித்ததும் இறக்கவும். கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து கலக்கவும். சுவையான காணும் பொங்கல் கூட்டு தயார்.
தேவையானவை : விதை நீக்கிய பேரீச்சை பழம் – 10, கோதுமை ரவை – 1 கப், முந்திரி, திராட்சை – 2 ஸ்பூன், வெல்லம் – அரை கப், ஏலப்பொடி – கால் டீஸ்பூன், நெய் – கால் கப்.
செய்முறை : ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுக்கவும். கோதுமை ரவையை தண்ணீர் விட்டு வேக விடவும். நன்கு வெந்ததும் பேரீச்சை துண்டுகள், வெல்லம் கலந்து கிளறவும். நன்றாகக் குழைந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலப்பொடி கலந்து நெய் விட்டு கலந்து இறக்கவும். பேரீச்சை ஸ்வீட் பொங்கல் சாப்பிட சூப்பராக இருக்கும்.
தேவையானவை : ஓட்ஸ் – 1 கப், தேங்காய்ப்பால் – 1கப், சர்க்கரை – 1 கப், பாதாம், முந்திரி – 1 டேபிள் ஸ்பூன், நெய் – சிறிது, வெண்ணெய் – 2 ஸ்பூன்.
செய்முறை : அடுப்பில் வாணலியில் தேங்காய்ப்பால் விட்டு குறைந்த தீயில் வைத்து ஓட்ஸ் சேர்த்து நன்றாக வேக விடவும். வேறு வாணலியில் சர்க்கரையுடன் நெய் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். நீர் விடாமல் சர்க்கரை கரைந்து பொன்னிறமாக மாறும். சர்க்கரை நன்கு கரைந்தவுடன் சிறிது வெண்ணெய் சேர்த்துக் கலக்கி, அடுப்பை நிறுத்தவும். இது கேரமல் சிரப் ஆகும். நன்கு சிவந்த ஓட்சில் இதை ஊற்றிக் கிளறி பாதம், முந்திரி உடைத்துத் தூவவும். தேவையான அளவு நெய் சேர்த்துக் கிளறி இறுகியதும் அடுப்பை நிறுத்தவும். வித்தியாசமான ஓட்ஸ் பொங்கல் தயார்.
– வசந்தா மாரிமுத்து, சென்னை.
தேவையானவை : பச்சரிசி – 1 கப், பாசிப் பருப்பு – அரை கப், ஆய்ந்து நறுக்கிய பசலைக் கீரை – 1 கப், பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது), தக்காளி – 1 நறுக்கியது, இஞ்சி – 1 துண்டு (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை – சிறிது, நெய் – 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க : மிளகு, சீரகம் தலா – 1 ஸ்பூன், பட்டை – 1 துண்டு, லவங்கம் – 2, ஏலக்காய் – 2, எண்ணெய் – 1 ஸ்பூன், நெய் – 2 டேபுள் ஸ்பூன்.
செய்முறை : ஒரு பாத்திரத்தில் அரிசி, பருப்பை ஒன்றாக அலம்பிப் போட்டு ஐந்து கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ஊற்றி சிறு தீயில் வேக விடவும். பாதியளவு வெந்ததும் உப்பு, நெய், பெருங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வேக வைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், மிளகு, சீரகம் தாளித்து பின் நறுக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கி, பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள பசலைக் கீரையைச் சேர்த்து உப்புப் போட்டு நன்கு வதக்கவும். கீரை நன்கு வெந்தபின் தக்காளிச் சேர்த்து பத்து நிமிடம் வதக்கிய பின் பொங்கலில் கொட்டிக் கிளறவும். 'கமகம' பசலைக் கீரை பொங்கல் ரெடி! பார்க்க வித்தியாசமான, பசுமை நிற பொங்கல் ரெடி.
தேவையானவை : குதிரை வாலி அரிசி – 1 கப், பாசி பருப்பு – 1 கப், வெங்காயம், தக்காளி, கேரட் – தலா 1, பச்சை மிளகாய் – 3, பட்டாணி – கால் கப், இஞ்சி – சிறு துண்டு, கறிவேப்பிலை – சிறிது, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு – தலா 1 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை : வெங்காயம், இஞ்சி, கேரட் ஆகியவற்றை தோல் நீக்கி வறுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். குதிரைவாலி அரிசியை வாணலியில் வறுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுச் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு போட்டு தாளிக்கவும். பின்னர் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கேரட், தக்காளியைப் போட்டு வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஆறு கப் தண்ணீர் கொதித்ததும் குதிரைவாலி அரிசி, பாசிப் பருப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி வேக விடவும். பாதி வெந்ததும் சிறு தீயில் வேக வைத்துப் பின் இறக்கவும். இந்த குதிரைவாலி காய்கறி பொங்கலை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
– என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி
தேவையானவை : பச்சரிசி – 250 கிராம், பாதாம் பருப்பு – 100 கிராம், பசும்பால் – 200 மில்லி, பொடித்த வெல்லம் – 300 கிராம், ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன், நெய் – 100 கிராம், முந்திரி பருப்பு – 10.
செய்முறை : பாதாம் பருப்பை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, தோல் நீக்கி நைசாக அரைக்க வேண்டும். வெல்லப் பொடியை வாணலியில் போட்டு நீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். அரிசியை சிறிது நெய் விட்டு வறுத்து தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக விட வேண்டும். வெந்ததும் அதில் வெல்லக் கரைசல், பாதாம் விழுது, பாலைச் சேர்த்துக் கிளற வேண்டும். எல்லாம் சேர்ந்து கெட்டியானதும், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலப்பொடி சேர்த்து நெய் விட்டு கிளறினால் சுவையான பாதாம் பொங்கல் ரெடி.
தேவையானவை : அவல் – 100 கிராம், வெல்லம் – 50 கிராம், பாசிப் பருப்பு – 1 கரண்டி, நெய் – 1 கரண்டி, முந்திரிப் பருப்பு – 50 கிராம், பாதாம் பருப்பு – 50 கிராம், பிஸ்தா பருப்பு – 25 கிராம், ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன்.
செய்முறை : அவலை நன்றாகக் களைந்து அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பருப்பை ஊற வைத்து, விழுதாக அரைத்து எடுக்க வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து நீர் விட்டு கரைந்ததும் வடிகட்டி, பாகு காய்ச்ச வேண்டும். அதில் அவல், பருப்பு விழுது சேர்த்துக் கிளற வேண்டும். வாணலியில் நெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்புகளைப் போட்டு வறுத்து, அவலில் சேர்த்து ஏலக்காய்த் தூள் சேர்த்து, நெய் விட்டுக் கிளறி கீழே இறக்க வேண்டும்.
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
மகர சங்கராந்தி அன்று, மராட்டியர்கள் இறைவனை வழிபட்டு, மாலையில் பெண்மணிகள் பாரம்பரிய உடை அணிந்து, ஹல்தி – குங்கும் நிகழ்வினை நடத்துவார்கள். அப்போது எள் – வெல்லம் சேர்ந்த லட்டுவை மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்வார்கள். "தீல் கூல் க்யா! கோட் – கோட் போலா!" (எள் உருண்டையை எடுத்துச் சாப்பிட்டு இனிப்பாக பேசு) எனக் கூறுவார்கள்.
எனது மராத்திய சிநேகிதி திருமதி டோம்ஸே கூறிய "ஸ்பெஷல் தீல் கூல்" ரெஸிபி பின்வருமாறு.
தேவை: வெள்ளை எள் (சுத்தப்படுத்தியது) – 250 கிராம், கொப்பரைத் தேங்காய் – 1 பெரிய துண்டு, வெல்லம் – 250 கிராம், பொடி செய்த ஏலம் – 1 டீஸ்பூன், பொடி செய்த முந்திரி + பாதாம் பருப்பு – ¼ கப், வேர்க்கடலை – ¼ கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: முதலில் அடுப்பின் மீது வாணலியை வைத்து, மிதமான சூட்டில் எள்ளை வறுத்தெடுத்துக் கொள்ளவும். வேர்க்கடலையையும் வறுத்து தோல் நீக்கி, மிக்ஸியில் இட்டு, ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். கொப்பரைத் தேங்காயை துருவி வைக்கவும். அடிக்கனமான வாணலி ஒன்றை அடுப்பின் மீது வைத்து, சிறிது தண்ணீர் விட்டு வெல்லம் போட்டுக் கரைய விடவும். இத்துடன் கொஞ்சம் நெய் விடவும். கம்பிப் பாகு வர ஆரம்பிக்கையில், பொடித்த வேர்க்கடலை, துருவிய கொப்பரைத் தேங்காய், நெய், முந்திரி, பாதாம் பருப்பு, வறுத்த எள் மற்றும் ஏலப்பொடியைப் போட்டு கிளறி, மிதமான சூட்டில் சிறிது நேரம் வைத்து கீழே இறக்கவும். லேசாக சூடு ஆறியபிறகு, உள்ளங்கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாகவோ சற்றுப் பெரிய உருண்டைகளாகவோ பிடித்து சாப்பிடக் கொடுத்தால் செம டேஸ்டாக இருக்கும். சத்தானது.
தீல் கூல் க்யா! கோட் – கோட் போலா!
-ஆர். மீனலதா, மும்பை.