
……………………….
ஒருமுறை விவேகானந்தர் மன்னர் ஒருவரைப் பார்க்கப் போயிருந்தார். மன்னருக்கு ஆன்மிகத்தில் அவ்வளவாக நாட்டமில்லை. குறிப்பாக, விக்ரக ஆராதனையை அவர் கேலி கூட செய்வார். விவேகானந்தர் வந்தபோது அவரிடமும் விக்ரக வழிபாட்டை கிண்டலடித்து விமரிசனம் செய்தார்.
மன்னருக்கு அவருடைய வழியிலேயே பாடம் புகட்ட வேண்டும் என்று விவேகானந்தர் நினைத்துக் கொண்டார். விக்ரகம் என்பது கடவுளின் ஒரு அடையாளம் என்றும், அதனை வழிபடுவதன் மூலம் நாம் கடவுளையே காண முடியும் என்றும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் விவேகானந்தர். ஆனால், மன்னர் திருப்தியடைவதாக இல்லை.
விவேகானந்தர் அரசவை பிரமுகர்களை வரவழைத்தார். அந்த அறையில் இருந்த மன்னரின் ஓவியத்தை அவர்களிடம் காட்டினார். "இது மன்னர் அவர்களின் ஓவியம். இதன் மீது உமிழுங்கள் என்று அவர்களிடம் சொன்னார். அவர்கள் பதைபதைத்து விட்டார்கள்.
"என்ன கொடுமை இது? மன்னர் ஓவியத்தை அவமரியாதை செய்யலாமா?" என்று கேட்டார்கள்.
"இது வெறும் ஓவியம்தானே. இதற்கு உயிர் இருக்கிறதா என்ன? நீங்கள் அவமரியாதை செய்தாலும் அதைக் கண்டு இந்த ஓவியம் கோபம் கொள்ளப்போகிறதா என்ன? பிறகு ஏன் தயங்குகிறீர்கள்?" என்று கேட்டார்.
விவேகானந்தர். ''இது உயிரற்ற ஓவியமாக இருந்தாலும் இதனை நாங்கள் மன்னராகவே பாவிக்கிறோம்" என்று அவர்கள் ஒன்றுபட்டு உரத்த குரலில் சொன்னார்கள்.
"விக்ரக வழிபாடும் இப்படிப்பட்டதுதான் மன்னா! நாம் பார்க்க முடியாத கடவுளை ஒரு உருவமாக நாம் வழிபடுகிறோம். அதனால் ஒன்றும் தவறில்லை. கடவுளையே நேரடியாக வழிபடுவது போலத்தான் அதுவும்" என்றார். மன்னரும் புரிந்துகொண்டார்.
இளைஞர் சிலர் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றை குறி வைத்து சுட்டனர். பல தடவை சுட்டும் தாங்கள் வைத்த குறியைச் சுட முடியவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த விவேகானந்தர், அவர்களுடைய தோல்வியைக் கண்டு புன்முறுவல் பூத்ததை ஒரு வாலிபன் கண்டுவிட்டான்.
'எங்களை கேலி செய்கிறீர்களே, நீங்கள்தாம் சுடுங்களேன் பார்க்கலாம்' என்று அவன் கேட்டான். துப்பாக்கியை வாங்கிய விவேகானந்தர், அவர்கள் காட்டிய ஒவ்வொரு குறியையும் சரியாகச் சுட்டார். 'நீங்கள் துப்பாக்கி சுடுவதில் கைதேர்ந்த பழக்கம் உள்ளவர் போலும்' என்று கூறினார்கள்.
அதற்கு விவேகானந்தர், 'தாம் ஒருநாள்கூட துப்பாக்கியால் சுட்டதில்லை என்றும், ஆனால் தாம் வெற்றியடைந்ததற்கு மனதை ஒருநிலைப்படுத்தத் தம்மால் முடிந்ததே காரணம் என்று கூறியதும் அவர்கள் அளவிலா வியப்படைந்தனர்.
– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி