0,00 INR

No products in the cart.

சத்திய வாக்கு!

கதை – ஸ்ரீஜா
ஒவியம் – தமிழ்

 

நிறைய பால் விட்டு,  இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து , தயிர் ஊற்றி தயிர் சாதம் பிசைந்து அபார்ட்மெண்ட் கீழே வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு அத்தை நினைவாக கொடுத்துவிட்டு, சோபாவில் வந்து சாய்ந்து உட்கார்ந்தாள் வசுந்தரா. இன்று அத்தையின்  திதி. அத்தை போய் 31 வருடம் ஆகிறது. அத்தைக்கு புளிக்காத தயிர் சாதம் தான் பிடிக்கும் என்பதால் அவள் திதி அன்று தயிர் சாதம் பிசைந்து மற்றவர்களுக்கு வருடா வருடம் கொடுக்கிறாள். இதை தன் இறுதி மூச்சு வரை இடைவிடாமல் செய்ய கடவுளை வேண்டி தன் குழந்தைகளுக்கு “அத்தைக்கு இன்று திதி. எல்லோரும் அத்தையை நினைத்து அஞ்சலி செய்யுங்கள்” என்று வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிய வசுந்தராவுக்கு 70 வயது. அத்தையின் நினைவு மனதில் ஓடியது.

அத்தை, அவளுடைய அத்தையா? இல்லை. மாமனாரின் தங்கை. 28 வயதிலேயே கணவனை இழந்து, அதற்கு முன்பே பெற்ற இரு குழந்தைகளையும் இழந்து, பிறந்த வீட்டோடு வந்தவர். ஒருவேளை குழந்தைகள் இருந்திருந்தால் கணவர் வீட்டோடு இருந்திருப்பாரோ? தெரியாது. உறவிலேயே திருமணம் என்பதால் கணவர் வீட்டு விசேஷங்களுக்கு போய் வந்துக் கொண்டுதான் இருந்தார்.

வடக்கே வேலை பார்த்த அண்ணா உடனிருந்து மன்னியின் பிரசவங்கள், குழந்தைகளை வளர்த்து, பெற்றோர்களுக்கு வயதானதும் அவர்களை கவனிக்க கிராமத்தோடு வந்துவிட்டார். மன்னியும் சீக்கிரமே காலமாகி விட்டதால் அண்ணாவின் பெண் குழந்தைகள் திருமணம் , பிரசவம் எல்லாம், அம்மா ஸ்தானத்தில் பாசத்துடன் செய்தவர். அண்ணா ஓய்வு பெற்று கிராமத்துக்கு வரவும் பெற்றோர் காலமும் முடிந்தது .அண்ணாவின் கடைசி பையன் வாசுவுக்கு வசுந்தராவை மணம் முடித்த பின்னர்,  எல்லோருமாக வாசு வேலைபார்க்கும் இடத்திற்கு குடித்தனம் இடம் மாறியது . வசு தூரத்து உறவுப் பெண்தான். ஒரு கல்யாணத்தில், வாசுவின் அப்பா வசுவின் சித்தியிடம் “நானோ மனைவி இல்லாதவன்,  அவளோ கணவன் இல்லாதவள்.  எங்களை பார்த்துக் கொள்கிறார் போல் ஒரு நல்ல பெண் கிடைக்குமா” என்று சொல்ல வசு அதற்குத் தகுந்தவள் என திருமணம் ஆயிற்று.  வசு விடம் வாசு பேசிய முதல் வார்த்தையே “என் அப்பாவையும் அத்தையையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளனும்”. வசுவும் “என் தாத்தா பாட்டி போல் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள். வசுவிற்கு அவள் தாத்தா பாட்டி என்றால் உயிர்.

வசுவின் மாமனாரும் 4 வருடத்தில் காலமாகி விட,  கடைசிவரை அத்தையின் மடி,  ஆசாரத்திற்கு பங்கம் இல்லாமல் கவனித்தாள். தாத்தா-பாட்டியின் ஆசைக்காக பள்ளிப் படிப்பை முடித்த கையோடு 16 வயதில் கடலைப்பருப்பு  துவரம்பருப்பு  வித்தியாசம் தெரியாமல் செல்லமாய் வளர்ந்து கல்யாணம் ஆகி வந்த வசுவை அத்தையும் ஒரு பேத்தியாக பாவித்தார். சுருட்டையாய் இருந்த தலைமுடியை பின்ன முடியாமல் இருந்ததை பார்த்து தலை வாரிப் பின்னி , வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து தலையை அலசி,  குமுட்டி பற்ற வைப்பது முதல் சமையல் செய்யக் கற்றுக் கொடுத்து ,  வேளாவேளைக்கு சாப்பிடச் சொல்லி,  ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்று பாடத் தான் வேண்டும் போல் இருந்தது.

குறுகிய இடைவெளியில் மூன்று குழந்தைகள் பிறந்த போது அத்தை இல்லாமல் இவர்களை வளர்த்து இருக்க முடியுமா என்றுதான் தோன்றும். வளர்த்து இருக்கலாம்.  சௌகரியமாய் கஷ்டப்படாமல் வளர்த்திருக்க முடியுமா என்று நினைத்தபோது வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்டது . திறந்ததும் பக்கத்து ஃப்ளாட் சுதா குழந்தையை வசுவிடம் நீட்டி “மாமி! இவனை பார்த்துக் கொள்ளும் பெண் இன்று வரவில்லை. எனக்கு அவசர வேலையாய் இரண்டு மணி நேரம் வெளியே போகணும்.  உங்களிடம் தான் சமர்த்தாய் அழாமல் இருப்பான்” என்று குழந்தையும் விளையாட்டு பொம்மைகளையும் கொடுத்து சென்றபோது  அத்தையுடன் இருந்த சௌகரியம் ஜாஸ்தியாகவே தெரிந்தது.

வசுவின்  குழந்தைகளுக்கு பாசத்துடன் சாதம் போட்டு,  சனி ஞாயிறில் அவர்களின் தொடையில் 7 பொட்டு  எண்ணெய் வைத்து,  “மாவலி – பரசுராம – மார்க்கண்டேய – விஜய – வேத – விபிஷன – ஆஞ்சநேயர்-  எந்த குழந்தையோ அந்த பெயரையும் சொல்லி 8 பேரும் தீர்க்காயுசு  இருக்கணும்னு” வாழ்த்தி கௌரி கல்யாணம் பாடி  எண்ணை குளியலை ஒரு வைபவமா நடத்துவார். இப்போது எண்ணெய் குளியலுக்கு கூப்பிட்டால் மாயமாய் மறைந்து விடும் தன் பேரனை நினைத்து சிரித்தாள் வசு. 65 வயதிலும் எப்படி அத்தைக்கு  சுயநலமில்லாமல் இன்னொரு குடும்பத்திற்கே தன் வாழ்நாளை அர்ப்பணிக்க முடிந்தது?

அத்தைக்குத் தன்னை யாரும் “பாட்டி, மாமி” என்று கூப்பிடக்கூடாது. வசுவின் குழந்தைகள்,  வாசுவின் நண்பர்கள் அவர்கள் மனைவிகள் எல்லோருக்கும் அத்தைதான் .  வசுவை விட்டு வேறு எங்கும் போக பிடிக்காது. ஒருமுறை வாசுவின் தங்கை “அத்தையை என்னுடன் ஒரு மாசம் வைத்துக் கொள்கிறேன்,” என்று அழைத்துப் போய்,  ஒரே வாரத்தில்,  “நீயே வச்சுக்கோ மன்னி. காத்தால எழுந்ததில் இருந்து படுக்கும் வரை உங்க ஞாபகம்,  குழந்தைகள் பேச்சுத்தான். இங்கு இருந்தால் தான்  சமாதானமாக இருப்பா போலிருக்கு,”  என்று வருத்தமும் சிரிப்புமாக சொல்லிச் சென்றாள்.

அவ்வப்போது மதிய வேளைகளில் பேசிக்கொண்டிருக்கும்போது கடைசி காலம் பற்றி பேச்சு வரும். அத்தனை ஒட்டிக் கொண்டிருந்தாலும்,  தன் இறுதிச்சடங்கை தன் புகுந்த வீட்டினர் தான் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் . “உனக்கும் எனக்கும் என் மூச்சு இருக்கும் வரை தான் உறவு. என் மூச்சு நின்றால் நீ தள்ளி நின்று விடு. அவர்கள் வந்து செய்யட்டும். பிறந்த வீட்டு புடவை ஒன்று  என்மேல் போடணும். பத்தாம் நாள் காரியத்துக்கு ஒரு படி அரிசியும் ஒன்னேகால் ரூபாயும் (அந்த காலக் கணக்கு) அவர்களிடம் குடு. அவ்வளவுதான் உனக்கும் எனக்கும். சிரமப்படாமல் போயிடணும் ”  என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

86 வயதில் அவர் ஆசைப்பட்டபடி உயிர் பிரிந்தது . புகுந்த வீட்டினர் இறுதிக்கிரியை செய்தனர். உயர்பதவியில் வாசு வேலை பார்த்த  ஆலை வளாகத்திலேயே குவாட்டர்ஸ் இருந்தது. வாசல் கேட்டில் துப்பாக்கி ஏந்திய செக்யூரிட்டிகள் மரியாதை செய்ய, கூட பணியில் இருந்தவர்கள் நிறைய பேர் உடன்வர,  ஒரு அரசு மரியாதை போல் இறுதி ஊர்வலம்.  “அத்தை வாழ்ந்த வாழ்க்கைக்கு எப்படி ஒரு மரியாதை பார்”  என்று சிலாகித்தார் வசுவின் அப்பா. ” ஒரு மனிதனின் இறுதி ஊர்வலத்தில் எத்தனை பேர் வருகிறார்கள் என்பதுதான் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு கடவுளின் அங்கீகாரம் ” என்று எப்போதோ படித்தது ஞாபகம் வந்தது வசுவிற்கு.

மறுநாள் காரியங்கள் முடிந்த பின் அத்தையின் புகுந்த வீட்டினர் மற்ற 13 நாள் காரியங்களை சென்னையில் செய்வதாக ஏற்பாடு . விடிகாலை மூன்று மணி இருக்கும். மத்திய பிரதேசத்தில் இருந்த வாசுவின் அண்ணாவிடம் இருந்து போன்.  மன்னி திடீரென ஹார்ட் அட்டாக்கில் இறந்த செய்தி வர , அத்தையின் பத்தாம் நாள் காரியத்திற்கு கூட போக முடியாமல் வசுவும் வாசுவும் காசியில் நடக்கும் மன்னியின் அந்திமக்காரியங்களுக்கு  ஓடவேண்டியதாயிற்று.

என் மூச்சு நின்று விட்டால் எனக்கும் உனக்கும் ஒரு உறவும் இல்லை” என்ற அத்தையின் வாக்கு,  சத்தியவாக்காக ஒலித்துக்கொண்டே இருந்தது!

2 COMMENTS

  1. கணவன் இறந்து பிறந்த வீட்டில் வந்து தங்கி வருடக்கணக்கில் உழைத்துக் கொட்டினாலும் நமக்கு முந்தைய தலைமுறை பெண்களின் மனதில் புகுந்த வீட்டிற்கு இருக்கும் இருக்கும் மகத்துவம் மிக அழகாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. பாராட்டுக்கள் – ரேவதி பாலு

  2. தனது புகுந்த வீட்டில் அத்தையின் கதை மூலம் ஸ்ரீஜா அவர்கள் நம் குடும்பங்களில் உள்ள பாரம்பரியம், பெரியோர்கள் மீது வைத்திருந்த அக்கறை, அன்பு மற்றும் குழந்தை வளர்ப்பு ஆகிய முக்கிய எடுத்துக்காட்டுகளை அழகாக சித்தரித்து உள்ளார். அதேசமயம் ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்களுக்குரிய வழக்கங்கள் வழிமுறையாக வந்த சில கோட்பாடுகள் ஆகியவற்றையும் மிகவும் அழகாக சித்தரித்துள்ளார். நமது ஒவ்வொருவருடைய வீட்டிலும் இதுபோன்ற சுவாரசியம் மிக்க கதைகள் பல உண்டு. ” சத்திய வாக்கு” – அருமையான கதை, மிகவும் எதார்த்தமான எழுத்து வரிகளில் அமைந்துள்ளது

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...

பஞ்சு பாலசுப்ரமண்ய ஹரிஹரன்!

சிரிகதை : தனுஜா ஜெயராமன் ஓவியம்: தமிழ் அந்தக் கோடி வீட்டு சுந்தரராமன் ஸ்மியூல் பாடகி கல்யாணியோட "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" ன்னு பாவத்தோட பாடி பஞ்சு மாமாவின் வாட்சாபிற்கு அனுப்பி, மாமாவின் வயிற்றெரிச்சலை...

ஒரு பக்கக் கதைகள்!

3
ஓவியம்; தமிழ் துரோகம்! -புதுவை சுபா அதிகாலை 4.00 மணிக்கே அந்த நடுத்தர உணவகம் ஆயத்தமானது. “இன்னும் கொஞ்ச நேரத்துல வாடிக்கையாளர்கள் ‘டீ’க்கு வந்து நிப்பாங்க. இட்லி ஊத்தி எடுக்கணும். சட்னி சாம்பார் தயார் செய்யணும். வேலை...

மனத்துக்   கண்    மாசிலன்     ஆதல்…….

1
சிறுகதை - சாந்தி நாதன் ஓவியம்: லலிதா   மதிய உணவிற்குப் பின் சிறிது உறங்கி எழுந்த ராமநாதன் அறையை விட்டு வெளியே வரவும் , "உள்ளே வரலாமா?" என்று குரல் கொடுத்தவாறே அவர் நண்பர் சடகோபன்...