தென் ஷீரடிக்குப் போகலாம் வாங்க!

தென் ஷீரடிக்குப் போகலாம் வாங்க!
Published on

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு 

ரப்பிரசாதமாக வடக்கே ஒரு ஷீரடி இருக்க, தெற்கே ஒரு ஷீரடி வேண்டுமா?  இதனை யார் முடிவு செய்வது? சாட்சாத் சாய்பாபாவே முடிவு செய்து விட்டால்…

தமிழகத்தில், சாய்பாபாவின்  எளிய பக்தரான க. சந்திரமோகன் கனவில், அசரீரியாகத்  தோன்றி, தீபகற்ப இந்தியாவின் தென் பகுதியில் தனக்கொரு ஆலயம் அமைத்திட அன்புடன்  பணித்திருக்கிறார். அதுவும் எப்பேர்ப்பட்ட கனவு தெரியுமா? எப்பேர்ப்பட்ட அசரீரிக் குரலொலி  தெரியுமா?

2009ஆம் ஆண்டு, ஒரு நாள் நள்ளிரவில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அந்த பக்தர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது  அவரை யாரோ ஒரு முறை, மறு முறை, எனப் பல முறை அவரைத் தட்டி எழுப்புவது போன்ற உணர்வு  ஏற்பட்டது. தன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அந்த பக்தரை இடியோசை போன்றதொரு அசரீரிக் குரலொலி, திடுக்கிட்டு விழித்திட வைத்தது.

ஆம். நாம் எந்தக் குரலைக் கேட்டிட வேண்டும் எனக் காத்திருந்தோமோ அதே குரல் தான். உலகில் பலரும் கேட்டிட தவமாய் தவமிருந்து காத்திருந்தார்களோ, அதே குரல் தான். நம் உடலில் சப்தநாடிகளையும் பேரமைதிக்குள் ஆழ்த்தும் சாய்பாபாவின் தேமதுரக் குரல் தான். ஊர் உறங்கும் வேளையில் அந்தக் குரல் மட்டும் அந்த பக்தரின் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. என் இனிய பக்தா! என் எளிய பக்தா! எழுந்திரு… உன்னைத் தேடி நான் வந்திருக்கிறேன். என் குரலொலி உனக்குக் கேட்கவில்லையா? என்கிற வார்த்தைகள் பக்தரின் செவிகளுக்குள் மட்டும் அல்லாது மனதுக்குள்ளும்  ஊடுருவியது.

"தெற்கிலிருந்து என்னைத்தேடி வடக்கே ஷீரடிக்கு நெடுந்தூரம் கவலைகளோடும், உடல் சோர்வுகளோடும் பயணித்து வருகின்ற பக்தர்களின் நிலை கண்டு மனமுருகி உமது கனவில் வந்துள்ளேன். வடக்கே அமைந்திருப்பது போலவே அச்சு அசலாக தெற்கே ஒரு ஷீரடியை எழுப்பு. அங்கும் நீக்கமற நிறைந்திருந்து பக்தர்களுக்கு அனுதினமும் அருள்பாலிக்கக் காத்திருக்கிறேன் நான்." என்பதாக அந்த அசரீரிக் குரலொலி மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த பக்தருக்கு அதன் பின்னர் உறக்கம் வந்து விடுமா என்ன?

அந்த தெய்வீக அனுபவம் பாவித்த மறுநாளில் இருந்து, ஆலயம் அமைக்கப் பெற வேண்டிய  இடம் தேடிப் புறப்பட்டு விட்டார் அந்த பக்தர் தம் குழுவினருடன். தென்னாட்டில், காவிரியும், கொள்ளிடமும், பாயும் ஆன்மீக நகரங்களான திருச்சி, ஸ்ரீரங்கம், திருவானைக்கோயில், சமயபுரம் அருகேயுள்ள அக்கரைப்பட்டி எனும் அற்புதமான பகுதிதான் அந்த இடம்.

ஷீரடியைப் போலவே இங்கு தெற்கிலும் இரண்டு பாறைகளுக்கு இடையில் முளைத்த வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து அருள் பாலித்தபடி  சாய்பாபா தத்ரூபமாக வெளிப்பட்டார். சாய்பாபா இட்ட ஆணைப்படியே அந்த குருஸ்தலத்தில் 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி சாய்பாபா கிழக்கு நோக்கியபடி அமர்ந்த திருக்கோலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். தொடர்ந்து 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி தென் ஷீரடி ஆலயத்துக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

சாய்கற்பகவிருக்ஷா அறக்கட்டளை நிறுவனர் க. சந்திரமோகன் தலைமையில் பக்தர்களின் உதவியோடு, இரவு பகலாக கட்டுமானப் பணிகள் நடந்து முடிந்தன. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி பீடாதிபதிகள், ஆன்மிகத் தலைவர்கள், பக்தர்கள்  மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக மகா கும்பாபிஷேகம் கண்டுள்ளது தென் ஷீரடி சாய்பாபா ஆலயம்.

ஆதி ஷீரடிக்கு நிகராக அதன் அத்தனை மகிமையோடும் கம்பீரத்தோடும் அதன் கண்கவர் கட்டிடக் கலையம்சம் கொஞ்சமும் குறையாமல் அதன் அச்சு அசலாகவே தென் ஷீரடி உருவாகியுள்ளது.

சமாதி மந்திர், சாவடி, துவாரகாமாயி, லெண்டித்தோட்டம் என சகலமும் இங்கு அமைந்துள்ளது. கிருஷ்ணர், ஆஞ்சநேயர், தத்தாத்ரேயர், விநாயகர், சிவன் ஆகிய மூர்த்திகளுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டு ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

சாய்பாபாவிற்கான ஆராதனைகளும், பூஜைகளும் ஆதி ஷீரடியில் எவ்விதமோ அதுபோலவே மாற்றுக் குறைவின்றி நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு தினந்தோறும் அன்னதானமும் நடைபெறுகிறது. சாய்பாபாவிற்கு மிகவும் உகந்த வியாழக்கிழமைகளில் மட்டும் பக்தர்களின் வருகை ஒவ்வொரு வாரமும் அதிகரித்தபடியே உள்ளது.

அனைத்து மதத்தினருக்கும் பொதுவான குருவாக அருள் பாலித்து வரும் சாய்பாபா, இந்த தென் ஷீரடி திருத்தலத்தில் பக்தர்களுக்கு அனேக அற்புதங்களை அனுதினமும் நிகழ்த்தி வருகிறார். திருமண வரம், குழந்தை வரம், செல்வச் செழிப்பு என பலப்பல அற்புதங்களை அள்ளி அள்ளித் தருகின்ற அட்சய பாத்திரமாக விளங்கி வருகிறது இந்த சாய்பாபா ஆலயம்.

வட இந்தியாவிற்கு மகாராஷ்டிராவில் ஷீரடி என்றால், தென்னிந்தியாவிற்கு, தமிழகத்தில் திருச்சி அருகே  உள்ள அக்கரைப்பட்டி தென் ஷீரடி ஆகும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com