0,00 INR

No products in the cart.

சமூக சேவகியாக அரசியலில் நுழைந்தேன்!

களஞ்சியம்!
– மஞ்சுளா ரமேஷ்

மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில்  பிப்ரவரி – 1985 ஆண்டுமலர், இதழில் வெளியான ஓர் கிளாசிக் கட்டுரை இதோ உங்களுக்காக…

“தொகுதி மக்களையெல்லாம் பார்த்துட்டு வீட்டுக்கு வந்து சேர்றப்ப ராத்திரி மணி ஒன்றரை. அதுக்கப்புறம் சாப்பிட்டுட்டுத் தூக்கம். அப்படியும் வழக்கம் போல அஞ்சரைக்கு முழி்ப்பு வந்துட்டுது. விடியற்காலை நான் ‘லைட்’ போடறதைப் பார்த்துட்டு என் பொண்ணுகூட ‘என்னம்மா இன்னும் அரை மணி தூங்கக் கூடாதா?’ன்னு கேட்டா. எங்க, அதுக்கப்புறம் தூக்கம் வருது?”

இவ்வளவு எளிமையாகப் பேசும் இந்தப் பெண்மணிதான் மத்திய அமைச்சரவையில் பெண்கள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றிருக்கிறார் என நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் இந்த எளிமையும், மக்களிடையே கனிவாகப் பழகும் பண்பும், வாழ்க்கையை மிகவுயர்ந்த நோக்கில் பார்க்கும் பண்பாடும் திருமதி மரகதம் சந்திரசேகருக்குச் சிறுவயதிலிருந்தே பழக்கப்பட்டதுதான். அதற்குக் காரணம் அவருடைய குடும்பப் பின்னணிதான் என்று அவரே சொல்கிறார் –

“ஒரு குழந்தைக்குப் பள்ளியும், சமூகமும் மட்டுமே பாடம் கற்பிக்கும் சாலைகள் அல்ல. அதனுடைய குடும்பமும் ஒரு முக்கியமான பாடசாலை போன்றதுதான். அதிலும் ஒவ்வொரு தாயும் ஒரு ஆசிரியைதான். தாயிடமிருந்து குழந்தைகள் கற்றுக் கொள்வது ஏராளம்.

என் வீட்டில் என் பெற்றோரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். சிதம்பரத்தில் என் தந்தையை எல்லோரும் ‘சாமி’ என்றுதான் கூப்பிடுவார்கள். அவருக்குப் பிறகு நிலங்களை ‘ஏழை ஹரிஜனப் பிள்ளைகளுக்குப் போக வேண்டும்’ என எழுதி வைத்தபோது அந்த உயர்ந்த பண்பை நாங்கள் போற்றினோம்.

அம்மாவைக் கூடப் பலரும் கேட்டார்கள்! ‘மூணு பெண்கள் இருக்கே. நீங்கள் என்ன செய்வீர்கள்?’ என்று. ‘கல்லுக்கடியில் இருக்கும் தேரைக்கும் கருணை செய்யும் ஈசன் எங்களுக்கா படியளக்க மாட்டான்?’ என்று அம்மா அடித்துச் சொல்லி விட்டார்கள்.

அந்த ஆழ்ந்த இறை நம்பிக்கையும், எந்த நிலையிலும் சலனப்படாமல் தைரியமாக எதிர்நோக்கும் தென்பும் என் குடும்பத்திலிருந்து நான் கற்றுக் கொண்டேன். அதனால்தான் வாழ்க்கையிலும் எனக்கு நல்லதே நடக்கிறது.

இங்கிலாந்தில் நான் படித்துக் கொண்டிருந்தபோது என் தோழிகள் எல்லாம் கேட்பார்கள். “நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி. உனக்கு மட்டும் எப்படியோ தேவையான பொருட்கள் கிடைத்து விடுகிறதே!” என்று.

இது என் முன்னோர்கள் செய்த புண்ணியம் என்றுதான் நினைக்கிறேன். இன்றைக்கும் இந்த நிலைக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் அது அவர்கள் செய்த நல்ல காரியங்களின் பலன்தான். அதனால்தான் நானும் தீமையை விலக்கி நல்லதையே செய்ய விரும்புகிறேன்.

என் முன்னோர்கள் எனக்கு நல்ல வழியைக் கொடுத்தது போல நானும் என் குழந்தைகளுக்கு நல்லதையே செய்ய விரும்புகிறேன். யாருக்கும் தீங்கு செய்யாமல், யாரையும் கெடுக்காமல் இருந்தால் அந்தப் புண்ணியமே என் குழந்தைகளுக்கு நல்வழி காட்டிவிடும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது” என்கிறார் உணர்ச்சியுடன் திருமதி. சந்திரசேகர்.

“தங்களுடைய அரசியல் பிரவேசம் பற்றிச் சொல்லுங்களேன்…”

“நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று வரவில்லை. இங்கிலாந்தில் நான் ‘லேப்’பில் வேலை செய்து கொண்டிருப்பேன். ஒரு ஆங்கிலேயப் புரொபசர் வந்து, “உங்களிடம் இந்தியாவைக் கொடுத்துவிட்டால் உங்களால் சமாளிக்க முடியுமா?” என்று கேட்டுவிட்டு போவார்.

இப்படி எரிச்சலூட்டும் பேச்சுக்கள் மட்டுமல்ல. பல பாரபட்சமான நடைமுறையும் அனுபவித்திருக்கிறேன். ஒரு வாரத்திற்குப் போறாத உணவு வகைகள், இந்தியப் பெண் என்பதால் காட்டப்படும் பாரபட்சங்கள் இப்படி எத்தனையோ…

இந்தியா திரும்பியதும் ஹைதராபாத் கல்லூரியில் பிரின்சிபால் ஆனேன். சமூக சேவையில் கவனம் செலுத்திய என்னை அரசியலுக்கு இழுத்துத் தேர்தலில் நிற்கச் சொன்னவர்கள் கிருஷ்ணமேனன், காமராஜர் போன்றவர்கள். நான் அரசியலில் அரசியல்வாதியாக நுழையவில்லை. சமூக சேவகியாகத்தான் நுழைந்தேன்…!”

“அப்படி நுழைந்த நீங்கள் நேருஜியின் அமைச்சரவையிலும் இருந்தீர்கள். அவருடைய பேரர் ராஜீவ் அமைச்சரவையிலும் இருக்கிறீர்கள். இந்த மாறுதல்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்…?”

“நேருஜி, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி எல்லோர் மினிஸ்ட்ரியிலுமே இருந்திருக்கிறேன். இது இந்தியாவின் வளர்ச்சியைத்தான் காட்டுகிறது.

ஆனால் நான் பார்த்து வியந்து என் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத அங்கமாகிவிட்டவர் இந்திராகாந்திதான். அந்தப் பெண்மணியுள்தான் எத்தனை தீரமான பெண்மை இருந்தது? அவர்களுடைய வளர்ப்பு விதம், வாழ்க்கையில் பார்த்த அனுபவங்கள் அப்படிப்பட்டவை.

எத்தனை பெரிய பதவியில் இருந்தபோதும் எவ்வளவு சிறிய விஷயங்களையும் நுணுக்கமாகப் பார்ப்பார்! எனக்கு அலகாபாத்தில் கட்சி சார்பாக ‘டூர்’ போட்டிருந்தபோது ‘குழந்தைகள் படிப்பு கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்பார்.

என் பெண் மஞ்சள் காமாலையில் பாதிக்கப்பட்டு இருந்தபோது ஒருநாள் முன்பின் சொல்லாமல் வீட்டுக்கே வந்துவிட்டார். மிகப் பெரும் கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் அன்றைக்கு மாலை என் வீட்டில் விசேஷம் இருப்பதை நினைவில் வைத்துக்கொண்டு, எனக்கு ஞாபகப்படுத்தி அனுப்பி வைத்தார். அவரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்போது அன்னை என்று சொல்கிறார்கள். அந்தச் சொல் அவருக்கு மிகப் பொருத்தமானது என்றுதான் சொல்வேன். அந்தப் பெரிய தலைவியிடம் தாய்மையுள்ளம் நிறைந்திருந்ததை நான் அனுபவித்திருக்கிறேன்.

“இப்போதைய அமைச்சரவையில் சமூக நலத்துறையையும், பெண்கள் நலத்துறையையும் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். என்ன செய்யப் போகிறீர்கள்?”

“நான் இதைப் பற்றி நிறைய சிந்திக்கிறேன். நிறைய மனிதர்களைப் பார்க்கும்போது அவர்களிடம் எல்லாம் பேசி நிறைய யோசனைகளைத் தெரிந்து கொள்கிறேன்.

பெண்கள் சமுதாயத்தில் எத்தனை விதமான சாதனைகளைச் செய்ய முடியும் என்றுதான் நான் யோசிக்கிறேன். இப்பொழுது வங்கிகளில் இருந்து கடன் வாங்குகிறார்கள். கடன் வாங்குபவர் அந்தப் பணத்தை உரிய முறையில் தொழில் செய்கிறார். கடனைத் திரும்பக் கட்டுகிறாரா என்றெல்லாம் கண்காணிக்கலாம்.

ஒவ்வொரு ஏரியாவில் சில பெண்கள் கண்காணிப்பாளர் பொறுப்பை எடுத்துக்கொண்டு பல சமூகப் பிரக்ஞையுள்ள காரியங்களைச் செய்யலாம். சிறிய சிறிய கடைகளை வைத்துக் குறைந்த லாபத்தில் பொருள்களை விற்பனை செய்யலாம். இடைத் தரகர்கள் அடிக்கும் கொள்ளைகளை ஒழிக்கலாம்.

இப்படிப் பல யோசனைகள் எனக்குத் தோன்றிக் கொண்டிருக்கிறது. நமது பெண்களைச் சரியானபடி பயிற்றுவித்தால் பல அதிசய சாதனைகளை அவர்கள் சாதிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

“இப்படிப் பல பெண்கள் சமுதாயப் பிரக்ஞைகள் எழும் என உங்களுக்குத் தெரியாதா?”

திருமதி மரகதம் சந்திரசேகர் மிகுந்த வருத்தத்துடன் தலையசைத்தார். “மிகவும் உண்மையம்மா. ஒரு பெண் இப்படி முழுநேர ஊழியராக மாறும்போது எத்தனையோ பிரச்னைகள் எழுகின்றன. எப்போதுமே ஒரு இந்தியப் பெண்ணுக்குள் இருக்கும் விழிப்புணர்ச்சி அவளை எச்சரித்துக் கொண்டே இருக்கும்.

இத்தனை வயசாகியும், இன்னும் ராத்திரி கூட்டங்களை முடித்துக் கொண்டு வெகு லேட்டாக வீட்டிற்குப் போகும்போது கஷ்டமாக இருக்கும். இரவில் யாரேனும் சந்திக்க வந்தால் சங்கடமாக இருக்கும்.

ஒரு ஆண் அமைச்சர் தன் சக அமைச்சரை எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால், ஒரு பெண் அமைச்சரால் இப்படியெல்லாம் முடியாது. இப்படி ஒரு பெண் என்ற முறையில் அவளுக்கு அவளே சங்கடப்படுபவை இவையென்றால் குடும்பம் என்று வரும்பொழுது இன்னும் பயங்கரம்தான்.

என் வாழ்க்கையைப் பொறுத்தவரை எனக்கு அந்தப் பிரச்னை இல்லை. என்னுடைய கணவர் ஒரு தெய்வப் பிறவி என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்து என்னை வளர்த்து வழிகாட்டியவர். நாங்கள் மணிக்கணக்கில் அமர்ந்துகொண்டு பொதுவிஷயங்களைப் பற்றிப் பேசுவோம். எங்கள் குழந்தைகளை வளர்க்கும்போது சமபங்கு சிரமங்களை அவரும் ஏற்றுக்கொண்டார்.

ஆனால், எத்தனை ஆண்கள் அப்படி இருக்கிறார்கள்? தன் மனைவி தன்னைவிட உசத்தியாக என்ன, தன்னளவு சமமாக இருப்பதைக்கூட விரும்பாத ஆண்கள் எத்தனை பேர் இல்லை?

இப்படிப்பட்ட ஆணிற்கு மனைவியாகும் ஒரு அறிவு ஜீவிப் பெண்ணின் கதிதான் என்ன? அப்படி மணத்திற்குப் பின் மனம் கருகிப் போன பெண்கள், திறமை மங்கிப்போன பெண்கள் எத்தனை பேர்?

நம்முடைய நாட்டில் சமுதாயம் பெண்களைப் பார்க்கும் பார்வை மாற வேண்டும் என்று சொல்வேன். பெண்களும் படித்து முன்னே வரும் நாளில் ஒவ்வொரு கணவனும் தன் மனைவியைத் தோழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

“இந்த இடத்தில் ஒரு விஷயம். ஆண்கள் மட்டும்தான் மனம் மாற வேண்டுமா? பெண்களிடம் தவறு இருக்கிறது என்பது என்னோட எண்ணம்…”

“அதைத்தானம்மா நானும் பல முறை நினைத்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். இந்தப் பெண்கள் இருக்கிறார்களே, அவர்களுடைய விசித்திரமான குணத்தை என்னவென்று சொல்வது? குடும்பத்தின் பல பிரச்னைகளைப் பொறுமையுடன் தாங்குகிறார்கள்; கணவனின் ஆதிக்கத்தை அடிமையாக ஏற்கிறார்கள்; குழந்தைகளை எத்தனைத் தூய்மை உணர்வோடு வளர்க்கிறார்கள்? எல்லாம் சரி. ஆனால் ஒரு பெண்ணால் இன்னொரு பெண்ணை ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?”

ஒரு தாய் தன் மகளைப் பார்க்கும் விதமே வேறு. மருமகளை நடத்தும் முறையே வேறு. இந்த ஆச்சரியத்தை நினைக்கும்போது வருத்தம்தான் வருகிறது. மாமியாரும் மருமகளும் சதா எலியும் பூனையுமாகத்தானே இருக்கிறார்கள்? பெண்களின் எண்ணங்கள் கூட மாற வேண்டும். இனி படித்து வரும் பெண்கள் தலைமுறையாவது மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை…”

ஆழ்ந்த இறை நம்பிக்கையும், இதிகாசங்களைச் சிறுபிராயத்திலேயே ஊட்டி வளர்த்துப் பண்படுத்திய குடும்பப் பின்னணியும், ‘வாழ்வில் நல்லதே நடக்கும்’ எனும் திடமான உணர்வும், ‘கெட்டவர்களிடமும் ஏதோ நல்லது இருக்கும்; அதை எடுத்துக்கொண்டு பாராட்டேன்’ என்ற பரந்த மனப்பான்மையும் எல்லாவற்றிற்கும் மேலே ஒரு பொறுப்புமிக்க இனிய இல்லத்தரசியாகவுமே அந்த அமைச்சரை என்னால் காண முடிந்தது.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

“நெசவும் கவிதையும் என் இரு கண்கள்” –நெசவுக் கவிஞர் சேலம் சீனிவாசன்

0
- சேலம் சுபா  “நான் நெசவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் நெசவுக் கவிஞர் என்று அறியப்படுவதில் பெருமிதமும் கொள்கிறேன்...” என்று தலைநிமிர்ந்து சொல்லும் சீனிவாசன் தன்னை வளர்த்து, அடையாளம் தந்த குலத்தொழிலை உலகறியச் செய்யும் முயற்சியில்...

“ரஜினி சார் கூட நடிக்கணும்”

- ராகவ் குமார் ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அம்முவை சந்தித்துப் பேசினோம்: எப்படி இருக்கீங்க...

புகைப்படக் கவிதை!

- மங்கையர் மலர் வாசகீஸ் FB  பகிர்வு! பாடம் ..!  பயமறியா  பருவத்திலேயே பாசம், நேசமென போதித்தது இயற்கையா? இறைவனாயென இன்றளவும் யோசிக்கிறேன்...!! -பானு பெரியதம்பி, சேலம் பழைய தத்துவம் புதிய படத்திற்கு... நால்வரோடு சேர்ந்து ஐவரான உண்மை நண்பர்கள் ரசிக்கும் இயற்கை காட்சி -உஷாமுத்துராமன், திருநகர்   என்னப்பா  பார்க்கறீங்க நல்லா...

அன்புவட்டம்!

“பயணிகளுக்கு எச்சில் தொட்டு பஸ் டிக்கெட்டுகளைக் கொடுக்கக்கூடாது” என்று பஸ் கண்டக்டர்களுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளதே! - வாணி வெங்கடேஷ், சென்னை எச்சில் மட்டுமா? எங்க ஊர் கண்டக்டர்களை வந்துப் பாருங்க வாணி! நெற்றி, கழுத்துல...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...