
சுதந்திரம் பெறுவதுமல்ல தருவதுமல்ல வாழ்வது
பிள்ளையிலும் கொல்லையிலும் நம்மை தொலைத்தது போதும்
உரிமை கதறலை ஓரங்கட்டி உத்வேக நடை போடின்
அடிமைத் தளைகள் அடிக்கொன்றாய் உடைபடும் எண்ணவெளியில் இளைப்பாறும் அகதிகளை அனுமதிக்காதே
நம் கனவுகள் பல கல்லறை கண்டு விட்டன
உலகைத் தேடு! அகிலம் அடைய ஆசை கொள்
ஆகாயம் தாண்டி நம் காட்சி தெரியட்டும்
காற்றை கிழித்து நம் சிறகு விரியட்டும்
சுற்றும் புவியின் சுழற்சி கேள்
சுற்றலையும் சிறிது நிறுத்திக் கேள்
சூரியனை உற்றுப் பார்
எரியும் கதிர்கள் சில உன்னுள் தகிக்கும்
நம் யாகத்திற்கு சில சுள்ளிகள் கிடைக்கும்
பிறப்பின் மெய்மை தேடி பயணம் செய்
உன்னை அறிந்து உவகை கொள்
தகுதியை நிர்மாணம் செய்யும் தடைகள் எல்லாம் படிகள் ஆகட்டும்
நினைவில் கொள்
உன் நிழலை கூட சோதனை செய்
புதைப்பினும் முளைக்க விதையாக பிறக்கவில்லை
சிறகுகளை பெற்றுவிட்ட சிலைகள் நாம்
விழித்தெழு பெண்ணே… வீழாதே
விண்ணும் மண்ணும் மண்டியிடும் வரை போராடு
போர்க்கள பூமியில் நம்மை புதைக்கும் முன் நிமிர்ந்திடு!