0,00 INR

No products in the cart.

உலகின் மிக உயரமான ஸ்ரீ முத்துமலைமுருகன்!

வைகாசி விசாகம் சிறப்பு!
-சேலம் சுபா 

 

லகின் மிக உயரமான முருகன் சிலை எங்குள்ளது எனக் கேட்டால் உடனே மலேசியா பத்துமலை என்று சொல்லியிருந்த நாம், இனி அதை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ள நம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள
ஸ்ரீ முத்துமலை முருகனைப் பெருமையுடன் சொல்லலாம்.

அழகிய வண்ணத்தில் இடுப்பில் கட்டியப் பட்டாடையுடன் ஜரிகை வேட்டி மின்ன கைகளில் வேலைப் பிடித்து முகமெங்கும் பொழியும் கருணையுடன் ‘யாமிருக்க பயமேன்’ என்று அபயம் தரும் முத்தமிழ்க் கடவுளான முருகன் 146 அடியில் பிரமாண்டமாக ராஜஅலங்காரத்தில் நின்று அருள் புரிகிறார் சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் புத்திரகவுண்டம்பாளையம் ஸ்ரீ முத்துநகர் அடிவாரத்தில்.

சமீபத்தில் ஹெலிகாப்டரில் மலர்கள் பொழிய  கும்பாபிஷேகம் நடைபெற்ற இந்த ஆலயத்திற்கு, பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். உலகின் மிக உயரமான முருகனை தரிசிப்பது மட்டுமல்லாமல் இங்கு உள்ள மற்ற சிறப்புகளும் நம்மைக் கவர்ந்திழுக்கிறது. எப்படி வந்தது இங்கு உலகத்தின் உயரமான முருகனை அமைக்கும் எண்ணம் என்பதைப்பற்றியும் வேறெங்கும் இல்லாத சிறப்புகள் என்ன என்பதையும் கேட்டறிய இந்தக் கோயிலின் நிர்வாகியும் ஆத்தூரின் பிரபல தொழிலதிபரும் ஆன திரு. என்.எஸ் .ஸ்ரீதர் அவர்களை சந்தித்தோம். இனி நமது கேள்விகளும் அவரின் பகிர்தல்களும் இங்கு.

எப்படி வந்தது உலகின் உயரமான சிலை அமைக்கும் எண்ணம்?

என்.எஸ் .ஸ்ரீதர்

சொந்த ஊர் ஆத்தூர். என் தந்தை முத்து நடராஜன் தொழிலதிபர் என்றாலும் என் தந்தைக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம். எங்கள் குலதெய்வமான பச்சியம்மன் கோயிலைக் கட்டி வழிபாடுகள் நடத்தியவர். எங்களுக்கும் தந்தையின் மூலம் ஆன்மீகத்தில் ஆர்வம் வந்தது.

உண்மையில் சொல்லப்போனால் முருகனின் திருவிளையாடல்களில் ஒன்றாகத்தான்  இந்தக் கோயில் பிறந்த நிகழ்வும் எனலாம். எங்களைக் கருவியாக்கி இங்கு வந்து அமர்ந்துள்ளான் முருகன். இந்த இடத்தை நாங்கள் வாங்கியதும், பின் சில நெருக்கடிகளால் விற்க முயற்சித்ததும், விற்க முடியாமல் இங்கு முருகன் கோயிலைக் கட்டும் எண்ணம் உதித்ததும்… எல்லாம் முருகன் செயல்தானே? தனக்கான இடத்தை தேர்வு செய்து சில சோதனைகளைத் தந்ததுடன் எவ்வளவோ பக்தர்கள் இருக்க இந்தப் பணிக்கு எங்களைத் தேர்ந்தெடுத்தது எல்லாமே நினைத்தாலே பிரமிப்பாக உள்ளது.

சிலை அமைக்கப் போகிறோம் என்பது உறுதியானவுடன், என் மனதில் ஆழமாகப் பதிந்திருந்த மலேசிய முருகனைப் போல, இதையும் பிரமாண்டமாக அமைக்க வேண்டும் என்ற உறுதி எழுந்தது. தந்தையும் அனுமதி தந்தார். நாங்கள் கோயிலைக் கட்டத்துவங்கி  பணிகள் நடைபெற நடைபெற  எங்களுக்கு வந்த நெருக்கடிகள் மறையத் துவங்கியது. இதுவும் அவனின் செயல்தானே ? .

என் தந்தை மறைவிற்கு முன் 2016ல் இங்கு பூமிபூஜை போட்டோம்.  6-4-22ல் கோவிலின் கும்பாபிசேகம் நடந்தது. எங்கள் தொழிலின் மூலம்  பயன் பெற்ற மக்கள் இங்கு அதிகம் என்பதாலும் தந்தையின் தீவிர முருக பக்தியினாலும் அவர் மறைவிற்குப் பின் இப்பகுதியில் உள்ள மக்கள் அவரை முத்து நடராஜன் சித்தர் என்றே குறிப்பிடத் தொடங்கினர் .

சிலை அமைப்பு செய்த சிற்பி குறித்து?

த்து மலை முருகன் போல என்று முடிவானதுமே அந்த முருகனை செய்தவரே இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று அதை செய்த திருவாரூர் சிற்பி தியாகராஜனை தொடர்பு கொண்டோம். இவர் சுதை சிற்பத்தில் வல்லவர். அவரிடம் பத்துமலை முருகனை விடவும் உயரமான சிலையை செய்ய வேண்டும் என்று சொன்னவுடன் ஐந்து வருடங்கள் அவரும் அவரது குழுவினரும் இங்கேயே தங்கி எனது எண்ணத்தைப் புரிந்துகொண்டு மிகச்சிறப்பான முறையில் முருகனின் சிலையை வடித்துத் தந்தது பாராட்டுக்குரிய செயலாகும். என் ஆலோசனைகளை ஏற்றதுடன் அவரும் சில ஆலோசனைகளைத் தந்து அருமையானதொரு பணியை செய்து முடித்தார்.

இந்த இடம் மற்றும் கோவில் சிலையின் அமைப்பு சிறப்பு குறித்து ?

நாங்கள் இந்த இடத்தை வாங்கும்போது இப்படி ஒரு அமைப்பு இருக்கும் என்றோ இதில் முருகனே விரும்பி வந்து குடியிருப்பான் என்றோ சற்றும் நினைக்கவில்லை. பிரசித்திபெற்ற முருகனின் தலங்கள் சித்தர்களால் சுட்டிக்காட்டப்பபட்டு உருவானவையாக இருக்கும். ஆனால் இங்கு இந்த மலையின் அமைப்பே இயற்கையில் முருகன் வானத்தைப் பார்த்தவாறு பள்ளிகொண்டிருப்பது போல் படைத்துள்ளது ஒரு அற்புதமாகும் .இதை ஒரு குறிப்பிட்ட கோணத்தில்தான் பார்க்க முடியும் .

இதைப் பொதுமக்களும் காணும் வகையில், சிலையின் அருகில் மின்தூக்கி அமைக்கப்பட்டு, முருகனின் நாபி பகுதியில் உள்ள துளை வழியாக கண்டு மகிழ வகை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பை சற்றுத் தள்ளிப் போனாலும் பார்க்க முடியாது. இது முருகனே எங்களுக்கு சிலை உருவாக்கப் பணிகளின் போது ஒரு கட்டத்தில் அறிய வைத்த அதிசயம். ஒவ்வொரு முறையும் இதை இப்படி செய்தால் ஆகம விதிப்படி சரியா? எனும் கேள்வி எழும்போதெல்லாம் அதை ஏதோவொரு வகையில் உடனே தீர்த்து தெளிவைத் தருவான் முருகன்.

கோயில் கட்டும் முன் நான் என் மகன்கள் ஸ்தபதி ஆகியோர் இங்கு இருந்து எடுக்கப்பட்ட மண் கொண்ட ஆறு கலசங்களுடன் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று ஒரே நேரத்தில் அர்ச்சனை ஆராதனைகள் செய்து அங்கிருந்த மண்ணை அதில் நிரப்பி இங்கு வந்து பூமியில் பதித்த  பின்னரே கோயில் வேலைகளைத் துவங்கினோம். இங்கு வரும் மக்கள் ஒரே நேரத்தில் அறுபடை வீடுகளில் உள்ள முருகனின் அருளையும் பெற்று செல்ல வேண்டும் என்பது இதன் நோக்கம்.

ஏழு கோண கோபுரம்

அதே போல் முருகன் சிலைக்குப் பின்புறம் அமைந்துள்ள கருவறை மண்டபம் வேறெங்கும் இல்லாத வகையில் வேலின் அமைப்பான ஏழு கோணங்களைக் கொண்டு அழகுற அமைக்கப்பட்டுள்ளது. கருவறை உள்ளே இருக்கும் முருகனின் கருங்கல் சிற்பம் வெளியில் உள்ள முருகனைப் போன்ற தோற்றத்தில் அமைய வேண்டும் என்பதால் அதைச் செய்த சிற்பி  சுதைசிற்ப முருகன் சிலைக்கு கீழேயே அதைப் பார்த்துப்பார்த்து  செய்தது மறக்க முடியாத நிகழ்வு. வெளியில் உள்ள முருகனின் புன்னகை தவழும் முகத்தை கருவறையிலும் அருகில் இருந்து காணலாம்.

பத்து மலை முருகன் முழு தங்கநிறத்தில் ஜொலிப்பார். ஆனால் முத்துமலை முருகனோ ராஜ அலங்காரத்தில் பலவித வண்ணங்களுடன் மனதைக் கவர்வார். ஸ்ரீ முத்துமலை முருகன் எந்நேரமும் இடது கையில் வேலைப் பிடித்தபடியும்  வலது கையில் ஆசிர்வாதம் செய்யும்படியும் அமைந்துள்ளார். முருகன் சிலையின் உச்சத்திற்கு லிப்டில் சென்று பொது மக்கள் தங்கள் கைகளாலேயே வேலுக்கு பன்னீர் அபிசேகம் செய்ய முடியும். அந்த வேலின் கீழே அறுபடை வீடுகளில் வைத்து ஆராதனைகள் செய்து முருகனின் சக்தி பெற்ற ஐம்பொன் வேல் உள்ளது. அபிசேகம் செய்யப்பட்ட பன்னீர் அந்த வேலின் வழியாக கருவறைக்கு சென்று சேகரமாகும். கருவறையில் உள்ள முருகனுக்கு செய்யும் அபிசேகத்தில் அந்த பன்னீரையும் சேர்ப்பார்கள்.

மேலும், முருகனின்  நாபிப் பகுதியை தியான மண்டபமாக உருவாக்கி யுள்ளோம். மழலை இல்லாத தம்பதியர் குழந்தைக்காக மனமுருகி வேண்டும்போது நிச்சயம் குழந்தைப் பேறு கிட்டும்.   ஏனெனில் அவர்கள் இருப்பது முருகனுக்குள் அல்லவா? குழந்தை இல்லாத தம்பதியருக்கு மட்டும் இலவசமாக மேலே செல்ல அனுமதி உண்டு. மற்றவர்கள் ஐந்து கிலோ அரிசியை அன்னதானத்திற்காக யாக சாலையில் அளித்து விட்டு மேலே செல்லலாம். அவர்களுக்கு பிரசாதப் பைகளும் வழங்கப்படும் .

கருவறை முருகன்

எங்களைப் பொறுத்தவரை இங்கு வரும் மக்கள் தங்கள் குறைகளை மனக் கவலைகளை முருகனிடம் தந்து நன்மைகளைப் பெற்று மகிழ வேண்டும். அவ்வளவுதான்…  அதையும் நிச்சயம் முருகனே செய்வான். ஏனெனில் அவனே விரும்பி அல்லவா இங்கு வந்துள்ளான்.”

முருகனின் சிறப்பு தினங்களான சஷ்டி, கிருத்திகை, விசாகம், போன்ற நாட்களிலும் மற்ற நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் வழிபாடு செய்து மகிழ்ந்துள்ளனர். இனி வரும் காலங்களில் ஸ்ரீ முத்துமலை முருகன் உலக அளவில் புகழ் பெறப் போவது உறுதி. எளிதான போக்குவரத்து வசதியுடன் பிரம்மாண்டமான நிலப்பரப்பில் இயற்கை சூழலில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமலை முருகனை வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் சென்று தரிசித்து மகிழுங்களேன்.

1 COMMENT

  1. முத்துமலை முருகனை தரிசித்து வந்தது போல் இருக்கிறது. இத்தனை அழகு நிறைந்த கோவிலை வாழ்நாளில் வந்து
    பார்த்து முருகனின் அருளை பெறவேண்டும்.
    இந்த கோவிலின் விவரங்களை மங்கையர்
    மூலம் அறிமுக படுத்தியதற்கு மிகுந்த நன்றி.

சேலம் சுபா
பெயர் சுபா தியாகராஜன். பிறந்த ஊர் சேலம் என்பதால் சேலம் சுபா எனும் பெயரில் முன்னணி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். கதை கவிதை கட்டுரைகள் எழுதினாலும் தன்னம்பிக்கையாளர்களின் நேர்காணல் இவரது சிறப்பு. கல்கி குழும இணையதளம், கல்கி ஆன்லைன்.காம் மற்றும் கல்கியின் வலையொலி, காணொளி வாயிலாகவும் பங்கேற்பதில் பெருமிதம் இவருக்கு.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

புள்ளிக் கோலம் முதல் பொன்னியின் செல்வன் ஓவியம் வரை…

- ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு   புள்ளிக் கோலத்தினை மையமாகக்கொண்டு என்னென்ன செய்யலாம்? “ஏன்... என்னென்னவோ செய்யலாம். புள்ளிக் கோலம் என்பது நம்முடைய அழியாத பாரம்பரியம். பழைமையான கலாசாரம். நான் பிறந்து வளர்ந்தது கோவையில். திருமணம் ஆகி...

இரண்டு ரூபாய் தோசைக் கடை…!!!

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. “நேத்து வடித்து வுட்ட கஞ்சியிலக் கொஞ்சம் எடுத்து வைத்து, மறுநாள் காலையில அதுலக் கொஞ்சம் தண்ணி ஊத்தி சூடு பண்ணித் தருவாங்க எங்க அம்மா. காலம்பர ஆகாரம் எங்களுக்கு அது தான்....

யோகாவில் சாதிக்கும் சந்தியா… 

-  ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு பொறியியல் கல்வியில் கணினியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தும் ஐடி கம்பெனி வேலை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, தான் சிறுமியாக இருந்த போது ஈர்க்கப்பட்ட யோகாவே தனது வாழ்வு என முடிவு...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

0
பீட்ரூட் ரோஸ் மில்க் செய்முறை: பீட்ரூட் நன்கு மண் போக அலம்பிவிட்டு காம்புகளை நறுக்கி எடுத்துவிட்டு துண்டு, துண்டாக நறுக்கி தோலுடன் அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். பின்பு வடிகட்டி விடவும். தண்ணீர் கொஞ்சமாகவிட்டு...

கட்டதுரைக்கு  கட்டம் சரியில்லை…

‘சிரி’ கதை - தனுஜா ஜெயராமன் ஓவியம்: பிரபுராம் அலாரத்தை தலையில் தட்டி நிறுத்தியபடி திடுக்கிட்டு விழித்த சுப்பு... கண்களை தேய்த்துக்கொண்டே சோம்பல் முறித்தார்… எழுந்து சென்று பிரஷை எடுத்தார். பிரஷ் ஸ்டேண்ட் தொபுக்கென விழுந்தது. சத்தம்...