அத்தியாயம் – 1
– நிரஞ்சன் பாரதி
‘உயிரைச் சேர்க்கும் உயிரினைக் காத்திடும்
உயிரினுக்கு உயிராய் இன்பம் ஆகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா
ஊது கொம்புகள்! ஆடுக களிகொண்டே!
மகாகவி பாரதியார் எழுதியுள்ள, ‘பெண்மை’ என்ற பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இவை.
இந்த வார்த்தைகளில் என்ன சொல்ல வருகிறார் பாரதியார்?
‘நமக்கெல்லாம் உயிர் கொடுப்பவள் பெண்தான்!
நம் உயிரை அன்போடு காப்பவளும் அவள்தான்! அது மட்டுமா? நம் உயிருக்கு உயிராய் இருந்து மகிழ்ச்சி தருபவளும் அவள்தான்! எனவே, நம் உயிரைக் காட்டிலும் இந்தப் பெண்மை இனிது! ஆணினமே, கொம்புகள் ஊதியும் களி நடனம் ஆடியும் இந்தப் பெண்மையைக் கொண்டாடு!
ஆண் மக்களிடம், பெண்மையின் பெருமையை இவ்வாறாக எடுத்துரைத்து, அதனைக் கொண்டாடி மகிழ வேண்டும் என பாரதியார் வலியுறுத்தியதன் பின்னணி என்ன?
இந்தப் பாடலில் உள்ள கருத்துகள் புதிய கருத்துகள் அல்லவே! எனினும், அதனை மீண்டும் தன் பாடலில் பதிவு செய்ய வேண்டிய தேவை பாரதியாருக்கு ஏன் ஏற்பட்டது?
இதற்கு நாம் காலப்பொறியில் கொஞ்சம் பின்னோக்கிப் பயணித்து, பாரதியார் வாழ்ந்த காலத்திற்குச் சென்று இறங்க வேண்டும். அவர் வாழ்ந்த சமூகச் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆங்கிலேயர்கள் நம் மண்ணில் ஆழமாக வேரூன்றித் தங்கள் கொடுங்கோன்மை ஆட்சியால் மக்களையெல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருந்தது அந்தக் காலம். நம்முடைய பாரம்பரிய மரபுச் செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்துப் பண்பாட்டுப் பேரிடரை பாரத தேசத்துக்குக் கொடுத்து அவர்கள் கொக்கரித்துக் கொண்டிருந்த காலம். தாழ்வு மனப்பான்மை காரணமாக நம் நாட்டுக் கலைகள் மீது வெறுப்பும் ஆங்கிலவழிக் கல்வியின் மீது மோகமும் நம்மவர்கள் வைத்திருந்த காலம்.
இதில் ஒரு சோகமான விநோதம் ஒளிந்திருந்தது. விநோதம் என்று சொல்வதை விட, பேரவலம் என்று சொல்வதே சாலப் பொருத்தமாக இருக்கும்.
நாட்டில் ஒருவிதமாகவும் வீட்டில் ஒருவிதமாகவும் அடிமைத்தனம் நிலவியது. ஆங்கிலேயர்களால், பாரத மாதா கட்டுண்டு கிடக்க, ஆடவர்களால் பாரத மாதர்கள் கட்டுண்டு கிடந்தனர். வீட்டை விட்டு வெளியே வரவே அவர்களுக்கு அனுமதி இல்லை. இல்லத்தில் இருந்தாலும் பெண்கள் அனைவரும் சிறைவாசிகள் போல் வாழ்ந்தனர். ‘வந்தே மாதரம்… வந்தே மாதரம்’ என்று முழக்கமிட்டு வீதியில் போராட்டம் நடத்திய ஆண்கள், வீட்டிற்கு வந்ததும் பெண்களிடம் ஆதிக்கம் செலுத்தினர். உரிமைகள் மறுக்கப்பட்டதைக் காட்டிலும், ஒரு சக உயிராகக் கூட ஆண்கள் அவர்களை மதிக்காததுதான் துயரத்தின் சிகரம்.
இத்தகையதோர் இருண்ட பிற்போக்கான காலகட்டத்தில்தான் பாரதியார் பிறந்தார். பாரதிக்கு ஐந்து வயதாயிருக்கும்போதே அவரது தாய் லட்சுமி அம்மாள் காலமானார். விவரம் தெரியும் முன்னமே தாயன்பை இழந்துவிட்ட பாரதியார், தந்தை சின்னசாமி ஐயரின் கண்டிப்பான வளர்ப்புக்கு ஆளானார்.
உறவினர்களின் வற்புறுத்தல் காரணமாக இரு வருடங்கள் கழித்து சின்னசாமி ஐயர், வள்ளியம்மாள் என்ற பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். தன் அன்னையிடம் இருந்து பெறாத அன்பை, சிற்றன்னையிடம் பெற்றுக்கொண்டார் பாரதியார். பாட்டி பாகீரதி அம்மாளும் (சின்னசாமி ஐயரின் தாய்) அவரது சகோதரிகளும் கூட பாரதியார் மீது அன்பைப் பொழிந்தனர்.
லட்சுமி அம்மாளோடு கூடப் பிறந்த பெண்கள் ஆனந்தம், சின்னம்மாள், விசாலாட்சி, ராமு என மொத்தம் நான்கு பேர். இதில் சின்னம்மா சித்திக்கு பாரதியார் மீது தனிப்பாசம். ராமு சித்திக்கும் பாரதியாருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது. அதனால் அவர்தான் பாரதியாருக்கு விளையாட்டுத் தோழி.
தந்தை சின்னசாமி ஐயர்தான் பாரதியாரின் கணித ஆசிரியரும் கூட. தன் மகன் நன்றாகப் படித்து, மாவட்ட ஆட்சியராக வேண்டும் என அவர் மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தார். சதா படிக்கச் சொல்லி மகனை வற்புறுத்தினார். வயதொத்த பிள்ளைகளோடு விளையாட அவர் பாரதிக்கு இசைவு தரவில்லை. எனவே, ராமு என்கிற தோழி சித்தியின் பங்கு பாரதியாரின் வாழ்வில் முக்கியமானது.
சிறு வயதிலேயே அதிவேகமாகவும் அற்புதமாகவும் கவிதை பாடும் ஆற்றல் பெற்றிருந்த பாரதியார் எட்டயபுரத்து மன்னரின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றார். ஆனால், தன் தந்தையிடம் எதிர்பார்த்த அரவணைப்பும் அங்கீகாரமும் கிடைக்காமல் பாரதியார் வாடிப் போனார். பாரதியாரின் அந்த வெறுமையைப் போக்கியவர் அவரது சிற்றன்னை வள்ளியம்மாள்தான்.
படிப்பில் பற்றில்லாத பாரதியார், சில சமயம் பள்ளிக்கூடம் போகப் பிடிக்காமல் குளத்தங்கரைக்குச் சென்று இயற்கை அழகில் தொலைந்து கவிதை பாடிக் கொண்டிருப்பார். போகும் வழியில் யார் வீட்டுத் திண்ணையிலாவது கற்பலகை, புத்தகங்கள், குச்சி ஆகியவற்றை வைத்துவிடுவார். மாலை வீடு திரும்பிய பிறகு, புத்தகங்கள் உள்ளிட்டவை எங்கே என்று சிற்றன்னை கேட்ட பிறகுதான் அவருக்குத் தான் அவற்றை எங்கேயோ வைத்துவிட்டுப் போனது ஞாபகம் வரும். தந்தைக்குத் தெரிந்தால் ஆபத்து என்பதால் வள்ளியம்மாள் தானே புத்தம் புதிதாக எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்து பாரதியைக் காப்பாற்றுவார்.
பாரதியார், பதினான்காம் அகவையை எட்டியபோது சின்னசாமி ஐயர், செல்லம்மா என்ற ஏழு வயதுப் பெண்ணை, அவருக்குத் திருமணம் செய்து வைத்தார். இந்தப் பழக்கத்தைப் பாரதியார் அடியோடு வெறுத்தார். பின்னாளில் தான் எழுதிய சுயசரிதையில், இப்பழக்கத்தை மிக மிக வன்மையாகக் கண்டித்து ஒரு கவிதை எழுதினார். அதில் அனல் மணம் பீறிட்டு எழுந்தது.
பால ருந்து மதலையர் தம்மையே
பாத கக்கொடும் பாதகப் பாதகர்
மூலத் தோடு குலங்கெடல் நாடிய
மூட மூடநிர் மூடப் புலையர்தாம்
கோல மாக மணத்திடைக் கூட்டுமிக்
கொலையெ னுஞ்செய லொன்றினை யுள்ளவும்
சால வின்னுமோ ராயிர மாண்டிவர்
தாத ராகி யழிகெனத் தோன்றுமே.
ஓராண்டு கழிந்தது. எதிர்பாராதவிதமாகத் தொழிலில் ஏற்பட்ட பெருத்த இழப்பால், மனம் உடைந்துபோன சின்னசாமி ஐயர், அதிர்ச்சி மரணமடைந்தார். செய்வதறியாது பாரதியார் தவித்தபோது, அத்தை குப்பம்மாள்தான் அவரைத் தன்னுடன் காசிக்கு அழைத்துச் சென்று படிப்பைத் தொடர உதவி செய்தார். காசி மண்ணில் கால் பதித்த பிறகு, பதின் பருவத்து பாரதியார் மீசை, திருத்திய சிகை, முண்டாசு, கோட்டு என ஆசாரங்களை மீறத் தொடங்கினார். இதனால் கோபம் கொண்ட குப்பம்மாளின் கணவர் கிருஷ்ண சிவன், பாரதியாரோடு ஒன்றாக உண்ண மறுத்துவிட்டார். பதின் பருவத்துக்கே உரிய கோபத்தோடு, பாரதியார் தானும் சாப்பிடாமல் மாடி அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டார். இதைக் கண்டு துடிதுடித்த குப்பம்மாள், முடியாமல் படியேறி பாரதியைச் சோறுண்ண வைத்த பிறகே, தான் கீழே சென்று அனைவருக்கும் உணவு பரிமாறினார்.
இதன் பின்னர் மன்னரின் அழைப்பை ஏற்று, பாரதியார் எட்டயபுரம் திரும்பியதும், அரண்மனைப் பணி கசந்து, பத்திரிகைத் துறையில் தடம் பதித்ததும் வரலாறு. நெஞ்சில் தீரமும் செயலில் தீவிரமும் கொண்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார் பாரதியார். அப்போதுதான் அவருக்குச் சில உண்மைகள் புலப்படத் தொடங்கின. ஆங்கிலேயர்களின் அநீதிகளைக் கண்டித்து வெளியே விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பலர் உள்முகமாகத் திரும்பித் தங்கள் தவறுகளை நேருக்கு நேராக நோக்கத் தயங்கினர். அப்படி அவர்கள் தெரிந்தே ஒதுக்கிய குற்றங்களில் ஒன்றுதான் பெண்ணடிமைத்தனம். படித்த ஆண்களே இதில் ஈடுபட்டதுதான் கொடுமையிலும் கொடுமை.
மற்றவர்கள் தயங்கினாலும் உள்முகமாகத் திரும்பித் தன்னையே விசாரம் செய்ய பாரதியார் தயங்கவில்லை. ‘உண்மை’ என்பதற்கு அவர் தன் உள்ளத்தில் உயர்ந்த இடத்தைக் கொடுத்திருந்தார். இதை அவரது பல பாடல்களில் பார்க்கலாம்.
நம்முள் இருக்கும் நற்குணங்களே தேவர்கள். இதை உணர்ந்த பாரதியார், தான் எழுதிய விநாயகர் நான்மணிமாலையில்,
வெற்றி வாழி, வீரம் வாழி!
பக்தி வாழி, பலபல காலமும்
உண்மை வாழி, ஊக்கம் வாழி,
நல்ல குணங்களே நம்மிடை யமரர்
பதங்களாம், கண்டீர், பாரிடை மக்களே!
என்று முழங்குகிறார்.
கண்ணன் பாட்டில் கூட,
உண்மை தவறி நடப்பவர் தம்மை
உதைத்து நசுக்கிடுவான்
என்று பொய்ம்மையைப் பொசுக்கும் தெய்வமாகத்தான் கண்ணனைப் பார்க்கிறார்.
அது மட்டுமன்று; உண்மையை இமைக்காமல் சந்திக்கும் பெரும் துணிவும் அவர் நெஞ்சில் குடிகொண்டிருந்தது. ஒருபோதும் தன் வாக்கிற்கும் வாழ்விற்கும் பாகுபாடு பார்க்காத பாரதியார், உள்ளாய்வு செய்தபோது, அவருக்குப் பளிச்சென்று சில உண்மை மின்னல்கள் வெட்டின.
சிறு வயதில் பள்ளிக்கூடம் போனபோது மாணவிகள் யாவரும் உடன் பயிலவில்லை என்பதை நாம் கவனிக்கத் தவறிவிட்டோமே! அவர்கள் பெரும்பாலும் வெளியில் வருவதை நாம் பார்த்ததில்லையே! இவ்வளவு ஏன்? ஐந்து வயதில் தாயை நாம் இழந்தபோது, அன்பும் அக்கறையும் காட்டி நம்மைக் கவனித்துக்கொண்டது யார்? பாகீரதி பாட்டி, வள்ளியம்மாள் சித்தி, சின்னம்மாள் சித்தி, ‘தோழிச்சித்தி’ ராமு, குப்பம்மாள் அத்தை. இவர்கள் எல்லோரும் தானே? இவர்களின் பாசம் கிடைக்காமல் போயிருந்தால் நம் நிலை என்னாகியிருக்கும்? இந்த மாதரசிகளுக்கு, ஆண்களாகிய நாம் ஏன் கல்வியறிவு தர மறுத்தோம்? வீட்டிலேயே இருந்தாலும் ஏன் அவர்களைக் கொஞ்சம் விலக்கியே வைத்திருந்தோம்?
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமத்துவம் என்பது திருமணம் நடத்தி வைப்பதில்தான் இருக்கிறது. பால் மணம் மாறாத பருவத்தில் இருந்தாலும் ஊர் பெரியோர்கள் சின்னஞ் சிறார்களை மணமுடித்து வைத்துவிடுகின்றனர். இதில் என்ன சிறப்பு இருக்கிறது? இது சந்தோஷப்பட வேண்டிய சமத்துவமா?
இப்படிப் பலப்பலக் கேள்விகள் பாரதியாரிடம் முளைத்தன. ஒவ்வொன்றில் இருந்தும் பல துணைக்கேள்விகள் கிளைத்தன. இறுதியில், ஒரு விழிப்பை பாரதியாரின் அகம் எய்தியது. ‘பெண் விடுதலை கிடைக்காமல் நமக்கு மண் விடுதலை கிடைக்காது’ என்பதுதான் அது.
இவற்றையெல்லாம் உள்வாங்கிய பாரதியார், வீர சுதந்திரம் பெற்ற நவீன இந்தியாவில், விடுதலைப் பெண் கம்பீரமாகக் காட்சியளிக்க வேண்டும் என கனவு கண்டார். விடுதலைப் பெண்ணின் சின்னமாக, ‘புதுமைப்பெண்’ என்ற விழுமியத்தை முன்மாதிரியாக உருவாக்க முனைந்தார்.
இதற்கான விதையை அவர் எங்கிருந்து பெற்றார்? இதில் அவருக்கு வழிகாட்டியவர்கள் யார் யார்? இதற்காக அவர் எப்படித் தன்னைத் தகவமைத்துக் கொண்டார்? எந்தெந்த விதங்களில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டார்? எங்கே எல்லாம் தன்னைத் தளர்த்திக் கொண்டார்?
வாருங்கள், பாரதியாரோடு பயணம் செய்து, இதற்கான பதில்களைத் தேடலாம்.
(அறிவோம்)
ஆரம்பமே அமர்க்களம்.
நிரஞ்சன் பாரதிக்கு வாழ்த்துக்கள்
………………………
மகாகவி பாரதி பிறந்தநாளில
மகாகவியின் வழிதோன்றல் நிரஞ்சன் பாரதியின் எப்படி பிறந்தாள் புதுமைபெண் தொடர் மிகுந்த எதிர்பார்ப்போடு படிக்க காத்திருந்தேன்
வந்தது தொடர் படித்தேன்
ஆரம்பம் அசத்தல்
‘உயிரைச் சேர்க்கும் உயிரினைக் காத்திடும்
உயிரினுக்கு உயிராய் இன்பம் ஆகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா
ஊது கொம்புகள்! ஆடுக களிகொண்டே!
இதை படித்தபோது நிரஞ்சன் பாரதி வித்தியாசமான கோணத்தில் சிந்திக்க போகிறார் என்று நினைத்தேன் ஆனால் பாரதியின் வாழ்கை வரலாறு மாதிரி போகிறதே என்றும் யோசிதேன்
நிச்சயமாக புதிய கருத்துகளாக,
புதிய சிந்தனைகளை,
உள்ளடக்கி சுவையுடம் தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
இன்னொறு சந்தேகமுமா வருகிறது
காசியில் இருந்தபோது பெண்ணடிமை சிந்தனை
வந்ததாக இந்த தொடர் தொடரும் என்று வருகிறது ஆனால் காங்கிரஸ் மாநாட்டிற்கு சென்ற பாரதி அன்னை நிவேதிதா சந்ததித்தபோது ஏற்பட்ட
அல்லது நிவேதிதா அவர்கள் சொன்ன அறிவுரையே
இந்த தேசத்தை பற்றியும்
பெண்ணடிமை பற்றியும்
சாதிய வேறுபாடு களையவும்
மத துவேசமறுப்பு கொள்கையை கடைபிடிக்கவும்
சமதர்ம சிந்தனையை வளர்க்கவும்
உறுதி பூண்டு அன்னையை குருவாக ஏற்று உறுதி எடுத்து.அதன்படி கடைசிவரை நடந்தார் என்றும் வரலாறு சொல்கிறது
ஒரு வேளை எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள நான் அவசரபடுகிறனோ.
மஹாகவி பாரதியின் எள்ளுப்பெயரர் கவிஞர் திரைப்பட பாடலாசிரியர் நிரஞ்சன் எழுதும் இத்தொடர் வாசகர்களுக்கு பல்ப் புதியச் செய்திகளை தெரிவிக்கும்.
நேரடியாக பெண்ணியப் சிந்தனை பற்றி எழுதினால் இன்றைய தலைமுறையினருக்கு புரியாது.
காரணம் இக்கால நாகரிகம்.
அக்காலச் சூழலில் பாரதியின் புதுமைச் சிந்தனை பற்றி இக்கால சந்ததியினர் அறிந்துக் கொள்ள வரலாற்றில் தொடங்கி
பின்னர் பெண்ணியம் பற்றி எழுதுவது மிகவும் சரியான புரிதலை இக்கால இளம் சமுதாயத்துக்கு ஏற்படுத்தும் என்று எண்ணுகிறேன்.
உங்களைப் போலவே நானும் ஆவலுடன் தொடர் படிக்கக் காத்திருக்கிறேன்.
பாரதி காலத்தால் அழியாத மகாகவி
ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது சூப்பர்
“எப்படி பிறந்தாள் புதுமைப் பெண்”- தொடர் பாரதியுடன் நாமும் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.அடுத்தடுத்த நிகழ்வுகளை படிப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Niranjan, imagined that you are orating this article in my mind while reading it.. good one , will keep watching for more episodes.
“எப்படி பிறந்தாள் புதுமைப் பெண்” முதல் அத்தியாயமே அசத்தலாக ஆரம்பம் .பாரதியார் குறித்த புதுமையான தகவல்களை சலிப்பில்லாமல் ஒரே மூச்சில் படிக்க வைக்கும் விறுவிறுப்பான நடை.தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன்.
மஹாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவு நூற்றாண்டில் மஹாகவி யின் எள்ளுப் பெயரர் கவிஞர் திரைப்பட பாடலாசிரியர் நிரஞ்சன் பாரதி அவர்கள் பாரதியின் புதுமைப்பெண் பற்றிய சிந்தனைகள் குறித்து எழுதும் தொடர் தொடக்கமே அரிய தகவல்களை அள்ளித் தருகிறது.
அருமையான எளிமையான எழுத்து வடிவம்.
புலிக்குட்டிகாகு பாய் சொல்லித்தரவா வேணும்.
பாரதியின் புதுமைப்பெண் பெண் பற்றிய கண்ணோட்டமாக மட்டுமே இல்லாமல் அவரது வரலாறும் உள்ளடக்கிய இத்தொடர் வரலாற்று ஆவணமாக பாதுகாக்கப் பட வேண்டும்.
அடுத்த வாரம் எப்போது வரும் என்று காத்திருக்க வைக்கும் தொடர்.
மனதைக் கொள்ளைக் கொள்ளும் வண்ணம் எழுதும்
இளங்கவிஞர் நிரஞ்சன் பாரதி
கவிதைகள், கதைகள் என்று இலக்கிய உலகில் பல சாதனைகள் படைக்க வேண்டும்.
உரிய காலத்தில்
உரிய வரைக் கொண்டு
அரிய தகவல்களை க்
கொண்ட
கட்டுரைத் தொடர்
எழுத வைத்து வெளியிடும் கல்கி குழுமத்தின் சமுதாய மற்றும் தேசிய சிந்தனை பாராட்டுக்குரியது.
வாழ்க பாரதி
வாழ்க தமிழ்
வாழ்க பாரதம்
Arumai.
Though the time has changed the relevance still prevails. But, it is disheartening to see the women of these days miss pronounce and misunderstand the real meaning of ‘Pudumai Penn’. Wish more women read this series and get enlightened. What a feeling to see the palace and the house. Thanks for the wonderful presentation.