மார்கழி மாதத்தை முன்னிட்டு, நாமும் விதவிதமான வண்ணக் கோலங்களைப் போட்டு மகிழலாமே!
உங்களுடைய அழகான கோலங்களை மங்கையர் மலருக்கு அனுப்புங்க.
தபால் மூலமாக தங்கள் புகைப்படத்தையும் இணைத்து அனுப்புங்க.
தேர்வாகும் கோலங்கள் www.kalkionline.com இணையதள முகப்புப் பக்கத்தில், 'தினம் தினம் வண்ணக்கோலம்' என்ற பகுதியில் உங்களுடைய புகைப்படத்துடன் இடம்பெறும்.
பிரசுரமாகும் கோலங்களுக்கு சிறப்புப் பரிசும் காத்திருக்கிறது. வெள்ளைத்தாளில் நிறுத்தி நிதானமாகக் கோலமிட்டு, வண்ணமிட்டு அனுப்புங்க.
தபாலில் அனுப்ப :
மங்கையர் மலர்
11/16, மாஞ்சோலை 3வது தெரு,
ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை – 600 032.
மற்ற மாதங்களுக்கு இல்லாத சிறப்புகள் மார்கழிக்கு உண்டு. எப்படி?
- மார்கழி மாதத்தில்தான் தேவலோகத்தில் பகல் பொழுது ஆரம்பமாகிறது. மானுட உலகிற்கு ஒரு நாள் என்பது 24 மணி நேரமெனில், தேவர் உலகிற்கு ஒரு நாள் என்பது ஒரு வருடமாகும்.
- தனுர் மாத பூஜை நடைபெறும் மாதம் மார்கழி. ஆண்டாள், தனது திருப்பாவையை 'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள்' என்கிற பாடலுடன்தான் தொடங்கினாள். விரதமிருந்து கண்ணனை கணவனாக அடைந்தாள்.
- 'மார்கழி' தட்சிணாயனம் என்கிற இரவின் முடிவில் வருவதால், பிரம்ம முகூர்த்தமெனப்படுகிறது. அந்த பிரம்ம முகூர்த்த அதிகாலைப் பொழுதில், வானவீதியிலே தெய்வங்கள் உலா வருவதாக ஐதீகம். ஆதலால்தான் அதிகாலையில் எழுந்து, வாசலில் கோலமிட்டு, அதன் நடுவே பூ வைத்து அலங்கரிக்கப்படுகிறது.
- மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை நீராடி, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாடி இறைவனை வணங்குவது சிறப்பாகும்.
- மார்கழியின் தட்ப – வெட்ப நிலை சுகமான தென்றல் காற்று போன்றதாகும்.
- சைவ சமயத்தினர் சிவபெருமானை ஆருத்ரா தரிசனத்தன்றும், வைணவ சமயத்தினர் மகாவிஷ்ணுவை வைகுண்ட ஏகாதசியன்றும், கிறிஸ்துவர்கள் இயேசுநாதரை கிறிஸ்துமஸ் அன்றும், இஸ்லாமியர்கள் அல்லாவை ரம்ஜான் அன்றும் வணங்கிக் கொண்டாடுவது மார்கழியில்தான்.
- மேலும், மார்கழியில்தான் உலகமெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்படும், 'ஆங்கிலப் புத்தாண்டு' ஆரம்பமாகிறது.
- பழையனவற்றை எரிக்கும், 'போகிப் பண்டிகை' வருவதும் மார்கழியில்தான்.
இப்போது சொல்லுங்கள்… மார்கழி மகாராணிதானே!
-ஆர்.மீனலதா, மும்பை