0,00 INR

No products in the cart.

நள்ளிரவு சூரியன் நாடான நார்வே!

சுற்றுலா டூ ஸ்கேண்டினேவியா! பகுதி – 4

பயண அனுபவம் :
பத்மினி பட்டாபிராமன்

ஃப்ராம் மியூசியம் (Fram Museum)
டல் பயணத்துக்கு அஞ்சாத, நார்வேயைச் சேர்ந்த வைகிங்களின் சாதனைகள் பற்றிய மியூசியம் இது. குறிப்பாக, பூமியின் வட துருவத்துக்கும், தென் துருவத்துக்கும் கடலில் பயணம் செய்தவர்களின் அனுபவங்களை உள்ளடக்கியது. சாட்டிலைட், மின்சாரம், நவீன தொலைத்தொடர்பு வசதிகள் எதுவும் இல்லாத காலத்தில் துணிவே துணையாய் பயணித்தவர்கள் இவர்கள்.

1891ல் கட்டப்பட்ட கப்பல் ஃப்ராம். தென் துருவத்திற்கும் வடதுருவத்துக்கும் முதன் முதலாகக் கடலில் பயணித்த நார்வே கடல் மாலுமிகளான நான்சேன் (Fridtjof Nansen), ஓட்டோ ஸ்வெர்ட்ரஃப் (Otto Sverdrup), ரொல்ட் அமெண்ட்சன் (Roald Amundsen) என்ற மூவரது சிலிர்க்க வைக்கும் அனுபவங்களை கறுப்பு, வெள்ளை புகைப்படங்களாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் பயணித்த ஃப்ராம் கப்பலும் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது. அதன் எஞ்சின் அறை, உணவுக்கூடம், சமையலறை, மியூசிக் ரூம், சுக்கான்கள் என பல பகுதிகள்.

மூன்று தளங்களாக ஏறிச் சென்றுதான் கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் பார்க்க முடியும். பனிச் சரிவுகளில் அவர்களது போராட்டங்கள், அங்கே கண்ட துருவக் கரடிகள், பெங்குவின் படங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது 18ம் நூற்றாண்டுக்கே சென்று வந்ததைப் போல உணர்வு தோன்றுகிறது. இந்த மூவரின் சிலைகளோடு, மற்ற கடல் ஆராய்ச்சி செய்த மாலுமிகளின் உருவச் சிலைகளும் நிறுவப்பட்டிருக்கின்றன.

கரன்சி
நார்வேயில் ஓடும் கார்களில் 80 சதவீதத்துக்கு மேல் (நான்கு வருடங்களுக்கு முன் நான் சென்றிருந்தபோது, இப்போது அதிகரித்திருக்கலாம். இப்போது அனேக டிரக்களும் மின்சக்தி கொண்டவைதான்) எலெக்ட்ரிக் கார்கள் என்பதால், ஆஸ்லோ நகரின் பல இடங்களில் பொது கார் பார்க்கிங்களில் கார்கள் நிறுத்தப்பட்டு சார்ஜ் செய்யப்படுகின்றன.

நம்புங்கள்… எல்லாமே இலவசம். உலகின் ஆறாவது பணக்கார நாடாயிற்றே! இங்கு கரன்சி, நார்வேஜியன் க்ரோன். (Norwegian Krone) இந்திய மதிப்பில் ஒரு க்ரோன் எட்டேகால் ரூபாய்கள். நாங்கள் சென்ற சமயம் ஸ்வீடன் போலவே இங்கும் யூரோ கரன்சியை கடைகளில் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார்கள். டாலர் பெற்றுக்கொண்டு மீதம் தருவது க்ரோன் கரன்சி. ஹாபிக்காக கரன்சி கலெக்ஷனுக்கு என்று கொஞ்சம் வைத்துக்கொண்டால் கூட, மீதியை தங்கும் நாட்களுக்குள் செலவழிக்க வேண்டியிருக்கிறது.

நோபல் பரிசு ஹால்

ல்ஃப்ரெட் நோபல், 1896ல் டிசம்பர் 10ம் தேதி காலமானார். ஒவ்வொரு வருடமும் அந்த தேதியில் அவர் நினைவாக நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன என்பது நமக்குத் தெரியும். கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ், பயாலஜி அல்லது மருத்துவம், இலக்கியம் இவற்றுக்கான நோபல் பரிசுகள், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும், உலக சமாதானத்துக்கான பரிசு மட்டும் நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவிலும் வழங்கப்படுகின்றன. உலக நாடுகளுக்கிடையே நட்புணர்வு, சகோதரத்துவம், உதவி மனப்பான்மை இவற்றை வளர்க்க உழைப்பவர்களுக்கான விருது இது. ஆஸ்லோவின் சிட்டி ஹால் (ஐரோப்பாவில் எல்லா நாடுகளிலும் சிட்டி ஹால் உண்டு) புகழ் பெற்றது. அந்தக் கட்டடத்தின் உள்ளே இருக்கும் பெரிய ஹாலில் நோபல் பரிசு வழங்கும் விழா நடைபெறுகிறது.

டிசம்பர் மாதம் 10ம் தேதியன்று நடக்கும் இவ்விழாவில், பரிசு பெறுபவர்கள் முதலில் சிறிய உரையாற்ற அழைக்கப்படுகிறார்கள். பின்னர், அரச குடும்பத்தினர், அரசு நிர்வாகிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட விருந்தினர் முன்னிலையில், நார்வேஜியன் நோபல் கமிட்டியின் தலைவர், மெடலையும் டிப்ளமாவையும் வழங்குகிறார்.

மலாலா, கைலாஷ்

நம் கண் முன், இதே ஹாலில் மதர் தெரெசா, நெல்சன் மண்டேலா, பாரக் ஒபாமா, மலாலா, கைலாஷ் சத்யார்த்தி போன்றோர் பரிசு பெற்ற காட்சி தோன்றுகிறது. குழந்தைகளின் கல்விக்காகவும் உரிமைக்காகவும் போராடியவர் அல்லவா கைலாஷ்!
இந்த ஹாலையாவது நம்மால் பார்க்க முடிகிறதே என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. இங்கும் உட்புறம் சுவர் முழுவதும் வண்ண ஓவியங்கள், கலை நுட்பத்துடன் வரையப் பட்டிருக்கின்றன.

ஆஸ்லோவில் நடைபெற்ற போர்கள், ஆண்ட பல அரசர்கள், தொழிலாளர் போராட்டம் உட்பட நாட்டின் வர்த்தக வளர்ச்சி என்று ஒவ்வொரு ஓவியத்துக்குப் பின்னேயும் ஒரு வரலாறு. ஸ்வீடன் போலவே இங்கும், விழா அன்றே விருது பெற்றவர்களுக்கு விருந்தளிக்கும் (Banquet) நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
அழகாக வளைந்து செல்லும் படிகளில் ஏறிப்போனால், அரை வட்ட வடிவில் கவுன்சில் கூட்டம் நடக்கும் கமிட்டி ஹால் உட்பட நான்கு அறைகள். ஆசிய நாடுகளிலிருந்து டூரிஸ்ட்கள் வந்து குவிகிறார்கள். ஸ்பானிஷ் ஸ்லேங் ஆங்கிலத்தில் கைடுகள் விளக்கம் தரும் குரல் மாலை வரை கேட்கிறது. நார்வேயின் அழகையெல்லாம் கண்களில், மனதில் நிரப்பிக்கொண்ட பின், நாங்கள் சென்ற அடுத்த நாடு டென்மார்க்.

மீண்டும் ஸ்வீடன்
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் செல்ல நாங்கள் பயணித்த ரூட் மிகவும் சுவாரசியமானது. ஏற்கெனவே நான் குறிப்பிட்டிருந்த ஸ்வீடனின் மூன்றாவது பெரிய நகரமான மால்மோ சென்று, அங்கிருந்து ஒரு அதிசய பாலம் வழியாக டென்மார்க் செல்ல வேண்டியிருந்தது. எனவே, மீண்டும் ஸ்வீடனுக்குள் நுழைந்தோம்.

முறுக்கு கட்டிடம்

ழகிய கடற்கரைகள் கொண்ட மால்மோவில் இருக்கும் முறுக்கிய டவர் (twisted skyscraper) வித்தியாசமான கட்டடம். உலகிலேயே இந்த அமைப்பைக் கொண்ட முதலாவது டவர். கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தக் கட்டடம் திறக்கப்பட்டது. 54 மாடிகளுடன், 623 அடி உயரத்தில், சுமார் 3 லட்சம் சதுர அடியில் முறுக்கிக் கொண்டு, நிற்கிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. உடலை முறுக்கி வளைக்கும் ஒரு மனிதனின் பளிங்குச் சிலை Twisting Torso என்ற பெயரில் சிற்பி உருவாக்கிய ஒரு பளிங்கு சிலையை அடிப்படையாக வைத்து கட்டப்பட்டது. அருகிலேயே பால்டிக் கடல், அலைகளின்றி மாபெரும் ஏரியைப் போல் பரந்திருக்க, கடல் அரிப்பைத் தவிர்க்க பெரும் பாறைகளால் கரை நீளமாக அடைக்கப்பட்டிருக்கிறது. பாறைகளுக்கு அருகே நிற்கும்போது தூரத்தில் ஒரு பாலம் தெரிகிறது. அதுவும் ஒரு பொறியியல் அதிசயம்தான்.

ஓர்சந்த் பாலம் (The Öresund Bridge)
‘ஒர்சந்த் ஜலசந்தி’ (Øresund strait) யில் ஸ்வீடனையும் டென்மார்க் நாட்டையும் இணைக்கும் பாலம் இது. கடல் நடுவே ஒரு இரண்டடுக்குப் பாலம். ரயில் பாதையும், சாலை வழியும் இணைந்து கொண்டது. ஸ்வீடனின் கடற்கரையிலிருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் இதில், மேலே சாலைப் பாலம், அடியில் காங்க்ரீட்டால் கட்டப்பட்ட டனல்.

ஜலசந்தியின் நடுவே பீட்டர் ஹோம் (Peterholm) என்னும் செயற்கையாக அமைக்கப் பட்டிருக்கும் தீவு என்று மூன்று பகுதிகள். டனலுக்குள் சாலை தவிர, ரயில் பாதையும் செல்கிறது.
மேலே சாலைப் பாலத்தில் கோச்சில் பயணித்த பின், டனலுக்குள் நுழைந்து பயணம். தேவைப்பட்டால் மாறி ரயிலிலும் போகலாம். நடுவில் தென்படும் செயற்கைத் தீவில் சில பயணிகள் சுற்றி வருகிறார்கள்.

சற்று உயரம் கொண்ட க்ரூயிஸ் கப்பல்கள் அடி வழியாக கிராஸ் செய்கின்றன. அதையும் மேலிருந்து பார்த்து ரசிக்கலாம். ஸ்வீடன், ‘சந்தோஷ நகரம்’ என்ற சிறப்புப் பெற்றது. (happiest city in Sweden) கவலையின்றி உற்சாகமாக பவனி வரும் அனேக ஸ்வீடிஷ்களைப் பார்த்தாலே தெரிகிறது, அவர்களது வாழ்க்கை ஸ்வீட்டாகத்தான் செல்கிறது என்று.

டென்மார்க்
பால்டிக் கடலை அணைத்து நிற்கும் ஸ்கேண்டினேவியன் நாடுகளில் ஒன்றான டென்மார்க், உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
இயற்கைச் சீற்றங்களும், மனிதர் செய்யும் குற்றங்களும் இங்கே மிகக் குறைவு என்கின்றன புள்ளி விபரங்கள். மற்றோர் விஷயத்தில் டென்மார்க் உலகின் ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறது. எதில் தெரியுமா? வாழ்க்கை செலவினம் (cost of living) அதிகம் இருப்பதில்!

இந்நாட்டின் கரன்சி டேனிஷ் க்ரோன் (Danish Krone), இந்திய மதிப்பில் ஒரு க்ரோன் சுமார் பன்னிரெண்டு ரூபாய் (11.48). இங்கும் யூரோவை கடைகளில் வாங்க மறுக்கிறார்கள்.

தலைநகர் கோபன்ஹேகன் பத்தாம் நூற்றாண்டில் ஒரு மீனவர் கிராமமாக இருந்து, 17ம் நூற்றாண்டில் நகரமாக மெல்ல மாறத் துவங்கிய ஊர். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பிரிட்டிஷ் படைகளின் உதவியால் சமாளித்து, பின்னர் 1945ல் பிரிட்டன் விலகிக்கொள்ள, சுதந்திர நாடானது என்பது டென்மார்க்கின் வரலாற்றுப் பின்னணி. இன்று இது, மக்கள் மகிழ்ச்சியாக வாழும் ஒருசில நாடுகளில் ஒன்று. அடுத்து, கடல் கன்னியை சந்திக்கலாமா? வாருங்கள், டென்மார்க் செல்வோம்.

(தொடர்ந்து பயணிப்போம்)
பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...