0,00 INR

No products in the cart.

பாவை நோன்பு பிறந்த கதை!

மார்கழி சிறப்பு

மாலதி சந்திரசேகரன்

மார்கழி என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது திருப்பாவை, திருவெம்பாவை, தெருவடைத்த பெரிய கோலங்கள், பசுஞ்சாணி, பரங்கிப் பூ, குளிர் இவைதான்.

மார்கழி மாதம், ‘தனுர் மாதம்’ எனப்படுகிறது. தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது.

மார்கழி மாதத்தை, ‘தேவர் மாதம்’ என்றும் குறிப்பிடுவர். அதாவது, இறைவனை வழிபடுவதற்கென்றே உண்டான மாதமாகும். மற்ற மாதங்களில் ஒரு நாளோ, ஒரு கிழமையோ மட்டுமே இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால், மார்கழியில் மட்டும்தான் அந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது.

இந்த தனுர் மாதத்தில், கோதை நாச்சியார் அருளிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் அருளிச்சென்ற திருவெம்பாவையையும், திருப்பள்ளி எழுச்சி போன்றவற்றையும் கண்டிப்பாகப் படிக்கவோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். இப்படிப் பாடினால் அல்லது கேட்டால் புண்ணியம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

முதலில் திருப்பாவையைப் பார்ப்போம்
வைணவத் தத்துவ இயற்பின்படி, எம்பெருமானைச் சென்றடைய வழி அவனுடைய திருவடிகளில் சரணாகதியாவதேயாகும். இதனை பக்தியாலும் மேற்கொள்ளலாம், கிருஷ்ணப் பிரேமை என்னும் காதலாலும் அடையலாம் என்று சான்றளித்தவள் ஆண்டாள்.

கோதை பிறந்தவூர், கோவிந்தன் வாழுமூர்’ என்று எல்லோராலும் போற்றிப் புகழப்படும் ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆடியில் அவதரித்த கோதை நாச்சியாரால் பாடப்பட்டதுதான் திருப்பாவை. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 473 முதல் 503 வரை திருப்பாவை இடம்பெறுகிறது.


ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, பாவை நோன்பிருந்து, திருமாலை திருப்பாவையால் தொழுது, திருமணம் புரிந்தது மார்கழி மாதத்தில்தான். எல்லா மாதங்களுமே ஆண்டாளுக்கு உகந்த மாதங்களாக இருக்கும்பொழுது, அவள் பாவை நோன்பை மேற்கொள்ள மார்கழியை ஏன் தேர்ந்தெடுத்தாள் என்பதையும், ஆண்டாள் பாவை நோன்பை மேற்கொள்ள எது காரணமாகியது? என்பதையும் காண்போம்.

திருப்பாவை ஜீயர்’ என்று அழைக்கப்படும் ராமானுஜர், சித்திரை மாதம் அவதரிக்கப் போகிறார் என்பதை ஆண்டாள் முன்னமேயே அறிவாள். ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேகம் நடந்த மாதமும் சித்திரைதான். எனவே, சித்திரை மாதம் அவளுக்கு மிகவும் பிடித்தமான மாதம்.

வேதத்தை முதன்முதலில் தமிழாக்கம் செய்தருளிய நம்மாழ்வார் தோன்றிய வைகாசி மாதமும் மிகவும் பிடித்தமானது என்பதில் ஐயமில்லை.

ஆண்டாளுக்குத் தந்தையாக மட்டுமின்றி, குருவாகவும் விளங்கிய பெரியாழ்வார் தோன்றிய ஆனி மாதமும் அவளது மனத்துக்கு மிகவும் உகந்த மாதமே ஆகும்.

ஆண்டாள் தோன்றிய மாதம் ஆடி. எனவே, அதுவும் கூட அவளுக்கு இனியதே.

அவள் மணக்க விரும்பிய கண்ணன் தோன்றிய மாதம் ஆவணி. எனவே, அதுவும் அவளது மனம் கவர்ந்த மாதமே ஆகும்.

திருவேங்கடமுடையான் அவதரித்த மாதமான புரட்டாசியும் அவளுக்குப் பிடித்தமான மாதமாகும்.

ஆழ்வார்களுள் முதல் மூவரான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் அவதரித்த ஐப்பசி மாதமும் ஆண்டாளுக்கு உகந்த மாதம்தான்.

தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் கண்ணனை அடைய விரும்பி ஆண்டாள் மதன கோபால உபாசனை செய்ததாக ஆண்டாளே கூறியிருக்கிறாள். அதனால் இம்மூன்று மாதங்களும் அவளுக்கு உகந்த மாதங்களே. ஆனால், மார்கழிக்கு மட்டும் எதனால் ஏற்றம்?

யர்பாடியில், கன்னிப் பெண்கள் ஸ்ரீகிருஷ்ண பகவானை எந்நேரமும் நினைத்த வண்ணம் பக்தி பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஊரில் இருந்த பெரியவர்களுக்கு இது பிடிக்காமல் இருந்தது. இதற்கு ஒரு கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டதே. இந்த பெண்களை எப்படியாவது அடக்கி ஒடுக்கி வைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால் எல்லாப் பெண்களையும் பாதாள சிறைக்குள் தள்ளி அடைத்திருந்தார்கள். பெண்கள் என்றால் ஒருவர் இருவர் அல்ல; ஐந்து லட்சம் கன்னிப்பெண்கள். அடைப்பட்ட கன்னிப்பெண்கள் ஸ்ரீகிருஷ்ண பகவானை வேண்டிக் கொண்டார்கள். தங்களுக்கு எப்படியாவது விடுதலை வேண்டும்; கண்ணனைக் காணும் பாக்கியம் வேண்டும் என்று மனதார விரும்பினார்கள்.

பக்தர்களின் மனம் கண்ணனுக்குத் தெரியாமல் இருக்குமா? ஸ்ரீ கிருஷ்ணர் இதற்கு ஒரு வழி செய்தார்.

ஆயர்பாடியில் தண்ணீர் பஞ்சம் வரும்படி உண்டாக்கினார். ‘பகவான் இருக்கும் இடத்தில் தண்ணீர் பஞ்சமா?’ என்று நினைக்க வேண்டாம். இதுவும் அவனின் ஒரு லீலைதான். அவ்வாறு தண்ணீர் பஞ்சம் வந்தவுடன் ஊர் மக்கள் எல்லோரும் கர்க முனிவரை அணுகி, இதற்கு உபாயம் என்ன என்று கேட்டார்கள். முனிவரும் கன்னிப் பெண்கள், பாவை நோன்பு இருந்தால், இந்தப் பஞ்சம் தீரும் என்று பதில் கூறினார் முனிவர்.

பாவை நோன்பு இருப்பது என்றால் ஆயர்பாடி அருகிலிருக்கும் யமுனா நதியில் நீராடி, நோன்பு மேற்கொண்டு, கண்ணனை பூஜித்து வழிபட வேண்டும். ஐந்து லட்சம் பெண்களுக்கு யார் பாதுகாவலனாக சென்றுவர முடியும்? இந்த கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது. எல்லோரும் அதற்கு கண்ணனே சென்று வரட்டும். கண்ணன் ஒருவனால்தான் எதையும் எதிர்கொண்டு சமாளிக்க முடியும் என்று நினைத்தார்கள். அடுத்த நாளே மார்கழி மாத ஆரம்பமாக இருந்ததால், ஊர்ப்பெரியவர்கள் மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் நோன்பை மேற்கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.

கன்னிப்பெண்கள் நினைத்ததும், கண்ணன் நினைத்ததும் சரியாகப்போனது. பெண்கள் விடுவிக்கப்பட்டார்கள். எல்லோரையும், நித்தமும், ஒரு மாதம் யமுனை நதிக்கு அழைத்துச் செல்வதையும், திருப்பிக் கொண்டு வந்து அவர்களை அவரவர் வீட்டில் விடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தான் கண்ணன். கண்ணனின் நித்திய தரிசனம் எல்லோருக்கும் கிடைத்தது. கன்னிப்பெண்கள் பஞ்சம் தீர வேண்டும் என்று மட்டும் வேண்டிக் கொள்ளவில்லை; கண்ணன் கணவனாக வர வேண்டும் என்றும் எல்லோருமே விரும்பினார்கள்.

இவற்றை விடவும் கோபிகைகளுக்கு எது மிகப்பெரிய மகிழ்ச்சி என்றால், கண்ணனுக்காக நோன்பு நோற்கும் மாதம் தற்செயலாக மார்கழி மாதமாக அமைந்ததே ஆகும். ஏனெனில், மார்கழி மாதக் குளிருக்குப் பயந்து ஊர்ப்பெரியவர்கள் யாரும் அதிகாலை வெளியே வரமாட்டார்கள். அதனால் இடையூறின்றி கண்ணனை அனுபவித்து, அவனோடு ஆனந்தமாகக் களிக்கலாம் என்று எண்ணி மகிழ்ந்தார்களாம் கோபிகைகள்.

இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும். இப்படித்தான் பாவை நோன்பு ஆரம்பித்தது.

பின்னர் தோன்றிய ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், தோழிகளை கோபியர்களாகவும், அங்குள்ள திருமுக்குளத்தை யமுனா நதியாகவும் எண்ணி, அங்குள்ள வடபத்ரசாயீ திருக்கோயிலை நந்தகோபனின் இல்லமாகக் கருதி, அங்குள்ள பெருமாளையே கண்ணனாக எண்ணி, கோபிகைகளின் வழியை அப்படியே பின்பற்றி இந்த மார்கழி நோன்பை நோற்றாள். கோபிகைகள் நோன்பு நோற்ற மாதம் மார்கழி என்பதால், அவர்களைப் பின்பற்றிய ஆண்டாளும் அதே மார்கழி மாதத்தில் இந்த நோன்பை அனுஷ்டித்தாள்.

அடுத்து, திருவெம்பாவையைப் பார்ப்போம்
திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் ‘திருப்பள்ளியெழுச்சி’யிலுள்ள பத்துப் பாடல்களும் சேர்த்து முப்பது பாடல்களாக மார்கழி மாத முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது. இப்பாடல்களில் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும், இறைவனுக்குக் காலமெல்லாம் தன்னலமின்றி சேவை செய்ய வேண்டும் என்பதைத் தவிர, வேறு நோக்கங்கள் இல்லாமலிருப்பதையும் காணலாம்.

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப்பெற்றது திருவெம்பாவை. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை.

சூரியனில் இருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக பூமியைத் தாக்கினால், பூமியில் உள்ள சகல ஜீவராசிகளும் பயிர்களும் பாதிப்புக்கு உள்ளாகும். அந்தக் கதிர்வீச்சில் இருந்து பூமியைக் காப்பது, பூமியின் வான் மண்டலத்தில் உள்ள ஓசோன் அடுக்கு. காற்று மண்டலத்தில் நிறைந்திருக்கும் இந்த மாசுகளற்ற ஓசோன், சூரியனுக்குக் கீழுள்ள அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதுடன், விடியற்காலை வேளையில் நுரையீரலுக்குப் புத்துணர்ச்சியும், சரும நோய்களிலிருந்து பாதுகாப்பும் அளிக்கிறது. இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை என்று அறியப்படுகிறது.

மார்கழியில் தினமும் பாடும் பக்திப் பாடல்களுடன் திருப்பாவை, திருவெம்பாவை, தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருப்பள்ளியெழுச்சி, மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி ஆகிய நான்கினையும், வீடுகளிலும், கோயில்களிலும் பாராயணம் செய்கின்றனர். மார்கழியில் சிறப்பாகப் பாராயணம் செய்ய வேண்டும் என்ற பெருமை இந்த நான்கு நூல்களுக்கே உண்டு. வைணவக் கோயில்கள் சிலவற்றில் மார்கழியில் இராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும் பாராயணம் செய்கின்றனர்.

மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் வாயு தேவனுக்கும், அஞ்சனா தேவிக்கும் பிறந்தவர் ஆஞ்சனேய அனுமன். இந்த நாளில் ஏதேனும் ஒரு நல்ல காரியம் நிறைவேற வேண்டும் என்று அனுமனைப் பிரார்த்திக்க வேண்டும்.

இந்திரனால் பெரு மழை, வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, ஸ்ரீ கிருஷ்ணன் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான் என்பது வரலாறு சொல்லும் செய்தி.

பெரிய கோலங்களும், பசுஞ்சாணியில் பரங்கிப் பூவும் எதற்காக?

மார்கழி மாதத்தின்போது அதிக சக்தி கொண்ட பிராண வாயு அடுக்கு, பூமிக்கு அருகே வரும் என்பதால், அதன் பயனைப் பெறுவதற்காக இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து பெரிய கோலம் போடுவது, கோயில்களுக்குச் செல்வது, வீதியில் பஜனைப் பாடல்களைப் பாடிச் செல்வது ஆகியவை ஏற்படுத்தப்பட்டன என்றும் கூறப்படுவது உண்டு.

இப்பழக்கம் பாண்டவர்கள் காலத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. மார்கழி மாதத்தில் பாரதப் போர் நடந்தபோது, பாண்டவர்கள் வீட்டையும் அவர்களைச் சார்ந்த போர் வீரர்களின் வீட்டையும் அடையாளம் தெரிந்துகொள்வதற்காக, அவர்கள் வீட்டு வாசலை சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு ஊமத்தம்பூ வைப்பதற்கு ஏற்பாடு செய்தார் வியாசர். அந்த அடையாளத்தைக் கண்டு, அவர்கள் வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பை பகவான் கிருஷ்ணர் அளித்தார் என்று கூறப்படுகிறது. அன்று முதல் கோலத்தின் நடுவில் பூ வைக்கும் பழக்கம் தொடங்கியது. மேலும் சங்க காலத்தில் பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால், அந்த வீட்டில் மணப்பதற்கு பெண் தயாராக இருக்கிறாள் என்பதற்கு அடையாளமாக பரங்கிப் பூ வைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

சாகா வரம் கொடுக்கும் அமிர்தத்தைப் பெறுவதற்காக, தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது முதலில் கடலுக்குள் இருந்து வெளிப்பட்ட, மிகக் கொடிய ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டு, மக்களைப் பேரழிவில் இருந்து காப்பாற்றினார். இது நிகழ்ந்தது ஒரு மார்கழி மாதத்தில்தான் என்பது புராணம் தரும் தகவல்.

‘‘சிவிஷ்ணு பேதம் போல், சைவ வைஷ்ணவ ஸமரஸத்தைக் காட்டுவதாக ஈச்வரனுக்கு முக்யமான திருவாதிரை, பெருமாளுக்கு முக்யமான வைகுண்ட ஏகாதசி ஆகிய இரண்டு உத்ஸவங்களும் இந்த மாஸத்திலேயே வருவதால்தான் பகவத் கீதை விபூதி யோகத்தில், தாம் மாஸங்களில் மார்கழி என்று பகவான் சொல்கிறார் என்று தோன்றுகிறது” என்கிறார் காஞ்சி முனி.

த்துணை காரணங்களால் மார்கழி மாதம் சிறப்புப் பெறுகிறது. எதனால் மார்கழி மாதம் சிறப்புப் பெற்றிருக்கிறது என்பதை அறிந்துகொண்டு அந்த மகோன்னதமான மாதத்தைக் கொண்டாடுவோம். நற்பயன்களைப் பெறுவோம்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

ஏலேலோ ஏலகிரி எழில்மிகு ஐந்து இடங்கள்!

- மஞ்சுளா சுவாமிநாதன்  கொரோனா வந்தாலும் வந்தது, சுற்றுலா/ உல்லாசப் பயணம்/ விடுமுறை எல்லாம் தடைப்பட்டுப் போச்சு. கடந்த இரண்டு வருஷமா வீட்டுலயே  முடங்கிக் கிடந்த எங்களுக்கு சென்ற டிசம்பர் மாதம் ‘ஓமைக்ரான்' வருதே,...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன் சுதா ரகுநாதனுக்கு மத்திய அரசுப் பதவி மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சகம், பிரபல கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் அவர்களை, கலாசாரத்திற்கான ஆலோசனைக் குழு (Central Advisory Board...

முத்துக்கள் மூன்று

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன் ஆட்டோமொபைல் துறையில் சாதித்த சந்திரகலா மிகவும் சவாலான ஆட்டோமொபைல் துறையில் கடந்த 26 வருடங்களாக சாதனைகள் செய்து வருகிறார் சந்திரகலா. தூத்துக்குடியில் சாதாரண குடும்பத்தில் அதிகம் படிக்காத பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவர். பள்ளிப்...

எல்லாம் நாராயணன்!

0
தொகுப்பு: எஸ். சந்திர மௌலி படங்கள்: சேகர் இந்த ஆண்டு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஜெயந்தி தினம் மார்ச் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையின் பல தத்துவங்களையும், மிக எளிதில், அனைவருக்கும் புரியும் வகையில் குட்டிக் கதைகளாக...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டபிராமன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் சாதனை அண்மையில் நியூசிலாந்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, சுற்றுப் பயணம் செய்து நியூசிலாந்து மகளிர் அணியுடன் திறமையாக விளையாடினார்கள்....