0,00 INR

No products in the cart.

பீடு நடை போடலாம்!

அழகோ அழகு – 7

– அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா

பாதப் பராமரிப்பு!

முகம், கண்கள், கைகள் என பார்த்துப் பார்த்துப் பராமரிக்கும் நாம், நம் உடம்பையே தாங்கி நிற்கும் கால்களையும் பராமரிக்க வேண்டியது மிக மிக அவசியமல்லவா? காலையில் எழுந்திருப்பதிலிருந்து நாம் அன்றாடம் ஓடியாடி செய்யும் எல்லா வேலைகளுக்கும் ஆதாரமாக விளங்கும் கால்கள் பராமரிப்பு பற்றித்தான் இப்போது பேசப் போகிறோம்.

அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா

கால்கள் பராமரிப்பின் முதல் படியாக எப்சம் உப்பு (EPSOM SALT) கலந்த வெதுவெதுப்பான நீரில் கால்களை பத்து நிமிடங்கள் வரை ஊற விட வேண்டும். கால் வலி, கால் விரல்களுக்கு நடுவில் தொற்று ஏதேனும் இருந்தால் இதன் மூலம் முற்றிலும் நீங்கி விடும். வாரத்தில் இரண்டு நாட்கள் இதை மேற் கொண்டாலே போதும். அடுத்ததாக, எண்ணெய் மசாஜ். தேங்காய் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி கால்களில் மசாஜ் செய்து, ஐந்து நிமிடங்கள் கழித்து திரவ சோப் கொண்டு (சாதாரண சோப்பால் தேய்த்தால் எண்ணெய் முழுவதும் நீங்காமல் சருமத்துடனேயே ஒட்டிக் கொண்டிருக்கும்) சுத்தம் செய்து, பின் கால்களை நன்கு உலரத் துடைத்து விட வேண்டும்.

இவை தவிர, மசாஜ் ரோலர் (MASSAGE ROLLER) ஆன்லைனிலும் கிடைக்கும்; கால்களுக்கு நல்ல புத்துணர்ச்சி கொடுக்கும். கால்களின் மேல் இந்த ரோலரை தேய்க்கும்போது, நம் உடல் உறுப்புகளின் ஒட்டுமொத்த அழுத்தப் புள்ளிகள் கால்களில் முடிவதால், அந்தப் புள்ளிகளின் செயல்பாடு தூண்டப்பட்டு கால்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது.

கால்களை ஈரப்பதம் இல்லாமல் காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். முக்கியமாக, குளிர் காலங்களில். இல்லையெனில், நகங்களிலும், நகங்களைச் சுற்றிலும் பூஞ்சை பிடித்துத் தொற்று ஏற்படும்.

வயது ஆக ஆக கால் நகங்களில் கோடுகள் ஏற்படும். சீக்கிரம் உடைந்து விடும். நகங்களை அடிக்கடி வெட்டி நெயில் ஃபைலிங் (NAIL FILING) பண்ணுவது அவசியம். நகங்கள் வெட்டிய பின் எமரி போர்டு (EMERY BOARD) வைத்துத் தேய்த்தால் வெட்டிய ஓரங்கள் மிருதுவாகவும், ஒரே வடிவுடனும் இருக்கும். நகங்களும் எளிதில் உடையாது. மெட்டல் போர்டு (METAL BOARD) பயன்படுத்துவது நல்லதல்ல.

கால்களில் ஏற்படும் பித்தவெடிப்புக்கு ஒரு சிறிய டப் (TUB) அல்லது வாளியில் வெதுவெதுப்பான நீர் நிரப்பி அதில் நான்கைந்து டேபிள் ஸ்பூன் தேன் விட்டு பத்து நிமிடங்கள் கால்களை ஊற வைக்கலாம். பிறகு தேன் பிசுபிசுப்பு போக வெறும் வெதுவெதுப்பான நீரில் வைத்து எடுத்து ஈரம் போக துடைத்த பின் டஸ்டிங் பவுடர் (DUSTING POWDER) போடலாம். இந்தப் பவுடர் ஈரத்தை உறிஞ்சி சேற்றுப்புண்/பித்த வெடிப்பு மேலும் வராமல் தடுக்கும்.

200மில்லி தேங்காய் எண்ணெயில் 100 கிராம் கல் உப்பு போட்டு, அதில் பத்து பதினைந்து துளிகள் லாவண்டர் போன்ற நறுமண எண்ணெயும் கலந்த கலவையை கால்களில் ஸ்க்ரப் (SCRUB) செய்து, பின் சுத்தம் செய்யலாம். இதை தினமும் செய்யலாம்.

நான்கு டேபிள் ஸ்பூன் ஓட்மீல் (OATMEAL), அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா (BAKING SODA), நான்கைந்து டீஸ்பூன் பால் இவை மூன்றும் கலந்து பாதத்தில் தேய்த்து முதலில் வெதுவெதுப்பான நீரிலும் பின்னர் குளிர்ந்த நீரிலும் சுத்தம் செய்வதால் கால்களுக்கும் பாதங்களுக்கும் புத்துணர்ச்சி கிடைப்பதோடு, ரத்த ஓட்டமும் சீராகும்.

கிளியோபாட்ரா ரகசியம்… அது என்ன? பாலை லேசாக சூடுபண்ணி டப்பில் (TUB) கால்களை வைத்து அதன் மேல் பாலை மெதுவாக ஊற்றி பத்து நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் சுத்தம் செய்யலாம். பாலில் உள்ள லேக்டிக் (LACTIC) அமிலம் இறந்த தோல் செல்களை நீக்கி கருமையைப் போக்கிவிடும்.

ஃபில்டர் காபி பவுடர், சர்க்கரை, தேங்காய் எண்ணெய் மூன்றும் தலா இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கலந்து குளிப்பதற்கு முன் முழங்காலிலிருந்து பாதம் வரை ஸ்க்ரப் (SCRUB) செய்து, பின் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கங்களை வெட்டும்போது பெரிய க்ளிப்பர்களைக் (CLIPPER) கொண்டு வெட்டுவது நல்லது. சிறியதை பயன்படுத்தும்போது நகங்கள் சரியாக வெட்டுப்படாமல் வலி உண்டாக வாய்ப்புண்டு. எனவே, பெரிய க்ளிப்பரில் ஒரே தடவையில் நகங்களை வெட்டிவிட வேண்டும். வெட்டிய பின் ஃபைலிங் செய்யலாம். ஃபைலிங் செய்யும்போது வட்டமாகப் பண்ணாமல் நேராகச் செய்வது நல்லது. அப்போதுதான் அழுக்குகள் நகங்களின் உள்ளே சென்று அடையாது.

பூந்திக்காயை வெந்நீரில் போட்டுக் கசக்கி, அந்த நீருடன் சிறிது தண்ணீர் கலந்து அதில் கால்களை ஊற வைத்துக் கொள்ளலாம். இது கால்களில் பூஞ்சை வருவதைத் தடுக்கும்.

அணிந்துகொள்ளும் செருப்பு மற்றும் ஷூ தரமானதாக இல்லாவிடில் கால்களைக் கடிக்கும்; காலாணி வர வாய்ப்புண்டு. REFLEXOLOGY என்ற ஃபுட் மசாஜ் செய்து கொள்ளலாம். அவசியமெனில், கால்கள் பராமரிப்புக்கென உள்ள சிறப்பு மருத்துவர்களிடம் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கால்களில் அடிபடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகமிக அவசியம். நகங்கள் வெட்டும்போது அதிக கவனம் தேவை. காயம் பட்டால் அந்த இடத்தில் வலி உணர்வு இருக்காது. அதனால் உடனடியாகக் கவனித்து தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கால் அழுக்குகளை நீக்க கூர்மையான ஊசி போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தக் கூடாது. தனியாக தங்களுக்கென்று கால்கள் பராமரிப்பு கிட் (KIT) வைத்துக் கொள்ளலாம். அடுத்தவர் உபயோகப்படுத்தும் உபகரணங்கள் வேண்டாமே!

ழகு நிலையங்களில் கால்கள் பராமரிப்புக்கென ஏராளமான PEDICURE முறைகள் உள்ளன. சிறப்பு PEDICURE முறைகளும் உண்டு. சாக்லேட், மின்ட், ஸ்ட்ராபெரி என இயற்கையான PEDICURE முறைகளும் உண்டு. அவரவர்களுக்குப் பிடித்த மாதிரி செய்து கொள்ளலாம்.

கால்களின் பராமரிப்புக்கென நிறைய தயாரிப்புகள் கிடைக்கின்றன. ஃபுட் க்ரீம், (FOOT CREAM) லோஷன், பவுடர், ஃபுட் வாஷ் (FOOT WASH) என நிறைய வகைகள் உண்டு. தரமான, மென்மையான தயாரிப்புகளைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்தலாம். கால்களின் பராமரிப்புக்கென தினமும் பத்து பதினைந்து நிமிடங்கள் ஒதுக்குவது அவசியம். ஈரம் இல்லாமல் சுத்தமாக, காற்றோட்டமாக கால்களைப் பராமரித்தால் பீடு நடை போடலாம்!

கால்களுக்கு கேர் எடுக்க மறக்காதீங்க ப்ளீஸ்… இது ரொம்ப ரொம்ப முக்கியம் தோழீஸ்!
– தொகுப்பு : மங்கை ஜெய்குமார்

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...