பொறாமை பொன்னரசி!

பொறாமை பொன்னரசி!
Published on

சங்கடம் தருபவர்களை சமாளிப்பது எப்படி? – 6

– ஜி.எஸ்.எஸ்.
ஓவியம் : சுதர்ஸன்
'போட்டி இருக்கலாம்; பொறாமை இருக்கக்கூடாது' என்பதை நாம் அடிக்கடிக் கேள்விப்பட்டிருப்போம். என்றாலும், நம்மில் பலருக்கும் எப்போதாவது ஒருமுறையாவது, யார் மீதாவது லேசாகப் பொறாமை எட்டிப் பார்த்திருக்கக்கூடும். இப்படிப்பட்ட நம்மைப் போன்ற சாதாரணர்கள் பொன்னரசியை சந்தித்தால் அதிர்ச்சி அடைய வாய்ப்பு உண்டு.

'எனக்கொண்ணும் யார் மீதும் பொறாமை கிடையாது. கடவுள் மத்த எல்லாருக்கும் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கிட்டான், அவ்வளவுதான்' என்று அடிக்கடி கூறிக் கொண்டிருக்கிறாளே அவள்தான் பொன்னரசி.

ஆனால், உண்மையில் பொறாமைப்படுவதை இயல்பாகவே கொண்டவள் அவள். எதற்குத்தான் பொறாமைப்படுவது என்று ஆனந்திக்கு விவஸ்தையே கிடையாது.

ஒருமுறை, 'அவள் அதிர்ஷ்டக்காரி. ஒன்றுக்கு மூன்று வீடு' என்று தனது தோழி ஒருத்தியைப் பற்றி அவள் தகவல் கூற, அவள் கணவன் வியந்தான். 'அவள் மூன்று வீட்டுக்குச் சொந்தக்காரியா? எனக்குத் தெரியாதே' என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான். ''வாடகை வீடுதான். மூன்று முறை மாறி விட்டாள். நமக்குத்தான் அதிர்ஷ்டம் இல்லை. சொந்த வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இருக்கிறோம்'' என்று ஆதங்கப்பட்டாள். அந்த சொந்த வீடு ஐந்து அறைகள் கொண்ட, நகரின் மையப் பகுதியில் அமைந்த ஒன்று.

தனக்குத் தெரிந்த ஒருத்திக்கு அடர்த்தியான நீண்ட முடி என்பதை அறிந்ததும் அதற்காக பொறாமைப்பட்ட பொன்னரசி, அது 'விக்' என்பதை அறிந்து கொண்டதும், ''விக் எல்லாம் வாங்க முடியுதுன்னா, அவ பெரிய பணக்காரியாக இருக்கணும். கொடுத்து வச்சவ'' என்று பொறாமைப்பட்டாள்.

தனக்கு கருநாக்கு என்பதில் அவளுக்கு மிகவும் பெருமை. அடுத்த வீட்டுக்காரியின் மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்கிறார் என்பதைக் கேட்டதும் அவள் மனதில் இருந்த பொறாமை, அவர் இலங்கையில் சொற்ப சம்பளத்துக்கு வேலை செய்கிறார் என்பதை அறிந்த பிறகும் கூட குறையவில்லை.

புடைவைக் கடையில் மற்றவர்கள் தேர்வு செய்த புடவை மீதுதான் அவள் பார்வை செல்லும். சமீபத்தில் அப்படி ஒரு பெண்மணி தேர்வு செய்திருந்த புடைவைகளில் இருந்து மூன்றை கடைக்காரரிடம் அடம்பிடித்து வாங்கிச் சென்றாள். அதற்குப் பிறகுதான் கடைக்காரருக்கே தெரியவந்தது, அந்த மற்றொரு பெண்மணி, 'வேண்டாம்' என்று கழித்துக்கட்டிய புடைவைகள்தான் அவை என்று.

தோழி ஒருத்தி (முன்பின் யோசிக்காமல்!) அவளிடம் ஒரு வார இதழைக் காட்டுகிறாள். அதில், 'வாசகர் கடிதங்கள்' பகுதியில் அவள் எழுதிய கடிதம் பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது. ''என் கடிதத்தைத்தான் முதல்ல போட்டிருக்காங்க'' என்று குழந்தைத் தனத்துடன் அவள் குதூகலிக்க, பொன்னரசியின் முகம் சுருங்குகிறது. ''எப்பவுமே சுமாரான கடிதத்திலேயிருந்து தொடங்கி, சிறப்பான கடித்தை கடைசியில்தான் பிரசுரிப்பாங்க'' என்றாள். தவிர, தோழிக்கு ஆனந்தமளித்த அந்த வார இதழை வாங்குவதையும் அத்தோடு நிறுத்திக் கொண்டாள்.

பொன்னரசி போன்றவர்களை எப்படி எதிர்கொள்ளலாம்?

பிறர் மீது பொறாமை கொண்டால், உங்களிடம் ஏதோ சிறப்பு இருக்கிறது அல்லது உங்களுக்கு ஏதோ சிறப்பு நடந்திருக்கிறது என்று பொருள். இதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.

உங்களுக்கு நடக்கும் நல்லவற்றை பொறாமைக்காரர்களிடம் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை.

'நீங்க யதார்த்தமாதான் சொல்றீங்க. ஆனா, கேட்பவர்களுக்கு நீங்க பொறாமை பிடிச்சவங்கன்னு சொல்வாங்க. எதுக்கு எதிர்மறையாய் பேசணும் சொல்லுங்க?' என்று கூறி, உங்களுக்கும் அந்தப் போக்கு பிடிக்கவில்லை என்பதை தெரியப்படுத்தினால் அதுபோன்ற பேச்சை அவர்கள் குறைத்துக் கொள்வார்கள். (உங்களுக்குப் பின்னால் உங்களைப் பற்றிய விமர்சனத்தையும் பொறாமை கலந்து வைக்கலாம் என்றாலும், குறைந்தது நீங்கள் அதில் இருந்து நேரடியாகத் தப்பித்துக்கொள்ளலாம்.)

பொறாமையுடன் உங்கள் மீது விமர்சனம் வைக்கப்பட்டால், அதைப் பொருட்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். 'அவருக்குக் கருநாக்காக இருந்தால் என்ன செய்வது? அவர் பொறாமையுடன் கூறுவதன் காரணமாக என் வாழ்க்கையில் ஏதாவது எதிர்மறையாக நடந்து விடுமோ!' என்றெல்லாம் எண்ணி வருத்தப்பட வேண்டாம். உங்களுக்கு உற்சாகம் தரும் விஷயங்களில், உங்கள் நல்வாழ்வில் அக்கறை கொண்டவர்களுடன் ஈடுபடுங்கள். பொறாமைக்காரர்களின் விமர்சனங்களை நீங்கள் மறந்துவிடுவீர்கள்.

தன்னை விட, உங்கள் வாழ்க்கை மிகவும் மேம்பட்டது என்கிற வகையில் அவர் கூறினால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த போராட்டங்களை அவருக்குக் கூறலாம். இதன் மூலம் உங்கள் மீது அவருக்குள்ள பொறாமை குணம் குறைய வாய்ப்பு உண்டு.

ஓவியம் : சுதர்ஸன்
ஓவியம் : சுதர்ஸன்

அவர்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் பார்க்கலாம். அவர்களுடன் பேசும்போது, நடுநடுவே கைக்கடிகாரத்தைப் பாருங்கள். ஏதாவது காரணம் கூறி, கழன்று கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு ரோல் மாடலாக அவர்களுக்கு நடந்து காட்டலாம். அவரைப் பற்றியும் பிறரைப் பற்றியும் நல்லவிதமாகவே பேசுங்கள். அப்படி நல்லவிதமாக நீங்கள் பேசுபவரைப் பற்றி பொறாமைக்காரர் தவறாகப் பேசலாம். அப்போதும் நீங்கள் தொடர்ந்து அவர் குறித்து நல்லவிதமாகப் பேசினால், எதிராளி ஒருகட்டத்தில் பேச்சை நிறுத்திக் கொள்வார்.

அதே சமயம், உங்களைப் பற்றி யாராவது எதிர்மறையாக விமர்சனம் செய்தாலே அது பொறாமையால் எழுந்தது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். அந்த விமர்சனம் நியாயமானதா என்பதில் கவனம் செலுத்தி, தேவைப்படும்போது திருத்திக் கொள்ளுங்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com