0,00 INR

No products in the cart.

உள்ளத்தில் நல்ல உள்ளம்!

– சேலம் சுபா

தினான்கு வயதில் திருமணம், இருபத்தெட்டு வயதில் மது பழக்கத்தால் மறைந்த கணவர், கையில் இரு பிள்ளைகளுடன் போராட்ட வாழ்வு, இருதய பாதிப்பால் ஆரோக்கியமற்ற உடல்நிலை… இத்தனையும் அனுபவித்த ஒரு பெண், மனம் நொந்து வீட்டில் முடங்கிக் கிடக்காமல், வீதியில் இறங்கி ஆதரவற்றோர்களுக்கு உதவினால், அவளுக்கு இந்தச் சமூகம் தரும் பெயர், ‘வீட்டுக்கு அடங்க மறுப்பவள்.’

இழந்த வாழ்வை எண்ணி நொடிந்துபோகாமல், தனி ஆளாக களம் இறங்கி சக மனிதர்களின் துயரங்களைப் போக்கும் சமூக ஆர்வலராக அனைவரின் கவனத்தைத் திருப்பி, பல எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளார் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த தேவி ரவி.

இவரால் பயனடைந்தவர்கள் ஏராளம். அவர்களின் நன்றிகளை வாங்க மறுத்து, ‘தான் ஒரு கருவி மட்டுமே’ என்கிறார் இவர். எந்த நேரம் என்றாலும் அழைத்தால் தன்னார்வத் தொண்டர்களுடன் களம் இறங்கி, பாதிக்கப்பட்டவரின் துயரைத் தாங்குகிறார் இவர். தனக்கு வரும் வருமானத்தை வைத்து பலரின் துன்பங்களைப் போக்குகிறார்.

தற்சமயம் சென்னையில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட சாலையோரவாசிகளை அரவணைத்துப் பல குடும்பங்களுக்கு அடைக்கலம் தந்து உதவி, பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். ‘தனது வாழ்க்கை பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதே தன் விருப்பம்’ என்று கூறும் தன்னம்பிக்கைப் பெண்மணி தேவியுடன் நாம் பேசிய உரையாடல்…

தேவி ரவி

உங்களைப் பற்றி…?
சொந்த ஊர் சென்னை. பதினான்கு வயதில் குழந்தைத் திருமணம். கணவரின் குடி பழக்கத்தால் மனதில் வேதனை. குடும்ப வாழ்வில் இரு குழந்தைகள்.
இளம் வயதில் கணவனை இழந்த பெண்ணாகப் பெற்றோரிடம் அடைக்கலமானேன்.
நான் எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பேன்.
என்னைப் படிக்க வைக்கவில்லை எனும் கவலை இருந்தாலும், பொருளாதாரம் வேண்டி அழகுக்கலையைப் பயின்றேன்.
கூடவே தையல் கலையைப் பயின்று பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறேன்.
பெற்றோர் என்றாலும், அவர்களிடம் கையேந்தி நிற்பதைத் தவிர்த்து, நானே சுயமாக உழைத்து என் பிள்ளைகளைப் படிக்க வைத்தேன்.

கணவருக்காக குடிபோதை மறுவாழ்வு சிகிச்சை மையம் சென்றபோது அங்கு என்னைப் போல் பல பெண்களின் வேதனையைக் கண்டு, ‘இந்த சமூகத்திற்கு என்னால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும்’ என மனதில் உறுதி எடுத்தேன். பெண்களுக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தேன். ஏனெனில், என்னைப் பெற்றோர் படிக்க வைத்திருந்தால் நிச்சயம் நிறைய உயரங்களை நான் தொட்டிருப்பேன்.

என்னால் பெற முடியாத கல்வியை, படிக்க வாய்ப்பில்லாத பெண் குழந்தைகள் பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. கணவனால் நான் அடைந்த துன்பங்களை மறக்க உதவியது எனது சேவைகள். பெற்றோருக்குத் தெரியாமல் உதவிகளை செய்து வந்தேன். ஏனெனில், நான் தாமதமாக வீட்டுக்கு வருவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. காரணம் என் பெண். இப்போது பெண்ணுக்குத் திருமணம் முடிந்து விட்டதால் என்னால் சுதந்தரமாக செயல்பட முடிகிறது. இடையில் என் உடல் நலமும் பாதிக்கப்பட்டது. திடீர் திடீர் என்று மயக்கம் வந்து கீழே விழுந்து விடுவேன். டெஸ்டில் எனது இருதயத்தில் பாதிப்பு எனத் தெரிய வந்துள்ளது. இதற்காக நான் வருத்தப்படவில்லை. நான் இருப்பதற்குள் என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தே முடிப்பேன் எனும் உறுதி இன்னும் கூடுகிறது.

நீங்கள் இதுவரை செய்த சேவைகள்?

சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ உதவிகள், சிக்னலில் பொருள்களை விற்பனை செய்யும் அவர்களின் குழந்தைகளுக்குக் கல்வியின் அவசியத்தை எடுத்துச் சொல்லி இலவச கல்வி உதவிகள், உடல் குறைபாடு உடைய பெண்களுக்கு உடைகள், உபகரணங்கள் வழங்குதல், குடும்பப் பிரச்னைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தல்… இப்படி நிறைய செய்தாலும் குடிபோதைக்கு அடிமையான கணவனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் கல்விக்கு ஏற்ற வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதை என் முதல் கடமையாகச் செய்து வருகிறேன். காரணம் குடி என்பது வாழ்வினை எப்படி வேதனைக்குள்ளாக்கும் என்பதை நான் அறிவேன்.

நிறைய சேவைகள் செய்தாலும், நான்தான் செய்கிறேன் என்பது வெளிச்சத்திற்கு வரவில்லை. அப்போதுதான் என் சேவைகளை அறிந்து, என் நலனில் அக்கறை கொண்ட ராமலிங்கம் எனும் சகோதரர், ‘நீங்கள் ஒருவரே இவ்வளவு செய்கிறீர்கள். அறக்கட்டளை ஒன்றைத் துவங்கினால் இன்னும் பலர் ஒன்று கூடி இன்னும் நிறைய சேவைகளைச் செய்யலாமே’ என்று ஆலோசனை தந்தார். எனக்கும் அவர் சொன்னது நல்ல யோசனையாகப் பட, எல்லோருக்கும் அன்னையாக அரவணைக்க வேண்டும் என்று விரும்பி, ‘அன்னை அரவணைப்பு கல்வித்தொண்டு அறக்கட்டளை’யைத் துவங்கினோம்.

எங்களுடன் பல தன்னார்வத் தொண்டர்களும் இணைந்துள்ளதால் எங்களால் இன்னும் சிறப்பான சேவைகளை விரிவாக்கிச் செய்ய முடிகிறது. தற்சமயம் சென்னையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500 உறுப்பினர்களும் 50 பொறுப்பாளர்களும் களப்பணியில் உள்ளனர். சகோதரர் ராமலிங்கம், சுதா, கலையரசி, ஆர்தீஸ்வரி, லதா, மல்லீஸ்வரி ஆகியோர் நள்ளிரவிலும் பிரச்னை என்றால் தயங்காமல் என்னுடன் வருவார்கள். இவர்களைப் போன்றோர்களே எனது பலம்.

கொரோனா காலத்தில் துவங்கப்பட்ட இந்த அறக்கட்டள மூலம் ஆயிரக்கணக்கானவர்களின் பசியைப் போக்கியுள்ளோம். சமீபத்தில் கொரோனாவின் போது பணியாற்றிய காவலர், மருத்துவர், செய்தியாளர், துப்புரவுப் பணியாளர், செவிலியர் போன்ற அனைத்துத் துறைகளிலும் உள்ள முன்களப் பணியாளர்களை மேடையேற்றி கெளரவித்ததைப் பார்த்து, பலரின் பாராட்டுகள் எங்களுக்கு வந்தன.

இதுவரை யாரிடமும் கையேந்தவில்லை. கடவுள் எனக்குத் தரும் வருமானத்தில் என் தேவைகளுக்குப் போக, மீதம் உள்ள அனைத்தையும் சேவைகளுக்கே செலவிடுகிறேன். சில சமயம் சேவைக்காக என் நகையை விற்றும் உள்ளேன். நகையை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்து வாங்க முடியும். ஆனால், உடனடித் தேவையான உணவுக்காகத் துடிப்பவர்கள் நிலை? மேலும், எங்கள் உறுப்பினர்கள் அவர்களால் முடிந்த தொகையைத் தருவார்கள். இனிவரும் காலங்களிலும் நல்ல உள்ளங்கள் எங்களுக்குத் துணை நிற்கும் எனும் நம்பிக்கை உள்ளது. மகள் காயத்ரி, மகன்கள் கோபிநாத், அஜீத் மற்றும் மருமகன் என எல்லோருமே எனக்கு ஆதரவாக இருப்பதாலேயே என்னால் சேவைகளைத் தொடர முடிகிறது. மகன் கோபி குடிபோதை மறுவாழ்வு மையத்தின் பொறுப்பாளராகப் பணியில் உள்ளான். அவன் கொண்டுவரும் சம்பளப் பணத்தை அப்படியே என் கையில் தந்து விடுவான்.

உங்களால் மறக்க முடியாத சம்பவம்?
நிறைய உள்ளது. பாதுகாப்பான வட்டத்தில் வாழ்பவர்களே இங்கு அதிகம். அவர்களால் அடுத்த பக்கத்தில் உள்ளவர்களின் வலிகளைப் புரிந்துகொள்ள முடியாது. ஒருமுறை மலைவாழ் கிராமத்தில் உணவு, உடை போன்றவற்றை நிவாரண உதவியாக வழங்கப் போயிருந்தோம். அவர்கள் அழுக்கான உடைகளுடன் பார்க்கவே ஒரு மாதிரியாக இருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் என்னைத் தொட வந்தான். எங்களுடன் வந்தவரோ, ‘மேடத்தைத் தொடாமல் தூரம் போ’ எனச் சொல்ல, எனக்கு செம கோபம் வந்து விட்டது. அவரைக் கடிந்து அந்தச் சிறுவனை அழைத்து என் மடி மீது அமர்த்தி, அவனுக்கு உணவு அளித்தேன். இதைப் பார்த்த அந்தச் சிறுவனின் தாயும் மற்றவர்களும், ‘எங்களை யாரும் அருகிலேயே வர விட மாட்டார்கள். நீங்க நல்லா இருக்கணும் அம்மா’ என்று சொல்லி கண் கலங்கினர். மனிதரிலே எத்தனை வித்தியாசங்கள் என்று என் மனதும் கலங்கியது. இவர்களைப் போன்றவர்களின் வாழ்த்துக்கள் என் ஆயுளையும் அதிகரிக்கும் எனும் நம்பிக்கை எனக்கு.

உங்கள் இலக்கு…?
பெண்ணுக்கு முதல் தேவை கல்வி. இலவசக் கல்வி நிலையம் துவங்கி, அதில் சாலையோரக் குழந்தைகள், ஆதரவற்ற மற்றும் வசதியற்ற குழந்தைகளுக்குத் தரமான கல்வியை அளிக்க வேண்டும். அதேபோல், வீடின்றி சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்காகக் குடியிருப்பு ஒன்றைக் கட்டி, அதில் அவர்களை வாழவைக்க வேண்டும். இயன்றால் முதியோருக்கும் மனநலம் குன்றியோருக்கும் இல்லங்களைத் துவங்க வேண்டும்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் கணவனால் கைவிடப்பட்டு வாழ்வாதாரம் தேடும் பெண்களுக்கும் கல்வி அளித்து, வேலைவாய்ப்பையும் தந்து அவர்களை தொழில் முனைவோர்கள் ஆக்க வேண்டும்.

இறுதியாக இந்தச் சமூகத்திற்கு நீங்கள் சொல்லும் செய்தி…?
சாலையோரம் விழுந்து கிடப்பவர்களையோ அல்லது துன்பத்தில் தவிப்பவர்களையோ கண்டு விலகிப் போகாதீர்கள். ஒரு நிமிடம் செலவு செய்து எங்களைப் போன்ற சேவையாளர்களிடம் தெரிவித்தால், அதுவே நீங்கள் துன்பப்படும் உயிருக்குச் செய்யும் நன்மை. பெரும் பண உதவி செய்வது மட்டும் சேவையல்ல; நல்ல மனமும், மனிதாபிமானமும் இருந்தாலே இந்தச் சமூகம் ஏற்றத்தாழ்வின்றி சமமாகும்.
குழந்தைத் திருமணத்தை தயவுசெய்து தடை செய்யுங்கள். உங்கள் குழந்தைக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய சொத்து கல்வி மட்டுமே என்பதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

‘நீங்கள் என்ன அன்னை தெரசாவா?’ என்று கேட்பவர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுதான். அன்னை தெரசாவாக யாராலும் ஆக முடியாது. ஆனால், நாம் நினைத்தால் அவரின் சேவைகளில் ஒரு சதவீதமாவது செய்ய முடியும். அந்த ஒரு சதவிகிதத்தை நோக்கியே எனது வாழ்வும் பணியும்.

அழுத்தமாகச் சொல்லி முடித்தார் தேவி. அவரது இலக்குகள் நிறைவேற வாழ்த்தி விடைபெற்றோம்.

சேலம் சுபா
பெயர் சுபா தியாகராஜன். பிறந்த ஊர் சேலம் என்பதால் சேலம் சுபா எனும் பெயரில் முன்னணி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். கதை கவிதை கட்டுரைகள் எழுதினாலும் தன்னம்பிக்கையாளர்களின் நேர்காணல் இவரது சிறப்பு. கல்கி குழும இணையதளம், கல்கி ஆன்லைன்.காம் மற்றும் கல்கியின் வலையொலி, காணொளி வாயிலாகவும் பங்கேற்பதில் பெருமிதம் இவருக்கு.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

புள்ளிக் கோலம் முதல் பொன்னியின் செல்வன் ஓவியம் வரை…

- ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு   புள்ளிக் கோலத்தினை மையமாகக்கொண்டு என்னென்ன செய்யலாம்? “ஏன்... என்னென்னவோ செய்யலாம். புள்ளிக் கோலம் என்பது நம்முடைய அழியாத பாரம்பரியம். பழைமையான கலாசாரம். நான் பிறந்து வளர்ந்தது கோவையில். திருமணம் ஆகி...

இரண்டு ரூபாய் தோசைக் கடை…!!!

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. “நேத்து வடித்து வுட்ட கஞ்சியிலக் கொஞ்சம் எடுத்து வைத்து, மறுநாள் காலையில அதுலக் கொஞ்சம் தண்ணி ஊத்தி சூடு பண்ணித் தருவாங்க எங்க அம்மா. காலம்பர ஆகாரம் எங்களுக்கு அது தான்....

யோகாவில் சாதிக்கும் சந்தியா… 

-  ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு பொறியியல் கல்வியில் கணினியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தும் ஐடி கம்பெனி வேலை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, தான் சிறுமியாக இருந்த போது ஈர்க்கப்பட்ட யோகாவே தனது வாழ்வு என முடிவு...

உலகின் மிக உயரமான ஸ்ரீ முத்துமலைமுருகன்!

வைகாசி விசாகம் சிறப்பு! -சேலம் சுபா    உலகின் மிக உயரமான முருகன் சிலை எங்குள்ளது எனக் கேட்டால் உடனே மலேசியா பத்துமலை என்று சொல்லியிருந்த நாம், இனி அதை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ள நம் தமிழ்நாட்டில்...

மாதவிடாய் ஆலோசனை மையம்…  கிராமாலயா திருச்சி…!!! 

MENSTRUAL  CAFE - (தென்னிந்தியாவின் முதல் மாதவிடாய் ஆலோசனை மையம்) -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. மாதவிடாய் என்று இயல்பாக போகிற போக்கிலோ, ஏன் வெளிப் படையாகவோச் சொல்வதற்குக் கூட இன்னும் நம் சமூகம் தயாராகவில்லை என்பது...