
இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைவு?
-எஸ். யாழினி, மும்பை
லதா மங்கேஷ்கரின் குரலை, நான் விவரமறிந்து ரசித்தது 'ஆராதனா' பாடல்களில்தான்.
'குன் குனா ரஹே ஹே!' 'கோரா காகஸ் தா ஏமன் மேரா…' அந்த வயசிலும் இந்த வயசிலும் அலுக்கவே இல்லை. அது கிறங்கடிக்கிற குரல்! 'ஸ்வர கோகிலா' என்ற பட்டம் லேசில் கிடைத்துவிடுமா என்ன?
70 வருஷம், 200 கதாநாயகிகளுக்கு ஏகப்பட்ட மொழிகளில் நவரசம் பிழிவதும், நர்கீஸ் முதல் கஜோல் வரை கலக்கு கலக்குன்னு கலக்குவதுமாக லதா ஓர் இசை சகாப்தம்தான்!
நம்ப தமிழுக்கு அந்த 'வளையோசை' பாட்டு ஒண்ணு போதுமே! இன்னும் நூறு வருஷம் மாஞ்சு மாஞ்சு ரசிக்கலாம்!
"நீ பார்க்கும் பார்வைகள் பூவாஹும்!
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாஹும்!"
அதில் 'கும்'க்கு அவர் தரும் மெல்லிய காதல் அழுத்தம் நிஜமாகவே ஒரு போதை.
"செம்மேனி என் மேனி
உன் தோளில் ஆடும் நாள்!"
உணர்வுகளில் ஊஞ்சல் கட்டி ஆடும் அந்த காதல் கானத்தை லதா பாடியபோது அவருக்கு வயது ஜஸ்ட் 60!
(அந்தப் பல்லவன் பஸ்ஸும், அமலா – கமல் அடிக்கும் ஃபுட் போர்ட்டும்… அடடா… இந்தப் பாட்டுக்கும், லதா – எஸ்.பி.பி. குரலுக்கும் எக்ஸ்பயரி டேட்டே கிடையாது!)
****************************
'தாய்-சேய்' என்றதும் கண்முன் தோன்றும் ஓவியம் மற்றும் புகைப்படம்?
-வாசுதேவன், பெங்களூரு.
இருங்க… ஒரு விநாடி கண்ணை மூடிப் பார்க்கிறேன்! உம்! தெரியுது ஸார்!
ஈரேழு புவனங்களைப் படைத்தவனை, கையில் ஏந்தியபடி, "என் புள்ள…!" என்று பெருமை பொங்க, யசோதை நிற்கிறாள்! என்ன ஒரு போஸ்! இத்தனைக்கும் இரவல் குழந்தை!
சாட்சாத் பகவானை, சீராட்டி, பாலூட்டி, தாலாட்டியதோடு, "மண்ணைத் தின்னியா? வெண்ணெய் திம்பியா?" என்று திட்டி, மிரட்டி, உரலில் கட்டி, வாய் பொத்தி, கெஞ்ச வைத்த தாய்! இந்த ஓவியம்தான் ப்ரெயின் ஸ்கேன் பண்ணிக் காட்டுது!
புகைப்படம்னா… அதுக்கு நைஜீரியாவுக்குப் போகணும்! 'அன்ஜா ரிங்ரென் லோவன்' என்ற டேனிஷ் பெண்மணி, தனது தத்துப் பிள்ளையான 'ஹோப்' புடன் இருக்கும் படம்!
ஆப்ரிக்க நாடுகளில் இன்னும் சூன்யம், தீயசக்தி போன்ற மூடநம்பிக்கை மண்டிக்கிடக்கிறது. அதனால் ஆயிரக்கணக்கான பிஞ்சுகளை, சூன்யக் குழந்தைகளாக பாவித்து, துன்புறுத்தித் தெருவில் விட்டு விடுவார்களாம்…. அய்யோ… என்ன கொடுமை! அதை நேரில் பார்த்துத் துடித்துப் போன லோவன், தன் சொத்தை எல்லாம் விற்று, சேவை இல்லம் தொடங்கி தொண்டு செய்து வருகிறார்.
எலும்பும் தோலும் மட்டுமே மிச்சமிருக்கும் அந்த ஆண் குழந்தைக்கு லோவன் தண்ணீர் புகட்டும் புகைப்படம் உலகையே உலுக்கி விட்டது. குழந்தைக்கு அவர் இட்ட பெயர் என்ன தெரியுமா? 'ஹோப்!' சரியாதான் வெச்சிருக்காங்க!
அன்பு இருக்கிற இடத்துலதானே 'நம்பிக்கை' சிறக்கும்.
****************************
அன்பு, பண்பு வாழ்வில் எது அவசியம் அனு?
-பா. ரேஷ்மா, வந்தவாசி
'அன்பு' என்பதே ஒரு பண்புதான்! 'பண்பு' என்ற நற்குண பெரிய வட்டத்துக்குள் அன்பு, கருணை, பாசம், நேசம், காதல் எல்லாமே வந்துடுதே!
'அன்பு' பற்றிய ஒரு கவிதை… உங்களுக்காக!
வாழ்க வேலன்டைஸ் டே! வளர்கக் காதல்!
'இன்று சிநேகிதிக்குப் பிறந்த நாள்
எல்லோருடைய பிறந்த நாளையும்
மறப்பது போல்
அதையும் மறந்துவிட்டேன்.
பொறுப்புடன் காலையில்
அழைத்து நினைவூட்டினாள்.
நான் மறந்துவிட்டதற்காக
செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.
"இன்று உன் வாழ்த்துதான்
உன் குரல்தான்
முதலாவதாக இருக்க வேண்டும்
என்பதற்காக அழைத்தேன்" என்றாள்.
மனிதர்களின் அன்பை மதிக்காத
என் கயமையைக் கண்டு
எனக்கு அவமானமாக இருந்தது
அவள் பிறந்த நாளன்று
அவளை மறந்து விட்டதற்காக
மன்னிப்புக் கோரினேன்.
அவள் அலைபேசியை வைத்த பிறகு
முகநூலைத் திறந்தேன்.
'இந்த நாளின் முதல் சந்திப்பு,
முதல் வாழ்த்து' என
அன்றலர்ந்த மலர் போல
ஒரு மணி நேரத்துக்கு முன்
சிநேகிதனுடன் எடுத்துக்கொண்ட
புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தாள்.
ஒரே நேரத்தில்
நூறு பூக்கள் மலர்வது
இந்த பூமியில்
இது முதல் முறையல்லவே!
****************************
பெண்களுக்குக் கல்வி அவசியம் தேவை… அடுத்து?
-எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.
மனசாட்சியுடன் கூடிய சிறிதளவு பெண்மை!
'செக் மோசடி' முதல், கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரை கலப்பது வரை, படித்த பெண்கள் செய்யும் குற்றச் செயல்கள் கூடிக்கொண்டே போவதால், சிறைச்சாலைகளில் மகளிர் பகுதியில் கால் வைக்க இடமில்லாமல் நிரம்பி வழிகிறதாம்!
மெல்லினமாக இருக்கும் பெண்கள், வல்லினமாவதை விரும்பலாம்… ஆனால் விகாரம் ஆவதை?!
பூவினும் மெல்லியப் பூங்கொடிகளை, பூதங்களாக்கும் அந்த மெகா அம்சம்தான் எது? யார்? என்ன? ஏன்?
ஆப்ஷன் (A)
(ஏ) பொறுப்பில்லாத அப்பா, அண்ணன், காதலன், கணவன், பிள்ளை…
ஆப்ஷன் (B)
(பி) ஆடம்பர வாழ்க்கை, உல்லாசம், கூடா நட்பு
ஆப்ஷன் (C)
(சி) உளவியல் பிரச்னைகள், அன்புக்கு ஏங்கும் மனம்…
ஆப்ஷன் (D)
(டி) எல்லாமே!!!