0,00 INR

No products in the cart.

கிழக்கு ஐரோப்பா பகுதி – 13

பயண அனுபவம் :
-பத்மினி பட்டாபிராமன்

வேகமாக வளரும் ஸ்லோவேகியா

னித குலத்தின் முன்னோடிகள் 2,70,000 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த பூமி ஸ்லோவேகியா. அங்குள்ள குகைகளில் ஆதி மனிதன் வேட்டைக்கு பயன்படுத்திய கல் ஆயுதங்கள் மட்டுமின்றி, இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித மண்டை ஓடு இதற்கு சான்றாக கிடைத்திருக்கிறது.

ஆனாலும் இந்த நாடு சுமார் 30 வருடங்களுக்கு முன்புதான் சுதந்திர நாடாகியிருக்கிறது. எப்படி?

1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி, செக்கோஸ்லோவேகியா நாடு, செக் குடியரசு என்றும், ஸ்லோவேகியா குடியரசு என்றும் இரு நாடுகளாக பிரிந்தது. 2004 ஆம் ஆண்டு, நேடோ (NATO) நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் உறுப்பினர் ஆனது ஸ்லோவேகியா.

வெல்வெட் புரட்சி

ரோப்பிய நாடுகள் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், உள்நாட்டுப் போர்கள் மற்றும் உலகப் போர்களால் பல விளைவுகளை சந்தித்திருக் கின்றன. ஒப்பந்தங்களும் ட்ரீட்டிகளும் போடப்பட்டு, பல சிறிய நாடுகள் ஒரே ஆட்சியின் கீழ் இணைந்தன (பழைய சோவியத் ரஷ்யா போல). சில நாடுகள் காலப் போக்கில் தனி குடியரசு நாடுகள் ஆயின.

முதல் உலகப் போருக்குப் பின் தனி நாடானது செக்கோஸ்லோவேகியா. ஆனால், இரண்டாம் உலகப் போரில் அதன் ஒரு பகுதி ஜெர்மனியால் பிடிக்கப்பட்டது.  உலகப் போர்கள் முடிந்ததும், ஒரு புரட்சி ஏற்பட்டு கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் வந்தது செக்கோஸ்லோவேகியா.

பின்னர் அங்கே 41 ஆண்டுகள், வளர்ச்சியை பாதிக்காமல், அகிம்சை முறையில் கம்யூனிசத்துக்கு எதிராக அமைதியான கிளர்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று, ஒரு வழியாக 1989ல் அந்த நாடு, கம்யூனிச ஆட்சியிலிருந்து விடுபட்டு குடியரசு ஆயிற்று. அந்தப் புரட்சியைத்தான் ‘வெல்வெட் புரட்சி’ என்று குறிப்பிடுகிறார்கள். செக்கோஸ்லோவேகியாவின் ஒரு பகுதியாக இருந்த ஸ்லோவேகியா பின்னர் 1993ல் தனி குடியரசு ஆனது.

நீண்ட நாட்ளுக்குப் பிறகு தனி நாடாக ஆனதால், ஸ்லோவேகியா தற்போதுதான் வளர்ச்சி கண்டு வருகிறது. மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இன்னும் பழமை மாறாத ஊராக காட்சி அளிக்கிறது. பணக்கார நாடாகவும் தோன்றவில்லை.

தலைநகர் பிராடிஸ்லாவா

ஸ்ட்ரியா, ஹங்கேரி நாடுகளின் எல்லையை ஒட்டி இருப்பது ஸ்லோவேகியாவின் தலைநகர் பிராடிஸ்லாவா. டானுபே நதிக் கரையில் அமைந்து, ஒருபுறம் கார்பாத்தியன் (Carpathian) மலைத்தொடரால் சூழப்பட்டிருக்கிறது. இந்த மலைத்தொடர், ஆல்ப்ஸ் மலைத் தொடருக்கு அடுத்தபடியாக ஐரோப்பாவின் மிக நீண்ட மலைத்தொடர்.
இந்த மலை அடிவாரம் முழுவதும் திராட்சைத் தோட்டங்கள் உள்ளன. எனவே இங்கே ஒயின் உற்பத்தியும் அமோகம்.

முதலில் எங்களை அழைத்துச் சென்ற இடம் ‘ஓல்ட் டவுன’. பல நூற்றாண்டுகளாக நிறைய வரலாற்று சம்பவங்களை சந்தித்த இடம் அது.
இங்கு பல தேவாலயங்கள் இருந்த போதிலும், ப்ளூ சர்ச் என்றழைக்கப் படும் நீல நிற சர்ச், வண்ணப் பூக்கள் நிறைந்த அழகிய தோட்டத்துடன் அமைதியாக மற்றும் தனித்துவமாக இருந்தது.

சதுக்கத்தில் கொண்டாட்டம்

ல்லா ஊர்கள் போலவே இங்கும் ஒரு சதுக்கம் உண்டு. நாங்கள் சென்ற போது அங்கே ஏதோ திருவிழா போலும். டென்ட் போட்டு, உணவுப் பொருட்கள், சாவனீர்கள், கைவினைப்பொருட்கள் என விரிந்திருந்த கடைகளில் அலைமோதியது கூட்டம்.

ஒரு பக்கம் பெரிய மேடையில் உள்ளூர் கலைஞர்களின் பாரம்பரிய இசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கே மாறிக்கொண்டே இருக்கும் வண்ண கிராமியப் பின்னணிகளில் இணைந்து ஆடும் ஜோடிகளின் நடனம் பார்ப்பவர்களை கட்டிப் போட்டு வைத்தது.

வெரஜிடேரியன் பர்கர், ஐஸ்க்ரீம் என்று வாய்க்கு வேலை கொடுத்தபடி அங்கே ஷாப்பிங் செய்தோம். கரன்சி யூரோ என்பதால் பிரச்சனை இல்லை.
அந்த ஊர் மக்கள், ரஷ்யன் கலந்த ஸ்லோவேக் மொழி பேசினாலும் ஆங்கிலத்தில் ஓரளவு உரையாடுகிறாகள். குறிப்பாக இளைய தலைமுறைக்கு ஆங்கிலம் புரிகிறது.

நிறைய பல்கலைக் கழகங்களும், தொழில் நுட்பக் கல்லூரிகளும், மருத்துவப் படிப்புமாக தற்சமயம் முன்னேற்றம் கண்டு வரும் ஸ்லோவேகியாவில் பத்தாம் வகுப்பு வரை இலவசக் கல்வி. அதுவும் கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டும்.

ஓல்ட் டவுனின் ஒரு பகுதியில் ரோலண்ட் நீரூற்று அமைந்திருந்தது. அதன் நடுவில் வழக்கம் போல் கற்சிலைகள் இருந்தன. சுற்றியிருக்கும் உணவு விடுதிகளில், வெளியே அமர்ந்து, புகைபிடித்தபடி, ஒயின் சிப் செய்தபடி, பார்பிக்யூ செய்த பன்றி இறைச்சியை சுவைக்கும் உள்ளூர், மற்றும் சுற்றுலா மக்கள் நிறைய போர்களை சந்தித்ததாலோ என்னவோ, ஐரோப்பியர்கள், தங்கள் தினசரி வாழ்வை மகிழ்ச்சியாக உற்சாகமாக எதிர்காலக் கவலையின்றி அனுபவிக்கிறார்கள் என்று தோன்றியது எனக்கு.

டிமோதி டால்டன் என்ற நடிகர், ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்து, 1987ல் வெளிவந்த “தி லிவிங் டே லைட்ஸ்” (The Living Daylights) திரைப்படத்தின் அனேக முக்கிய காட்சிகள், பிராடிஸ்லாவாவில் படமாக்கப்பட்டவை.

மைக்கேல் டவர் தெரு

பை நிறைய சாவனீர்கள் வாங்கியபின், புகழ் பெற்ற மைக்கேல் டவர் இருக்கும் குறுகலான தெருவிற்கு சென்றோம். நகருக்குள் செல்லும் இந்த முக்கியமான தெரு, நிறைய கடைகள், உணவு விடுதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் ஆரவாரம் ததும்ப காணப்பட்டது.

நடைபாதைகளில் விநோதமான போஸ்களில் வெண்கலச் சிலைகள் வைத்திருக்கிறார்கள். பாதாள சாக்கடைக்குள் இருந்து வெளியே வரும் தொழிலாளி, அருகில் இருப்பவருக்கு தொப்பி வைக்கும் காமெடியன், நடைபாதை பென்ச்சில் குனிந்து சாய்ந்திருக்கும் நெப்போலிய படை வீரன் என்று சில சிலைகள் கண்ணில் பட்டது.

அங்கே 17ம் நூற்றாண்டில் டானுபே நதியின் மேல் கட்டப்பட்ட நடைபாதைப் பாலம் ஒன்று இருந்தது, அது ஃபோட்டோ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த இடம். கோட்டை இல்லாமல் ஒரு தலைநகரா? என்று எண்ணும்அளவிற்கு ஐரோப்பாவில் எங்கும் கோட்டைகள். ஸ்லோவேக்கியா தலை நகரிலும் அது உண்டு. கோட்டை, அதனுள் மியூசியம், ஆர்ட் கேலரி என்று வழக்கமான பாணிதான். “ஸ்லாவின்” (Slavín) என்பது ஒரு நினைவுச் சின்னம். கோட்டைக்குள் 52 மீட்டர் உயரம் கொண்ட (ஸ்லாவின்) ஒன்று இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்த சுமார் 7000 வீரர்களின் கல்லறை மேல் அவர்கள் நினைவாக கட்டப் பட்டுள்ளது.

ஸ்லோவேக்கியாவில் என்ன சாப்பிடலாம்?

“ராயல் காஷ்மீர்”, “மசாலா தர்பார்”, “சட்னி”, “தி கறி”, “தி ரெட் சில்லி”, “கணேஷ் உத்சவ்,” இதெல்லாம் பிராடிஸ்லாவாவில் இருக்கும் இந்திய உணவு விடுதிகள்.

ஆனால், எங்கும் போகாமல், ஒரு “பிட்சா ஹட்” உள் சென்று ராயல் வெஜிடபிள் பிட்சாவுக்கு ஆர்டர் கொடுத்தோம். அதை தின்ன முடியாமல் திண்டாடியது தனிக் கதை. அடுத்து ஹங்கேரிக்கு செல்ல வேண்டும். கிழக்கு ஐரோப்பாவில் ஆரம்பித்த நம் பயணம், மத்திய ஐரோப்பாவில் முற்றுப் பெற இருக்கிறது.

போர்களில் பெரும் பாதிப்படைந்த ஹங்கேரி

ங்கேரியின் வரலாறு போர்கள் நிறைந்தது. மனதை சற்றே சங்கடப்படுத்தக் கூடியது.  கிறிஸ்து பிறப்புக்கு பல ஆண்டுகள் முன்பே, (கி.மு.106) ரோமானிய அரசர்களால் கைப்பற்றப்பட்டதில் இருந்தே ஹங்கேரிக்கு வரலாறு உண்டு.

கஸ்டஸ் மன்னர் இன்றைய ஹங்கேரியின் மேற்குப் பகுதியை ரோமானிய சாம்ராஜ்யத்துடன் இணைத்ததாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது..
மாறி மாறி பல அரச வம்சத்தினரின் ஆட்சிகள்… கைப்பற்ற கணக்கற்ற சண்டைகள் என சளைக்காது போராடிய ஹங்கேரி, முதல் உலகப் போரின் முடிவில் தனது நாட்டின் 70 சதவீதப் பரப்பையும், 58 சதவீத ஜனத்தொகையையும், 32 சதவீதம் மண்ணின் மைந்தர்களையும் பறிகொடுத்திருந்தது.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜி(Nazi) படைகள் ஹங்கேரியைப் பிடித்த பின் அங்குள்ள யூதர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் கணக்கற்றவை.

சுமார் ஆறு லட்சம் ஹங்கேரி யூதர்கள் கொல்லப்பட்டார்கள். தவிர 2,80,000 யூதர்கள் நாடுகடத்தப்பட்டும், அடிமைகளாக விற்கப்பட்டும், பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டும் கொல்லப்பட்டார்கள்.
அதன் பொருளாதாரத்தில் 60 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. போரில் ஜெர்மனி வீழ்ந்த பிறகு, சோவியத் நாட்டின் ராணுவம் ஹங்கேரியைக் கைப்பற்றியது.
இத்தனை சோதனைகளுக்குப் பிறகு இன்றைய ஹங்கேரி எப்படி இருக்கிறது?

(பயணிப்போம்…)

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பறக்கும்  பாவைகள்!

 பகுதி -1 எங்களாலும் பறக்க முடியும்!  -ஜி.எஸ்.எஸ் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ மாநிலத்தில் உள்ளது சிலிக்கான் பள்ளத்தாக்கு.  இங்கு மிக அதிக எண்ணிக்கையில் பிரபல மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. அதேபோல் இந்தியாவில் கர்நாடகத் தலைநகரில் அதிக...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 4 இந்தப் பாடலைக் கேட்கும்போது அன்றைய சென்னையின் பஸ் பயணம் நம் கண்முன்னே அழகாய் நிழலாடும். இந்தப் பாடலில் ஒரு புதுமையை புகுத்தி இருப்பார். இரண்டு குரல்கள் ஒரே...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்   ஆஸ்கார் விருது பெண் திரைப்பட இயக்குனர்கள்! சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் பெண் இயக்குனர் யார் தெரியுமா? அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் பிகிலோ. (Kathryn Bigelow) என்பவர். உலகம் முழுவதும்...

 ‘யுவர் ஆனர் ரோபோட் அவர்களே!’

 பகுதி -2 -ஜி.எஸ்.எஸ். ரோபோட் என்றதும் ஏதோ மனிதன் போன்ற உருவம் ஒன்று உங்களுக்கு மனதில் தோன்றியிருக்கலாம்.  ஆனால் மருத்துவமனைகளில் ஆபரேஷன் செய்யும் ரோபோட் வேறு ஜாதி.  ஒரு ஆக்டோபஸைப் போன்று தோற்றமளிக்கும். இதன் கைகள்...

பாட்டொன்று கேட்டேன்…

இது மங்கையர் மலரின் விவித பாரதி… பகுதி-3 மங்கையர் மலர் விவித பாரதியில் இன்று நாம் கேட்க இருக்கும் பாடல்... தலைமுறை தலைமுறையாய் கேட்டு ரசிக்கும் பாடல் . உலகம் இருக்கும் வரை தேவைப்படும் கருத்துகள்...