0,00 INR

No products in the cart.

162 வருடங்களுக்குப் பிறகு…

சிங்கப் பெண் காவலர்கள்
குற்றம் – வழக்கு – விசாரணை – 8

ஓவியம் : தமிழ்

சிட் வழக்கைப் பொறுத்தமட்டில் பாதிக்கப்படுகிற பெண்கள் படுகிற வேதனையைக் குறிப்பிட தாய்மொழியில் வார்த்தை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ரணம் ஆறினாலும் வாழவேண்டிய வயதில் முகம் சிதைந்து சூனியமான நிலையில் எதிர்காலமே 0 டிகிரி நம்பிக்கையில்தான். தானே பார்க்க விரும்பாத வடுக்களை மற்றவர்கள் பார்க்கும்போது அதனை நினைவு படுத்துவதாகவே அமைகிறது என்பதை அனுபவிப்பவர்கள் மட்டுமே உணர முடியும்.

– பெ.மாடசாமி (முன்னாள் காவல் துறை உதவி ஆணையாளர்)

திருச்சி கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிற ஒரு பெண்ணின் மீது, தன் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக, ‘தன்னை ஏற்றுக் கொள்ளாதவள் யாரையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது,’ என்கிற கொடுமையான வன்மனம் கொண்ட ஒருவன், ஆசிட் ஊற்றினான். அவளுடைய முகம், மார்பு மற்றும் கைப்பகுதிகளில் அந்த ஆசிட் பட்டு துடிதுடித்துப் போன பெண்ணை அழைத்துக்கொண்டு சென்னை வந்து குடியேறினார்  அவளது தாய்.

மூன்றாண்டுகள் தன் தாயோடு மருத்துவமனையைத் தவிர எங்குமே சென்றதில்லை அவள். ‘எதையும் பார்த்ததில்லை, இரவு என்பதை மோசமான தருணங்களாக உணர்ந்தேன். நடுஜாமத்தில் வாய்விட்டுச் சத்தமாக அழுதேன்,’ என்கிறார் அந்தப் பெண். மிகுந்த சிரமத்திற்குப் பின்பு வயதான மூதாட்டியைப் பார்த்துக் கொள்ளும் பணி கிடைத்தும், பணிக்காக பயணிக்கும்போது ‘மற்றவர்களின் பார்வையில் உடம்போடு மனசும் கூனி குறுகி போய் விடுகிறது,’ என்பதால் வேலையைத் தொடர முடியவில்லை என்று அழுதாள்.

6 ஆண்டுகள் ஆன பிறகும், அந்த திரவத்தின் வாசம் தன்னை விட்டு அகலவில்லை என்று அவள் உரைப்பது எவ்வளவு பெரிய கொடுமை. தன் மகளுக்கு ஏற்பட்ட வேதனை தனக்கு ஏற்பட்டிருக்கலாமே என்று எண்ணுகிற பெற்ற தாயின் வேதனையைக் கற்பனைகூட செய்திட முடியாது.

ஆசிட் வீச்சில் பாதிக்கப்படுகிற பெண்களுக்குக் கட்டாயமாக வேலை தருகிற வகையில் மத்திய அரசோ மாநில அரசோ சட்டத்தை முன்மொழிந்தால் இதுபோன்ற பெண்கள் வாழ்வில் விளக்கேற்றிய புண்ணியம் கிடைக்கும் என்பதை இந்த இடத்தில் பதிவு செய்வது பொறுத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ரியானா மாநிலத்தில் 20 வயது நிரம்பிய அர்ச்சனா குமாரி ,தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நபரை துரத்திவிட, அவன் திரும்ப வந்து அவர் மீது ஆசிட் வீச, முகம், கழுத்து, மார்பு, கை என பல பகுதிகள் எரிந்து விடுகின்றன. ஒரு கண் பார்வை போய்விடுகிறது. 25 முறை மாறி மாறி ஆபரேசன் செய்யப்படுகிறது அர்ச்சனாவிற்கு.

அவருக்கு எவ்வளவு பெரிய மனசு இருந்திருந்தால், தன் தோழி லட்சுமியுடன் சேர்ந்து உச்ச நீதிமன்ற படிகெட்டில் நடையாய் நடந்து…
1. ஆசிட் விற்பனையை மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும்.
2. ஆசிட் ஊற்றப்பட்ட பெண்களுக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்கிற தீர்ப்பை பெற்றிருப்பார்.

“என் உடலை எரிக்க முடிந்தது, ஆன்மாவை அல்ல. என் முகத்தைத்தான் அழிக்க முடிந்தது, குரலை அல்ல” என்று அவர் கூறும்போது நம் மனசு கூட அழுகிறது.

டந்த ஆண்டு டிசம்பரில் ஒரு நாள், மாலை சுமார் 4 மணிக்கு சேலம் டவுன் இன்ஸ்பெக்டர் சம்பங்கி மிகுந்த மனவேதனையோடு “அவனை சும்மா விடக்கூடாது. நீதிமன்றத்தில் சரணடைவதற்குள் பிடித்து விட வேண்டும்,” என்று தனக்குள்ளே சொல்லிக்கோண்டு பரபரப்பாக ஜீப்பிலிருந்து இறங்கி காவல் நிலையத்திற்குள் நுழைகிறார்.இரண்டு நிமிடத்தில் முகம் கழுவி விட்டு திரும்ப, பெண்கள் கூட்டம் ஒன்று உள்ளே நுழைகிறது. என்னவென்று கேட்கிறார் சம்பங்கி.

“மேடம், நாங்கள் மகளிர் அமைப்பில் இருக்கிறோம்… நீங்கள்தான் இந்தக் காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதற்கு பின்பு (1859) அதாவது 162 வருடங்களுக்குப் பிறகு பொறுப்பேற்றுள்ள முதல் பெண் ஆய்வாளர்,” என்று சொல்ல சம்பங்கிக்கே ஆச்சரியமாக இருந்தது.

“இன்று மதியம் பஸ் நிலையத்தில் செல்வி என்ற பெண் மீது அவளுடைய கணவர் ஆசிட் ஊற்றி விட்டதாகவும் அவள் உயிருக்கு போராடிகொண்டிருக்கிறாள். ஆசிட் விட்ட நபரை சரணடைய விடாது 24 மணி நேரத்தில் பிடிப்பதோடு சரியாக தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற வேண்டுகோளை தெரிவிக்க வந்தோம்,” என்று கூறினர்.
தான் வெளியில் சொல்லாமல் முனங்கிக்கொண்டே வந்ததை இவர்கள் அப்படியே சொல்கிறார்களே என்று நினைத்துக்கொண்டே, “உங்கள் நம்பிக்கை வீண்போகாது,” என்று அவர்களுக்கு உறுதியளிகிறார் சம்பங்கி. அனைவரும் நன்றி தெரிவித்து கலைந்து சென்றனர்.

மதிய சாப்பாட்டை மாலை 5 மணிக்கு நின்றுகொண்டே சாப்பிட்டு முடிக்க, நிலைய எழுத்தருக்கு சில அறிவுரைகளை வழங்கிவிட்டு காவலர்களுடன் ஜீப்பில் புறப்பட்டார்.

மதியம் சுமார் 2 மணிக்கு சேலம் கலெக்டர் ஆபிசில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது சேலம் பஸ் நிலையத்தில் பெண் ஒருவர் மீது ஆசிட் ஊற்றிவிட்டதாக வந்த தகவலில் உடனடியாக பேரூந்து நிலையம் சென்றபோது ஆசிட் ஊற்றப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு போய்விட்டார்கள் என்று பேரூந்து நிலையத்தில் சிலர் சொன்னார்கள்.

சம்பங்கி, மருத்துவமனை சென்று பார்க்க, செல்வி என்ற 47 வயது பெண், உடல் முழுவதுமே ஆசிடால் பாதிக்கப்பட்டு முனங்கக் கூட முடியாத நிலையில் படுக்கையில் கிடந்தார். பக்கத்து படுக்கையில் இருந்த அவரின் தாயாரை விசாரித்ததில்…

செல்வியின் கணவர் சேலம் மாநகராட்சியில் துப்புறவு தொழிலாளி என்றும், அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருப்பதாகவும், மனைவி மீது சந்தேகப்பட்டு, அடிக்கடி சண்டை போடுவதால் மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் இரு தரப்பினரையும் அழைத்து விசாரிக்க, செல்வி, தான் தன் அம்மாவோடு சென்று வாழ விரும்புவதாக எழுதிக் கொடுத்த பின்பு ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் தாயும் மகனும் காத்திருந்தபோது அங்கு வந்த செல்வியின் கணவர் நாயகம் அவள் மீது ஆசிட் ஊற்றிவிட்டார் என்றும் தெரிந்தது.

தாய் கொடுத்த புகாரைப் பெற்று கொண்டு, நாயகம் பற்றிய விவரத்தையும் தெரிந்துகொண்டு நிலையம் வந்து சேர்ந்த போதுதான் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவரைச் சந்தித்தனர் என்பதை நினைத்துக் கொண்டே நாயகம் வீட்டை சென்றடைந்தார்.

நாயகம் தலைமறைவு என்ற நிலையில், அவருடைய மகன் மட்டுமே இருக்க, அவனிடமே அப்பாவைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்ததும் அவனுடைய கைப்பேசியில் அழைப்பொன்று வந்தது.

அதில் ஸ்பீக்கரை போட்டு கேட்கவும், “டேய் அன்பு, அப்பா பேசறேன்டா. போலிஸ் வந்து அப்பா எங்கடான்னு கேட்டா தெரியாதுன்னு சொல்லு. அடிச்சி கேட்டாலும் தெரியவே தெரியாதுன்னு சொல்லுடா. கருர் மாமா வீட்ல இருக்கேன்டா, தைரியமா இரு,” என்று சொன்னார்.

இதைக் கேட்ட போது நடிகர் வடிவேலுவிடம் போண்டா மணி என்ற நடிகர் சொல்ற காமெடி ஞாபகத்துக்கு வர, அந்த நிலையிலும் எல்லோருக்கும் சிரிப்பு வந்தது.

தமிழ்ச்செல்வியின் கணவர் கைது செய்யப்படவில்லையானால் சேலம் டவுனில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அதுவும் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பில்லை என்று பத்திரிகைகள் காது, மூக்கு வைத்து ஒவியமே வரைந்தது.

காமெடியாக கிடைத்த தகவலை சீரியசாக எடுத்துக்கொண்டு சம்பங்கி தனிப்படைக்கு தலைமை தாங்க, நாயகம் மாட்டிக்கொண்டார்.

எந்த நேரத்திலும் பலதரப்பட்ட மக்கள் சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய சேலம் பஸ் நிலையத்தில் 3 லிட்டர் கந்தக அமிலத்தை (Sulphuric Acid) செல்வி மீது வீசியதில் எவ்வளவு பெரிய வன்மம் மறைந்திருக்கிறது. கொஞ்சம் தவறியிருந்தால் சம்பந்தமேயில்லாத எத்தனை பேர் பாதிக்கப் பட்டிருப்பார்கள் என்பதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.

இது போன்ற ஆணாதிக்க சக்தி கொண்டவர்களுக்கு முற்றுப்புள்ளியாக ஆய்வாளர் சம்பங்கி எடுத்த நடவடிக்கையில், அவர் ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தினால், மகளிர் அணியின் நம்பிக்கையை மட்டுமல்ல, சேலம் நகர் பொதுமக்களிடையே நம்பிக்கை நட்சத்திரமானார் சம்பங்கி.

வழக்கில் புலன்விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், உண்மையான குற்றவாளி சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு குடிமகனின் விருப்பம். சேலம் டவுன் இன்ஸ்பெக்டர் பணி சிறக்க வாழ்த்துவோம்.
நிறைந்தது.

(உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கற்பனைப் பெயர்களுடன் எழுதப்பட்டது)

பெ. மாடசாமி
பெ. மாடசாமி நெல்லையில் சிங்கம்பட்டி சொந்த ஊர். 34 ஆண்டுகள் தமிழக காவல் துறைப் பணி. மனைவி பகவதி. “காக்கியின் கதிர் வீச்சு”, காவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள், “வீடு தேடி வரும் ஆபத்து, பெண்கள் பாதுகாப்பு”. ரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்”. “ மாணவச் செல்வங்களே மாற்றி யோசியுங்கள்”... இவை படைப்புகள்.பள்ளி கல்லூரி நாட்களில் தமிழில் மேடைப் பேச்சு அனுபவம். ‘வாழும் வரை தமிழுக்காக வாழ்வது’ இவரது பணி.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 5  -ஆதிரை வேணுகோபால் மங்கையர்மலர் விவிதபாரதியில் நாம் இன்று கேட்க விரும்பும் பாடல்... 80's காதலர்கள் கொண்டாடிய பாடல்! காதல் சோகப்பாடல்! அனுபவம் மிக்க வார்த்தைகள்,  தாள வாத்தியம் இசை, டி.எம்.எஸ்...

பறக்கும்  பாவைகள் – 2

எங்களாலும் பறக்க முடியும்... -ஜி.எஸ்.எஸ். பயணிகள் அடங்கிய ஒரு விமானத்தை முதலில் ஓட்டிய பெண்மணி ஹெலன் ரிச்சி. அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் பிறந்தவர் இவர். அவர் தந்தை ஜோசப் ரிச்சி பள்ளிகளில் மேற்பார்வையாளர். பள்ளியில் படிக்கும்போதே தன்னை...

பறக்கும்  பாவைகள்!

 பகுதி -1 எங்களாலும் பறக்க முடியும்!  -ஜி.எஸ்.எஸ் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ மாநிலத்தில் உள்ளது சிலிக்கான் பள்ளத்தாக்கு.  இங்கு மிக அதிக எண்ணிக்கையில் பிரபல மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. அதேபோல் இந்தியாவில் கர்நாடகத் தலைநகரில் அதிக...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 4 இந்தப் பாடலைக் கேட்கும்போது அன்றைய சென்னையின் பஸ் பயணம் நம் கண்முன்னே அழகாய் நிழலாடும். இந்தப் பாடலில் ஒரு புதுமையை புகுத்தி இருப்பார். இரண்டு குரல்கள் ஒரே...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்   ஆஸ்கார் விருது பெண் திரைப்பட இயக்குனர்கள்! சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் பெண் இயக்குனர் யார் தெரியுமா? அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் பிகிலோ. (Kathryn Bigelow) என்பவர். உலகம் முழுவதும்...