0,00 INR

No products in the cart.

மனங்கள் இணைந்ததால், மதங்கள் மறைந்தது.

 

-சேலம் சுபா

அன்பான காதல் என்ன செய்யும்? வாழ்வின் சொர்க்கத்தைக் காட்டும் – சொல்கிறார்கள் காதல் தம்பதியர் பிரியா – தாஹிர்.

“ 25 ஆண்டுகள் ஆயிற்று, நாங்கள் காதல் கொண்டு வாழ்வில் இணைந்து. பதினெட்டில் இருந்த காதலும், அன்பும் அதிகமாகி, இப்போது இன்னும் அதிகமாக ஒருவரையொருவர் நேசிக்கிறோம். விட்டுக்கொடுத்தலும், நம்பிக்கையும், பாதுகாப்பும், பகிர்தலுமே, காதல் வாழ்விற்கு அடிப்படை. அதில் நாங்கள் 100% முழுமையாக இருப்பதால்தான் காதல் வாழ்க! என சொல்ல முடிகிறது, “ என்கிறார் கோவையைச் சேர்ந்த பிரியா.

இவர் உளவியல் ஆலோசகராக பல பெண்களுக்கு தன்னம்பிக்கை தந்து வாழ்க்கையில் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் வெற்றி பெறவைக்கிறார். இவரின் கணவர் தாஹிர் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.

மனங்கள் இணைந்ததால், மதங்கள் இல்லாமல் போயிற்று இவர்களின் வாழ்வில். பல தடைகளைத் தாண்டி இணைந்த இவர்களது சுவாரசியமான காதல் கதையை பார்ப்போம்…

எப்படி எங்கே துவங்கியது உங்கள் காதல் ? யார் முதலில் காதலை வெளிப்படுத்தியது?

பிரியாவே முதலில் பேசினார். இருவரும் பக்கத்து வீடுகளில் வசித்தோம். தாஹிரின் தங்கையும் நானும் தோழிகள் என்பதால் அவர் மூலமாகவே தாஹிர் என் மனதில் இடம் பிடித்தார்.

தாஹிர் என்னை விட ஆறு வயது பெரியவர். மூன்று தங்கைகள், ஒரு அண்ணன், ஒரு தம்பி, என தாஹிரின் குடும்பம் பெரியது. என்றாலும், தாஹிரைக் கேட்டு முடிவுகளை எடுக்கும் அளவுக்கு அவர் பொறுப்பானவராக இருப்பதை அவரின் தங்கைகள் மூலம் அறிந்தேன்.

பாசத்துடன் பொறுப்பும் நிறைந்த இவரைப் போன்ற ஒர் ஆணை எந்தப் பெண்தான் விரும்ப மாட்டாள்? ஆனால், எங்கள் குடும்பத்தினர் காதலை விரும்ப மாட்டார்கள் எனும் தெளிவு என்னிடம் இருந்ததால், பிடித்தாலும் நான் அமைதியாகவே இருந்தேன். அவருக்கும் என்னை பிடித்திருக்கவே, அவர்தான் முதலில் என்னிடம் தன் காதலைச் சொன்னார்.

செல்போன் போன்றவைகள் இல்லாத அந்த நேரத்தில் எப்படி வளர்ந்தது உங்கள் காதல் ?

ருவருக்கும் அருகருகே வீடுகள் என்றாலும் பார்த்துக் கொள்வதோ, பேசுவதோ மிகவும் குறைவே. அது மட்டுமின்றி எங்கள் குடும்பம் மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்தது. வெளியே அவ்வளவு எளிதில் வரமுடியாது.
அப்போதெல்லாம் ஒரு ஆணும் பெண்ணும் தனியே நின்று பேசுவதை எல்லாம் கற்பனையில் கூட நினைக்க முடியாது. அதற்கான சந்தர்ப்பங்களும் வராது. அதிலும் எங்கள் மதங்கள் வெவ்வேறு … எங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள உதவியது கடிதங்களே…

எப்போதாவது அவரின் தங்கையைப் பார்க்கும் சாக்கில் அவர் வீட்டுக்கு சென்றால் மட்டுமே சிறிது பேசும் வாய்ப்பு கிடைக்கும். கடிதங்கள் வழியே வளர்ந்ததுதான் எங்கள் காதல்.

இருவரும் அவரவர் மதத்தை மற்றவர் மீது திணிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இதனால் அவர் என்னிடம் காதலை சொன்னதுமே நானும் சம்மதித்தேன். தங்கைகளின் மேல் பாசத்துடன், குடும்பத்தை அரவணைக்கும் அவரின் பண்பு கட்டாயம் என்னை நன்றாக வாழவைக்கும் என்று நம்பினேன். அந்த நம்பிக்கையை இன்றும் காப்பாற்றுகிறார் தாஹிர்.

காதல் பரிசுகள் ?

காதலை சொல்லிவிட்டு இனிப்பாக கேக் வாங்கித் தந்தார். அவ்வப்போது உடைகள் வாங்குவார். என்னிடம் காண்பித்து விட்டு, திரும்ப அவர் வீட்டுக்கே எடுத்துச் செல்வார். காரணம் அப்போதெல்லாம் பிரண்ட்ஸ் கிப்ட் தரும் பழக்கம் கூட அதிகம் இல்லையே… வீட்டில் என்னவென்று சொல்வது?

நான் அவருக்கென்று எதுவும் வாங்கித் தந்ததில்லை. அவர் அப்போது படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்றதால் அவரிடம் பொருளாதாரம் இருந்தது. நான் அப்போதுதான் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன்.

திருமணம் நிகழ்ந்தது எப்போது ? பெற்றோர் சம்மதம் கிடைத்ததா?

ப்போதெல்லாம் படிப்பு முடிந்ததும் திருமணம் முடித்து விடுவார்கள் என்பதால் இருவரும் சிந்தித்து நண்பர்களின் துணையோடு பதிவுத் திருமணம் செய்தோம்.
இருவருமே பெற்றோரின் சம்மதத்துடன் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற உறுதியில் இருந்தோம். ஆனாலும், என் பாதுகாப்பு கருதியே பதிவுத் திருமணம் செய்தோம். ஆனால், பதிவுத் திருமணம் செய்த சான்றிதழ் தபாலில் தாஹிர் வீட்டுக்கு வர, அவரின் அப்பாவிற்கு விஷயம் தெரிந்து விட்டது. உடனே எங்கள் வீட்டுக்கு அவரின் உறவினரை அனுப்ப, எங்கள் வீட்டிலும் விஷயம் தெரிந்து அவர்களும் ஒப்புக்கொள்ளவில்லை.

ஒரு கட்டத்தில் நான் மாற்றுத்துணி கூட எடுக்காமல் வீட்டை விட்டு வெளியேறினேன். அவர் வீட்டிலும் எதிர்ப்புதான் என்பதால் அவரும் வந்தார்.
இருவரும் தெரிந்த நண்பர்களின் வீடுகளில் தங்கினோம். தாஹிர் அவரின் தந்தைக்கு எப்படியோ சொல்லி புரியவைத்ததில் அவர் சம்மதம் பெற்று ஒரே வாரத்தில் அவரின் வீட்டுக்குள் மருமகளாய் காலடி எடுத்து வைத்தேன்.
அதன் பின் சில மாதங்களிலேயே எங்களால் யாருக்கும் சிறு வருத்தம் கூட வரக்கூடாது என்று தனிக்குடித்தனம் வந்தோம்.

இடையில் என் பெற்றோரை நினைத்து நான் வேதனைப் படுவதை அறிந்து என் கணவர் அவராகவே சென்று என் பெற்றோரையும் சமாதானம் செய்தார்.

தனியே வாழும்போது ஒரு துணிவும் உடன் வந்துவிடும். பொருளாதாரத் தேவைகள் ஒருபுறம், யாரிடமும் உதவி கேட்டு நிற்கக் கூடாது எனும் வைராக்கியம் மறுபுறம். வாழ்வில் நல்ல நிலைமைக்கு வந்து காட்ட வேண்டும் எனும் லட்சியம் இருவருக்கும்.

இரவு பகலாக சமையல் முதல் அனைத்திலும் எங்கள் வேலைகளை பகிர்ந்தும், குழந்தையையும் பார்த்துக்கொண்டு என்னை டிகிரியை முடிக்க வைத்தார் தாஹிர். இப்போது சமூகத்தில் பெயர் சொல்லுமளவுக்கு நாங்கள் வளர்ந்திருக்கிறோம் என்றால், இதில் தாஹிரின் பங்கு மகத்தானது.
திருமணத்திற்கு முன் வெளி உலகம் அறியாமல் இருந்த என்னை இந்த அளவுக்கு மாற்றியது தாஹிர் தந்த உத்வேகம்தான்.

அன்று வயதின் காரணமாக எழுந்த காதலை இன்று நினைத்தால் என்ன தோன்றுகிறது?

ன்று வயதின் முதிர்ச்சியில், பக்குவம் வந்தபின் யோசித்தால், அன்று கட்டுப்பாடுகள் நிறைந்த சூழலில்,எங்களுடைய மதம் வேறுபட்ட காதல் பற்றி கேள்விபட்டதும் எங்கள் பெற்றோர் அடைந்த அதிர்ச்சியையும், வலியையும் புரிந்துகொள்ள முடிக்கிறது. ஆனால், அந்த நேரத்தில் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த காதலின் நம்பிக்கையே எங்களுக்குப் பெரிதாக இருந்தது. இறுதிவரை நான் என் கணவருக்கு ஆதரவாக இருந்ததால் இன்றுவரை என் மீது காதலையும் மதிப்பையும் அவர் அதிகம் கொண்டுள்ளார். அது போலவே நானும் மதம் தாண்டி அவர் என் மீது காட்டிய அன்புக்கு என்றும் அடிமைதான். இன்னொன்றும் இங்கு சொல்ல வேண்டும் . எங்களைப் போல் உறுதி கொண்ட சிலரே காதலில் ஜெயித்து உள்ளனர். நாங்கள் விதிவிலக்கு எனலாம். ஆனால், பக்குவம் இன்றி உடனே பிரியும் இன்றைய காதலர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். உங்களுக்கு ஏற்றவரா எனப்பார்த்து காதலியுங்கள். திருமணம் செய்யும் முன் நிறைய யோசியுங்கள். ஆனால், திருமணம் முடிந்தபின் எக்காரணம் கொண்டும் ஒருவரையொருவர் குறை சொல்லாதீர்கள். குறைகளும் நிறைகளும் இல்லாத காதல் எங்கும் இல்லை.

சரி… அப்ப உங்களுக்குள் பிரச்னையே வராதா?

ண்டிப்பாக வரும். நாங்களும் சாதாரண தம்பதிகள்தானே? ஆனால், எங்கள் பிரச்சினைகளை நாங்களே ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி தீர்த்துக்கொள்வோம். கண்டிப்பாக வெளி நபர் அறியுமாறு நடக்க மாட்டோம். மூன்றாம் நபரின் தலையீடு தான் தம்பதிகளுக்குள் பிரிவை உண்டு பண்ணும்.

மதம் உங்களுக்குள் எப்போதும் குறுக்கிடவில்லையா?

நிச்சயம் இல்லை .இருவருமே அவரவர் மதங்களை மறந்து மனங்களை மட்டும் நேசிக்கப் பழகினோம். எங்கள் குழந்தைகளுக்கும் மதம் எனும் பிரிவினைகளை அறிமுகப் படுத்தவில்லை. பள்ளி, கல்லூரிகளில், சேர்க்கும்போதும் மதம் என்று இருக்கும் இடங்களில் எதுவும் இல்லை என்றே குறிப்பிடுவோம், மதம் பற்றி குறிப்பிட விருப்பம் இல்லையெனில் தவிர்க்கலாம் என்று சட்டமே சொல்கிறது.

உங்கள் பெற்றோர்களின் அங்கீகாரம் உங்களுக்கு முழுவதுமாக கிடைத்ததா?

ருவரின் பெற்றோர்களுமே, எங்கள் குணங்களைக் கண்டு எங்களை அங்கீகரித்து பாசத்துடன் நடந்து கொள்வதுதான் எங்கள் காதல் வாழ்வின் வெற்றி. பெற்றோரின் மனங்களை முறித்து அதன் மீது எழும் காதல் வாழ்க்கை வேதனையானது.

பிரியா பேசி முடிக்கும் வரை அவரின் கருத்துகளை ஆமோதித்து அமைதியாக இருந்த தாஹிர், “பிரியாவிடம் எனக்குப் பிடித்ததே ஒரு விஷயத்தின் மீதான அதீத ஈடுபாடும் அக்கறையும்தான். தன்னை மட்டுமல்லாமல் தன்னைச்சுற்றி இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். என்னை நம்பி வந்த பெண்ணுக்கு எக்காலத்திலும், எந்த சூழலிலும், விட்டுக்கொடுக்காத பரஸ்பர அன்புடனும் நம்பிக்கையுடனும் இருப்பேன் என்று ஒவ்வொரு காதலரும் உறுதியுடன் இருந்தாலே தெளிவான எந்தக் காதலுக்கும் வெற்றிதான்,” என்று முடித்தார்.

இவர்களின் காதலுக்கு சாட்சியாக கல்லூரி முடித்து பணிக்கு செல்லும் பாவெல் அபிஷேக் மற்றும் பள்ளி இறுதியில் பயிலும் சே ஷாஹித் எனும் அன்பான இரு மகன்கள் இவர்களுக்கு.

இந்த ஆதர்ச தம்பதியினரின் காதல் வாழ்க்கை, இப்படித்தான் வாழவேண்டும் என்று மற்ற தம்பதியருக்கு உதாரணமாக இருக்கிறது. அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றேன்.

 

2 COMMENTS

  1. “மனங்கள் இணைந்தால் மதங்கள் மறைந்தது”என்ற தம்பதியர் “பிரியா- தாஹிர்” அவர்களின் காதல் பற்றிய விளக்கம் மிகவும் அருமை.அந்த காலத்திலிருந்து காதல் என்றால் ஏதோ வேண்டாத சொல் என்று எல்லோரும் பயமுறுத்திக் கொண்டு இருந்தார்கள் “எப்படி எங்கே துவங்கியது காதல் என்று தொடங்கி யார் முதலில் காதலை வெளிப்படுத்தியது”என்று மிக அழகான விளக்கம் கொடுத்து காதல் என்பது மிகவும் புனிதமானது என்று விளக்கிய மங்கையர் மலருக்கு பாராட்டுக்கள்

    நந்தினி கிருஷ்ணன் மதுரை

  2. ஜாதி, மத வேறுபாடு இன்றி இரு மனங்கள் ஒன்றி கடைசிவரை காதல் நேசத்தோடு வாழ
    மூன்றாம் நபரின் தலையீடு இல்லாமல்
    பார்த்து கொண்டாலே போதும்.இந்த காதல் ஜோடிக்கு மங்கையர்மலர் நினைவாக
    வாழ்த்துக்கள்.

சேலம் சுபா
பெயர் சுபா தியாகராஜன். பிறந்த ஊர் சேலம் என்பதால் சேலம் சுபா எனும் பெயரில் முன்னணி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். கதை கவிதை கட்டுரைகள் எழுதினாலும் தன்னம்பிக்கையாளர்களின் நேர்காணல் இவரது சிறப்பு. கல்கி குழும இணையதளம், கல்கி ஆன்லைன்.காம் மற்றும் கல்கியின் வலையொலி, காணொளி வாயிலாகவும் பங்கேற்பதில் பெருமிதம் இவருக்கு.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பொள்ளாச்சி நகராட்சியின் முதல் பெண் ஓட்டுநர்!

1
-லதானந்த் பொள்ளாச்சி நகரவாசிகளுக்கு அது ஒரு புதுமையான காட்சி. நகராட்சிக்குச் சொந்தமான மோட்டார் வாகனம் ஒன்றை பொள்ளாச்சி நகரத் தெருக்களில், நடுத்தர வயதுப் பெண் ஒருவர் அனாயசியமாக இயக்கித் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருப்பதுதான் அந்தக்...

அழிந்து வரும் தொழில்! மீட்டெடுக்கும் வழி என்ன?

-சேலம் சுபா சேலத்தின் அதிமுக்கியமான பகுதி அது. ஒருபுறம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மறுபுறம் தீயணைப்புத்துறை அலுவலகம்,  அரசு மருத்துவமனை என்று மக்கள் அதிகமாக வந்து போகும் இடம். அங்கு நூறு வருடங்கள் பழமையான...

கோவையின் மின்சாரப்  பெண் ஹேமலதா அண்ணாமலை!

1
-லதானந்த் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை எரிபொருளாகக்கொண்டு வாகனங்களை இயக்குவதில் செலவு அதிகம்; சுற்றுச்சூழலும் பெருமளவு மாசடைகிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில், கோவையில், படித்த பெண்மணி ஒருவர் மின்சாரத்தால் இயங்கும் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும்...

ஆட்டிஸம் எனும் விந்தை!

- மஞ்சுளா சுவாமிநாதன் பிரிட்டனை சேர்ந்த Stephen  Wiltshire, 47, ஒரு திறமையான ஓவியர். இவர் ஒரு முறை ஒரு நிலப்பரப்பைப் பார்த்து விட்டால், இம்மி பிசகாமல் அந்த இடத்தை தத்ரூபமாக வரைந்துவிடுவார். இவருக்கு மூன்று...

தத்ரூப ரங்கோலிகள் – இல்லத்தரசியின் சாதனை!

1
-சேலம் சுபா அந்தக் குழந்தையின் கண்களில் தெரியும் துள்ளலும் உதட்டு சிரிப்பும் பார்க்கும் யாரையும் இன்னும் சிறிது நேரம் பார்க்கும்படி தூண்டும். நீரில் மிதக்கும் அழகிய வாத்து, மரத்தில் தொங்கும் மாங்காய், கண்களில் காதலுடன்...