ஆஃபரில் பொருட்களை வாங்குவது லாபமா? புத்திசாலித்தனமா? முட்டாள்தனமா?

ஆஃபரில் பொருட்களை வாங்குவது லாபமா? புத்திசாலித்தனமா? முட்டாள்தனமா?
Published on

மங்கையர் மலர் இணைய இதழில் 'ஆஃபர் அமர்க்களம்' கட்டுரை இடம்பெற்றதைத் தொடர்ந்து, நாம் வாசகியர்களிடம் கருத்துக்கள் கேட்டதில், அவர்கள் அனுப்பிய கட்டுரைகளிலிருந்து…

ஃபரில் பொருட்களை வாங்குவது முட்டாள்தனம்தான் என்பேன் நான். அப்படி வாங்கும் பொருட்கள் நம் தேவைக்கும், பட்ஜெட்டுக்கும் பொருந்தாததாகவே இருக்கும். அதிக விலை கொடுத்து அதிகமா பொருட்களை வாங்கி குவிப்பது எப்படி புத்திசாலித்தனமாகும்?

ஒருமுறை கணிசமான தள்ளுபடியை பார்த்துவிட்டு மூணு கிலோ ஓட்ஸ் பாக்கெட் வாங்கினேன். காலை உணவாக ஒரு சில சமயம் ஓட்ஸ் சாப்பிடுவோம். இப்போது ஏகப்பட்டது இருக்கே… அந்த ஓட்ஸ் தீர்வதற்குள்… அப்பப்பா! ஒரு வழி ஆனோம்.

அதேபோல் டாய்லெட் கிளீனர் ஒரு லிட்டர் பாட்டில் 2 வாங்கி, அரை லிட்டர் பாட்டில் ஒன்று இலவசமா பெற்றோம். ஒரு பாட்டில் தீர்ந்ததும், இன்னும் இரண்டு இருப்பதை மறந்து என் கணவர் மீண்டும் ஒரு முறை அதே பேக்கை வாங்கிட்டு வந்து நிற்கிறார்.

காம்போஆஃபரில் வாங்கும் பொருட்களில் ஒன்று உபயோகமானால் மற்றது மூலையில் கிடக்கும். எதற்கு இதெல்லாம்? குவாலிட்டி அயிட்டங்களை குறைவா வாங்கினாலும் நிறைவா வாழ்வோம். ஆஃபரை தவிர்ப்போம்.
– ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்.

ஃபரில் பொருட்களை வாங்குவது மிகமிக லாபமே. ஆனால், இதில் உணவுப் பொருட்களை நாம் வாங்கக் கூடாது. அப்படி லாபம் என்று பார்த்து வாங்கினால், எக்ஸ்பயரி டேட் முடிந்த வற்றை வைத்திருப்பார்கள். அதை கவனிக்காமல் வாங்கி விட்டால் அவை நம் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு ஆகிவிடும்.
உடைகளை நாம் இவ்வாறு ஆஃபரில் வாங்கும்போது நிச்சயம் அது நமக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும். அதனால் உடைகளை வாங்குவது லாபம் தரும். தவிர வேறு பொருட்கள் நமக்கு இலாபத்தை தராது. இது என்னுடைய அனுபவம்.
-உஷா முத்துராமன், திருநகர்

பொதுவா தள்ளுபடி, இலவசங்களோடு விளம்பரங்கள் வரும்போது, மனசு ஆசைபடத்தான் செய்யும். அதே நேரம் புத்திசாலித்தனமாக யோசிக்கணும். விற்காத நாள்பட்ட பொருட்களே ஆஃபராக உருமாறும்.

உணவு சம்பந்தமான பொருட்களை முடிந்த வரை ஆஃபரில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி போன்ற எலக்ட்ரானிக் ஐட்டங்களும் எல்லா நேரங்களில் பெர்பெக்ட்டாக இருக்காது.

அப்போ என்ன தான் வாங்கலாம் ? குக்கர், தவா, டேபிள், சேர், பாத்திரங்கள், டிடர்ஜெண்ட் போன்றவற்றை ஆஃபரில், வாங்குவது உசிதம். தேவைக்கு மேல் இருந்தால் கூட ஸ்டாக் வைக்கலாம். வியாபாரிக்கும் நஷ்டம் இல்லை. குறைந்த விலையால் வாடிக்கையாளருக்கும் சகாயமே.
-என்.கோமதி, நெல்லை.

ஃபரில் பொருட்கள் வாங்குவது முட்டாள்தனம். ஆஃபரில் கிடைக்கிறதென்றால் ஒன்று தரக்குறைவாக இருக்கும் அல்லது எடை குறைவாக இருக்கும். அல்லது பொருட்களின் விலையை இரட்டிப்பாக்கி ஸ்டிக்கர் ஓட்டி அதை அடித்து பாதி விலையில் கொடுப்பதாக விளம்பரம் செய்வார்கள்.

மேலும் பிரபலங்கள் சொன்னால் சரியாக இருக்கும், அவர்களே உபயோகிக்கிறார்களே என்று எண்ணி வாங்குபவர்கள், ஏமாறுவது நிச்சயம். ஏனென்றால் அந்த பிரபலங்கள் அதை உபயோகிக்க மாட்டார்கள். விளம்பரத்தில் நடித்து நிறைய சம்பாதித்து விட்டு கழிசடையான பொருட்களை பொதுமக்களின் தலையில் கட்டத் துணை போவார்கள். ஆஃபரைப் புறந்தள்ளி நம் அனுபவத்தில் சிறந்ததாக நாம் உணர்ந்த கடைகளில் தரமான பொருட்களை வாங்குவதுதான் புத்திசாலித்தனம்.
-ஹேமலதா ஸ்ரீனிவாசன், சென்னை.

ன்லைன் ஆஃபரில் சில சாமான்களை வாங்குவது லாபமே. உதாரணத்திற்கு விமான டிக்கெட், டிவி, கைபேசி முதலியவற்றை ஆஃபரில் வாங்கி லாபம் அடைந்திருக்கிறேன்.
நமக்கு அவசரமாக தேவைப்படாத பொருட்களை தேர்வு செய்து விட்டு உடனே வாங்காமல் சிறிது நாள் கழித்து வாங்கலாம். அந்த நிறுவனத்திடமிருந்து மேலும் சலுகை அறிவிக்கப்படும். பல இணையதளங்களில் அதன் மதிப்பை ஒப்பீடு செய்து விலை குறைத்துக் கேட்கலாம்.
அப்போது பொருள் பிடிக்கவில்லையென்றால் அல்லது சரிவர வேலை செய்யாவிட்டால் திருப்பி அனுப்பும் சலுகை உள்ளதா என்றும் தெரிந்து வாங்கி பயனடையலாம்.
-ராதிகா ரவீந்திரன், சென்னை.

ன்லைன் ஆஃபர் லாபமா என்றால் லாபம் என்றுதான் சொல்ல வேண்டும். புத்திசாலித்தனமா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் பொருட்களின் தரம் கேள்விக்குறியாக இருக்கும். சமயத்தில் நாம் கேட்கும் பொருள் ஒன்றாகவும் பார்சலில் உள்ளது வேறொன்றாகவும் இருக்கும். பிறகு நாம் ரிட்டர்ன் கொடுத்து மாற்ற வேண்டும் என்பது போன்ற தொல்லைகள் இருக்கும்.
எல்லாவற்றிலும் குறை நிறைகள் இருப்பது போல ஆஃபரிலும் உண்டு. வாஷிங் மெஷின் ஆஃபரில் வாங்கி நன்றாக உள்ளது என்று சொன்ன நண்பர், அதே ஆன்லைன் தளத்தில் ஆயிரம் ரூபாய்க்கு புடைவை வாங்கி ஒரே வாஷிங்கில் புடைவையின் நிறம் மங்கிப் போனதையும் சொன்னார்
– அன்புக்கரசி பாலசுப்பிரமணியன், திருவாரூர்.

'ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம்னு' போடறது எல்லாம் ஏமாத்து வேலை. ரொம்ப நாட்கள் விற்காமல் தேங்கிக் கிடக்கும் ஐட்டங்களை, 'ஆஃபர்' என்ற பெயரில் மக்களை வாங்கச் செய்து விடுகிறார்கள்.
நான் ஒரு தீபாவளி சமயம், ஒரு குலோப் ஜாமூன் பாக்கெட் வாங்கினால், இன்னொரு பாக்கெட் இலவசம் என்று வாங்கினேன். தீபாவளிக்கு முதல் நாள் பாக்கெட்டைப் பிரித்தால், மாவில் ஏகப்பட்ட புழுக்களும், குட்டி வண்டுகளும் நெளிந்தன. பயந்து போய் பாக்கெட்டைக் குப்பைக் கூடையில் வீசினேன்.
சிலர் ஆஃபர் என்றாலே ஆசைப்பட்டு, லாபம் என்று நினைத்து வாங்குவார்கள். ஆனால் நான் என் அனுபவத்தில் இருந்து அப்படி வாங்குவதை விட்டு விட்டேன்.
– ஜெயா சம்பத், சென்னை.

ன் தோழியின் பெண்ணிற்கு திருமணம் உறுதி ஆகியிருந்ததால், அவளது புது குடித்தனத்திற்கு தேவையான பொருட்களையே பரிசாக தர நானும்,மற்ற தோழிகளும் தீர்மானித்தோம். நாங்கள் கடைக்குச் சென்ற சமயம், கடையின் பத்தாவது ஆண்டு கொண்டாட்டம் குறித்து நிறைய ஆஃபர் காம்போ போட்டு இருந்தார்கள்.

நிறைய காம்போ எங்கள் பட்ஜெட்டில் வரவில்லை. ஒரு சில பொருட்கள் நல்ல பிராண்ட் இல்லாமல் இருந்தது. இறுதியில் தரமான ப்ராண்டில் ஒரு இண்டக்சன் ஸ்டவ், அதில் வைப்பதற்கு 5 லிட்டர் குக்கர், ஒரு ஐயர்ன் பாக்ஸ் என ஆஃபர் இல்லாமல் எங்கள் பட்ஜெட்டில் பொருட்கள் வாங்கினோம்.
பரிசுகளைப் பார்த்து என் தோழியும், மகளும் மிக்க மகிழ்ச்சி அடைந்ததில் நாங்களும் மகிழ்ந்தோம். எனவே 'காம்போ ஆஃபர்' என்று இருந்தால், சிறிது நேரம் எடுத்து, நமக்கு தேவையான, உபயோகமான பொருட்களா என யோசித்து வாங்கினால் நன்மையே.
– பானு பெரியதம்பி, சேலம்

ஃபர்ல பொருட்கள் வாங்குவது லாபம், புத்திசாலித்தனம், முட்டாள்தனம் மூன்றும் கலந்ததுதாங்க!
ஆடித் தள்ளுபடி, ஜனவரி முதல் தேதியில் விலை குறைப்பு, போன்ற நேரங்களில் பொருட்களை வாங்கிவிடுவோம். உடனே உபயோகப் படுத்தும் பொருட்களாக இருந்தால், அதில் குற்றம் குறை கண்டுபிடித்து திரும்பவும் கடைக்கு எடுத்துச் சென்று மாற்றிக் கொள்ளலாம்.
புடைவைகள் போன்றவைகளை வாங்கி வந்தால் வைத்திருந்து பண்டிகைக் காலங்களில் கட்டுவோம். அந்த நேரம் உபயோகப் படுத்தும் புடவைகளில் சில சாயம் போகும் அல்லது நூலிழைகள் விட்டுப் போகும்.
எல்லாத்துக்கும் நாலாவதா அதிர்ஷ்டமும் வேணுங்கோய்!
– வசந்தா கோவிந்தன், பெங்களூரு.

ஃபரில் வாங்குவது என்னைப் பொருத்தவரை முட்டாள் தனமே. 'ஆஃபர்' என்றால் நாம் சற்று யோசிக்க வேண்டும். தரமான பொருளை குறைந்த விலைக்கு கொடுத்தால் அவனுக்கு கட்டுப்படியாகாது. அந்த பொருட்கள் சாப்பாட்டு ஐட்டமாயிருந்தால் அதில் நிறம், மனம், சுவை எதுவும் இருக்காது.

மற்ற பொருட்களாக இருந்தால் நெடு நாள் உழைக்காது. விரைவிலேயே ரிப்பேர் ஆகிவிடும், உடைந்து விடும். நான் நல்லாவே அனுபவப் பட்டிருக்கிறேன். இதில் எங்கே லாபம் இருக்கிறது? தரமானதை வாங்குவதை விட செலவு அதிகம் தானே ? கழுதை விட்டை கைநிறைய இருந்து என்ன லாபம்?
-ஜானகி பரந்தாமன், கோவை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com