0,00 INR

No products in the cart.

பெசன்ட் நகரும் பாதாம் அல்வாவும்! 

கதை  – ரேவதி பாலு
ஒவியம் : தமிழ்

ல்யாணம்  ‘உர்’ரென்ற முகபாவத்துடன் வீட்டுக்குள் வளைய வந்து கொண்டிருந்தார். இது வழக்கமான விஷயந்தான் என்றாலும் ரமாவிற்கு எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசனையாக இருந்தது.   ஒன்றுமில்லை.  நாளைக்கு அவர் பிறந்தநாள்.  ஜென்ம நட்சத்திரம்.  ஏதாவது கோவிலுக்குப் போகலாமா என்று கேட்க வேண்டும்.

ஒரு புன்னகையோடு அவரைப் பார்த்து, “ஒரு சந்தோஷமான விஷயம்.  உங்களுக்கு இன்றோடு எழுபது வயசு பூர்த்தியாகிறது.  நாளைக்குப் பிறந்தநாள்,” என்றாள்.

“வயசாகிறதுடா கிழவா! எப்படா பெசன்ட்நகர் போகப்போறேன்னு தானே கேக்கறே?” என்றார் கோபம் கொப்பளிக்கும் முகத்துடன்.  ரமா அயர்ந்து போனாள்.  எந்த அகராதியில் இந்த மாதிரி அர்த்தம் போட்டிருக்கிறது? பிறந்த நாளைப் பற்றிப் பேசினால் பெசன்ட்நகர் போவது பற்றிப் பேசுகிறோம் என்றா அர்த்தம்?

அப்புறம்  “இந்த மாதிரி வருடா வருடம் வயசு ஏறிண்டே போறது எனக்கு சுத்தமாகப் பிடிக்கல,” என்றாரே பார்க்கலாம். ரமாவுக்கு சிரிப்புத் தாங்கவில்லை.  இந்த காமெடியை யாரிடம் போய் சொல்வது?

இதைவிட பெரிய காமெடி என்னவென்றால் முதலிலெல்லாம் அவர்
பெசன்ட் நகர் போவதைப் பற்றிப் பேசியபோது,  ரமாவிற்கு அவர் அங்குள்ள
மின் மயானத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் என்று புரியவில்லை.  அடிக்கடி “பெசன்ட் நகர் போற வயசுல இந்த ஆசை என்னத்துக்கு?” என்பார்.  ஒருவேளை அஷ்டலட்சுமி கோவில் போவதைப் பற்றிப் பேசுகிறாரோ என்று கூட  யோசித்தாள்.  அப்புறந்தான் அவர் திருவாயாலேயே அதைப் பற்றிச் சொன்னார். வாழ்க்கையின் கடைசியாத்திரையாக மின் மயானம் போவது தான் பெசன்ட் நகர் போவது என்று.

கல்யாணம் மகா நீட் பேர்வழி.  சிறிது சுத்தக் குறைவைக் கூட அவரால் சகித்துக் கொண்டு போக முடியாது.  இத்தனைக்கும் குழந்தை குட்டியில்லாத வீடு.  ரமா என்னதான் பார்த்துப் பார்த்து காரியம் செய்து வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டாலும் அதை சுத்தம் என்றே ஒத்துக் கொள்ள மாட்டார்.

“மேலே பார்த்தியா? பார்த்திருக்க மாட்டியே? ஒட்டடை எப்படி தொங்கறது பாரு.  ஊழல்.  ஊழல்.  கீழே மட்டும் பெருக்கினால் போதுமா? ஃபேனைப் பார்த்தியா? கன்னங்கரேல்னு.  சுட்டுப் போட்டாலும் உனக்கு சுத்தம் வராது.  உங்க வீட்டில உன்னை சரியா வளர்த்திருந்தா தானே அதெல்லாம் தெரியும்?”  என்று உருமுவார்.  ரமா பெருக்கின இடத்தைத் தான் திரும்பவும் பெருக்குவார்.  வீட்டில் வாஷிங் மெஷினுக்கு அனுமதி இல்லை.  அதில் தோய்த்தால் வெளுக்காது என்று மறுதளிக்கப்பட்டுவிட்டது.  ரமா என்னதான் தோய்த்தாலும் துணியில் ஏதோ கறை அவர் கண்ணில் பட்டுவிடும்.

‘அவருக்கு எழுபது என்றால் எனக்கும் அறுவத்தெட்டு ஆகிறதே.  முடியமாட்டேங்கிறதே,’ என்று தனக்குள் முனகிக் கொள்வாள் ரமா.  உரக்கச் சொன்னால் அதே சண்டைக்கு இடமாகிவிடும்.

“நேத்திக்குக் கூட பெசன்ட் நகர் பக்கம் போன  போது அந்த மயானத்தைப் பார்த்தேன்.  எவ்ளோ சுத்தமா வச்சிருக்காங்க தெரியுமா?  அதுக்கே அங்க போயிடலாம் போல இருக்கு,” என்றார் ஒரு நாள்.

ரமாவுக்கு சுத்தமாகப் புரியவில்லை.  அங்கே போய் குடியிருக்கவா போறார்?  சில நிமிடங்கள் தானாம்.  மெஷினுக்குள் உடலைப் போட்டால் சாம்பல் வெளியே வந்து விடுமாம். அன்றே அஸ்தி கரைத்து விடலாமாம்.   அப்பா இறந்தபோது மயானம் சென்ற சகோதரர்கள் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறாள்.

ஒருமுறை குடியுருப்புப் பகுதியில் கீழும் மேலும் அலைந்து கொண்டிருந்தார் கல்யாணம். கீழே மாடிப்படியிலிருந்து வாசற்கதவு வரை செல்லும் தாழ்வாரப் பகுதியை இப்போதுதான் பெருக்கி சுத்தப்படுத்தி விட்டு மேலேயுள்ள தன் குடியிருப்புப்பகுதிக்கு வந்திருந்தார்.  ஒரு மணி நேரந்தான் ஆகியிருக்கும்.  திரும்ப மோட்டார் போடுவதற்காக கீழே வந்தபோது, பக்கத்து வீட்டு மரங்களிலிருந்து காய்ந்த இலைக் குப்பைகள் தாழ்வாரமெங்கும் விழுந்து பறந்து கொண்டிருந்தன.

“அன்னைக்கே சொன்னேன் பக்கத்து வீட்டு அம்மா கிட்ட, கொஞ்சம் கிளைங்களை வெட்டுங்க,  குப்பை பெருக்கிப் பெருக்கி மாளலன்னு.  காதில விழுந்ததான்னே தெரியல!” கோபத்தோடு வீட்டுக்குள் வந்து ரமாவிடம் உறுமினார்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ரமா மௌனமாக இருந்தாள்.  பக்கத்து வீட்டு அம்மாவை ஆதரிச்சும் பேச முடியாது.  எதிராகவும் பேச முடியாது.  ஏனென்றால் கல்யாணம் தான் அந்த அம்மாவை மாதிரி வீட்டை சிறப்பாக நிர்வாகம் பண்ணுகிறவர்களைக் காண்பது அரிது என்று அவ்வப்போது நல்ல செர்டிஃபிகேட்டும் குடுப்பார்.  அதாவது அந்த அளவுக்கு ரமாவுக்கு நிர்வாகத் திறமை போதாதென்று இகழ்ச்சியான அபிப்பிராயம் தொனிக்கும் அந்த வார்த்தைகளில்.  என்ன பதில் சொன்னாலும் அவர் வாயில் விழுந்து தான் புறப்பட வேண்டும் என்பதால் ரமா பல சமயங்களில் மௌனமாகவே இருந்து விடுவாள்.  அதற்கும் வள்ளென்று சீற்றத்துடன் ஒரு கேள்வி வரும் கல்யாணத்திடமிருந்து.

“ஏண்டீ! நீயும் ஒன் அப்பனைப் போல செவிடாயிட்டியா? பேசறது காதில விழுந்த மாதிரியே தெரியல?”

டுத்த நாள் காலை குளித்து விட்டு வெளியே கிளம்பினார்.  ரமாவுக்கு ‘ஹேப்பி பர்த்டே’ ன்னு ‘விஷ்’ பண்ணக் கூட பயம்தான்.  எங்கே என்று தெரியவில்லை.  போகும்போது  கேட்டால் கோபம் வரும்.  “நான் எங்கே போனா உனக்கென்ன? நான்  பெசன்ட் நகர் போனா நீயும் கூடவே வந்துட முடியுமா என்ன?” என்பார் நக்கலாக.

யோசித்து யோசித்து ஒரு பாயசம் வைத்தாள். கல்யாணத்திற்கு பாயசம் ரொம்பப் பிடிக்கும்.  ஆனால், கோபித்துக் கொள்ளாமல் குணமாக சாப்பிட வேண்டுமே? பகல் பன்னிரண்டு  மணிக்கு வியர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு வந்தார்.  கையில் ஏதோ பெரிய பார்சல்.  ‘எங்கே போயிட்டு வரார்னு தெரியலியே’ ரமா அவருக்குக் குடிக்கத் தண்ணீர் குடுத்து விட்டு அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். பார்சலைப் பிரித்தார்.

“நீதான் எனக்கு எழுபது வயசு முடியறதுன்னு சொன்னியே.  இனிமே எப்போ இதெல்லாம் சாப்பிடப்போறோம்னு வாங்கிண்டு வந்தேன்”  ஒரு டப்பா பாதாம் அல்வாவும் ஒரு பிளாஸ்டிக் கவரில் முந்திரி பக்கோடாவும் எடுத்து டைனிங் டேபிள் மேல் வைத்தார்.

“என்னடீ அப்படியே நிக்கறே? மனுஷன் பாரீஸ்ல காளிகாம்பாள் கோவில் போயிட்டு அப்படியே அகர்வால் பவன் வந்து அலைஞ்சு திரிஞ்சு பசியா வந்திருக்கேன்.   சாப்பிட தட்டு வைன்னு சொன்னாதான் வைப்பியா?” திரும்பக் கோபக் குரலோடு உடை மாற்றிக் கொள்ள உள்ளே கல்யாணம் போக, பெசன்ட் நகர் போவது பாதாம் அல்வாவில் வந்து முடிந்ததை நினைத்து பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு சாப்பாட்டுத் தட்டை  எடுக்க உள்ளே போனாள் ரமா.

ரேவதி பாலு
ரேவதி பாலு, பி.எஸ். என். எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முப்பத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறார். தமிழில் வெளியாகும் வார, மாதப் பத்திரிகைகளில் இவருடைய படைப்புகள் வெளியாகி வருகின்றன. சிறுகதை, குறுநாவல், நாடகம் என்று பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றவர். இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தும் மாதாந்திர சிறந்த சிறுகதைக்கான பரிசு இருமுறை கிடைத்திருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன;. இதுவரை ஏழு சிறுகதை தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிக கட்டுரை தொகுப்பு நூல்கள் மற்றும் ஒரு சமூக கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகி இருக்கிறது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...

பஞ்சு பாலசுப்ரமண்ய ஹரிஹரன்!

சிரிகதை : தனுஜா ஜெயராமன் ஓவியம்: தமிழ் அந்தக் கோடி வீட்டு சுந்தரராமன் ஸ்மியூல் பாடகி கல்யாணியோட "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" ன்னு பாவத்தோட பாடி பஞ்சு மாமாவின் வாட்சாபிற்கு அனுப்பி, மாமாவின் வயிற்றெரிச்சலை...

ஒரு பக்கக் கதைகள்!

3
ஓவியம்; தமிழ் துரோகம்! -புதுவை சுபா அதிகாலை 4.00 மணிக்கே அந்த நடுத்தர உணவகம் ஆயத்தமானது. “இன்னும் கொஞ்ச நேரத்துல வாடிக்கையாளர்கள் ‘டீ’க்கு வந்து நிப்பாங்க. இட்லி ஊத்தி எடுக்கணும். சட்னி சாம்பார் தயார் செய்யணும். வேலை...

மனத்துக்   கண்    மாசிலன்     ஆதல்…….

1
சிறுகதை - சாந்தி நாதன் ஓவியம்: லலிதா   மதிய உணவிற்குப் பின் சிறிது உறங்கி எழுந்த ராமநாதன் அறையை விட்டு வெளியே வரவும் , "உள்ளே வரலாமா?" என்று குரல் கொடுத்தவாறே அவர் நண்பர் சடகோபன்...