இதற்காகவா ஒரு கொலை?

இதற்காகவா ஒரு கொலை?
Published on
 தொடர் – 9 
-ஜி.எஸ்.எஸ்.

2003 மார்ச் 7 அன்று நடைபெற்றது அந்த படுகொலை. 33 வயதான க்ரெய்க் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் அவனது அண்ணன் பெர்கஸ் ஜான் க்ளென்.

யோசிக்க யோசிக்க அவன் மனதில் ஆத்திரம் பொங்கியது. அது எப்படி? அது எப்படி? என்ற கேள்வி மீண்டும் மீண்டும் மனதில் தோன்றிக் கொண்டிருந்தது.

சட்டென்று வீட்டின் கீழ்த் தளத்துக்குச் சென்றான். அங்கிருந்த கோடரியை எடுத்தான். பின் மேலேறி தம்பி தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு வந்தான். தம்பியை துடிக்கத் துடிக்கக் கொன்றான்.

அண்ணன் ஜான் க்ளென்னுக்குத் திருமணம் நடக்கவில்லை. வேலையும் கிடைக்கவில்லை (அல்லது வேலை கிடைக்காததால் திருமணம் நடக்கவில்லை என்றும் கொள்ளலாம்).

தம்பி க்ரெய்க் வேலையில் இருந்தான். அவனுக்குத் திருமணம்  ஆகியி ருந்தது. மூன்று குழந்தைகளும் உண்டு.

ஒருவேளை இதனால் எழுந்த பொறாமையால்தான் கொலை செய்தானா? இல்லை. மனைவியிடமிருந்து பிரிந்து வந்து விட்டான் தம்பி. எனவே பெற்றோரும் இரண்டு சகோதரர்களும் ஒரே வீட்டில்தான் வசித்துக் கொண்டிருந்தார்கள்.

அன்று மாலை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்து கொண்டு சிரிப்பும் நகைச்சுவையுமாகக் காட்சியளித்தான் அண்ணன்.

அப்பா, அம்மா, தம்பி அனைவரும் ஒவ்வொருவராக உறங்கச் சென்றார்கள். அப்போதுதான் க்ளென் மனதில் ஒருவித இருள் சூழ்ந்தது. நான்கு மாதங்களுக்கு முன் தனக்கும் தம்பிக்கும் இடையே நடைபெற்ற சண்டை அவனுக்கு நினைவுக்கு வந்தது.

அந்த அறையில் விளக்கு எதுவும் எரியவில்லை. என்றாலும் அதற்குப் பின்னால் இருந்த தாழ்வாரத்தில் இருந்து லேசான ஒளி வந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் தம்பியின் உடலைப் பார்க்க முடிந்தது. முதலில் தோளில் ஒரு வெட்டு. அலறியபடி எழுந்த தம்பியின் முகத்தில் அடுத்த வெட்டு விழுந்தது. மீண்டும் கோடாலியால் தாக்கியதில் தம்பியின் முதுகெலும்பு உடைந்தது. (முதல் மூன்று வெட்டுகளிலேயே தம்பி மயங்கி இருக்க வேண்டுமென்றும் அதற்குப் பிறகு அவன் உடலை வெட்டியதை அவனால் உணர்ந்திருக்க முடியாது என்றும் மருத்துவர்கள் பிறகு கூறினர்). சிறிது நேரத்தில் அவன் உடலில் இருந்த ரத்தம் எல்லாமே கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது.

ஜான் க்ளென்
ஜான் க்ளென்

ண்ணன் அப்போதும் எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை. கோடரியை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும் என்று எண்ணிக் கீழே சென்றான். போகும் வழியில் படிக்கட்டில் அவன் அம்மா வந்து கொண்டிருந்தார். மேலே கேட்ட அலறல் சத்தம் அவரை எழுப்பி விட்டிருந்தது. அப்போது கூட அவரால் நடந்தது என்ன என்று யூகிக்க முடியவில்லை. ஒருவித குழப்பத்துடன் படியேறி கொண்டிருந்தார் அவர். (பின்னர் காவல்நிலையத்தில் ' யாரோ மரத்தை வெட்டுவதைப் போன்ற சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்டேன்' என்று அவர் கூறினார்).

'அம்மா நான் அவனை முடித்துவிட்டேன் … இந்த கோடாலியால்' என்று அவன் கூறியதன் அர்த்தத்தை சில நொடிகளுக்குப் பிறகுதான் அம்மாவால் புரிந்துகொள்ள முடிந்தது. அலறியபடி மேலே சென்றாள்.

'அவன் என்னை எரிச்சல் படுத்தினான். எனவே நான் அவனைக் கொன்றேன். இதை நான் பெருமையாக நினைக்கவில்லை. ஆனாலும் அந்த செயலை செய்தேன்' என்றான் அண்ணன்.

இந்தக் கொலைக்குப் பின்னணியில் ஏதோ ஆழமான காரணம் இருக்க வேண்டும் என்ற கோணத்தில்தான் காவல்துறையின் புலன் விசாரணை இருந்தது. ஆனால் காரணம் என்ன என்பதை அறிந்தபோது அவர்கள் அதிர்ந்தனர். அன்று சமைத்தது அண்ணன்தான். ஆனால் அதை சாப்பிட்ட தம்பி அதற்காக நன்றி கூறவில்லை. அவ்வளவு, அவ்வளவேதான் காரணம். மற்றபடி இருவருக்கும் பகைமை என்று எதுவும் கிடையாது.

16 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது அண்ணனுக்கு. இப்போது அவனுக்கு வயது 52. தான் செய்த கொலையை பற்றியும் சிறையில் அடைந்து கிடப்பது பற்றியும் அவன் வருத்தப்பட்டதாகவும், அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரியவில்லை. மற்றபடி சிறையில் அவன் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தவில்லை. அங்குள்ள சிறைப் பயிற்சிக் கல்லூரியில் ஒழுங்கான மாணவனாகவே இருந்து வருகிறான்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com