சேலத்தில் ஒரு தாஜ்மஹால்!

சேலத்தில் ஒரு தாஜ்மஹால்!
Published on
கணவருக்கு சிலை வடித்த காதல் மனைவி…
-சேலம் சுபா

ம்பதிகளுக்குள் காதல் என்பதே இனிக்கும் இல்லற வாழ்வின் அடிப்படை. அதிலும் காதலித்து இணைந்தவர்கள் ஒருவர்  மீது ஒருவர் வைக்கும் அளவற்ற அன்பு ஒருவர் இறந்தாலும் மறையாமல் வாழும் என்பதற்கு சாட்சி இந்த காதல் தம்பதி…

கணவர் தன்னை விட்டு மறைந்தாலும் அவரின் நினைவுகளுடன் அவருடன் வாழ்ந்த வீட்டை அவருக்கான நினைவு இல்லமாக்கி அதில் அவரின் உருவ சிலையை வைத்து வழிபடுகிறார் சேலத்தை சேர்ந்த கோமதி. காதல் மனைவிக்காக  நினைவுச்சின்னம் எழுப்பி அழியாக்காதலுக்கு வடிவம் தந்த ஷாஜகான் வழியில் காதல் கணவருக்காக சிலை வடித்த கோமதியைக் காண சென்றோம். ஏற்காடு அடிவாரம் செல்லும் வழியில் சட்டக்கல்லூரி அருகில் உள்ள இந்திரா நகரில் இருக்கிறது 'கோமதி குடீர்'.

கணவர் ஆசையாக கட்டி வாழ்ந்த வீட்டையே அவரின் நினைவுச்சின்னமாக உருமாற்றி இருக்கிறார் கோமதி . அழகிய படங்களுடன் தேக்கு மரத்தால் இழைத்த அவரின் மார்பு வரையுள்ள தத்ரூப சிலைக்கு மலர்கள் தூவியபடி  கண்ணில் நீர் கலங்க நம்மிடம் பேசினார் .

என் சொந்த ஊர் சேலம். அவர் தந்தை சென்னையிலிருந்து பணி காரணமாக மும்பைக்கு போனவர், அங்கு  இருந்த சேலத்தை  பூர்வீகமாக கொண்ட  என் மாமியாரைப் பார்த்து காதலித்து மணந்து டெல்லிக்குப் போய் செட்டிலானார்கள். என் கணவர்தான்  மூத்த மகன். இவரோட பிறந்தவர்கள் ஆறு சகோதர சகோதரிகள் .

நானும் சகோதர சகோதரிகளுடன் பிறந்தாலும் என் பெரியப்பாவுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் என்னை அவர்களிடம் தத்து தந்து விட்டனர். என்னை வயதுக்கு வந்ததுமே மாமன் மகனுக்கு என்று நிச்சயித்து விட்டனர். ஆனால் விதி விடுமா ?

நிச்சயத்துக்கு நாள் குறித்து பத்தே நாட்கள் இருந்த நிலையில் பெரியப்பாவின் மரணம்  நிகழ்ந்தது. அப்போது இவரின் தாயாரின் சொந்த ஊர் சேலம் என்பதால், தூரத்து உறவினரான என் பெரியப்பாவின் மரணத்துக்கு இவரை  துக்கம் விசாரிக்க அனுப்பினார்.  அப்போது எனக்கு பதினேழு வயது. ஒன்பதாவதுதான் படித்திருந்தேன். இவருக்கு இருப்பதுநான்கு வயது. அப்போதுதான் அரசு வங்கிப்பணி கிடைத்திருந்தது. என்னைப் பார்த்தவர் நீதான் இனி என் மனைவி . நீ இல்லையென்றால் என் குடும்பத்தையும் விட்டு சென்று விடுவேன் என்று ஒரே வார்த்தையில் அவர் காதலை சொல்லிவிட்டுப் போனார்.

என் மீதுள்ள காதலால் அவர் குடும்பம் பாதிக்கப் படக்கூடாது என்று என்னதான் சொந்தம் என்றாலும் இந்தக் காதலை இங்கு யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சரியாக பதினெட்டு வயதில் அவருடன் டெல்லி சென்றேன். கோவிலுக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் அவருடன் சென்றேன்… அந்த நாள் மறக்க முடியாது… ஏனெனில் மாதவிலக்கு ஏற்பட்டு அந்த வலியுடனே மூன்று நாட்கள் டெல்லி சென்றேன். இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது. ஆனாலும்  காதல் அப்போது அதைத் தாங்கிக் கொள்ள வைத்தது.

பெரியப்பா இறந்ததால் திருமணம் நின்றுபோனதும், அறிமுகமே இல்லாத இவர் வந்ததும்  எல்லாம் நாங்கள் வாழ்க்கையில் இணைய கடவுளின் விளையாட்டாகவே தோன்றுகிறது.

அப்போதெல்லாம் வயதுப்பெண் அடுத்த ஆணைப் பார்க்கவோ பேசவோ முடியாது. நானும் அவரும் எல்லாம் கடிதங்கள் மூலமே பேசினோம் . அதிகம் பழக்கமில்லாத ஒரு ஆணை நம்பி எங்கோ இருக்கும் டெல்லிக்கு  செல்கிறோமே எனும் அச்சம் என் மனதில் துளியும் இல்லை. காரணம் அவரின் பண்பு.

அங்கு சென்று மாமியாரின் சம்மதம் பெற்று சரியாக எட்டே நாட்களில் எங்கள்  திருமணம் நிகழ்ந்தது. நான் அவர்களின் வாழ்க்கைக்குப் பழகிக்கொள்ள சற்றே சிரமப்பட்டேன். ஆனால், அவரின் அன்பு அனைத்தையும் சரி செய்தது.

ஒருமுறை ஏதோ ஒரு பிரச்சனையில் நான் அவர் வரும் வரை சாப்பிடாமல் இருந்தேன். என் மாமியார் அவர் வந்ததும் அதைச் சொல்ல, வந்தவர் என்னை சமாதானப் படுத்துவார் என்று நினைத்தேன். ஆனால் நடந்ததோ வேறு … வந்தவர் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டார். நான் அதிர்ந்து போனேன். ஆனால்,  "இந்த ஒருவேளை சாப்பாட்டுக்காக நாங்கள் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கோம் தெரியுமா?" என அறிவுறுத்தி சாப்பிட வைத்தார். அதுதான் அவர். தவறு என்றால் உடனே கோபப்படுவார். ஆனால் அதில் நியாயம் இருக்கும். அன்று புரிந்து கொண்டவள்தான். காதலில் கொஞ்சிவிட்டு, பின் கண்டிக்காமல் உடனே என் தவறை சுட்டிக் காட்டியது என்னை மேலும் அவரை விரும்பவே வைத்தது .

அவரின் வார்த்தைகளை கடைசி வரை மீறாமல் நானும், என்னை அன்புடனும் மதிப்புடனும் நடத்தி  அவரும் அனைத்து இன்ப துன்பங்களில் விட்டுத் தந்தும், அனுசரித்தும் வாழ்ந்து, இருவரின் குடும்பத்தினரிடமும் நல்ல பெயர் பெற்றோம். எங்களுக்குள்ளும் சண்டைகள் வரும், பிரச்சனைகள் எழும்… ஆனால் காலையில் நடக்கும் சண்டைகள் மாலை அவர் வரும்போதே நீர்த்துப் போயிருக்கும்.

இவருக்கு வங்கியில் மேலாளர் பணி என்பதால் டெல்லி , சென்னை என்று ஊர்களை சுற்றி ஓய்வுக்கு சேலம் வந்து செட்டிலானோம் .  இந்த வீட்டை அவர்தான் பார்த்து பார்த்துக் கட்டினார் . நாங்கள் வரும் வரை வாடகைக்கு விட்டிருந்தோம்…   என்று பேசியவர், சற்றே நிறுத்திவிட்டு மீண்டும் குரல் கம்ம தொடர்ந்தார்…

இதோ இப்போதுதான் அவர் இறந்தது போல் உள்ளது. ப்ரெய்ன் அட்டாக் வந்து நான்கே நாட்களில் எங்களை விட்டுச் சென்றார். யாருமே எதிர்பாராத அவரின் மரணம் எங்கள் எல்லோரையும் அதிரச் செய்தது. அந்த அழுத்ததிலிருந்து என்னால் மீளவே முடியவில்லை. எந்நேரமும் அவருடனே இருப்பது போன்ற உணர்வு, அவர் இல்லாமல் நானில்லை எனும் அதீதக் காதல், என்ன செய்வதென்று அறியாமல் பெரிய அளவில் எங்கள் புகைப்படத்தை பார்த்தபடியே கலங்கி நின்றபோதுதான் இந்த யோசனை வந்தது.

புகைப்படத்தில் இவரிடம் பேசுவதை சிலை வைத்து பேசினால், அவருடன் நேரே பேசுவது போன்று இருக்குமே? அவர் இல்லாத உணர்வு இல்லாது போகுமே என்று.  என் மகனிடமும், பெண்ணிடமும்  இந்த யோசனையை சொன்னேன், அவர்கள் உடனே ஒப்புக்கொண்டு, இந்த வீட்டையே என் விருப்பப்படி அவரின் நினைவுச்சின்னமாக மாற்றி அமைத்தனர் .

என் கணவர் எனக்கு காதலை மட்டும் தரவில்லை, நல்ல பொருளாதார சுதந்திரத்தையும், நல்ல பிள்ளைகளையும், உறவினர்களையும் தந்திருந்தார். ஒரு பெண்ணுக்கு வாழ்வில் இதை விட வேறென்ன வேண்டும் ? இதோ இன்றும் என் காதல் கணவருடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டுதான் உள்ளேன் சிலை வழியே .

அந்த வீடு முழுக்க இருவரும் இணைந்திருக்கும் அழகான படங்கள் நிறைந்திருக்க, சிலையும் மணி மண்டபமும் சுத்தமான தேக்கினால் வடிவமைக்கப்படிருந்தது. காண நேர்த்தியாக இருந்தது .ஒரு புறம் தேக்கினால் செய்யப்பட்ட குடும்ப மரத்தில் (Family Tree) குடும்ப உறுப்பினர்களின் படங்கள் நம்மை நோக்கிப் புன்னகைத்தது .

சசிகுமார் தனது அறுபத்து மூன்று வயதில், பிப்ரவரி 8, 2019 ல் இறக்க,  2022 ல் அவரின் பிறந்த நாளான பிப்ரவரி  13 அவரின் சிலையை திறந்து வைத்துள்ளனர். ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் மனைவிக்கு எங்கிருந்தாலும் மறக்காமல் பூங்கொத்துகளை பரிசளித்துள்ளார் சசிகுமார். இப்போது அவர் மனைவி தினந்தோறும் மலர்களால் அவரின் சிலையை அலங்கரித்து மலர்க்கொத்துகளை பரிசளிக்கிறார் .

"இந்த மானிடக் காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும். அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும். நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்" இது சசிகுமாரின் காதல் கவிதைகளில் சில வரிகள். ஆம் உண்மைதான்! இவர்களின் காதல் என்றென்றும் அழியாமல் வாழும்.

சேலம் பக்கம் போனால் நீங்களும் ஒரு நடை இந்திராநகர் சென்று இந்தக் காதல் தம்பதியின் நினைவுச் சின்னத்தைக் கண்டு வாருங்களேன்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com