0,00 INR

No products in the cart.

இறை விளையாட்டு!

ஜெயஸ்ரீ ராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டி பரிசுக் கதை – 6
ஓவியம்: இளையராஜா

அறிமுக எழுத்தாளர் கஸ்தூரி குருசாமி

கஸ்தூரி குருசாமி

ய் புள்ளே! இன்னைக்குத்தானே நம்ம எலிசபெத்தை பொண்ணு கேட்டு வாறாக?” ஜேம்ஸ் மனைவியிடம் கேட்க,

ஆமா மச்சான். பையன் படிச்சு ஆபீஸ்ல வேலை பார்க்கிறானாம். பாக்க நல்லாவும் இருப்பான் போல! நம்ம பிள்ளையும் பாக்க அம்சமாகவும் படிச்சும் இருக்காள்ல. நம்மாளில் இதுபோல செவப்பா, படிச்ச பிள்ள யாரிருக்கா? அதான் அந்தோணி அண்ணன் அங்ஙன போய் சொல்லியிருக்கு. இது தெகஞ்சா நாம கொடுத்து வச்சவங்க.”

பாப்போம் பிள்ள. என்ன கேக்கிறாளோ தெரியல” பேசிக்கொண்டிருக்கும்போதே ஆட்டோ சத்தம் கேட்டது.

அவுகதான் போல.”

வாங்க! வாங்க! ராமேசுவரத்திலிருந்துதானே வாறீக! உள்ள வந்து இரிங்க…”

வந்தவர்கள் உட்கார்ந்ததும், “காப்பித் தண்ணியும் பலகாரமும் ஏடுத்து வா பிள்ள” என்றார்.

வந்தவர்களும் அந்தோணியும் ரகசியமாகப் பேசவும், “ஏதாச்சும் பேசணுமினா வெளிப்படையா கேளுங்க…” என்று ஜேம்ஸ் பச்சைக்கொடி காட்டினார்.

ஒண்ணுமில்லகுடும்ப விபரம், சொத்துபத்து பற்றி தெரியல…” என்றிழுக்கவும்

நான், என் பொஞ்சாதி ஃபிலோ, பிள்ளைக எலிசபெத்தும் ஃபுளோராவும் என நாலு பேர்தான். ஆம்புளப்பிள்ளை இல்ல. நாலு படகும் இந்த வீடும்தான் சொத்து.”

அதனாலென்ன? கலியாணமானா எம்புள்ள உங்க புள்ள மாதிரிதானே!” என்றதும், ஜேம்ஸுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது.

அதுவரை மௌனமாக இருந்த அந்தோணி, “மேல பேசி முடிவெடுக்கலாமா?” என்றார்.

நாங்க இருவது சவரன் போடறோம். மாப்ள பைய ஆபீஸில வேல பாக்கறதால படகு கொடுத்து பிரயோசனமில்லை. இல்லாட்டி ஒரு படகு குடுக்கலாம்” என்றார்.

நீ சொல்லுவே. பொண்ண பிடிச்சிருக்கா? அவ பி.எஸ்சி. படிச்சு, நல்ல திருத்தமாகவும் செவப்பாகவும் இருக்கா. நீ சம்மதிச்சா வர்ற மாசமே கலியாணம் வைக்கலாம்.”

சரிப்பாஎனக்குப் புடிச்சிருக்கு. எனக்கு சம்மதம்.”

எலிசபெத்துக்கு மிக்க மகிழ்ச்சி. சென்னையில் பையனுக்கு வேலை. அவள் கன்னியாகுமரியில் பிறந்து வளர்ந்ததால் சென்னையை எட்டிக்கூட பார்த்ததில்லை. பையனும் அம்சமா இருக்கான்.

யேசப்பா நன்றிப்பா” என மனதார தொழுதாள்.

ஓவியம்: இளையராஜா

ஒரு வாரம் சென்றது. ‘மகளுக்கு நல்ல வரன் கிடைத்தால் போதுமா? கலியாண ஏற்பாடு செய்ய வேண்டாமா? இருவது சவரன் நகை, கல்யாணச் செலவு என ஐந்தாறு லட்சம் வேண்டுமே? ராப்பகலா உழைத்து, பணம் சேர்த்து மகளை கரையேத்தணும். பங்காளிகளுக்குத் தெரிந்தால் அவங்க பிள்ளைகளுக்குத் தட்டிக்கிட்டு போயிருவாக. ஜாக்கிரதையா இருக்கணும்என எண்ணியவாறே

ஏட்டி ஃபிலோ இங்ஙன வா” என்றதும் தொங்கிய முகத்தோடு வந்து நின்றாள்.

நாம் கீழக்கரையிலிருந்து வந்த விபரம் அவுகளுக்குத் தெரிய வேணாம். மூஞ்சி ஏன் இப்படியிருக்கு? எல்லாம் நான் பாத்துக்கிறேன். சரி சரிஅத நினைக்காத” என்றார்.

அதொண்ணுமில்ல. ஆக வேண்டியத பாரும்.”

நாள முதல் நானும் படகில் போறேன். கொஞ்சம் அப்பால போனால் நிறைய மீன் கிடைக்கும்.”

மீனவர்கள் கடலைத்தானே தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். நித்தம் செத்துப் பிழைப்பதுதானே இவர்கள் வாழ்க்கை. கோபம் வந்தால் சுருட்டி வாரிக் கொள்வாள். மகிழ்ச்சி வந்தால் தாயாக அணைப்பாள். கடலன்னை அவர்களுக்கு கண்ணால் காணும் தெய்வமல்லவா!

மனசு நிறைய கனவுகளோடு ஜேம்ஸ் படகில் ஏறினான். ‘கொஞ்சம் தொலைவு சென்றால் மீன் நிறைய அகப்படும். கடலன்னை கைவிட மாட்டாள்என எண்ணியவாறு சென்றவன், எல்லையை சரியாக கணிக்கத் தவறிவிட்டான். அந்தோ பரிதாபம்! இலங்கை கடற்படையினர் அவன் படகை மீனோடு பிடித்துவிட்டனர். உயிர் பிழைக்க வேண்டுமே என்ற பதற்றத்தோடு கடலில் குதித்துவிட்டான். அப்படியும் அவர்கள் நான்கு மணி நேரம் விடாது துரத்திப் பிடித்து சிறையிலிட்டனர். தூரத்தில் வந்த ஜேக்கப்பின் ஆட்கள் இதைப் பார்த்து ஃபிலோமினாவிடம் தகவல் தெரிவித்தனர்.

ஐயோ கடலம்மா! எங்கள சோதிக்காதே” என கீழே விழுந்து புலம்பினாள். சொந்த பந்தங்கள் மீனவர் சங்கத்தில் கூறவே, அவர்கள் முதலமைச்சருக்கு கடிதம் எழுதினர். நேரில் சென்று முதலமைச்சரை பார்த்தால் துரிதமாகச் செயல்படுவார்கள் எனக்கூறி ஃபிலோமினாவோடு ஐந்து பேர்கள் சென்னை சென்றனர். அங்கு ஃபிலோமினா கதறியழுவதைக் கண்ட ஒரு காவலர் ஓடிவந்து அவளை அமைதிப்படுத்தி, ஆறுதல் கூறினார். அவர் கண்களிலும் கண்ணீர். மனிதாபிமானம் சாகவில்லை போலும்! அவர் யார் யாரையோ பிடித்து வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை என விண்ணப்பித்தார். எப்படியோபத்து நாட்களில் ஜேம்ஸ் விடுவிக்கப்பட்டார். குற்றுயிரும் குலையுருமாக வந்து சேர்ந்தார். படகு கிடைக்கவில்லை. உயிர் பிழைத்ததே இறைவனருள் என நினைத்தனர்.

திருமணம் நடத்த முடியுமா என்ற ஐயத்தில் பெற்றோர் தவிக்க, எலிசபெத் அழுதுகொண்டேயிருந்தாள். பணம் புரட்ட என்ன வழி என கலங்கி நின்றனர். ஆனால், பிரான்சிஸ் என்பவன் மாப்பிள்ளையின் அப்பாவை நேரில் சந்தித்து, அவரிடம் நகையும் ஒரு லட்சம் பணமும் கொடுத்து, ‘குறித்த நாளில் திருமணம் நடந்தேற வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டான்.

யாரப்பா நீ?” என அவர்கள் கேட்க,

நான் அவங்க உறவுதான். பெண் வீட்டாரிடம் இப்போது ஒன்றும் சொல்ல வேண்டாம்” என்றார்.

அவன் போனதும், “இதென்ன கூத்து?! யாருன்னே தெரியல. ஒருவேள, பொண்ணுக்கும் இவனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?” என சந்தேகப்பட்டனர்.

ஜேம்ஸ் பத்திரமாக ஊருக்கு வந்த விபரம் அறிந்த பையனின் அப்பா தொலைபேசியில், “நீங்க விசனப்படாதீக. சொன்ன தேதியில கலியாணம் நடக்கும். எதுக்கும் ஒரு நட இங்கு வந்து போவீகளா?” என்றார். நேரில் கேட்டு சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்.

எம்புட்டு நல்ல மனுசங்க! நம்ம பிள்ள கொடுத்து வச்சவ’ என்ற பூரிப்பில், இனி யாரிடமாவது கடன் உடன் வாங்கி, சொன்ன பேச்சை காப்பாத்தணும் என ஜேம்ஸ் வெளியே போக, எலிசபெத்தும் ஃபிலோவும் கருவாடு காய வைத்துக் கொண்டிருந்தனர். சுட்டெரிக்கும் வெயில். தூரத்தில் ஒரு அழகான வாலிபன் எலிசபெத்தை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதனை எதேச்சையாகப் பார்த்த எலிசபெத், ‘அடி ஆத்தி! அம்மாவோ, சொந்தபந்தமோ பார்த்தால் என்ன ஆகும். யாரிவன்? பார்த்து சிரிக்கிறானே! அவன் பார்வையும் சிரிப்பும் என்னவோ மனதை பிசைகிறதே!’ என உள்ளே ஓடிவிட்டாள்.

எங்கேயும் கடன் கிடைக்காது வீடு திரும்பிய ஜேம்ஸ், என்ன செய்வது என எண்ணியவாறு பையனின் அப்பாவுக்கு போன் செய்தார்.

என்ன மச்சான் விளையாடுறீயளா? உங்க சொந்தக்காரர் ஓராள் நகையும் பணமும் தந்திட்டாரே” எனக் கூறவும் ஜேம்ஸுக்கு ஒரே வியப்பு. நேரில் போய் விசாரிக்கலாம் என ராமேஸ்வரம் சென்றார். உள்ளே பேச்சுக்குரல் கேட்டது.

நான் அவர்களது தூரத்து சொந்தம். அவர் ரொம்ப மானஸ்தர். யார் உதவியும் ஏற்றுக் கொள்ள மாட்டார். திருமணம் ஒரு தடையுமில்லாது நடந்தேற வேண்டும்.”

பார்க்க பெரிய ஆபீஸர் போலிருக்கும் இவர் யார்?’ என யோசித்தவாறு உள்ளே சென்ற ஜேம்ஸிடம்

வாங்க மச்சான்உட்காருங்க. என் பொஞ்சாதியை கூட்டி வரேன். தம்பி நீங்களும் இரிங்க” என்று கூறியவாறு உள்ளே சென்றார்.

நீங்க யாரு? எங்களுக்கு ஏன் உதவுறீங்க?” எனக் கேட்க

கண்ணில் நீர் வடிய, “அப்பாநான்தான் பாத்திமா” என்று கூறி, விசிட்டிங் கார்டை கையில் திணித்துவிட்டு வேகமாக வெளியேறினான்.

Francis – Sub Inspector of Police’ என்ற கார்டைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டார்.

மச்சான் எங்க அந்தத் தம்பி? உங்களுக்கு சொந்தமா? அவருதான் ரொக்கமும் நகையும் கொடுத்தார்” எனக் கேட்ட சம்பந்திக்கு பதில் கூற முடியாது சிலையாக நின்றார்.

முப்பது வருடங்களுக்கு முன்பு தன் மூத்த மகள் ஆணாக மாறி வருவதைக் கண்டு, இவளால் மூன்று வயதிலும், பத்து மாசத்திலும் இருந்த தனது மகள்களின் வாழ்வு பாதித்துவிடும் என, கீழக்கரையிலிருந்து மண்டபம் சென்று, பத்து வயது மகள் பாத்திமாவை பேருந்து நிலையத்தில் அனாதையாக விட்டுவிட்டு கன்னியாகுமரி சென்றதையும் அந்த பாத்திமாதான் Francis ஆக தனக்கு உதவுகிறான் என்றும் எப்படி சொல்வார்? என்னே! இறைவனின் திருவிளையாடல்!!

1 COMMENT

  1. இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம்
    செய்துவிடல். இப்படித்தான் ஜேம்ஸால் கைவிடப்
    பட்ட அவரின் மகள் ஃபாத்திமா பிறகு ஃபிரான்சி
    ஸாகி கல்யாண விஷயத்தில் தன் தந்தைக்கு
    உதவியது. நல்ல கதை !

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

இனியில்லை கடன்!

4
சிறுகதை– நாமக்கல் எம்.வேலு ஓவியம்; தமிழ் அழைப்பு மணி சத்தம் கேட்டுப் போய் கவைத் திறந்து பார்த்தால், ராமசாமி வந்து நின்றார். சோமசுந்தரத்திற்கு அதிர்ச்சி.  ‘ என்ன இவன் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்கிறான்....

கட்டதுரைக்கு  கட்டம் சரியில்லை…

‘சிரி’ கதை - தனுஜா ஜெயராமன் ஓவியம்: பிரபுராம் அலாரத்தை தலையில் தட்டி நிறுத்தியபடி திடுக்கிட்டு விழித்த சுப்பு... கண்களை தேய்த்துக்கொண்டே சோம்பல் முறித்தார்… எழுந்து சென்று பிரஷை எடுத்தார். பிரஷ் ஸ்டேண்ட் தொபுக்கென விழுந்தது. சத்தம்...

ஐக்கியம்! 

2
எழுதியவர்:   அன்னக்கிளி வேலு ஓவியம்: தமிழ் பகுதி - 2 அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அம்மா போன் பண்ணியிருந்தாள். அவனுக்கு கல்யாணம் பண்ணவேண்டுமாம். ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு அவன் இளைத்தே போய்விட்டானாம். மதுரையிலிருந்து திருச்சிக்கு போன் பண்ணினால்...

பாசமழை

3
கொட்டும் மழையில் நடுங்கியபடி செல்லும் அந்த ஆம்புலன்ஸ் வண்டியில்  வடிந்து கொண்டிருக்கும் உயிரோடு போராடிக் கொண்டிருப்பவர் பரமசிவம். தீபாவளி மிகவும் மகிழ்ச்சியாகத்தான் கழிந்தது.பேரன் அருணோடு  பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தவர் தான்.  அடுத்த இரண்டு...

தேய்(ப்)பவர்கள்   

2
      “துணி வாங்கிட்டீங்களா…?” – சைக்கிளில் போகும் அவரை, வண்டியில் கடந்த இவன் கேட்டான். பின்னால் அடுக்கியிருக்கும் துணி மூட்டைகள் சாய்ந்துவிடக் கூடாது. அதுதான் முக்கியம். விழுந்தால் எல்லாம் மண்ணாகிப் போகும். வாஷ் பண்ணிய...