0,00 INR

No products in the cart.

காதல் முகவரி! – (தொடர்கதை)

தொடர்கதை
அத்தியாயம் – 1
கதாசிரியர் குறிப்பு:
வாழ்க்கைப் பாதையில் எத்தனையோ மனிதர்களைக் கடந்து வருகிறோம்.
அதில் பல சம்பவங்கள் நம் மனதில்
பல பாடங்களைக் கற்றுத் தருகின்றன
. அதேசமயம் ஓர் கதாசிரியர் மனதில்
அவை விதைகளாக விதைக்கப்படுகின்றன
. அப்படி, சுமார் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு
எங்கள் ஊரில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதுதான் இந்தக் கதை.
– சுசீலா:

காலைக் கதிரவன் தன் பொற்கிரணங்களால் அந்தக் கிராமத்தையே அழகாக்கிக் கொண்டிருந்தான்.

தூரத்தில் ஓர் குயிலின் இசைஇன்னும் பெயர் தெரியா பறவைகளின் சப்தம்சேவல்களின் தொடர் கூவல்பட்டிகளில் ஆடுகளின் கலகலப்புகழுத்து மணியோசையுடன் கன்றுகள் தாய் மடியைச் சேரும் இனிமையான காலைப்பொழுது. ஒரு கையில் உழவு மாடுகளையும் தோளில் கலப்பைகளையும் சுமந்து செல்லும் உழவர் பெருமக்கள்.

சுறுசுறுப்பான காலை நடை. வீதிகளைக் கடந்து தோட்டக்காட்டு பக்கம் செல்லும் வழி. கடைசியாய் மாடசாமியின் வீட்டைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

நாட்டாண்மை வீடு பெரிய மச்சு வீடு. அதையொட்டிய தோட்டக்காடு. தோட்டத்தின் முடிவில் ஓர் ஓட்டு வீடு. அதுதான் மாடசாமியின் அரண்மனை. பரம்பரையாய் நாட்டாண்மை வீட்டு ஏவல் வேலை செய்து வருபவர்கள் மாடசாமியின் மூதாதையர்.

மாடசாமியின் தாத்தா அதற்குக் காரணமான கதை ஒன்றையும் அடிக்கடி கூறுவார்.

ப்ப எல்லாம் நம்ம சனத்துக்குன்னு ஒரு தெரு உண்டு, ஊர் கடைசீல. அங்க வேற சாதி சனம் வராது. நமக்குன்னு எந்த நோக்கமும் ஆசையும் இல்ல. அவுக தோட்டத்த பாத்துக்கிறதும், ஆடு மாடுக மேய்க்குறதும்தான் நமக்கு வேலை. போகத்துக்கு போகம் சோளமும் கம்பும் அளப்பாக. அத வச்சுத்தான் சாப்புடுவோம். அப்புறம் அவுக தர்ற ஓரணா ரெண்டனாவ வச்சித்தான் மத்த செலவுக.

அப்படி இருக்கையில நம்ம நாட்டாம ஐயாவோட தாத்தா கதிர்வேலு ஐயா பட்டணத்துல பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு வந்தாரு. எல்லாரும் அவரப் பார்த்து ரொம்ப பயப்படுவாக. ஆனா, அவரு எங்கிட்ட ரொம்ப பாசமா இருப்பாரு. அவுக வீட்டுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாரு.

நா என்ன சாப்பிடறேனோ, அதுதான் இவனுக்கும் தரணும். என்னோட உயிர் சினேகிதன் இவன். இவன் நம்ம வீட்டுக்கெல்லாம் வருவான்இருப்பான்நாங்க பேசிட்டு இருப்போம். யாரும் தடை சொல்லக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாரு.

தவமா தவமிருந்து ரொம்ப வருஷம் கழிச்சி பொறந்தவரு கதிரு ஐயா. அதனால அவுகளும் கண்டும் காணாம இருந்துட்டாங்க.

பனை மரத்துல ஏறி நுங்கு பறிச்சி தருவேன். அப்புறம் எளனி பறிச்சிப் போடுவேன்.
நா மரம் ஏறுறத அதிசயமா பாப்பாரு. நான்தான் அவருக்கு நீச்சல் கூட கத்துக்கொடுத்தேன்.

அந்தக் காலத்துலயே இங்கிலீசுல எல்லாம் பேசுவாரு. நா, ‘ஆ’ன்னு பார்ப்பேன்.

என்னடா புரியலையான்னு உரிமையா என்னோட தோளத் தட்டி சிரிப்பாரு.

ஊரே எங்கள பார்த்து மூக்கு மேல வெரலு வைக்கும். ஒரு நா நல்ல மழை விடாம பெய்ஞ்சுது. ஊரே வெள்ளக்காடு. வெளியில தல காட்ட முடியல. அன்னைக்கு சாயங்காலமா மழை கொஞ்சம் அசந்த நேரமா பாத்து கதிரு ஐயாவ பாக்க ஓடினேன். சரியான காய்ச்சல்ல படுத்திருந்தாரு.

கண்ணயே தொறக்க முடியல. தலைவலி வேற மண்டய பொளக்குதுடான்னு சொன்னாரு.

வைத்தியரும் ஏதோ விசக்காய்ச்சல், வேளாவேளைக்கு மருந்து சாப்புட்டா ஒரு வாரத்துல சரியாயிடும்னு சொன்னாராம். அன்னைக்கு ராத்திரியே இசுவு (இழுப்பு) மாதிரி ஏதோ வந்துச்சாம். வைத்தியர் வர்றதுக்குள்ளேயே போய் சேர்ந்துட்டார். எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கும் கதிரு ஐயாவ பொணமா பாத்த உடனே எனக்கு உலகமே சுத்திடுச்சி. கண்ணு இருட்டிட்டு வந்து மயக்கமா விழுந்துட்டேன். ஊர்ல ஆளாளுக்கு ஒண்ணு பேசினாங்க.

ஆமாம்மாவழிவழியா ஒரு கட்டுப்பாடுன்னு எதுக்கு வைச்சிருக்கோம். அதெல்லாம் மதிக்காம நடந்ததாலதான் இப்படி அல்பாயுசுல போயிட்டான்.

உயிர் சினேகிதனாம். இப்ப உயிர் போயிடுச்சே. என்ன செய்வான். அந்த சினேகிதன் போன உசுர திரும்பவும் கொண்டு வந்துடுவானா?

சாதி சனம்னு எதுக்கு வைச்சிருக்கோம். இது அந்த தெய்வத்துக்கே பொறுக்கல போல இருக்கு.

கதிர் ஐயாவோட அப்பாவும் அம்மாவும் அழுத அழுக இன்னைக்கும் என்னால மறக்க முடியாது. ஊரே பேசிச்சு. ஆனா, பெத்த புள்ளைய பறி கொடுத்த துக்கத்துலயும் அவுக என்னை ஒரு வார்த்தை தப்பா பேசலைதிட்டலை.

அன்னைக்கு முடிவு செஞ்சேன் நான். இனிமே தலைமுறைக்கும் இவுக காலுக்கடியிலேயே வாழ்ந்து இவுகளுக்காகவே உழைக்கணும்.

ஒவ்வொரு முறை அவர் சொல்லும்போது, அவர் கண்கள் கலங்குவதைப் பார்க்கும்போது தன் நண்பன் மேல் அவர் வைத்திருந்த ஆழமான பாசத்தைப் புரிந்துகொள்ள இயலும்.

மாடசாமி இப்போது மூன்றாவது தலைமுறை.

நம்ம மாடசாமி பொஞ்சாதி என்னத்தான் போட்டு சமைக்குமோ தெரியலே. களி வாசனை மூக்க தொளைக்குது. இதுல சுண்ட குழம்பு வாசன வேற…”

அந்த வழியே வேலைக்குச் செல்பவர்களின் அன்றாட பேச்சு இது.

ஆமாண்ணே. மாடசாமி கொடுத்து வைச்சவன்ணே. ஒத்த ஆம்பள புள்ளயவும் பட்டணத்துல படிக்கப் போட்டுட்டான்.”

அடஅவனுக்கு என்ன வெவரம் தெரியும். அந்தப் பையன் நல்லா படிச்சதால வாத்திமாருங்கலாம் யோசன சொன்னாங்க.”

ஆமாண்ணேஅதென்னவோ முதுகலா படிப்பாம்.”

அட, பைத்தியக்காரா என்ன கலா கிலான்னு பொம்பள பேரெல்லாம் சொல்லிக்கிட்டு. அது முதுகலைப் படிப்பு. அதுதான் உசந்த படிப்பு. படிப்பு முடிச்சவுடனேயே அரசாங்க வேலையாம்.”

தங்களுக்குள் உற்சாகமாய் பேசியபடியே தோட்டத்தையும் அடைந்துவிட்டார்கள்.

சுற்றிலும் பசுவும் பச்சையுமாய் ஊரில் நல்லா செழிப்பு. பரபரப்பான தோட்ட வேலை. வேலைகளுக்கிடையே கிண்டலும் கேலியும், சிரிப்பும் சீண்டலுமாய் பொழுது சுவாரசியமாய்த்தான் போகிறது. இன்றைய அவர்களின் தலைப்பு செய்தி அடுத்த வாரம் வரவிருக்கும் அம்மன் கோயில் திருவிழா.

திர்பார்த்த திருவிழாவும் வந்துவிட்டது. காப்புக் கட்டி பெண்களும் குழந்தைகளும் பச்சை, மஞ்சள், சிவப்பு என பல வண்ண ஆடைகளில் வலம் வர, ஊரே வண்ணமயமானது.

திருவிழா, திடீர் கடைகள். மெகா சைஸ் மைசூர்பாகு, தேன்மிட்டாய், மிக்சர் என தெருவையே அடைத்து நின்றிருக்க, மற்றோர் பக்கமோ குழந்தைகளின் குதூகல சிரிப்புடன் ரங்க ராட்டிணம் சுற்றி வர, ரிப்பன், வளையல், கம்மல், கடைகள் மின்சார விளக்கொளியில் ஜொலிக்க, சொந்த பந்தங்களின் வருகையால் சிறியோர் முதல் பெரியோர் வரை மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு மாடசாமியின் மகன் ஆதவன் திருவிழாவுக்கு வருகிறான். மாடசாமியின் ஓட்டு வீடு ஒட்டடை அடிக்கப்பட்டு புதிதாய் சுண்ணாம்பு பூசப்பட்டு திடீர் மாளிகை போல ஆதவனின் வரவுக்காகக் காத்திருக்கிறது. மாடசாமியின் மனைவி கண்ணம்மா காலையிலிருந்து வீட்டுக்கும் வாசலுக்கும் நூறு தடவையாவது நடந்திருப்பாள்.

கண்ணம்மாஓர் இடத்துல உக்காரேன். டவுன் பஸ்ஸு வர இன்னும் நேரமிருக்கு. ஏன் இப்படி நடந்து நடந்து உடம்ப கெடுத்துக்குற” தன் மனைவியை செல்லமாய் கடிந்துகொண்டான் மாடசாமி.

ம்க்கும்நீங்க போன மாசம் கூட போயி நம்ம புள்ளய பாத்துட்டு வந்தீக. நா பாத்து எத்தன மாசம் ஆச்சி. எனக்கு மட்டும் ஆதவன பாக்க ஆசை இருக்காதாக்கும்” என கண்ணம்மா பொய்க் கோபம் காட்ட,

சரிசரிநா சொன்னா கேக்கவா போற. நா அப்படியே டீக்கடை வரைக்கும் போயிட்டு வாரேன்” என்றபடி துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வெளியேறினான் மாடசாமி.

(தொடரும்)

3 COMMENTS

  1. அருமையான ஆரம்பம். அடுத்தடுத்த அத்தியாயங்கள் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்

சுசீலா மாணிக்கம்
-சுசீலா மாணிக்கம் பாண்டிய நாடு (திருநெல்வேலி) பூர்வீகமாய் கொண்டிருந்தாலும் - சேரநாடு (தர்மபுரி) பிறந்து வளர்ந்து - சோழநாடு (திருச்சி) திருமணம் செய்துகொண்ட தமிழ் பற்று மிக்க எழுத்தாளர். தன் கல்லூரிக் காலத்து முதலே தமிழ்த்தாயின் செல்ல மகளாய் வளர்ந்தவர். திருமணத்திற்குப் பின், குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க, எழுதுவதை சற்றே மறந்திருந்த இவரை, மங்கையர் மலர் மீண்டும் கண்டெடுத்து ஊக்கப்படுத்தியது. சமுதாய உயர்வு கண்டு மகிழ்ச்சியில் சுழல்வதும், இழிவுகளைக் கண்டு சாட்டையை சுற்றுவதுமாய் நடைபோடுகிறது இவர் பேனா.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

பறக்கும்  பாவைகள்!

0
‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். பகுதி - 7 ரஃபேல் போர் விமானத்தினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லக்...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி... பகுதி -10 மங்கையர் மலர் விவித பாரதியில் இன்று நாம் கேட்க விரும்பும் பாடல்... 1964 ஆம் ஆண்டு வந்த தேவர் பிலிம்ஸின் "வேட்டைக்காரன் "படத்தில் கேவி மகாதேவன் இசையில் கவியரசு...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

 பாகம் - 4   -சுசீலா மாணிக்கம்   திருக்குறளின் நான்காம் அதிகாரம் 'அறன் வலியுறுத்தல்' "அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது  பொன்றுங்கால் பொன்றாத் துணை" பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப்...

இனியில்லை கடன்!

0
சென்ற வார தொடர்ச்சி... சிறுகதை: நாமக்கல் எம்.வேலு ஓவியம்: தமிழ் அதற்கப்புறம் ராமசாமியிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை.  எப்போது பணம் கொடுப்பாய் என்று எப்போவும் போல சோமசுந்தரமும் போன் போட்டு கேட்கவுமில்லை.  ஆபரேசன் நல்லபடியாய் நடந்ததா,...

குரு அருள் திரு அருள்!

பகுதி -2 -நளினி சம்பத்குமார் ஓவியம்; வேதா அனைத்தையும் அருளிடும் குருவின் பார்வை சமஸ்க்ருதத்தில் சுபாஷிதம் அதாவது நல்ல அர்த்தங்கள் பொருந்திய வாக்கியம் ஒன்று உண்டு. குருவின் பார்வை என்பது 1011 பார்வைக்குக் கூட ஈடாகாது, அதற்கும்...