0,00 INR

No products in the cart.

கும்பிடுவோம் குழந்தைகளை…

கட்டுரை : மாலதி சுந்தரராஜன், திருவனந்தபுரம்

லைப்பு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்… குழந்தைகள் கும்பிட வேண்டியவர்கள்தான். நாம் பல விஷயங்களை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது! ‘குழந்தைகள் தினம்’ என்று கொண்டாடி மகிழ்கிறோம். உண்மையான மகிழ்ச்சி எதில் இருக்கிறது? அவர்கள் நல்ல குழந்தைகளாக வளரும்போதுதான். ‘உன்னை மெச்சி ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி…’ என பாடவில்லையா பாரதி?

தன் குழந்தை நல்ல பெயரெடுக்க ஒவ்வொரு பெற்றோரும் ஆசைப்படுவது நல்ல விஷயம் தான். ஆனால், சிலசமயம் அது மனநோய்க்கு வித்திட்டு விடுகிறது. குழந்தைகளை நல்ல பண்புடனும் பாசத்துடனும் வளர்ப்பது ஒரு கலை என்றே கூறலாம். கவனமாகச் செதுக்கப்பட வேண்டிய சிற்பங்கள் அவர்கள்!

ஒரு சிற்பியின் சிறிய கவனக்குறைவினால் கூட சிற்பத்தின் அழகு கெட்டு விடுகிறதல்லவா?அதுபோல்தான், நம் சிறு அலட்சிய மனோபாவத்தினால் குதூகலமான குழந்தைப் பருவம் ஒளி குன்றி விடுகிறது. பெற்றோர்தான் குழந்தைகளின் முன்மாதிரி. என்ன செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? என்று பெரியோர்களைப் பார்த்து கற்றுக்கொள்கிறார்கள் குழந்தைகள். அவர்கள் முன் சண்டையிட்டுக் கொள்வது, பிறரைப் பற்றி குறை பேசுவது, தீய வழக்கங்களில் ஈடுபடுவது இதெல்லாம் எதிர்மறை விளைவுகளை உண்டாக்குகின்றன. அன்பு, பரிவு என்ற உணர்வுகளோடு வளரும் குழந்தைகள் நேர்மறை சிந்தனையுடன் வளர்கின்றனர். சமூகத்தில் நல்ல பெயரையும் பெறுகின்றனர்.

குழந்தைகளிடம் மரியாதையான நடத்தையை எதிர்பார்க்கும் பெற்றோர், முதலில் அவர்கள் அனைவரிடமும் மரியாதையோடு நடந்து கொள்ளுதல் அவசியம். சிலரை மதிப்பது, சிலரை அலட்சியப்படுத்துவது என்று நடந்துகொண்டால், குழந்தைகளுக்கு மரியாதை பற்றிய மதிப்பீட்டை உருவாக்கிக்கொள்வதில் குழப்பம் வரும். வீட்டில் வேலை செய்பவர்களிடமும், வயதில் மூத்தோரிடமும் இதமாகப் பேசும்போது, அந்த நற்பண்பு குழந்தைகளிடமும் பிரதிபலிக்கும். இல்லையென்றால், ‘மொளச்சு மூணு எல விடல; பேசறதப்பாரு’ என்ற சொல் கேட்கணும்!

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு உண்டு பண்ண வேண்டும். நல்ல புத்தகம் சிறந்த நண்பன். ஆகவே, நல்ல புத்தகங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். வாசிக்கும் பழக்கம் உள்ள குழந்தைகள் நல்ல சிந்திக்கும் திறன் உள்ளவர்களாகவும், கற்பனை சக்தி உள்ளவர்களாகவும் திகழ்கிறார்கள்.

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்பட, அவர்களது சின்னஞ்சிறு வயது முதலே நிறைய கருத்துமிகு கதைகளை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். குட்டிக் கதைகளைக் கேட்டு கேட்டு அவர்கள் வளரும்போது, புத்தக வாசிப்புப் பழக்கமும் இயல்பாகவே ஏற்படும்.

உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் நான்கு பாணிகளில் ஒன்றைப் பின்பற்றுகின்றனர்.

முதல் பாணி : ‘ஆரம்பத்திலேயே கண்டுச்சு வளர்க்கணுங்க…’ என்று தத்துவம் பேசும் பெற்றோர். ‘நான் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும்’ என்று மிரட்டிப் பணிய வைப்பது. இதனால் அக்குழந்தை முரட்டுத் தனமாக வளர்கிறது. அது மட்டுமல்லாமல், சொந்தமாக எந்த முடிவையும் எடுக்கும் திறன் இல்லாமல் போய்விடும்.

இரண்டாவது பாணி : குழந்தை எள் என்று சொன்னால் எண்ணையாக நிற்பது! எது கேட்டாலும் வாங்கித் தருவது, பிடிவாதம் பிடிப்பதற்கெல்லாம் ஈடு கொடுப்பது என்று அதிகச் செல்லம் கொடுத்து குட்டிச்சுவராக்கும் பெற்றோர். இதனால் எதையும் தன் பிடிவாதத்தால் சாதித்துக்கொள்ளும் குணம்தான் தலைதூக்கி நிற்கும்.

மூன்றாவது பாணி : குழந்தை வளர்ப்பில் பங்குகொள்வதே இல்லை சில பெற்றோர். ‘சித்தம் போக்கு சிவம் போக்கு’ என்று விட்டு விடுவது. அதிகம் அலட்டிக்கொள்ளாதவர்கள் இவர்கள். வாழ்க்கையைப் பற்றி ஒரு நோக்கமில்லாமல் வளர்கிறது இவர்களுடைய குழந்தைகள். திக்குத் தெரியாத காட்டில் மாட்டிக்கொண்ட மான்களைப் போல் இக்குழந்தைகள் பரிதவிக்கும்.

நான்காவது பாணி : உறுதியான பெற்றோர். தங்கள் குழந்தைகளின் அறிவுத் திறமையை நன்கு அறிந்து கொண்டு, அதற்கேற்றாற்போல் அவர்களை செதுக்குவது. ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரண, காரியங்களைச் சொல்லி வளர்ப்பது. இவர்களுடைய குழந்தைகள் திறமைசாலிகளாக வளர்கின்றன. தன்னுடைய பலம், பலவீனம் இரண்டையும் சீர்தூக்கிப் பார்க்கும் திறனும் கிடைக்கும்.

பொதுவாக, பெற்றோர்கள் செய்யும் தவறு என்னவென்றால், ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையுடன் ஒப்பிட்டுப் பேசுவது. இதனால் ஒருவித பகைமை உணர்ச்சிக்கு பெற்றோர்களே வித்திட்டு விடுகிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான திறமை இருக்கும். அதைக் கண்டுபிடித்து, சரியான விதத்தில் ஊக்குவிக்கும்போது,

குழந்தைகள் ஒளிர்விடுகிறார்கள்! அவர்கள் செய்யும் சிறிய காரியங்களையும் பாராட்ட வேண்டும். தட்டிக்கொடுத்து வளர்க்கும்போது அவர்களின் தன்னம்பிக்கை வளர்கிறது. தினமும் அவர்களுடன் செலவழிக்க நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியம்.

உடல் நலத்துடன், மன நலமும் பேணிக் காப்பது மிக முக்கியம். அறிவியல் ஓட்டத்துடன் நாமும் சேர்ந்து ஓடவேண்டிய கால கட்டத்தில் வாழ்கிறோம். இதில் குழந்தைகள் ஆரோக்கியமான சூழ்நிலையில் வளர்வது முக்கியமாகக் கருதப்படுகிறது. நிதானமாக யோசித்துச் செயல்படுவோம்! குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

————————————————————————————————–

(அன்புப் பெற்றோர்களே, குழந்தைகள் தினத்தையொட்டி நமது கல்கி ஆன்லைன் வலையொளி (Podcast) பகுதியில் முத்தான மூன்று கதைகளைச் சொல்கிறார் சேலம் சுபா. இந்தக் கதைகள் நவம்பர் 14, காலை 10.00 மணிக்கு www.kalkionline.com இணையதளத்தில் வலையொளி வடிவில் பதிவேற்றம் செய்யப்படும். நீங்களும், உங்கள் வீட்டு குட்டிச் சுட்டிகளும் இணைந்து கேட்டு மகிழலாம்.)

————————————————————————————————–

1 COMMENT

  1. குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பொறுப்பான செயல்பாடு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை ஆசிரியர் அழகாக விளக்கியுள்ளார். வாழ்த்துக்கள்.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...

வீட்டுப் பணி – அலுவலகப் பணி பேலன்ஸ் செய்வது எப்படி?

Ten Tips For Successful Work-Life Balance -உஷா ராம்கி அந்தரத்தில் நன்கு இழுத்து இறுக்கமாகக் கட்டியிருக்கும் கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு கீழே விழாமல் நல்லபடியாக நடந்து...

ஸ்ரீரங்கம் (அரசு) பெண்கள் மேனிலைப் பள்ளி – மல்லுக்கட்டி நிற்கும் மகளிர்!

 -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. முன்பெல்லாம் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு இரவு முழுவதும் அந்தக் கடை முன் வரிசையாக உட்கார்ந்து காத்திருப்பார்கள். அது ஒரு காலம். இப்போது அங்கு கூட யாரும் காத்திருப்பது இல்லை. ஆனால்...

இனிதே நடந்தேறிய விக்கி- நயன் திருமணம்!

-ஜெனிபர் டேனியல் ***************************************************************** காதலி நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்! சுமார் ஏழு ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடிக்கு 09.06.2022 அன்று மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. துள்ளலில் விக்கி! திருமண தினத்தன்று...