0,00 INR

No products in the cart.

லஞ்ச் டைம் லஞ்சம்!

பேட்டி : எஸ்.சந்திரமௌலி

அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகி, அமோக வரவேற்பினைப் பெற்றுள்ளது த.செ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள திரைப்படமான ஜெய் பீம். படத்தின் கதாநாயகன் வக்கீல் சந்துரு, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் திரை பிரதிபலிப்பு. அவர் வழக்கறிஞராகக் கையாண்ட, இருளர் இனத்தவரின் உரிமையை நிலைநாட்டிய ஒரு வழக்குதான் படத்தின் கதை. இத் திரைப்படத்தில் பிரதிபலித்த சந்துருநிஜ வாழ்வில் சாதனைகள் பல புரிந்த வழக்கறிஞர் நீதிபதி சந்துருஇந்தக் கண்ணோட்டத்தில் நீதியரசர் சந்துருவின் மனைவி கே.பாரதி நமக்கு அளித்த பேட்டி

அவருடைய சொந்த ஊர் நாச்சியார்கோவில். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ஸ்ரீனிவாசன். வீட்டில் அவரை செல்லமாக சந்துரு என்றுதான் கூப்பிடுவார்கள். உறவினர் ஒருவர் அவரை பள்ளியில் சேர்க்கும்போது சந்துரு என்ற பெயரைக் கொடுத்துவிட்டார். அந்தப் பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.

அவர் தொழிலாளர்கள், விளிம்பு நிலை மக்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் நலனில் ரொம்ப அக்கறை கொண்டவர். மகாத்மா காந்தியின் சத்திய சோதனையைப் படித்து, தனது வாழ்வின் கோட்பாடுகளை நிர்ணயித்துக் கொண்டவர். இன்றைக்குக் கூட, தன் வேலைகளைத் தானே செய்துகொள்ளவேண்டும் என நினைப்பவர். அவர் வக்கீலாக பிராக்டீஸ் செய்யத் தொடங்கிய காலத்தில் இருந்தே தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகளை நடத்துவதில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். அதன் மூலமாக பெரிதாக பணம் சம்பாதிக்க முடியாது என்றாலும், அதில் அவருக்கு மிகுந்த மன திருப்தி கிடைத்தது. ஒரு முறை அவர் பெரிதும் மதிக்கும் நீதிபதி ஒருவரே கேட்டுக் கொண்டபோதும், ஒரு நிறுவன முதலாளியின் வழக்கை ஏற்று நடத்த மறுத்துவிட்டார்.

அவரது வாழ்க்கையை ஒரு பயோ பிக்சராக சில வருடங்களுக்கு முன்னால் எடுக்க விரும்பினார் ஒரு பத்திரிகையாளராக எங்களை நன்கு அறிந்த த.செ.ஞானவேல். ஆனால், அவர், ‘சினிமாவெல்லாம் வேண்டாம்என்று சொல்லி மறுத்துவிட்டார். அவ்வளவு ஏன்? அவர் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நாளன்று, அவரது நாற்பது ஆண்டு கால சட்டத்துடனான வாழ்க்கையின் கடைசி தினத்தை, ஞானவேல் மூலமாக நான் ஆவணப்படுத்த விரும்பினேன். அதற்கும் அவர் அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், இருளர் இன மக்களின் நலனுக்காக செயல்பட்டுவரும் கல்யாணி அவர்களின் ஆலோசனையின்பேரில் அவர் கையாண்ட, இருளர் சம்பந்தமான ஓர் வழக்கை மட்டும் திரைப்படமாக்குவது என முடிவானது.

‘ஜெய் பீம்’ படத்திலிருந்து ஒரு காட்சி…

வரது நிஜ வாழ்க்கையின் பல அம்சங்களை திரையில் சூர்யா பிரதிபலித்திருக்கிறார். தலை நிறைய முடி, தாடி, திடீரென குரலை உயர்த்திப் பேசுவது, தரையில் புத்தகங்கள் சூழ உட்கார்ந்துகொண்டு வேலை பார்ப்பது, கடைகளில் பணம் கொடுக்கும்போது, குழந்தைகளின் கையால் கொடுக்கச் செய்வது என்று பல உதாரணங்களைச் சொல்லலாம்.

ஜனநாயக மாதர் சங்கத்தின் செயல்பாடுகளில் நான் பங்கேற்று வந்த நாட்களில், அவர் பேசிய பல நிகழ்ச்சிகளுக்கு நான் சென்றதுண்டு. அவரது தெளிவான சிந்தனை, பேச்சு எல்லாம் என்னைக் கவர்ந்தாலும், அவரைத் திருமணம் செய்துகொள்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. சிறிது காலம் கல்கி நிறுவனத்தில் நான் பணியாற்றியபோது, கல்கிக்காக அவரை பேட்டி காணச் சென்றேன். பேட்டி அளித்தாலும், தனது புகைப்படத்தைத் தர மறுத்துவிட்ட அவர் மீது எனக்கு எரிச்சல்தான் ஏற்பட்டது.

அவருடைய ஒரு நிகழ்ச்சியின்போது, எனக்கு மிக நெருக்கமான பத்மினி கோபாலன் உடன் இருந்தார். அப்போது பத்மினி திடீரென்று, “நீ ஏன் சந்துருவை கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது?” என்று கேட்டபோது நான் அதிர்ச்சி அடைந்து, “என் அம்மா வயதுள்ள நீங்கள் என் மேல் கொண்ட அக்கறையால் இப்படிக் கேட்கிறீர்கள்! இந்தப் பேச்சை இத்துடன் விட்டு விடுங்கள்!” என்று சொல்லி முறைத்தேன். அடுத்து, இன்னும் சில பொது நண்பர்களும் இதையே வலியுறுத்த, நாங்கள் இருவரும் எளிய முறையில் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். விஷயம் அறிந்த ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவியான மைதிலி சிவராமன், தன் வீட்டில்தான் எங்கள் திருமணத்தை நடத்த வேண்டும் என அன்புக் கட்டளை இட்டுவிட்டார். இரு தரப்பு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்ள, சேத்துப்பட்டில் இருந்த மைதிலி சிவராமன் வீட்டில் எங்கள் பதிவுத் திருமணம் எளிமையான முறையில், 14 செப்டம்பர் 1991 அன்று நடைபெற்றது.

கணவர் சந்துருவுடன் கே.பாரதி

திருமணம் முடிந்த கையோடு அவரைப் பற்றி இன்னும் நன்றாகப் புரிந்துகொண்டேன். பகலில் நீதிமன்றம், மாலையில் கட்சிக்காரர்களை சந்தித்துவிட்டு இரவு வீடு திரும்ப ஒன்பது, ஒன்பதரை மணி ஆகிவிடும். அவரது தொழில் ஈடுபாடு, சமூக அக்கறை மெச்சத் தக்கது. அவருக்கு நானும் பிரஷர் கொடுக்கக் கூடாது என முடிவு செய்தேன். குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அவருக்கு நேரமிருந்தால் இருவருமாக செல்வது; இல்லையெனில் நான் மட்டும் சென்று வருவது என வைத்துக் கொண்டோம். அவர் சென்சிடிவான கேஸ்களை நடத்தும்போது, உறவினர்களும் நண்பர்களும், “ரொம்ப ரிஸ்க் எடுத்துக்கொள்கிறாரே! ஜாக்கிரதை!” என எச்சரிப்பார்கள். சில சமயங்களில் மிரட்டல் கடிதங்கள் வரும். ஆனால், அவர் இதற்கெல்லாம் அசர மாட்டார்.

ரு நாள் மாலை அவர் வீடு திரும்பியபோது, டிபன் பாக்ஸில் மதிய உணவு அப்படியே இருந்தது. “லஞ்ச் சாப்பிடவில்லையா?” என்று கேட்டபோது, “சாப்பிட நேரமில்லை!” என்றார். “கையில் கொண்டு போன சாப்பாட்டை சாப்பிடக் கூட நேரமில்லாதபடி, அப்படி என்ன பிசி?” என்று கேட்டபோது, “கோர்ட் மதிய இடைவேளையின்போது ஒரு கேசில் எனக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பெரும் தொகையோடு போலீஸ்காரர்கள் என் அலுவலகத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களிடம் சண்டை போட்டுவிட்டு, அது பற்றி நீதிபதியிடம் புகார் செய்ய சென்றுவிட்டேன். ஆகவே, எனக்கு சாப்பிட நேரமில்லை!” என்று அவர் பதிலளித்தது என்னை அதிர வைத்தது. நீதிபதியின் அறிவுரைப்படி, போலீஸ் லஞ்சம் கொடுக்க முயற்சித்ததை ஓப்பன் கோர்ட்டில் சொன்னதும், அது பரபரப்பானதும் தனிக்கதை.

சினிமா என்ற வெகுஜன மீடியாவின் மூலமாக இருளர் இன மக்களின் பாதிப்புகள் மக்களின் கவனத்துக்கு வந்துள்ளது. படம் பார்த்த பலர் போன் செய்து, வெறுமனே பாராட்டு தெரிவிக்காமல் சமூக உணர்வுடன், ‘நாங்கள் ஏதாவது செய்ய விரும்புகிறோம். என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம்?’ என அக்கறையோடு விசாரிக்கிறார்கள். அந்த வகையில், ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி வெற்றி கண்டது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

உலகின் மிக உயரமான ஸ்ரீ முத்துமலைமுருகன்!

வைகாசி விசாகம் சிறப்பு! -சேலம் சுபா    உலகின் மிக உயரமான முருகன் சிலை எங்குள்ளது எனக் கேட்டால் உடனே மலேசியா பத்துமலை என்று சொல்லியிருந்த நாம், இனி அதை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ள நம் தமிழ்நாட்டில்...

மாதவிடாய் ஆலோசனை மையம்…  கிராமாலயா திருச்சி…!!! 

MENSTRUAL  CAFE - (தென்னிந்தியாவின் முதல் மாதவிடாய் ஆலோசனை மையம்) -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. மாதவிடாய் என்று இயல்பாக போகிற போக்கிலோ, ஏன் வெளிப் படையாகவோச் சொல்வதற்குக் கூட இன்னும் நம் சமூகம் தயாராகவில்லை என்பது...

சகுனியும் நானே…  பாஞ்சாலியும் நானே…  நாகக் கன்னியும் நானே…   திரௌபதியும் நானே…  

- ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு         லால்குடியில் வசித்து வரும் பன்முகக் கலைஞர் லால்குடி முருகானந்தம். அவருக்கு வயது ஐம்பத்தி நான்கு. நாடகம், இசைச் சொற்பொழிவு, ஆன்மிகச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்து எனப் பல்துறைகளிலும்...

கந்து வட்டியிலிருந்து மீட்போம் பெண்களின் சுயம் காப்போம்!

-சேலம் சுபா  தாங்கள் நடத்தும் என் ஜி ஓ மூலம் பெண்கள் சுயதொழில் செய்து பொருள் ஈட்டவும், தவறு செய்யும் கணவனை தட்டிக்கேட்டுத் திருத்தவும் தேவையானத் துணிவை பெண்களுக்கிடையே மூட்டி வருகின்றனர் கொடைக்கானலைச் சேர்ந்த டேவிட்...

இல்லத்தரசியின் கனவு!

முயன்றால் எதுவும் முடியும்...     - சேலம் சுபா நல்லதொரு குடும்பம் அமைந்த பெரும்பாலான  பெண்கள் தங்களிடம் திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஆர்வமின்றி குடும்பம் எனும் பாதுகாப்பான கூட்டுக்குள் இருந்து வெளியே வர விரும்ப...