0,00 INR

No products in the cart.

சங்கடம் தரும் சந்திப்புகள்; சமாளிக்க சில யோசனைகள்! – 2

– ஜி.எஸ்.எஸ்.
– ஓவியம்: சுதர்ஸன்

‘விழிப்புணர்வு’ விஜயமகாலட்சுமி

கொரோனா தன் கோர முகத்தை வூஹானிலிருந்து காட்டத் தொடங்குவதற்கு முன்பாகவே விஜயமகாலட்சுமி இப்படிதான் இருந்தார் என்பதை மனதில் கொண்டு மேலே படிக்கவும்.

உறவினர் ஒருவர் நீண்ட நாட்களாக மருத்துவமனையில் தங்கும்படி ஆகிவிட்டது. அவரைப் பார்த்துவிட்டு வர நான்கைந்து பேர் கிளம்பினோம். அந்த நான்கைந்தில் விஜயமகாலட்சுமி யும் ஒருவர்.

எங்களில் ஒருவர் தனது எட்டு வயது மகனையும் மருத்துவமனைக்கு அழைத்துவரப் போவதாகக் குறிப்பிட்டதும், விஜயமகாலட்சுமி பதறிவிட்டார். ‘‘என்ன சார் இது! சின்னக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைச்சுட்டு வரப்போறீங்களா? ஏதாவது தொத்து வியாதி அவனுக்குப் பரவிடாதா?’’ என்றார். அவர், இவர் கூறியதை ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், ‘எதற்கு வம்பு’ என்று தோன்ற, மகனை மருத்துவமனைக்கு அழைத்து வரவில்லை. ஆனால், சிக்கல் அதோடு தீரவில்லை.

மருத்துவமனையில் நண்பர் அட்மிட் ஆகியிருந்த வார்டு மூன்றாவது தளத்தில் இருந்தது. தயாராக நின்றுகொண்டிருந்த லிஃப்டை நோக்கி நாங்கள் நகர்ந்தபோது, விஜயமகாலட்சுமி எங்களைத் தடுத்தார். லிஃப்டில் நோயாளிகளும் சென்று வருவார்களாம். அவர்களின் மூச்சுக் காற்று அவர்கள் வெளியேறிய பிறகும் உள்ளுக்குள்ளேயே சுழலுமாம்.

வேறு வழியில்லாமல் படியேறிச் சென்றோம். படியின் இரு பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருந்த கைப்பிடியைப் பற்றியபடி நாங்கள் மேலே ஏறியதைப் பார்த்து விஜய மகாலட்சுமி மீண்டும் அதிர்ச்சியடைந்தார். ‘‘உங்க ஒருத்தருக்குக் கூடவா முன்னெச்சரிக்கை இல்லை? எவ்வளவு பேர் இந்தக் கைப்பிடிகளிலே கையை வச்சிருப்பாங்க! எவ்வளவு பாக்டீரியாவும், வைரஸும் இதிலே இருக்கும்!’’ என்றார்.

நோய்வாய்ப்பட்டிருந்தவரைப் பார்த்தபோது மிகவும் அக்கறையாக அவரைப் பற்றி விசாரித்தாலும், கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டுதான் அதைச் செய்தார் விஜயமகாலட்சுமி.

இதைப் படித்துவிட்டு அவர் மனிதாபிமானம் அற்றவர் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. மிகமிக அதிகமான ஜாக்கிரதை உணர்வு கொண்டவர். அந்த உணர்வு பிறரிடமும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவர். அதுதான் சிக்கல்.

ஒரு நாள் அவரது தோழி புதிதாக ஒரு கைப்பையை எடுத்து வந்திருந்தார். பெருமை பொங்க அதை விஜயமகாலட்சுமியிடம் காட்டினார். ‘‘நல்லா இருக்கு… ஆனால், இதை எங்கேயாவது தொலைச்சுட்டா என்ன செய்வே? யாராவது நல்லவங்க கையிலே கிடைத்தால் அதை உன்னிடம் கொண்டு வந்து கொடுக்க உன் முகவரி அவங்களுக்குத் தெரிய வேண்டாமா?’’ என்றார் விஜயமகாலட்சுமி.

அந்தத் தோழி பெருமை பொங்க, ‘‘ஒரு சின்னத் தாளிலே என் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணை எல்லாம் எழுதி இந்தக் கைப்பையிலே வச்சுருக்கேன்’’ என்று ஞான ஒளி வீச பதிலளித்தாள். விஜயமகாலட்சுமியை மடக்கிவிட்ட கர்வம் அவளுக்கு.

ஆனால், விஜயமகாலட்சுமி திருப்தியடையவில்லை. ‘‘ஏதோ ஒரு இடத்தில் இந்தத் தகவலை வச்சாப் போதுமா? நான்கு பிரதிகள் எடுத்து கைப்பையின் ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒன்றை வை’’ என்று கட்டளையிட்டார் விஜயமகாலட்சுமி.

வானம் கருத்திருக்காது. ‘இன்று மழை வரும்’ என்று எந்த வானிலை அறிக்கையும் கூறியிருக்காது. என்றாலும் மழைக்காலம் என்று நாம் அறியப்பட்ட மாதங்கள் வந்து விட்டால் தினமும் கையில் குடையுடன்தான் புறப்படுவார் விஜயமகாலட்சுமி. கோபத்துடன் அம்மா அந்த இடத்திலிருந்து நகர்ந்தார். நல்லவேளையாக அவருக்குத் தெரியாது விஜய மகாலட்சுமி, ‘எதற்கும் இருந்தால் நல்லது’ என்ற கோணத்தில் ஒரு ரெயின் கோட்டையும் பையில் மடித்து வைத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறார் என்பது!

சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பிறகு விஜயமகாலட்சுமியின் அதீத ஜாக்கிரதை உணர்வு எல்லைக் கடந்தது. லேசாகத் தூறல் போட்டால் கூட, கீழே இருக்கும் பொருட்களை எடுத்துப் பரணில் வைக்கத் தொடங்கி விடுவாள். பீரோவின் கீழ் இரண்டு தட்டுகளில் இருக்கும் சாமான்களையெல்லாம் மேல் தட்டுகளில் அடைப்பாள். மின்னணுப் பொருட்களையெல்லாம் முதல் மாடிக்குக் கொண்டு சென்று விடுவாள். முக்கியமான ஆவணங்களையெல்லாம் இரண்டு பிரதிகள் எடுத்து இரண்டு வங்கிகளில் தன் பெயரில் துவக்கியுள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருக்கிறாள். (ஒரு வங்கியில் ஏதாவது அசாம்பாவிதம் நடந்தால்கூட, இன்னொன்றிலே பாதுகாப்பாக இருக்குமே.)

கிளி ஜோதிடம், சோழி ஜோதிடம், கைரேகை போன்றவற்றை அடிக்கடி பார்த்துக் கொள்வாள். ஏதாவது ஒன்றிலாவது அவளுக்கு நேரம் சரியில்லை என்றோ, கவனமாக இருக்க வேண்டுமேன்றோ, பரிகாரம் தேவை என்றோ கூறுவார்கள். அவ்வளவுதான், நம் விஜயமகாலட்சுமி புதிய உத்வேகத்துடன் தன் முன்னெச்சரிக்கைகளைப் பல மடங்கு அதிகப்படுத்திக் கொள்வாள்.

உங்களில் சிலருக்கு விஜயமகாலட்சுமியை பாராட்டத் தோன்றியிருக்கலாம். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் இந்த கோவிட் யுகத்தில் தேவைதான் என்று கூறலாம். ஏன், விஜய மகாலட்சுமியை பார்த்து சில பாராட்டு வார்த்தைகள் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூட நினைக்கலாம். ஆனால், அது இயலாத காரியம்.

நான்கு வாரங்களுக்கு முன் இரு முறை இருமல் வந்ததால் கொரோனா சோதனை செய்து கொண்டார் அவர். நெகட்டிவ் என்றுதான் ரிசல்ட் வந்தது. அவருக்குத் தெரிந்த ஒருவருக்கு முதலில் நெகட்டிவ் என்று வந்து பிறகு பாசிட்டிவ் என்று வந்ததால், எதற்கும் குவாரண்டைனில் இருப்போம் என்று தீர்மானித்தார். ஜாக்கிரதை உணர்வு காரணமாக பதினான்கு நாட்கள் என்பதை நாற்பத்தொரு நாட்களாக நீடித்துக்கொண்டிருக்கிறார். அதனால் என்ன, செல்போனில் பாராட்டலாமே என்று முயற்சி செய்ய வேண்டாம். செல்போன் ஸ்விச்ட் ஆஃப்!

நோபல் பரிசு பெற்ற டேனியல் கனேமேன் என்பவர் ஒரு மனவியலை சுட்டிக்காட்டுகிறார். ஒரு ரிஸ்க் குறித்து மனதில் எடைபோட்டுப் பார்க்கும்போது அதில் கிடைக்கக்கூடிய லாபங்களை விட அதனால் ஏற்படும் நஷ்டங்களைத்தான் மனம் பெரிதாக எண்ணுமாம். ஒருவேளை தவறாகி விட்டால் என்ற கேள்வி நம் மனதை அலைக்கழிக்கும் அளவுக்கு, ஒருவேளை அது சரியாகி விட்டால் என்ற கேள்வி அத்தனை மன அழுத்தம் கொடுப்பதில்லையாம்! எனவே, எதிர்மறை எண்ணங்களை நாம் அதிகமாக்கிக் கொள்கிறோம்.

‘திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றால்’ என்ற கோணத்தில் நம் மனம் தொடர்ந்து ஈடுபடுவதை ‘catastrophizing’ என்பார்கள்.

ஒரு ரிஸ்கான செயலை நம்மால் கையாள முடியும் என்பதில் நம்மில் பலரும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதில்லை. இதனால் புதிய சவால்களை நாம் தவிர்க்க விரும்புகிறோம்.

ஒன்றைச் செய்தால் என்னென்ன சிக்கல்கள் வரும் என்று யோசித்துப் பார்க்கும் நாம், அதைச் செய்யாவிட்டால் என்னென்ன சிக்கல்கள் வரும் என்பதை சிந்திப்பதில்லை.

நம் எல்லோருக்குமே ஜாக்கிரதை உணர்வு என்பது ஓரளவுக்கு இருக்கும். இருட்டான சாலையில் இரவில் தனியாகச் செல்லும்போது வேண்டாத கற்பனைகள் எட்டிப்பார்ப்பது இயல்பு.

ஆனால், எதுவுமே எப்போதுமே தப்பானதாகவே நடக்கும் என்கிற பயம் தவறானது. உண்டாகும் பயங்களில் ஒருசில உண்மையாக நிகழ்ந்து விட்டால் அதையே மனம் பிடித்துக் கொண்டு மேலும் மேலும் எதிர்மறை எண்ணங்களையே நினைத்துக் கொண்டிருக்கும்.

எதைப்பற்றியாவது எதிர்மறையாக நினைக்கும்போது, ‘அதிகபட்சம் என்னவாகிவிடும்?’ என்று யோசித்து, அதற்கு ஓரளவு தயாராக மனதை வைத்துக்கொண்டால் பல மன உளைச்சல்களிலிருந்து தப்பிவிட முடியும்.

மிக அதிகமான முன் ஜாக்கிரதை உணர்வு கொண்டவர் உங்களுக்கு உறவாகவோ, நட்பாகவோ அமைந்து விட்டால் அவர்களைச் சிறுமைப்படுத்தாதீர்கள். சில சமயம் அவர்களின் அதிகப்படி முன் ஜாக்கிரதை உணர்வுகூட பலனுள்ளதாக இருக்கலாம். அவர்கள் கூறுவதில் சிலவற்றை நீங்கள் கடைப்பிடித்தால்கூட அவர்களுக்கு ஓரளவு திருப்தி ஏற்படும். மேலே கூறியுள்ள ஆலோசனைகளை நீங்கள் அவருக்கு எடுத்துரைக்கலாம்.

(சந்திப்போம்…)

1 COMMENT

  1. எதிர் மறை எண்ணங்களே நம்மை இயக்குகிறது என்று சொன்னால் மறுப்பதற்கில்லை.எனினும் எல்லாம் ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டுமென்பதை உணர்கிறோம்.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,880FollowersFollow
1,590SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

சுற்றுலா டூ ஸ்கேண்டினேவியா! பகுதி – 3

அற்புதப் பயணம்; ஆனந்த அனுபவம்! பயண அனுபவம் : பத்மினி பட்டாபிராமன் இரண்டாவது பெரிய நகரமான பெர்கன் நகரிலிருந்து, தலைநகர் ஆஸ்லோவுக்குச் செல்ல வேண்டும். வாஸ் என்ற இடம் வரை கோச்சில் சென்று, அங்கிருந்து ஒரு...

புகார் பிரேம்குமார்…

0
சங்கடம் தருபவர்களை சமாளிப்பது எப்படி? - 5 - ஜி.எஸ்.எஸ். ஓவியம் : சுதர்ஸன் வங்கி மேலாளரின் அறைக்குள் வேகமாக நுழைந்தார் பிரேம்குமார். “இப்ப மணி என்ன சார்?’’ என்று கேட்டார். “10.10’’ என்றார் மேனேஜர். “கேஷியர் சரியான நேரத்துக்கு வரலே....

அழகின் சிகரம்

0
அழகோ அழகு - 6 - அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா தலைமுடி கொட்டுவது அநேகமாக எல்லோருக்கும் ஒரு, ‘தலை’யாய பிரச்னையாக இருப்பதைக் காண்கிறோம். பரம்பரை, உணவுப் பழக்கம், மன அழுத்தம், தூக்கமின்மை, தண்ணீரின் தன்மை, ரசாயனம்...

காதல் முகவரி

அத்தியாயம் - 4 - சுசீலா அரவிந்தன் ஓவியம் : தமிழ் அந்த பிரைல் எழுத்துக்களே தேய்ந்துபோயிருக்கும். அத்தனை முறை படித்து விட்டாள் வெண்ணிலா. முகத்தில் ஒரு தனி மலர்ச்சி. சிரித்தபடியே வளைய வந்தாள். வெண்ணிலாவின் தாய்க்குக்கூட லேசாக...

காதல் முகவரி!

தொடர்கதை அத்தியாயம் - 3 - சுசீலா அரவிந்தன் ஓவியம் : தமிழ் ஒரு வாரம் முழுவதும் ஒரே யோசனையாகவே இருந்தாள் வெண்ணிலா. ஏதோ ஒரு ஆத்ம நிறைவு, ஆதவனின் குரல் தனக்குள் இருந்த தனிமையைப் போக்கியதாக...