0,00 INR

No products in the cart.

செத்த பாம்பை அடிப்பது போல…

களஞ்சியம் பகுதி

மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில் 1991 மே – இதழில் வெளியான ஓர் கிளாசிக் கட்டுரை உங்களுக்காக…

 –பானுமதி இராமச்சந்திரன்

ஓவியம்: கரோ

பெண்கள் மணமாகிப் புகுந்த வீட்டிற்குச் சென்று வாழத் தொடங்கும்போது சில பெண்கள் துரதிர்ஷ்டவசமாக மூத்த மருமகளாகப் போக நேரிடும். எந்தக் குடும்பத்தை எடுத்துக் கொண்டாலும் மூத்த மருமகள் வந்ததும் அந்த மாமியாருக்கு மருமகள் என்றால் எப்படி நடத்த வேண்டும்? மகனுடன் தனக்குள்ள பாசம், மரியாதை எதுவரை? என்றெல்லாம் யோசிக்காமல் ஆதிக்கம் செலுத்த நினைப்பாள் அனுபவமில்லாத காரணத்தால். ஓரளவு அனுபவமும் ஏற்பட்டு வயதும் ஏறியதும், உடல் நலக் குறைவாலோ, தள்ளாமை போன்ற பல காரணங்களாலோ தன் ஆதிக்கத்தை மற்ற மருமகள் மீது செலுத்தாமல் குறைப்பாள்.

பெரும்பாலான குடும்பங்களில் மூத்த மகனைவிட, அடுத்தடுத்துள்ள பிள்ளைகள் தாய், தந்தையிடம் மனம் விட்டுப் பேசும் தைரியமுள்ளவர்களாக இருப்பதால் அவர்களின் மனைவிகளை மாமியார்கள் அதிகாரம் செய்வது குறைந்துவிடுகிறது.

நாளடைவில் தன்னைவிட வயதில் குறைந்த ஓரகத்திகள் (மைத்துனன் மனைவிகள்) வெகு சுதந்திரமாக வீட்டிற்குள் வளைய வருவது மூத்த மருமகள்களாக வாழ்க்கைப் பட்டவர்கள் நெஞ்சைப் பொரும வைக்கும் நிலை  ஏற்படும். மேலும், எந்த மகன் தன் மேல் அன்பு, பாசம், மரியாதை வைத்துள்ளானோ அந்த மகனின் பொறுமையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அவன் மனைவியைப் படுத்துவது மாமியார்களின் வழக்கம். எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்ற நாத்தனார்களும் சேர்ந்துக் கொள்வது மறுக்க முடியாத உண்மை.

வருடங்கள் பல கடந்ததும் மாமியார் தள்ளாமையாலும் உடல் சுகவீனத்தாலும் தன் மேல் அன்பு செலுத்தும் பிள்ளையிடமே தங்க நேரிடும் நிலை உருவாகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மருமகள் மாமியாரை சந்தோஷமாகக் கவனித்துக் கொள்வாளா? மேலுக்குக் கவனித்துக் கொண்டாலும் மனதார முடியாதல்லவா?

இப்படித்தான் ஒரு சகோதரி வீட்டில் அவள் மாமியாரைத் தினமும் “உங்கள் மகள் வந்து கலகமூட்டி என் கணவரிடம் அடி வாங்க வைத்தீர்களே!” என்று பழைய நிகழ்ச்சிகளை அடிக்கடிச் சொல்லிக் காட்ட ஆரம்பித்து விட்டாள். எண்பது வயதாகிவிட்ட அந்தக் கிழவிக்கு அந்த நிகழ்ச்சிகள் சரியாகக் கூட நினைவில்லை. (பாதிக்கப்பட்டவர்களுக்கே நினைவு ரணமாக இருக்கும். வடுவை ஏற்படுத்திய மாமியார்களுக்கு நினனவு எங்கே இருக்கும்?)  இப்படி அந்த வயதான பெண்மணியைத் தினமும் ஏதாவது சொல்லி, குத்திக் காட்டி, மன அமைதியை இழக்கச் செய்தாள். கோபப்படாமல் சிரித்துக் கொண்டே கேட்டாலும் அந்தத் தாய்க்குப் பதில் சொல்ல முடியாத நிலையில் ஒருநாள், “ஆமாம். நான் ஏன் அப்படி நடந்துகொண்டேன்?” என்று மருமகளையே திருப்பிக் கேட்டாளாம்.

ன் சிநேகிதி கமலா நகர்ப்புறத்தைச் சேர்ந்தவள். அவள் புகுந்த வீட்டினர் கிராமத்தைச் சேர்ந்தவள். கமலா சாதாரணமாகவே ‘நீட்’டாக, மடிப்புக் கலையாமல், உடை உடுத்துவது அவர்களுக்குப் பொறுக்காது. பண விஷயத்திலும் அவர்கள் படு சிக்கனம். சாப்பாட்டைத் தவிர வேறு எதற்கும் முக்கியத்துவம் தர மாட்டார்கள். அவள் கணவரோ தாய் மீதும், சகோதரிகள் மீதும் அளவற்ற பாசமுடையவர். அவள் கட்டும் புடைவைக்கு மாட்சிங் ரவிக்கைப் போடுவதுகூட நடக்காது. எப்படியோ ஆண்டுகள் பல ஒடி அவள் மாமியாரும் போய்ச் சேர்ந்துவிட்டாள்.

இன்று அவள் கணவரின் சகோதரி கிராமத்திலிருந்து பிள்ளைகள் படிப்பு முடிந்து வேலை கிடைத்ததும், நகரத்தில் நிரந்தரமாய்த் தங்கிவிட்டாள். அவளுக்கு வாய்த்த மருமகள் நவநாகரீகமாய் சூடிதார், மிடி போன்ற உடைகளையே தினமும் அணிபவளாக வந்திருப்பது கண்டு பொறுக்க முடியாத கமலா, வருவோர் போவோரிடமெல்லாம் புலம்பித் தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளுகிறாள். அவள் நாத்தனாருக்கோ தன் பிள்ளைகளை மீறி ஒன்றும் செய்ய முடியாத நிலை. தன் தம்பி மனைவியை அடக்கிய அளவு தன் சொந்த மருமகளை அடக்க முடியவில்லை. இப்போது கமலாவுக்கு மனநோய் வந்துவிடும் அபாய நிலை.

பிற்காலத்தில் நாம் எப்படி, எந்த நிலையில், யாருடன் இருக்கப் போகிறோம் என்று தெரியாமல் மருமகள், தம்பி மனைவியரிடம் ஆதிக்கமும், அதிகாரமும் செலுத்தும் பெண்களே, கொஞ்சம் சிந்தியுங்கள். பிறர் மனம் புண்படாமல், தவறு செய்யும்போது அன்புடன் தட்டிக் கேளுங்கள். முறையாக எடுத்துச் சொல்லுங்கள். ஒன்றுமே சொல்லாமல் இருந்தாலும், கண்டிக்காவிட்டாலும் மரியாதை குறைந்து அவர்கள் தான்தோன்றித்தனமாய் நடந்து கொள்ளக்கூடும்.

பாதிக்கப்பட்டவர்கள் “செத்த பாம்பை அடிப்பதுபோல்” உணர்ச்சி காட்டாதீர்கள். நியாயம் உங்கள் பக்கமே இருந்தாலும் வயதானவர்களைக் குத்திக் காண்பிக்கும்போது உள்ளூர உங்களுக்கு ஒரு நிம்மதி ஏற்படுகிறாற் போல உணர்வு ஏற்படுமே அது உண்மையானதல்ல. கானல் நீர் போன்றது. பிறர் வயதானவர்களைப் பார்க்கும் கண்ணோட்டமே வேறு. இவ்வளவு வருடங்கள் பொறுமையாய் இருந்த நீங்கள் இன்னும் கொஞ்ச நாள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்குத்தான் நல்லது. உடலும் மனமும் பாதிக்கப்படாமல் பதற்றமின்றி வாழ முடியும்.

மேலும் எப்பொழுதுமே ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது நாம் பார்த்தால்தான் அதன் வீரியமும், தீவிரமும் தெரியும். பல ஆண்டுகள் கழித்து “ஆறின கஞ்சி பழங்கஞ்சி” என்பது போலச் சொல்லும்போது வயதானவர்கள் பக்கம் அனுதாப அலை வீசி உங்களுக்கு எதிர்மறையாகப் பேசத் தூண்டும். உங்கள் குழந்தைகளும் பாட்டியை நீங்கள் கடிந்து கொள்வதை (தவறு யார் மேல் இருந்தாலும்) விரும்பாமல் உங்கள் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்வார்கள்.

நம் கணவர் குடும்பச் சூழ்நிலை, இவற்றால் ஏற்பட்ட பழைய நிகழ்ச்சிகளை மறந்து நம் பிள்ளைகள், நம் குடும்பம் என்று வாழக் கற்றுக் கொள்ளுங்கள். இதே தவறுகளைப் பழி வாங்கும் உணர்வுடன் உங்கள் மருமகள், அண்ணி, தம்பி மனைவிகளிடம் திருப்பாமல் வருங்காலத்தை மனத்தில் கொண்டு பிறர் மனத்தில் மணம் வீசும் மலராக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

செத்த பாம்பை அடிப்பதும், செல்லாக் காசில் பொருள் வாங்க நினைப்பதும், வயதானவர்களை அவர்களின் கடந்த காலச் செயல்களுக்காகப் பழி வாங்க நினைப்பதும் ஒன்றுதான்.

1 COMMENT

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே! தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக 2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு...

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்   “உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?” “இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!” -ஆர். மகாதேவன், திருநெல்வேலி =================== “வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?” “ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு...