முத்துக்கள் மூன்று!

முத்துக்கள் மூன்று!
Published on
தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன்
கருணை காட்டும் கஸ்தூரி

சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும் செவிலியர்களுக்கான மிக உயர்ந்த 'தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல்' விருது மற்றும், சமூகப்பணி, களப்பணிக்காக 'எக்ஸ்ட்ராடினரி டேலண்ட் அவார்ட்' மற்றும்

'இன்டியா ஸ்டார் பெர்சனாலிட்டி' விருது உட்பட பல விருதுகளும், எண்ணற்ற நற்சான்றிதழ்களும், பாராட்டு சான்றிதழ்களும் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் 'அவுட்ஸ்டான்டிங் உமன் புரொபெஷனல்' விருதும் 'லட்சிய மகுடம்'  விருதும் வாங்கியிருக்கிறார்.

திருவள்ளூரைச் சேர்ந்த கஸ்தூரி, நர்ஸிங் படிப்பு முடிந்ததும், கிராம சுகாதார செவிலியராக பணியாற்ற ஆரம்பித்துள்ளார். பின்னர் சோஷியாலஜி மற்றும் பாப்புலேஷன் ஸ்டடீஸில் முதுகலைப் பட்டம் பெற்றார். பல பதவி உயர்வுகள் பெற்று பல ஊர்களிலும் பணி செய்துள்ளார். கிராம சுகாதார செவிலியராக இருந்த போது பல பெண்களுக்கு பிரசவங்கள் பார்த்த இவருக்கு, ஒரு மாதத்தில் 120 பிரசவங்கள் பார்த்த அனுபவமும் உண்டு.

எய்ட்ஸ் மற்றும் தொழு நோயாளிகள் உள்பட, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் எல்லா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்ததோடு, பல விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் சுகாதார பயிற்சி வகுப்புகளை நடத்தி உள்ளார்.

கொரானா சமயம் மிகவும் நெருக்கடியான காலம். என்கிறார். "நான் மட்டும் அல்ல, சுகாதாரத்துறை சார்ந்த அனைவருமே சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் உழைத்தோம். வீடு தேடிச் சென்று மருத்துவ சேவை செய்தோம். தற்போதும் செய்து வருகிறோம்."

**********************

பசுமை வளர்க்கும் சத்யப்ரியா

நெய்வேலியைச் சேர்ந்த சத்யப்பிரியா, தினமும் ஒரு மரம் நட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்.  இவர் தற்போது சென்னையில் ஐ.டி. துறையில் பணிபுரிகிறார். இதுவரை 116 மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

இவரது பெற்றோர்  உணவகம் நடத்தி வருகிறார்கள். நெய்வேலியில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, கோயம்புத்தூரில் பி.எஸ்சி. ஏரோனாட்டிக்கல் சயின்ஸ்  படித்தார், பின்னர் சென்னையில் வேலை கிடைக்கவே இங்கு  வந்தார்.

எப்போதும் செடிகள், மரங்களோடு பசுமையாக இருக்கும் சுற்றுச்சூழலில் பிறந்து வளர்ந்த இவர், சென்னை வந்தபோது சூழல் வேறு மாதிரியாக இருந்தது. சில இடங்கள் மட்டுமே பசுமையாக இருந்ததை கவனித் திருக்கிறார். மரங்கள் மட்டுமே பசுமையை உண்டாக்கும். எனவே 'தினம் ஒரு மரம் நடலாமே' என்று தீர்மானித்து செயலில் இறங்கினார்.

ஆனால் சென்னையில் விலை மலிவான மரக்கன்றுகள் கிடைப்பது சிரமமாக இருந்தது. தினமும் நடுவதற்கு மரக்கன்றுகளை உற்பத்தி செய்வதும் கடினமாக இருந்தது. எனவே இவரது தந்தை நெய்வேலியில் இருந்து மரக்கன்றுகளை வாங்கிக் கொண்டு வந்து தருகிறார்.  சத்யப் ப்ரியாவும் தினம் ஒரு கன்று நடுகிறார். சிலர் வீட்டு வாசலில் மரம் நடுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். இடம் இருந்தும் அனுமதிக்க மாட்டார்கள். சிலர், இவர் நட்ட மரங்களைப் பிடுங்கி எறிவார்களாம்.

அப்போதெல்லாம் வேதனையாகத்தான் இருக்குமாம் இவருக்கு. தினமும் தண்ணீர் விடும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மரம் நட வேண்டும்.  அதனால் தண்ணீர் வரத்து உள்ள இடமாக தேடித்தேடி மரங்கள் நட்டு வருகிறார்.

எதிர்காலத்தில் ஒரு குழு அமைத்து நிறைய மரங்கள் நட வேண்டும் என்றும், ஒரு நாளில் பத்து மரங்கள் நட வேண்டும் என்றும் திட்டமிட்டிருக்கிறாராம் இந்த பசுமைப் பெண். உடல் நலக் குறைபாடும், மூச்சுப் பிரச்னையும் இருந்தாலும், தன் பணியை செவ்வனே செய்து வருகிறார் இந்த பசுமைப் பெண். பணியில் இருந்து கொண்டே தற்போது எம்.பி.ஏ., படித்தும் வருகிறார்.

**********************

கவிதை வடிக்கும் மனுஷி

னது கவிதைகளுக்காக சாகித்ய அகாதமியின் 'யுவ புரஸ்கார்' விருது பெற்றவர் திரைப்பட பாடலாசிரியரான ஜெயபாரதி. மனுஷி என்ற புனைப் பெயரில் கவிதைகள் எழுதி வருபவர்.

குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள், முத்தங்களின் கடவுள், ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள், கருநீல முக்காடிட்ட புகைப்படம், யட்சியின் வனப்பாடல்கள் என இதுவரை இவர் எழுதிய ஐந்து கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன.

இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பான 'ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்' நூலுக்கு 2017ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது சண்டிகரில் நடைபெற்ற விழாவில் இவருக்கு வழங்கப் பட்டது.

'கீதா கோவிந்தம்' எனும் தெலுங்கு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மெட்டுக்கு இவர் எழுதிய தமிழ் வரிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

தற்சமயம், வ.கீரா இயக்கத்தில் வெளிவரவுள்ள 'இரும்பன்' திரைப்படத்தில் இவர் எழுதிய பாடல் இடம் பெற்றுள்ளது. திருநாவலூரில் இலக்கியப் பின்புலம் இல்லாத விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயபாரதி.

மனதின் உணர்வுகளை, வாழ்க்கை கற்றுத் தந்த அனுபவங்களை தமிழின் துணை கொண்டு  கவிதையாக்குவதாகக் கூறுகிறார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com