அழகோ அழகு!

அழகோ அழகு!
Published on
பகுதி – 2

வாசகர்களின் கேள்விகளுக்கு அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தராவின் பதில்கள்!

இன்ஸ்டன்ட் ஹெர்பல் ஹேர் டை இருக்கிறதா? அதைப் பயன்படுத்தும் முறையைச் சொல்லுங்கள்!
– ஆர்.உமா, சென்னை

யற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தலைச்சாயம் (HAIR DYE) கிடைக்கிறது. ஹென்னா (HENNA) மற்றும் அவுரி (AVURI) கலந்தது. இவை தலைமுடிக்கு நல்ல கருமையைக் கொடுக்கும். எந்தத் தயாரிப்புமே ப்ரிஸர்வேடிவ்ஸ் (PRESERVATIVES) இல்லாமல் முழுவதும் இயற்கை முறையிலேயே தயாரிக்க முடியாது. மூலிகை ப்ரிஸர்வேடிவ்ஸ் நிச்சயம் சேர்க்கப்பட்டிருக்கும். இதை எப்படி உபயோகிப்பது என்பதைப் பார்ப்போம்.

சாயம் தேவையான அளவு எடுத்து, வெதுவெதுப்பான நீரில் பேஸ்ட் போல் கலந்து முடிச்சாயம் பூசுவதற்கென்றே பிரத்யேகமாகக் கிடைக்கும் ஒரு தட்டையான பிரஷ் மூலம் தலையில் தடவி முப்பது நிமிடங்கள் கழித்து ஷாம்பு வாஷ் செய்யலாம். சைனஸ் தொல்லை உள்ளவர்கள் இருபது நிமிடங்கள் வைத்துக் கொண்டால் போதுமானது.

எங்களிடம் இத்தகைய இயற்கை மூலிகை தலைச்சாயம் கிடைக்கும். தொடர்பு கொள்ளுங்கள். உதவக் காத்திருக்கிறோம்.

புருவங்கள் கருமையாகவும், அடர்த்தியாகவும் என்ன செய்ய வேண்டும்?
– ஜெயஸ்ரீ சாய்நாத், புனே

சிலருக்குப் பரம்பரை காரணமாக புருவம் வெள்ளையாக மாறி விடும். இதற்கு விளக்கெண்ணெய் மிக நல்லது. விளக்கெண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம் (RICINOLEIC ACID) புருவத்தை கருமையாகவும், அடர்த்தியாகவும் ஆக்கவல்லது. லேசாக சூடுபடுத்தி புருவங்கள் மேல் தடவலாம். விளக்கெண்ணெயில் துளசி இலைச்சாறு மற்றும் கரிசலாங்கண்ணி சாறு கலந்தும் பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் எண்ணெய்க்கு தலா அரை டீஸ்பூன் துளசி, கரிசலாங்கண்ணி சாறு கலந்து பயன்படுத்த, நல்ல பலன் கிடைக்கும். தினமும் செய்தால் இரண்டு மூன்று மாதங்களிலேயே புருவங்கள் கருமையாகவும் அடர்த்தியாகவும் மாறிவிடும்.
விட்டமின் ஈ எண்ணெயும் பயன்படுத்தலாம். இதில் உள்ள டோகோட்ரியினால் (TOCOTRIENOL) என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் (ANTIOXIDANT) சருமம், முடிக்கு நல்லது.

அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா
அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா

என் வயது 64. எவ்வளவுதான் படிய வாரினாலும், தலைமுடி சீவிய சற்று நேரத்திலேயே அழுந்தாமல் தூக்கலாகி விடுகிறது. என்ன செய்யலாம்?
– என்.கோமதி, நெல்லை

லை முடி சரிவர படிவதற்கு, சாதாரணமாக நாம் உபயோகிக்கும் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் அல்லாமல், முடி படிவதற்கென்றே உள்ள ஹேர் ஆயில் (HAIR OIL) அல்லது சீரம் (HAIR SERUM) பயன்படுத்தலாம். வாசனையான, கைகளில் ஒட்டாத ஆல்மண்ட் துளிகள் (ALMOND DROPS) பயன்படுத்தலாம். பத்து டீஸ்பூன் கற்றாழை ஜெல், பத்து டீஸ்பூன் ரோஸ் வாட்டர், ஒரு டீஸ்பூன் விட்டமின் ஈ எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து மிக்ஸியில் அடித்து ஒரு பாட்டிலில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துத் தேவைப்படும்போது, முடி படியாத இடங்களில் தடவி அல்லது ஸ்ப்ரே (SPRAY) செய்தால் முடி நன்கு படிந்து விடும். ஒரு மாதம் வரை இக்கலவையைப் பயன்படுத்தலாம். நீண்ட நாள் உபயோகிக்க முடியாது.

பனிக்காலத்தில் கை, கால்கள், முகம் சுருக்கம் போகவும் வெள்ளைத் திட்டுகள் மறையவும் டிப்ஸ் தாருங்கள்…
– வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்.

குளிர் காலங்களில் சருமம் வறண்டு போகாமல் இருக்க, எண்ணெய்க் குளியல் மிகச் சிறந்தது. குளித்து நன்கு ஈரம் போகத் துடைத்தபின், உடம்புக்கான லோஷன் பயன்படுத்தலாம். எண்ணெய்க் குளியலுக்கு நேரமில்லாதவர்கள் தினமும் குளித்தவுடன் கைகள் மற்றும் உடலுக்கான லோஷன் / மாய்ஸ்சரைசர் (MOISTURIZER) பயன்படுத்த வேண்டும். அவரவர் சருமத் தன்மைக்கு ஏற்ப தரமானதாகப் பார்த்து வாங்கிப் பயன்படுத்துவது அவசியம். பகல் நேரங்களில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தி, இரவில் நைட் க்ரீம் (NIGHT CREAM) உபயோகிக்கலாம் அல்லது உறங்கப்போகுமுன் பாதாம் எண்ணெய் சில துளிகள் முகத்தில் தடவி வரலாம். சருமத்துக்கு நல்ல ஊட்டச்சத்தும் பளபளப்பும் கொடுக்கும்.

திருமண விழாவுக்குச் செல்லும்போது சுலபமாக பனிக்கால மேக்கப் எப்படிப் போட வேண்டும்?
– வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்.

மேக்கப் போடுவதற்கு (முக்கியமாக குளிர் காலத்தில்) முதலில் தேவை ப்ரைமர் (PRIMER) ஜெல், க்ரீம் அல்லது ஆயில் அடிப்படையில் கிடைக்கும். ப்ரைமர் தடவிய பின் லிக்விட் (LIQUID) அல்லது க்ரீம் பவுண்டேஷன் (FOUNDATION) போட வேண்டும். பிறகு, மிதமான பவுடர் (TRANSLUCENT POWDER) போடலாம். நாம் பயன்படுத்தும் லிப்ஸ்டிக் (LIPSTICK)ஐ ஷேடோஸ் (EYE SHADOWS) போன்றவை கூட க்ரீம் அடிப்படையில் இருப்பது நல்லது. மேக்கப் வறண்டுபோவது போல் தோன்றினால் ஃபேஸ் மிஸ்ட் (FACE MIST) பயன்படுத்தலாம் அல்லது ரோஸ் வாட்டர் லேசாக ஸ்ப்ரே செய்தாலும் போதும். மேக்கப் அப்போதுதான் புதிதாகப் போட்டதுபோல ஆகிவிடும்.

குழந்தை பிறப்புக்குப் பின் பாலூட்டும் தாய்மார்கள் முடி உதிர்வதை எப்படித் தடுக்கலாம்?
– த.கயல்விழி, பெருந்துறை

குழந்தை பிறந்த பின் முடி கொட்டுவது தற்காலிகமானதுதான். குழந்தை பிறப்பிற்குப் பின் ஈஸ்ட்ரோஜன் (ESTROGEN) ஹார்மோன் குறைவதால் இவ்வாறு ஏற்படும். சத்தான உணவு, பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், இரும்புச் சத்து, புரோட்டீன், கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால் முடி சீக்கிரமே வளர்ந்து விடும். வெளிப் பாதுகாப்பிற்கு தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் தலா 10 மில்லி, விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் தலா 5 மில்லி எடுத்துக் கலந்து, வேர்க்கால்களில் நன்கு மசாஜ் செய்து, பின் ஷாம்பு வாஷ் செய்யலாம். வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தயிரில் கலந்து பயன்படுத்தலாம். இதனால் முடிக்கு நல்ல ஊட்டச்சத்தும் ரத்த ஓட்டமும் கிடைக்கும். முடி கொட்டுவது கட்டுப்படும்.
– தொகுப்பு : மங்கை ஜெய்குமார்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com