செல்ல விலங்குகளை வளர்த்தால்…

செல்ல விலங்குகளை வளர்த்தால்…

Published on
– ஜி.எஸ்.எஸ்.

மாதான உடன்படிக்கைக்கு புறாவை ஒரு அடையாளமாகச் சொல்வார்கள். ஆனால், ஆலன் பிட்க்ளே என்ற 70 வயது முதியவர் புறாக்களை வளர்த்து, அதன் காரணமாகவே அண்டை வீட்டுக்காரரின் கடும் அதிருப்தியைச் சம்பாதித்து நீதிமன்றத்தின் வாசலை மிதிக்க வேண்டி வந்திருக்கிறது.

ஆலன் பிட்க்ளே இங்கிலாந்திலுள்ள ஹாம்ப்ஷயர் நகருக்கு அருகே உள்ள சிறு நகரத்தில் வசித்து வருகிறார். அவருக்குப் பறவைகள் என்றால் கொள்ளை ஆசை. அவரது பங்களாவின் பின்புறம் பெரிய நிலம் இருந்தது. அதில் ஒரு பெரிய கூடாரத்தை அமைத்தார். இரண்டு வருடங்களுக்கு முன் அங்கே பதினைந்து புறாக்களைக் குடியேற்றி, அவற்றை ஆசையுடன் வளர்த்தார். கூடவே, கொஞ்சம் ஆமைகள், கோழிக்குஞ்சுகள், மீன்கள், ஒரு நாய் ஆகியவற்றையும் வளர்த்தார். அவர் மனைவி தாராவும் இவற்றை வளர்ப்பதில் பெரும் இன்பம் கொண்டார்.

ஆனால், அடுத்த வீட்டில் வசித்த ரெபெக்கா வெல்ஸ் என்ற பெண்மணிக்கு இது துளியும் பிடிக்கவில்லை. அதுவும் அந்தப் புறாக்கள் எழுப்பிய சத்தம் அவருக்குப் பெரும் இடைஞ்சலாக இருந்தது. ஆலனை பலமுறை இது தொடர்பாக எச்சரித்தார். ஆனால், புறாக்களிடம், 'சத்தம் போடாதே' என்று கூற முடியுமா என்ன?

ரு கட்டத்தில் ரெபெக்கா வேறு வீட்டுக்கு மாறினார். ஆனாலும், கடும் சினத்தோடு உள்ளூர் நிர்வாகத்திடம் இதுகுறித்து முறையிட்டார். நிர்வாகத்தினர் ஆலனின் வீட்டுக்குச் சென்று பார்வையிட்டனர். 'புறாக்கள் சத்தம் இடும்போது அது ஆகாய விமானம் கிளம்பும்போது எழும் ஒலிக்குச் சமமாக இருந்தது' என்று புகார் கூறியிருந்தார் ரெபெக்கா. கிராம நிர்வாகிகளும் புறாக்களின் சப்தம் அண்டை வீட்டாருக்கு நிச்சயம் தொந்தரவுதான் என்ற முடிவுக்கு வந்தனர். ஆலனிடம் சென்று, 'உங்கள் புறாக்களில் பாதியையாவது வெளியேற்றி விடுங்கள்' என்று கூறினர். ஆனால், இதற்கு உடன்பட மறுத்து விட்டார் ஆலன். அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

அந்த கிராமத்தில் உள்ள பாதிப் பேர் ஆலனுக்கு ஆதரவாக இருந்தனர். அவர் மீது அபராதம் விதிக்கப்பட்டால், அதில் ஒரு பகுதியை தாங்கள் ஏற்பதாகக் கூறினர்.

'எங்கள் பகுதியில் உள்ள வேறு யாருமே (எனது மற்றொரு அண்டை வீட்டுக்காரர் உட்பட) நான் புறா வளர்ப்பது குறித்து புகார் கூறவில்லை. புறாக்களின் சத்தம் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் அவர் வீட்டில் அதற்குரிய தடுப்புப் பகுதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாமே' என்றார் ஆலன்.

ஆனால், நீதிமன்றம் இதை ஏற்கவில்லை. 'புறாக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். அல்லது 500 பவுண்ட் அபராதம்' என்று கூறிவிட்டது. இந்தத் தீர்ப்பை நீதிபதி வாசித்தபோது, தாரா நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுதார். அவர்களது மற்றொரு அண்டை வீட்டுக்காரரும் மிகவும் வருத்தப்பட்டார். 'அந்தப் புறாக்களால் எங்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. காலையில் எழுந்து அவற்றைப் பார்ப்பதே ஒரு இன்பம்தான். நான் கூட அவற்றுக்கு உணவு அளித்திருக்கிறேன்' என்றார். ஆலனின் வளர்ப்புப் பறவைகளை பார்ப்பதற்காகவே அக்கம் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூட அங்கு வந்து செல்வதுண்டு.

இந்த நிலையில் வெளியாகியிருக்கிறது நீதிமன்ற தீர்ப்பு. மிகவும் கனத்த இதயத்துடன் புறாக்களை வெளியேற்ற தீர்மானித்திருக்கிறார் ஆலன்.

செல்ல விலங்குகளை வளர்ப்பது குறித்து, இந்தியச் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

நம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 51(g) பிரிவின்படி ஒவ்வொரு இந்தியருக்கும் தனக்கான செல்லப் பிராணியை தேர்ந்தெடுத்து வளர்க்க உரிமை உண்டு என்கிறது. கூடவே, எந்தெந்த விலங்குகளை வளர்ப்பதற்குச் சட்டம் அனுமதிக்கிறதோ அவற்றைத்தான் வளர்க்கலாம் என்றும் கூறுகிறது.

வீட்டு விலங்குகள் பெரும்பாலானவற்றை வளர்க்க சட்டம் அனுமதிக்கிறது. நாய், பூனை, ஆடு, மாடு, புறா, கிளி, மீன், குதிரை, பன்றி, முயல்கள் போன்றவற்றைச் செல்ல விலங்குகளாக வளர்க்க முடியும்.

ஆனால், எலி, ஆமை போன்றவற்றை செல்லப்பிராணியாக வளர்க்க முடியாது. வன விலங்குகளையும் வீடுகளில் வளர்க்க அனுமதி இல்லை.

இந்த வீட்டு விலங்குகளுக்கு சில உரிமைகள் உண்டு. நாய்கள் குரைக்கலாம். சுற்றியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அதைப் பொறுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். செல்லப் பிராணிகளுக்கு அவற்றுக்குரிய தடுப்பூசிகளை நிச்சயம் போட வேண்டும். வீடுகளில் உள்ள லிஃப்டில் செல்லப் பிராணிகளுக்கு அனுமதி மறுக்கக் கூடாது. வீட்டு வளாகத்தில் உள்ள பசுமைப் பகுதிகள் மற்றும் தோட்டங்களைப் பயன்படுத்த இந்த விலங்களுக்கு உரிமை உண்டு. வேண்டுமானால் ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில் இவை அந்தப் பகுதிகளில் உலவலாம் என்ற கட்டுப்பாட்டை இருதரப்பிலும் கலந்தாலோசித்து ஏற்படுத்தலாம்.

தங்கள் செல்ல விலங்குகளுக்கு சுற்றி இருப்பவர்களால் எந்த ஆபத்தும் நேருவதை விலங்கின் உரிமையாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இந்த விலங்குகளை வெளியேற்றி விட வேண்டும் என்றோ, அவர்கள் வீடு மாற வேண்டுமென்றோ கூற முடியாது.

தே சமயம், மேலே உள்ள சில விதிவிலக்குகளை விட்டுவிட்டால், தாங்கள் வளர்க்கும் விலங்குகள் அக்கம் பக்கத்தினருக்குத் தொல்லை தராதபடி அவற்றை வளர்ப்பவர்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இரவுகளில் தங்கள் நாய்கள் குரைப்பதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வெளியே அழைத்துச் செல்லும்போது கழுத்துப்பட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் நீளமான சங்கிலியைப் (லீஷ்) பிடித்தபடிதான் செல்ல வேண்டும். இரண்டு லிப்டுகள் இருந்தால் அவற்றில் குறிப்பிட்ட ஒன்றைத்தான் விலங்குகளை அழைத்துச்செல்ல பயன்படுத்த வேண்டும் என்று உரிமையாளர்கள் கூறினால், அது ஏற்கப்பட வேண்டும். இந்த வகை நாய்களைத்தான் வளர்க்க வேண்டும் என்று உரிமையாளர் கூட்டமைப்பு கட்டாயப்படுத்த முடியாது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com