0,00 INR

No products in the cart.

எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்?

 

அத்தியாயம் – 6

நிரஞ்சன் பாரதி
ஓவியம்: வேதா

பாரதி கண்ட பாஞ்சாலி!

நெல்லை, இந்துக் கல்லூரியில் தன் பள்ளிப் படிப்பை பாரதியார் மேற்கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது அவரது நெருங்கிய தோழர்களில் ஒருவராய் இருந்தவர் சுப்பிரமணிய சர்மா. நாடகங்களைப் பார்க்கச் செல்வது இருவருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு. அந்தக் காலத்தில், ‘கல்யாணராமன் செட்’ என்ற நாடகக் கம்பெனி மிகவும் புகழ் பெற்றிருந்தது. ஒருமுறை அவர்கள், ‘மகாபாரதம்’ நாடகத்தை அரங்கேற்றம் செய்தார்கள். அதைச் சுப்பிரமணிய சர்மாவோடு பாரதியாரும் பார்க்கச் சென்றிருந்தார்.

கதையின் மையப்பகுதியான, ‘சூதாட்ட’ நிகழ்ச்சிக்கு நாடகம் வந்து நின்றது. அதுவரை அமைதியான நீரோடையாகச் சென்றுகொண்டிருந்த நாடகம், திடீரென்று பெருவேகம் கொண்டது. சூதில் தன் மனைவி பாஞ்சாலியை பணயமாக வைத்திழந்து, யுதிஷ்டிரன் தலைகுனிந்து நின்ற காட்சியும், துச்சாதனன் துகிலுரிய வந்தபோது சீறும் கடலலை எனப் பொங்கி, பாஞ்சாலி பேசிய வசனங்களும் பாரதியாரை வெள்ளம் போல் அடித்துச் சென்றன. பிதாமகர் பீஷ்மர், துரோணாசாரியார் உள்ளிட்ட சான்றோர்களைத் தன் கேள்விக்கணைகளால் வீழ்த்திய திரெளபதியின் தீரம் பாரதியாரைக் கொள்ளை கொண்டது. இந்த ஒட்டுமொத்த சம்பவமும் பாரதியாரின் ஆழ்மனதில் ஒரு வீரியமான விதையாகப் போய் விழுந்தது. பின்னாளில் ஒரு தகுந்த தருணத்தில் அது கருக்கொண்டது. விண்ணளாவும் விருட்சமாக உருக்கொண்டது. அந்த விருட்சத்தின் பெயர், ‘பாஞ்சாலி சபதம்.’

நிரஞ்சன் பாரதி

பாரத நாட்டுப் பண்பாட்டுச் செல்வமான பாஞ்சாலி, வீரமும் ஈரமும் இரு கண்களெனக் கொண்டவள். அத்தகையதொரு பெண்ணாகப் பாரத தேசத்தின் நவீன புதுமைப்பெண்
பொலிய வேண்டுமென்று பாரதியார்
விழைந்தார். பெண்ணானவள், அன்பொழுகும் இனிமையான தீங்குரலிலும் பேச வேண்டும்; புல்லறிவாளர்கள் சீண்டும்போது,
அனலொழுகும் ஆவேச தீக்குரலிலும்
பேச வேண்டும். இவ்விரண்டு
குணங்களும் நிகரளவில் பொருந்தும்
பெண் சிங்கம்தான் திரெளபதி என்பது பாரதியாரின் முடிவு.
‘நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் – என்னை
நல்கும் உரிமை அவர்க்கில்லை. – புலைத்
தாயத்தி லேவிலைப் பட்டபின், – என்னை
சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்? அவர்
தாயத்தி லேவிலைப் பட்டவர் – புவி
தாங்குந் துருபதன் கன்னிநான். – நிலை
சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால், – பின்பு
தார முடைமை அவர்க்குண்டோ!’
தன் அகமுடையான் ஆகவே இருந்தாலும், அவன் அறப்பிழை செய்தால் அதைக் கண்டு ஒரு மனையாள் பொறுத்திருக்க வேண்டியதில்லை! அவள் அவனைத் தட்டிக்கேட்டாக வேண்டும்! தருமரே ஆனாலும் குற்றம் குற்றமே!

தனக்கு அநீதி இழைக்கப்பட்டால், வேறொருவர் அதற்காகப் போராடுகிறாரோ இல்லையோ, ஒரு பெண் தானே போராடத் தொடங்க வேண்டும். இன்னொருவருக்காக அவள் காத்திருக்கத் தேவையில்லை. அது கட்டாயமுமில்லை. பிறரைச் சாராமல் தன்னையே சார்ந்திருக்கும் நிமிர்வே புதுமைப்பெண்ணின் இலட்சணம். அப்படிப்பட்டவளாகவே பாஞ்சாலியை படைக்கிறார் பாரதியார்.

ஓவியம்: வேதா

பின்னர் துச்சாதனன், பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றி இழுத்து வலுக்கட்டாயமாக சபைக்குக் கொண்டு செல்கிறான். ஊர் மக்கள் உணர்வற்று நிற்கின்றனர். அச்சம், அவர்களின் மேல் ஒரு கனத்த பாறையாய்ப் படுத்துக்கொள்கிறது. துச்சாதனனைத் தடுத்து வீழ்த்திப் பாஞ்சாலியை மீட்க யாருக்கும் துணிவில்லை. ஊரார் மட்டுமா அப்படி? அவையில் இருந்த மேலோர்களும் கூட, இருக்கையில் பூட்டப்பட்டது போல் இருந்தனர். இவ்வளவு ஏன்…? கரம் பற்றிய கணவன்மார்களே கல்லாகத்தானே சமைந்திருந்தனர். இவர்களெல்லாம் பாரதியாரின் கண்களுக்கு நெட்டை மரங்கள் எனத் தெரிந்தனர்.

தான் வாழும் சமூகத்தில், பெண்ணடிமைத்தனத்தைக் கண்டிக்காமல் இருந்த நபர்கள் மீது பாரதியார் செய்த கோபமான பதத்தாக்குதல் அது.

மன்னன் திருதராஷ்டிரன் சபையில் கல்வியில் சிறந்த ஆன்றோர்கள் இருந்துமா இந்த அநியாயம் நடக்கிறது என்று பாஞ்சாலி கதறி அழுகிறாள். ‘அந்தகனாய் இருப்பது அரசன் மட்டுமா?’ என்று அரற்றுகிறாள். அதற்குப் பிதாமகர் பீஷ்மர்,
‘கோமகளே, பண்டையுக
வேதமுனிவர் விதிப்படி, நீ சொல்லுவது
நீதமெனக் கூடும்; நெடுங்காலச் செய்தியது!
ஆணொடுபெண் முற்றும் நிகரெனவே அந்நாளில்
பேணிவந்தார். பின்னாளில் இஃது பெயர்ந்துபோய்,
இப்பொழுதை நூல்களினை யெண்ணுங்கால், ஆடவருக்
கொப்பில்லை மாதர். ஒருவன்தன் தாரத்தை
விற்றிடலாம்; தானமென வேற்றுவர்க்குத் தந்திடலாம்.
முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை.
தன்னை யடிமையென விற்றபின் னுந்தருமன்
நின்னை யடிமையெனக் கொள்வதற்கு நீதியுண்டு…’
என்றுரைத்து தலை கவிழ்ந்து கொள்கிறார்.
பாஞ்சாலியின் ஊடே பீஷ்மரிடம் பேசுவது போல் தன் சமூகத்தின் சக ஆண்களிடம் பேசுகிறார் பாரதியார்.
‘பேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்
மாய முணராத மன்னவனைச் சூதாட
வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ? நேர்மையோ
முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கையன்றோ?
மண்டபம்நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ?
பெண்டிர் தமையுடையீர்! பெண்க ளுடன்பிறந்தீர்!
பெண்பாவ மன்றோ? பெரியவசை கொள்வீரோ?
கண்பார்க்க வேண்டும்!’ என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
அவள் அழுகையைத் தொடர்ந்து, துச்சன் அவளது துகிலுரிய முற்பட்டதும் கருங்கடவுள் கண்ணன் அவளை சேலை அளித்துக் காத்ததும் நாடறிந்த வரலாறு.

நீறுபூத்த நெருப்பாக உள்ளே வெஞ்சினம் கனல, இறுதியில் அனைவர் முன்னிலையிலும் வஞ்சினம் உரைக்கிறாள் பாஞ்சாலி.
‘தேவி திரௌபதி சொல்வாள் – ஓம்,
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவிதுச் சாதனன் செந்நீர், – அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து – குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன்யான்; – இது
செய்யுமுன்னேமுடியே’னென் றுரைத்தாள்.
முதலில் தன்னை மற்ற ஆண்களின் அடிமைப்பிடியில் இருந்து விடுவிக்கப் போராடுகிறாள் பாஞ்சாலி. முடிவில் பகைவர்களிடம் இருந்து இழந்ததை மீட்கும் வரை கூந்தலை முடியேன் எனச் சூளுரைக்கிறாள்.

பாரதி கண்ட புதுமைப்பெண், தன்னை ஆதிக்க ஆண்களிடமிருந்தும் மீட்பாள். பின்பு, பாரத நாட்டையும் மீட்பாள். ஆம். அவள் தன்னையும் மண்ணையும் வேறு வேறாகப் பார்க்காதவள் ஆவாள்.

பாஞ்சாலியின் வார்ப்படமாகப் புதுமைப்பெண்ணை உருவாக்கிய பாரதியார், இறுதியாக அவளை இன்னும் மாட்சிமைப்படுத்தி பூரணமாக்க விரும்பினார். அப்படி அவர் என்ன செய்தார்?
(அறிவோம்)

3 COMMENTS

 1. மஹாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதம்
  தான் எத்தனை கோணங்களைக் கொண்டுள்ளது.
  பாரத தேவி யின் அடிமை விலங்கை உடைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை உண்டாக்கிய தமிழகமும்.
  பெண்ணடிமை தீர்க்க வந்த சொல்லமுதம்.
  பாண்டிச்சேரியில் பாரதியார் வசிக்கும் போது மகள் சகுந்தலாவின் ஐயத்தை தீர்க்க தோன்றிய பாடல் என்று படித்ததாக நினைவு.
  ஆனால் அதற்கு முன்பாகவே பாரதியாரின் மனதில் மஹாபாரதம் விதைக் கொண்டிருந்ததை பாரதியாரின் எள்ளுப்பெயரர் கவிஞர் திரைப்பட பாடலாசிரியர் நிரஞ்சன் பாரதி அவர்களின் கட்டுரை வாயிலாக அறியும் போது, பாஞ்சாலி சபதம் தோன்றிய வரலாற்றை பாரதியாரே சொல்வது போல் தோன்றுகிறது.
  நிரஞ்சன் பாரதி அவர்களுக்கு மங்கையர் மலர் வாயிலாக ஒரு வேண்டுகோள்.
  திரைப்பட பாடலாசிரியர், பேச்சாளர் என்று சாதனை படைத்து வரும் நீங்கள் இலக்கிய உலகில் உங்கள் பன்முகத் தன்மையை வெளிக்காட்ட வேண்டும்.
  கதைகள், கவிதைகள், தொடர்கள், ஆன்மீக கட்டுரைகள், சமகால தமிழ் வளர்ச்சி பற்றிய
  ஆய்வு நோக்கிலான கட்டுரைகள் என
  இலக்கிய உலகில் ராஜ முத்திரை பதிக்க வேண்டும்.

 2. நிரஞ்சன் பாரதி அவர்களின் ஒவ்வொரு எழுத்தும் படிக்கப் படிக்க புத்துணர்ச்சி தருகிறது.
  அருமையான தலைப்பு, மற்றும் சிறந்த படைப்பாளி . தலைவணக்கம் எம் பாரதிக்கு .
  நன்றிக்கு வித்தாகும் மங்கையர் மலருக்கும் .
  ஸ்ரீவித்யா பிரசாத் , நங்கநல்லூர் .

நிரஞ்சன் பாரதி
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் எள்ளுப்பேரன். புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் ராஜ்குமார் பாரதியின் மகன். கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர், பேச்சாளர். MYTAMILGURU என்ற இணைய வழி தமிழ்ப்பள்ளியை நண்பர்களுடன் இணைந்து நிறுவி உலகெங்கும் உள்ள மாணாக்கர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்து வருகிறார். இதுமட்டுமல்லாது "பசுமைக் கவிஞன்" என்ற YOUTUBE CHANNEL ஐயும் நடத்திவருகிறார். படித்தது பொறியியலும் மேலாண்மையும் என்றாலும் பிடித்தது தமிழும் இயற்கையும்தான்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

பறக்கும்  பாவைகள்!

0
‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். பகுதி - 7 ரஃபேல் போர் விமானத்தினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லக்...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி... பகுதி -10 மங்கையர் மலர் விவித பாரதியில் இன்று நாம் கேட்க விரும்பும் பாடல்... 1964 ஆம் ஆண்டு வந்த தேவர் பிலிம்ஸின் "வேட்டைக்காரன் "படத்தில் கேவி மகாதேவன் இசையில் கவியரசு...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

 பாகம் - 4   -சுசீலா மாணிக்கம்   திருக்குறளின் நான்காம் அதிகாரம் 'அறன் வலியுறுத்தல்' "அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது  பொன்றுங்கால் பொன்றாத் துணை" பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப்...

இனியில்லை கடன்!

0
சென்ற வார தொடர்ச்சி... சிறுகதை: நாமக்கல் எம்.வேலு ஓவியம்: தமிழ் அதற்கப்புறம் ராமசாமியிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை.  எப்போது பணம் கொடுப்பாய் என்று எப்போவும் போல சோமசுந்தரமும் போன் போட்டு கேட்கவுமில்லை.  ஆபரேசன் நல்லபடியாய் நடந்ததா,...

குரு அருள் திரு அருள்!

பகுதி -2 -நளினி சம்பத்குமார் ஓவியம்; வேதா அனைத்தையும் அருளிடும் குருவின் பார்வை சமஸ்க்ருதத்தில் சுபாஷிதம் அதாவது நல்ல அர்த்தங்கள் பொருந்திய வாக்கியம் ஒன்று உண்டு. குருவின் பார்வை என்பது 1011 பார்வைக்குக் கூட ஈடாகாது, அதற்கும்...