spot_img
0,00 INR

No products in the cart.

கல்லாதது கடலளவு!

மினி தொடர்-1

– நாராயணி சுப்ரமணியன்

டல்சார் ஆராய்ச்சியாளர்கள் எதிர்கொள்ளும் கேள்விகள் சுவாரஸ்யமானவை. அதிலும், மாணவர்களும் பெரியவர்களும் கேட்கும் கேள்விகள், பல சமயங்களில் ஒரேமாதிரியான ஆர்வத்துடன் வெளிப்படும். கடலுக்கு முன்னால் எல்லோரும் குழந்தைகளாகிவிடுகிறார்கள் என்றுகூட இதைப் புரிந்துகொள்ளலாம். இதையே நுட்பமாக அணுகினால், கடலைப் பற்றி நாம் அனைவருமே அறிந்தது மிகவும் சொற்பம்தான் என்பதும் தெரியவரும். பொதுவான சில கடல்சார் கேள்விகளையும் அவற்றுக்கு சுருக்கமான பதில்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். கைகோர்த்துப் பயணிக்கலாமா?

நாராயணி சுப்ரமணியன்

கடல் எவ்வளவு பெரியது? அது எத்தனை ஆழம் இருக்கும்?
கடல் மிகவும் பெரியது. அதன் பிரம்மாண்டம் நம் கற்பனைக்கும் எட்டாதது. பூமியின் பரப்பில் முக்கால் பங்கு கடல்தான். பூமியில் உள்ள கடல், கிட்டத்தட்ட 36 கோடி சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவு கொண்டது. அதாவது, 36 அமெரிக்காக்களின் பரப்பளவு!

கடலின் சராசரி ஆழம் 12,100 அடி (3,680 மீட்டர்) என்று 2010ல் செயற்கைக்கோள் ஆய்வுகள் மூலம் கண்டு பிடித்தி ருக்கிறார்கள். இடத்துக்கு இடம் கடலின் ஆழம் மாறுபடும் என்றாலும், மேற்கு பசிபிக் கடற்பகுதியில் உள்ள ‘மரியானா ட்ரெஞ்ச்’ என்ற நிலப்பகுதியில் காணப்படும் சாலெஞ்சர் டீப் (Challenger deep) என்ற இடம்தான் கடலின் மிக ஆழமான பகுதி. இதன் ஆழம் 36,200 அடி (11,034 மீட்டர்). அதாவது, கிட்டத்தட்ட 11 கிலோ மீட்டர்கள். உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரமான எவரெஸ்ட்டை இதற்குள் தூக்கிப் போட்டால்கூட மூன்று கிலோ மீட்டர் கடல் நீர் மேலே நிற்குமாம்!

கடலின் மிக ஆழமான பகுதிக்கு மனிதர்கள் போயிருக்கிறார்களா?
கடலின் மிக ஆழமான பகுதியான சாலெஞ்சர் டீப்புக்கு தனி மனிதனாகப் போக முடியாது. நீர்மூழ்கிக் கப்பலுக்குள் பயணித்து மட்டுமே சாலெஞ்சர் டீப்பை அடைய முடியும். ஏனென்றால், இதன் அழுத்தம், கடல் பரப்பை விட ஆயிரம் மடங்கு அதிகம்! பாதுகாப்பு வாகனத்தின் அரண் இல்லாமல் மனிதன் நேரடியாக இந்த அழுத்தத்தை எதிர்கொள்வது உயிருக்கே ஆபத்தாக முடியும்.

1960ல், ‘ட்ரிஸ்ட்’ என்ற நீர்மூழ்கிக் கப்பலில் ஜாக் பிக்கார்ட், டான் வெல்ஷ் ஆகிய இருவர் சாலெஞ்சர் டீப் வரை பயணித்து வெற்றிகரமாக மேலே வந்தார்கள்.

2012ல் ஜேம்ஸ் கேமரூன் ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் சாலெஞ்சர் டீப்புக்குப் பயணித்து, ‘கடலின் அடி ஆழத்துக்குத் தனியாக சென்று வந்த முதல் மனிதன்’ என்ற சாதனையைப் படைத்தார். ஜேம்ஸ் கேமரூன் என்ற பெயர் எங்கேயோ கேட்டதுபோல் இருக்கிறதா? டைட்டானிக், அவதார் போன்ற ஹாலிவுட் படங்களின் இயக்குநர் இவர். ஜேம்ஸ் கேமரூன் ஒரு கடல்வாழ் உயிரின ஆர்வலர்!


2020ம் ஆண்டில் கேத்தரின் சல்லிவன் என்ற அமெரிக்கப் பெண்மணி, சாலெஞ்சர் டீப்புக்குப் பயணித்த முதல் பெண்ணாக வரலாற்றில் இடம்பிடித்தார். இவர் ஒரு விண்வெளி வீராங்கனை என்பதால், விண்வெளிக்கும் ஆழ்கடலுக்கும் பயணித்துள்ள முதல் மனிதர் என்ற பெருமையும் இவருக்கே கிடைத்தது.

கடலின் ஆழத்தில் என்ன இருக்கும்?
நிலத்தின் பரப்பில் என்னென்னவெல்லாம் இருக்கிறதோ, அத்தனையும் கடலின் தரையிலும் இருக்கும். மலைகள், மலைத்தொடர்கள், ஆறுகள், சிறு ஏரிகள், எரிமலைகள், பள்ளத்தாக்குகள்… இவ்வளவு ஏன், கடலுக்கடியில் நீர்வீழ்ச்சி போன்ற அமைப்புகள் கூட உண்டு! கடற்பரட்டைகள், சில வகை மீன்கள், கடற்பஞ்சுகள், கடல் நட்சத்திரங்கள் ஆகியவை கடலின் தரையில் வசிக்கின்றன.

கடல் அலைகள் எப்படி உருவாகின்றன?
காற்றும் கடற்பரப்பும் சந்திக்கும் இடத்தில், காற்றின் ஆற்றல் கடல் நீரில் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது. கடல் நீர் மேலெழும்பி கீழே இறங்குகிறது. அது தொடர்ந்து நடப்பதையே நாம் அலை என்கிறோம்.

வெளிப்பார்வைக்குக் கடல் நீர் பயணிப்பதுபோலத் தோன்றினாலும், உண்மையில் கடல் நீரின் மேற்பரப்பில் காற்றின் ஆற்றல் மட்டுமே பயணிக்கிறது. ஒரு அலை கரைக்கு வந்து சேரும்போது, ஆற்றலின் சமநிலை பாதிக்கப்படுகிறது. உயரே எழும்பிய கடல் நீர் உடைவதுபோல ஒரு தோற்றம் உண்டாகிறது.

நிலவு மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசை, பூமியின் மீது ஒரு தாக்கதை ஏற்படுத்தும்போது, ஓத அலைகள் (Tidal waves) தோன்றும். இவை வழக்கமாக நாம் பார்க்கும் அலைகளைப் போல இருக்காது. ஆறு அல்லது பன்னிரெண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை, கடற்கரையிலிருந்து கடல் தொடங்கும் இடத்தின் நீளம் மாறுபடும். இதுவே, ‘ஓதம்’ என்று அழைக்கப்படுகிறது.
(இன்னும் கற்போம்)

2 COMMENTS

  1. கடலின் ஆழம்,கடலின் தரைப்பகுதியில்
    என்ன வெல்லாம் இருக்கிறது என்பது பற்றியும், கடல் அலை பற்றியும் படிக்க
    சுவராசியமாகவும்,அற்புதமாகவும் இருந்தது

  2. தலைப்பிற்கேற்றவாறு கடலைப் பற்றி கற்க நிறைய உள்ளது என புரிந்துக்கொண்டோம்.படிக்க வியப்பாய்,இயற்கைஅற்புதமானது என உணர்ந்தோம்.

நாராயணி சுப்ரமணியன்
நாராயணி சுப்ரமணியன் கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்ற கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளராவார். சிறந்த ஆய்வுக்கான இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் ஆய்வுக்கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். பிரபல இதழ்கள், நாளிதழ்களிலும், குழந்தைகளுக்கான அறிவியல் இதழ்களிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,887FollowersFollow
3,050SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

வெற்றி வேண்டுமா? போட்டுப்பாருங்கள் எதிர்நீச்சல்!

2
- சேலம் சுபா புத்தாண்டு வாழ்த்துக்களும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களும் இந்தக் கொரோனா பயத்தையும் மீறி, முகநூலிலும் இன்னபிற இணைய சேவைகளின் வழியாகவும் நம்மிடம் சேர்ந்து வாழ்வதற்கான தெம்பை அளித்து விட்டன. நமக்கு சரி......

தன்னம்பிக்கையே வெற்றியின் ரகசியம்!

ஊனம் ஒரு தடையல்ல... - ராஜி ரகுநாதன் “ஜன்னலருகில் நின்று சுதந்திரமாக ஆகாய வீதியில் பறக்கும் பறவையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘பறவைக்கு எத்தனை சிறிய கால்கள்! இதற்கு அத்தனை உயரம் பறக்கும் சக்தியை கடவுள் எப்படிக்...

கவிதை!

1
- ஜி.பாபு, திருச்சி வேண்டும்! மனதில் உறுதி வேண்டும்; என்றும் நீ மனசாட்சியுடன் வாழ வேண்டும்! அனுதினமும் கடவுளை துதிக்க வேண்டும்; எல்லாம் அவன் செயலென்று நீ நம்ப வேண்டும்! பெண்டீரைப் போற்ற வேண்டும்; நீ பெரியோர்களை மதித்து நடக்க வேண்டும்! இரு கண்களென...

தைப்பூச சிறப்புகள்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க... பொதுவாக, பெளர்ணமி திருநாள் தெய்வ வழிபாட்டிற்கும், அமாவாசை தினங்கள் பிதுர் வழிபாட்டிற்கும் உரியது. பெளர்ணமியோடு சேர்ந்து வரும் சில சிறப்பு நட்சத்திரங்கள் மகிமை பெற்றவையாகும். இப்படிப் பெளர்ணமியோடு சேர்ந்து வரும் மாசி...

முத்துச் செய்தி மூன்று!

மகளிர் சிறப்பு  தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் தமிழ் எழுத்தாளருக்கு சாஹித்ய அகாடமி விருது! தமிழ் எழுத்தாளர் அம்பைக்கு 2021ம் ஆண்டுக்கான சாஹித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 78 வயதான இவரது இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி. பெண் கல்வி...