0,00 INR

No products in the cart.

சார்ல்ஸ் பிரிட்ஜில் பொடிநடை!

– பயணம்
கிழக்கு ஐரோப்பா – 9

– பத்மினி பட்டாபிராமன்

டந்த 2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில், உலகின் மிக அழகிய நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, செக் ரிபப்ளிக் நாட்டின் தலைநகரமான ப்ராக். ‘நூறு கோபுரங்களின் நகரம்’ (City of a Hundred Spires) என்று செல்லமாகக் குறிப்பிடப்படும் அளவுக்கு இங்கே, கூரான உச்சிகள் கொண்ட மாளிகைகள், சர்ச் போன்றவை காணப்படுகின்றன.

ப்ராக் கேஸ்டல் (Prague castle)
1220 ஆண்டுகள் (கி.பி.880ம் ஆண்டு கட்டப்பட்டது) பழைமை வாய்ந்த, புராதனமான வரலாற்றுச் சிறப்பு கொண்டது ப்ராக் கோட்டை. உலகின் மிக பிரம்மாண்டமான கோட்டை என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. சுமார் ஏழு லட்சத்து ஐம்பத்து நான்காயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட கோட்டை என்றால் சும்மாவா? பொஹிமிய அரசர்களால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டை வளாகத்துக்குள் புராதன ஐரோப்பியக் கட்டடக் கலையின் சான்றாய் நிற்கும் சரித்திரச் சின்னங்கள், அரண்மனைகள், இன்றைய அலுவலகங்கள், அழகியத் தோட்டங்கள், சர்ச்சுகள் என்று செக் நாட்டின் முக்கிய அடையாளமாக இருக்கிறது இந்தக் கோட்டை.

இந்த வளாகத்திற்குள் கம்பீரமாக, பல கூர் கோபுரங்களுடன் இருக்கும் செயின்ட் விடஸ் கதீட்ரல் (St.Vitus Cathedral) ஒரு ரோமன் கத்தோலிக்க சர்ச். இங்கு பிரார்த்தனை சர்வீஸ்கள் மட்டுமின்றி; பல செக் அரசர்களின், அரசியரின் முடிசூட்டும் விழாக்களும் நடைபெற்றிருக்கின்றன. அரசர்கள், மத குருமார்கள், ஆர்ச் பிஷப்கள் போன்ற புனிதர்களின் உடலை அடக்கம் செய்த இடமாகவும் இது உள்ளது.

கதீட்ரலின் உட்புறத் தோற்றம் பிரம்மிப்பைத் தருகிறது. இதன் சேபல் சுவர்கள், ஜொலிக்கும் செமி-ப்ரிஷியஸ் கற்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளன. 16ம் நூற்றாண்டின் சித்திரங்கள் இன்றும் இங்கு பொலிவுடன் பாதுகாக்கப்படுகின்றன. கோட்டைக்குள் சுற்றியதிலேயே கால்கள் வலிக்க ஆரம்பிக்கும்போது அந்த செக் கைட், ‘‘வாங்க… அப்படியே சார்ல்ஸ் பிரிட்ஜில் பொடிநடையாகப் போயிட்டு வந்திடலாம்” என்கிறார். கோட்டையிலிருந்து ரொம்ப நேரம் நடந்து நடந்து, ஒருவழியாக சார்ல்ஸ் பாலத்தை அடைந்தோம்.

சார்ல்ஸ் பிரிட்ஜ்

சார்ல்ஸ் பிரிட்ஜ் முட்டைகளால் இணைந்த பாலம். வ்ல்டாவா (Vltava river) நதிக்கரையில் கட்டப்பட்டு, தற்சமயம் யுனெஸ்கோவால் பாரம்பரிய அடையாளமாகப் பாதுகாக்கப்படும் இந்தக் கோட்டையை, நகரின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் பாலம்தான் சார்ல்ஸ் பிரிட்ஜ் (Charles Bridge). 1357ல் நான்காம் சார்ல்ஸ் அரசரால் திட்டமிடப்பட்டு, கற்களால் கட்டப்பட்ட பாலம் இது. 516 மீட்டர் நீளமும்10 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் இருபுறமும் தூண்களின் மேல் வைக்கப்பட்டுள்ள முப்பது அழகிய சிலைகள், பாலத்தின் கம்பீரத்தை அதிகமாக்குகின்றன.

முப்பது சிலைகளும், 17ம் நூற்றாண்டில் புகழ் பெற்ற ஐரோப்பிய சிற்பிகளால் பரோக் (Baroque) முறையில் செதுக்கப்பட்ட மத குருமார்கள் மற்றும் புனிதர்களின் சிலைகள்.

இந்தப் பாலம் கட்டும்போது மணல், கல் இவற்றைக் கெட்டியாக இணைக்க முட்டைகளை உபயோகித்திருக்கிறார்கள். (கேக் செய்யும்போது மாவை முட்டை இணைப்பது போல்) களைப்பாக இருந்தாலும், பாலத்திற்கடியில் ஓடும் நதியும், மாலைக் காற்றும் சற்று தூரத்தில் தெரிந்த ப்ராக் நகரின் அழகியக் கட்டடங்களும் அந்தச் சோர்வைப் போக்கி விட்டன.

வானவியல் கடிகாரம் ( கட்டுரையாசிரியர் தன் கணவருடன்…)

வானவியல் கடிகாரம் (Astronomical Clock)
துக்கம் இல்லாமல் எந்த ஐரோப்பிய நகரமும் இருக்காது. ப்ராக் நகரிலும் ஒரு, ‘ஒல்ட் டவுன் ஸ்கொயர்’ இருக்கிறது. இங்கிருக்கும் கிறிஸ்துமஸ் மார்க்கெட் உலக அளவில் சிறந்த பத்து சந்தைகளில் ஒன்று. இங்கு ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் பர்சேஸ் செய்ய வருகிறார்கள். அவர்கள் தவறாமல் பார்த்துச் செல்லும் ஒன்று அஸ்ட்ரானமிகல் க்ளாக் (Astronomical Clock) என்ற பிரபலமான, பிரம்மாண்டமான, உலகிலேயே பழைமையான வானவியல் கடிகாரம். சதுக்கத்தில் உள்ள ஒரு டவரின் மேல் நிர்மாணிக்கப் பட்டுள்ளது இது. 620 வருடங்களைக் கடந்திருக்கும் இக்கடிகாரம், முழுவதும் இயந்திரங்களாலேயே இயக்கப்படுகிறது. 1410ல் ஒரு கடிகாரத் தயாரிப்பாளரும், ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியரும் சேர்ந்து இந்த வானவியல் கடிகாரத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

1490ல் இதில் நாட்காட்டி இணைக்கப்பட்டு, முகப்பில் சிற்ப வேலைப்பாடுகளும் செய்யப் பட்டனவாம். இதில் இருக்கும் அஸ்ட்ரானமிகல் டயல், வானில் நட்சத்திரங்களின் இடம் போன்ற விண்வெளிக் குறிப்புகளோடு, தினமும் சூரியன், சந்திரன் இவற்றின் நிலைகளையும் காட்டுகிறது.

இறைத் தூதர்களின் நடை
தன் மற்றோர் வியப்பான அம்சம், இறைத் தூதர்களின் நடைக்காட்சி (The Walk of the Apostles). கடிகாரத்தின் டயல் அருகே பன்னிரெண்டு இறைத் தூதர்களின் சிலைகள் உள்ளன. ஒவ்வொரு மணி நேரம் முடிந்து, மணி அடிக்கும்போது அந்தச் சிலைகள் உள்ளே சுற்றி வரும்படி மெகானிசம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஜன்னல்கள் வழியே சிலைகள் கடந்து செல்வதைப் பார்க்க முடிகிறது. குவிந்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் அதைக் கண்டு கூச்சலிட்டு ரசிக்கிறார்கள். காலண்டர் டையல், வருடத்தின் ஒவ்வொரு நாளைப் பற்றிய செய்தியைக் காட்டுகிறது. பன்னிரெண்டு ராசிகளையும் காட்டும் டயல் ஒவ்வொரு மாதத்தையும் குறிப்பிடுகிறது.

அரண்மனை ஹோட்டல்

அரண்மனை ஹோட்டல்
செக் கொருனா (Czech koruna) என்னும் அந்த ஊர் கரன்சி, இந்திய மதிப்பில் (இப்போது) 3 ரூபாய் 46 பைசா. மக்கள் பேசும் மொழி செக் என்றாலும், அனைவருமே ஆங்கிலம் பேசுவதால் மொழிப் பிரச்னை இல்லை. தவிர, ரஷ்யா நீண்ட நாள் ஆதிக்கம் செய்ததால், ரஷ்யன், ஜெர்மன் மொழிகளும் பேசுகிறார்கள். இன்னும் அந்தச் சதுக்கம் முழுக்கச் சுற்றி விட்டு, நாங்கள் தங்கிய ஹோட்டல் இண்டர் நேஷனலுக்குத் திரும்பினோம்.
அந்தக் கால ரஷ்யன் பேலசை ஹோட்டலாக மாற்றியிருக்கிறார்கள் போலும். அந்த ஹோட்டலே ஒரு பெரிய அரண்மனை லுக்கில் பிரம்மாண்டமாக இருந்தது.

உள்ளேயும் பளபளப்பான மிகப்பெரிய்…ய ஹால், உயரமான சீலிங், அகன்ற படிக்கட்டுக்கள், பெரிய அறைகள் என்று அரண்மனை வாசம்தான். தவிர லிஃப்ட்… டைனிங் ஹால்… வைஃபை வசதிகள் என மிக நவீனமான ஹோட்டல்.

காலையில் கான்டினென்டல் ப்ரேக்ஃபாஸ்ட்டில், ஸ்பெஷல் செக் பேன்கேக், பேஸ்ட்ரி அயிட்டங்கள், ப்ரெட், ஜூஸ், எக் ஸ்க்ரேம்பிள், சாசேஜ்கள். அந்த மண்ணின், ஆப்பிள், ஸ்ட்ராபெரி, பியர், ஆரஞ்ச், ப்ளம், க்ரேப்ஸ், வாட்டர் மெலான் என்று பழ வகைகள்.

சீனா, ஜப்பான் டூரிஸ்ட்டுகள் நிறையவே வருகிறார்கள். இங்கே என்றில்லை, பொதுவாகவே உலக டூர் செல்லும்போதெல்லாம் மங்கோலிய மஞ்சள் முகத்தார் நிறையப் பேரைப் பார்க்க முடிகிறது.
காலை உணவுக்குப் பின் வெளியே வந்தபோது, எங்கள் கோச் தயாராக இருந்தது.

‘‘நீங்கள், ‘சவுண்ட் ஆஃப் ம்யூசிக்’ படம் பார்த்திருக்கிறீர்களா?” எனக் கேட்டார் எங்கள் கைட். வீடியோவில் எப்போதோ பார்த்த நினைவு இருந்தது. அதன் அழகிய லொகெஷன்களை மறக்க முடியுமா?
‘‘எதற்குக் கேட்கிறார்?”
‘‘நாம் இப்போது ஆஸ்ட்ரியாவுக்குச் செல்கிறோம். அங்கே சால்ஸ்பர்க் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”
‘‘சவுண்ட் ஆஃப் ம்யூசிக் படம் அங்கேதான் அனேகமாக எடுக்கப்பட்டது. இப்போது சால்ஸ்பர்க் செல்கிறோம்” – கோச்சுக்குள் ஆனந்தக் கூச்சல்.

ஆஸ்ட்ரியா நோக்கி…
ஆஸ்ட்ரியா செல்கிறோமா? செல்லும் வழியிலேயே இயற்கை அழகின் களேபரம் ஆரம்பித்து விட்டது. கிழக்கு ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அரவணைப்பில், செக் நாட்டின் எல்லையை ஒட்டி இருக்கும் சால்ஸ்பர்க் (Salzburg), ப்ராகிலிருந்து சுமார் நான்கரை மணி நேரப் பயணம். நகரம் தாண்டியவுடன், கூடவே பயணிக்கும் ஆல்ப்ஸ். தூரத்தில் பனி மூடிய சிகரங்களும் அருகே பச்சை புல்வெளி சரிவுகளும்… கொள்ளை அழகு. ரசிக்கும்போதே கோச் நின்றது.

ஏதோ சுரங்கம் என்று எழுதிய போர்ட் கண்ணில் பட்டது.
‘‘இறங்குங்கள்… நாம் உப்பு சுரங்கத்துக்குள் சென்று உப்பு எடுக்கப்போகிறோம்” கைட் சொல்ல, திகைத்தோம்.
உப்பளம் தெரியும்… கடலருகே இருக்கும். இதென்ன உப்பு சுரங்கத்தில்…? புரியாமல் இறங்கினோம்.
(தொடர்ந்து பயணிப்போம்)

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

பறக்கும்  பாவைகள்!

0
‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். பகுதி - 7 ரஃபேல் போர் விமானத்தினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லக்...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி... பகுதி -10 மங்கையர் மலர் விவித பாரதியில் இன்று நாம் கேட்க விரும்பும் பாடல்... 1964 ஆம் ஆண்டு வந்த தேவர் பிலிம்ஸின் "வேட்டைக்காரன் "படத்தில் கேவி மகாதேவன் இசையில் கவியரசு...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

 பாகம் - 4   -சுசீலா மாணிக்கம்   திருக்குறளின் நான்காம் அதிகாரம் 'அறன் வலியுறுத்தல்' "அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது  பொன்றுங்கால் பொன்றாத் துணை" பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப்...

இனியில்லை கடன்!

0
சென்ற வார தொடர்ச்சி... சிறுகதை: நாமக்கல் எம்.வேலு ஓவியம்: தமிழ் அதற்கப்புறம் ராமசாமியிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை.  எப்போது பணம் கொடுப்பாய் என்று எப்போவும் போல சோமசுந்தரமும் போன் போட்டு கேட்கவுமில்லை.  ஆபரேசன் நல்லபடியாய் நடந்ததா,...

குரு அருள் திரு அருள்!

பகுதி -2 -நளினி சம்பத்குமார் ஓவியம்; வேதா அனைத்தையும் அருளிடும் குருவின் பார்வை சமஸ்க்ருதத்தில் சுபாஷிதம் அதாவது நல்ல அர்த்தங்கள் பொருந்திய வாக்கியம் ஒன்று உண்டு. குருவின் பார்வை என்பது 1011 பார்வைக்குக் கூட ஈடாகாது, அதற்கும்...