0,00 INR

No products in the cart.

குருவாயூருக்கு வாருங்கள்!

-ரேவதி பாலு

கேரளாவில் வருடம் முழுவதும் கோலாகலமாக இருக்கும் கோவில்களில் ஒன்று குருவாயூரப்பன் கோவில்.  பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படும் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இந்த விஷ்ணு ஸ்தலத்தை ஒரு காலத்தில் குருவும் வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்ததால் இந்த கிருஷ்ணருக்கு குருவாயூரப்பன் என்று பெயர் வந்தது. ஸ்ரீ குருவாயூரப்பன் இங்கே நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஏந்திக்கொண்டு மந்தகாச முகத்தோடு காட்சி அளிக்கிறார்.

தினமும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து தரிசிக்கும்  இந்தக் கோவிலில் அதிகாலை நிர்மால்ய தரிசனத்தில் ஆரம்பித்து இரவு யானை சீவேலி ஊர்வலம் வரை கும்பல் தான். கோலாகலம் தான்.  நிர்மால்யம் முடிந்தவுடன் எண்ணெய் அபிஷேகம், பிறகு மலர்கள் நைவேத்யம் செய்யப்பட்டு காலை ஏழேகால் அளவில் ஒரே ஒரு யானை கிருஷ்ணனின் சன்னதிக்குப் பக்கவாட்டில் (பக்தர்கள் தரிசனம் முடித்து வெளியே வரும் வழி) நிறுத்தப்பட்டு அதற்கு அலங்காரங்கள் செய்விக்கப்பட்டு சீவேலி என்னும் யானை குருவாயூரப்பனை பிரதட்சணம் செய்யும் வைபவம் நடைபெறுகிறது. பிறகு  பகல் 12.30 மணிக்கு உச்சிக்கால பூஜை முடிந்து நடை சார்த்தப்படுகிறது.

மாலை 4.30 மணி அளவில் திரும்ப கோவில் திறக்கப்பட்டு தரிசனம். இரவு 8.45 அளவில் லட்ச தீபம் ஏற்றப்பட்டு கோவில் ஜகஜ்ஜோதியாக பிரகாசிக்க, திரும்ப யானை சீவேலி நடைபெறுகிறது.  இப்போது ஐந்து அலங்கரிக் கப்பட்ட யானைகள் குருவாயூரப்பன் சன்னதியைச் சுற்றி பிரதட்சணமாக வர அதில் ஒரு  யானையின் மேல் குருவாயூரப்பனின் புகைப்படம் அல்லது சில சமயங்களில் விக்கிரகம்  ஒன்றை ஏந்திக்கொண்டு ஒருவர் அமர்ந்திருப்பார். பின்னால் இருக்கும்  யானையின் மேல் அமர்ந்திருப்பவர் குடை பிடிக்க, அதன் பின்னால் சாமரம் வீசிக்கொண்டே ஒரு யானையின் மேல் ஒருவர் வருவார்.  குருவாயூரப்பன் தரிசனம் முடிந்து விட்டாலும்,  சீவேலியைப் பார்ப்பதற்கே நூற்றுக்கணக்கில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யானை சீவேலி நடக்கும் பாதையில் ஓரமாக நின்று கொண்டு பரவசமாய் சீவேலியைக் கண்டு களித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு பக்கம் துலாபாரம்.  சர்க்கரை முதல் சேனைக்கிழங்கு வரை பக்தர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப எதை வேண்டுமானாலும் காணிக்கையாக செலுத்தலாம். உடலில் அரிப்பு நோய் இருப்பவர்கள் அது தீர சேனைக்கிழங்கை வேண்டிக்கொண்டு துலாபாரம் செலுத்துவார்களாம். பிரசாத கவுண்டரில் அந்தந்த பூஜை நேரத்தில் குருவாயூரப்பனுக்கு நைவேத்தியம்  செய்யப்படும் பிரசாதங்கள் பால் பாயசமோ, நெய்ப்பாயசமோ, பாலடைப் பிரதமனோ, பஞ்சாரையோ (சர்க்கரை), வாழைப்பழமோ, வெண்ணையோ, சந்தனமோ உடனுக்குடன் கிடைக்கிறது. அதற்கு ஒரு வரிசையில் பக்தர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இங்கே சிறு  குழந்தைகளுக்கு முதன் முதலாக ‘சோறு ஊட்டல்’ என்று தலை வாழை இலை போட்டு  அதில் பால் பாயசத்திலிருந்து பருப்பு, சாதம், பப்படம் வரை சகல பதார்த்தங்களையும் பரிமாறி உண்ண வைப்பார்கள். சொர்ணத்தால் சோறு ஊட்ட ஆரம்பிக்க வேண்டும் என்பதால் தங்கள் தங்க மோதிரத்தை பால் பாயசத்தில் தொட்டு அதை குழந்தையின் நாக்கில் வைத்து சோறு ஊட்டுவதைத் தொடங்குவார்கள்.  தமிழ் நாட்டுக்காரர்கள் பலருக்கும் தங்கள் குழந்தைகளுக்கு ‘சோறு ஊட்டுவது’ குருவாயூரில் தொடங்குவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அதே போல் கர்ப்பமாக இருக்கும் பெண்களை குருவாயூருக்கு அழைத்து வந்து குருவாயூரப்பன் பிரசாதமாகக் கிடைக்கும் வெண்ணையை உண்ண வைத்து அந்த குருவாயூரப்பனே தங்கள் வீட்டில் வந்து பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வதும் வழக்கம்தான்.

கிருஷ்ணரின் சன்னதிக்கு எதிரில் சற்றே வலப்புறமாக ஒரு பிரம்மாண்டமான வெங்கல உருளி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் முழுவதும் குந்துமணி நிரப்பப்பட்டுள்ளது. நாம் பிள்ளையார் சதுர்த்தியின்போது வாங்கும் களிமண் பிள்ளையார் விக்கிரகத்திற்கு கண்களாகப் பொருத்துவார்களே அதே அழகிய சின்ன கறுப்புப் புள்ளியோடு கூடிய செந்நிற குந்துமணிகள் தான். இந்த குந்துமணிகள் விளையும் மரத்தை கேரளாவில் ‘மஞ்சாடி மரம்’ என்பார்கள்.  நிறைய வீடுகளில் இந்த மரத்தைப் பார்க்கலாம். பக்தர்கள் எல்லோரும் தங்கள் இரு கைகளாலும் இந்த குந்துமணியை நன்றாக அளைந்து கொண்டே மனதில் தங்கள் ரோகங்கள் நீங்கவும், குழந்தை பாக்கியம் ஏற்படவும் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.  இதன் தாத்பர்யம் என்னவென்று கோவிலில் விசாரித்தபோது அதற்கு ஒரு கதை சொன்னார்கள்.

ரொம்ப வருடங்களுக்கு முன்பு குருவாயூருக்கு மிகத் தொலைவில் ஒரு ஊரில் ஒரு  மூதாட்டி வசித்து வந்தாராம்.  அவருக்கு குருவாயூர் ‘குட்டிக் குருஷ்ணரை’  தரிசிக்க வேண்டும் என்று கொள்ளை ஆசையாம். அவரை அழைத்துப் போகவும் ஆளில்லை.  வண்டி வாகனம் வைத்துக் கொண்டு தொலைவில் இருக்கும் குருவாயூர் போகவும் அவருக்கு வசதி இல்லை.  முக்கியமாக கிருஷ்ணரைப் பார்க்கப் போகும்போது வெறும் கையோடு போக முடியுமா?  அந்தக் குழந்தைக்கு ஏதாவது கொண்டு போய் கொடுக்க வேண்டாமா?  யோசித்து யோசித்து அந்த மூதாட்டி தன் வீட்டில் மஞ்சாடி மரத்திலிருந்து கீழே விழுந்த குந்துமணிகளை சேகரித்து அதைக் கழுவி சுத்தம் செய்து ஒரு பையில் சேகரம் செய்தாளாம்.

ஒருநாள் குருவாயூரை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தாள்.  கால்நடையாகவே சென்ற அவள் அந்தக் கடினமான பயணத்தில் ஆங்காங்கே இளைப்பாறிக் கொண்டு மேலே பயணத்தைத் தொடருவாளாம்.  இவ்வாறாக ஒரு மண்டலம் பயணம் செய்து குருவாயூரை அடைந்து விடுகிறாள்.  கையில் ஒரு பை நிறைய குந்துமணிகள்.

அவள் கோவிலுக்கு சென்ற நாளில் கோவிலில் ஏதோ விசேஷம்.  ஒரே பரபரப்பாக இருக்கிறது.  என்னவென்று விசாரித்தபோது அந்த ஊர் அரசர் மாதத்தின் ஒவ்வொரு முதல் தேதியும் ஒரு யானையை குருவாயூரப்பனுக்குக் காணிக்கையாக சமர்ப்பிப்பாராம்.  அவர் தன் பரிவாரத்துடன் கோவிலுக்குள் வந்து யானையை சமர்ப்பிக்க இருந்தபோது ஒரே நெரிசல்.  சேவகர்கள் அரசர் வருவதற்கு நெரிசலை  விலக்கி வழி ஏற்படுத்திக் கொண்டிருந்தபோது அந்த கெடுபிடியிலும் அவர்களின் அஜாக்கிர தையாலும் அந்த வயோதிகப் பெண்மணி கீழே தள்ளப்பட்டு அவள் கையில் இருந்த பையிலிருந்து குந்துமணிகள் கீழே விழுந்து கோவிலெங்கும் சிதறி ஓடின. இதைக் கண்ட அவளுக்கு துக்கம் மேலிட,  அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. அதே நேரத்தில் அரசர் சமர்ப்பிக்க இருந்த யானைக்கு திடீரென மதம் பிடித்து தாறுமாறாக ஓடி கோவிலுள்ள பொருட்களை எல்லாம் துவம்சம் செய்ய ஆரம்பித்தது.   பயந்து போன அரசனும் கோவில் அதிகாரிகளும் குருவாயூரப்பனிடமே ‘பிரஷ்னம்’ கேட்டனர்.  அப்போது அசரீரியாக ஒரு குரல், “எனக்காக பக்தியோடு வெகு தொலைவிலிருந்து மஞ்சாடி மரத்தின் காய்களை (குந்துமணிகளை) கொண்டுவந்த பக்தையை நீங்கள் அவமதித்து விட்டீர்கள்.  அவள் கொண்டு வந்த குந்துமணிகள் எனக்கு வேண்டும்” என்று கேட்டது.

உடனே எல்லோரும் சிதறிக் கிடந்த குந்துமணிகளை பொறுக்கியெடுத்துப் பையில் போட்டு அந்த மூதாட்டியை சகல மரியாதைகளுடன் கிருஷ்ணர் சன்னதிக்கு அழைத்துப் போய் தொழ வைத்தனர். அவள் ஆசையுடன் குருவாயூரப்பனிடம் குந்துமணிகளை சமர்ப்பித்ததும் யானையின் மதம் அடங்கியது.  அந்த சிறந்த பக்தையின் நினைவாக அவள் பக்தியைப் போற்றும் விதத்தில் இந்தக் கோவிலில் குருவாயூரப்பன் சன்னதி அருகே ஒரு உருளியில் குந்துமணி போட்டு வைக்கப்பட்டுள்ளது. குருவாயூரப்பன் என்றாலே ரோகங்களைத் தீர்ப்பவர் என்று தான் எல்லோரும் தரிசனம் செய்ய வருகிறார்கள். நாராயண பட்டத்ரி தன் ரோகங்களைப் போக்குவதற்காக நாராயணீயம் பாடிய ஸ்தலம் ஆயிற்றே.  பக்தர்கள் தங்கள் ரோகங்கள் நீங்குவதற்காகவும்,  குட்டிக் கிருஷ்ணன் குடி கொண்டுள்ள ஸ்தலம் என்பதால் பிள்ளை வரம் வேண்டியும் இந்த குந்துமணிகளை தங்கள் இருகைகளாலும் பக்தியோடு  அளைந்து விட்டு  பிரார்த்தித்துக் கொண்டு செல்கிறார்கள்.

ஸ்ரீ மஹாவிஷ்ணு தசாவதாரம்
எடுத்தாலும், அதில் அனைவருக்கும்
பிடித்த  அவதாரம் ஸ்ரீ கிருஷ்ண
அவதாரமே ஆகும்.  குருவாயூரில்
உறையும் குட்டி கிருஷ்ணரைத்
தரிசிக்க அனைவருக்கும் கொள்ளை
ஆசை. அதுவும் இப்போது
மலையாள புத்தாண்டு ‘விஷூ’ வைக் கொண்டாடும் நேரம். அதனால்
இப்போது கொரோனா கெடுபிடிகளும் தளர்த்தப்பட்டுள்ளதால் கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல்
மிக அதிக எண்ணிக்கையில்
மக்கள் ஸ்ரீ குருவாயுரப்பனின்
தரிசனத்திற்காக வருகின்றனர்.

1 COMMENT

  1. அருமையான கட்டுரை. ஏற்கனவே குருவாயூர் சென்றிருந்தால் கூட, குந்துமணி கதை தெரியாததால் அளைந்தது இல்லை. குருவாயூரப்பன் கிருபை இருந்தால் அடுத்தமுறை நிச்சயம் குந்துமணி அளைவேன்.

ரேவதி பாலு
ரேவதி பாலு, பி.எஸ். என். எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முப்பத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறார். தமிழில் வெளியாகும் வார, மாதப் பத்திரிகைகளில் இவருடைய படைப்புகள் வெளியாகி வருகின்றன. சிறுகதை, குறுநாவல், நாடகம் என்று பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றவர். இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தும் மாதாந்திர சிறந்த சிறுகதைக்கான பரிசு இருமுறை கிடைத்திருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன;. இதுவரை ஏழு சிறுகதை தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிக கட்டுரை தொகுப்பு நூல்கள் மற்றும் ஒரு சமூக கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகி இருக்கிறது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...