0,00 INR

No products in the cart.

தவறில்லாத பொய்!

கதை: வி.ஜி. ஜெயஸ்ரீ, சென்னை
ஓவியம்: லலிதா

 

 நினைத்து, நினைத்து ஆறவில்லை ரமாவிற்கு. நடந்தது இது தான். காலை அலுவலகம் போகும் அவசரத்தில் பறந்துக் கொண்டிருந்தான் செழியன். “ஒரு வாய் சாப்பிட்டு போங்க,” என கெஞ்சி, இட்லி எடுத்து வைத்து, சட்னி ஊற்றினாள் ரமா.

“எப்ப பாரு இட்லி தோசை தானா? எங்க ஆஃபிஸ்ல வேறு ப்ராஞ்ச்ல இருந்து டிரான்ஸ்ஃபர்ல போன மாதம் தான் மல்லிகான்னு ஒருத்தங்க ஜாயின் பண்ணினாங்க.

அவங்க பல்லாவரத்துல இருந்து கரெக்ட் டைமுக்கு டிரெயினை பிடிக்கணும்னு, காலை டிபனையும் கட்டி எடுத்துக்கிட்டு வந்து ஆஃபிஸ்ல தான் சாப்பிடுவாங்க. விதம் விதமாக ஆப்பம், கிச்சடி, அடை, அவியல், பூரி, சப்பாத்தின்னு கொண்டு வருவாங்க. அவங்க டிரெஸ் பண்றதை பார்க்கணும், காட்டன் புடவை தான் கட்டுவாங்க. ஆனால், ஒரு கசங்கல் கூட இருக்காது. அவ்வளவு தூரத்திலிருந்து வந்தாலும் பளிச்சுன்னு இருப்பாங்க. நீயும் இருக்கியே அழுது வடிஞ்சுக்கிட்டு.

நேத்துக் கூட அவங்க கேட்டாங்க. ‘என்ன செழியன்,  எப்ப கல்யாண சாப்பாடு போட போறீங்கன்னு?’ எல்லாரும் சிரிச்சுட்டாங்க. அவருக்கு கல்யாணம் ஆகி, ஆறு மாச ஆண் குழந்தை இருக்குன்னு மத்தவங்க சொன்னவுடனே அவங்களாலே நம்பவே முடியல. ‘ரியலி! நீங்க அழகா, இளமையா, சிம்பு மாதிரியே இருக்கீங்க’ன்னு சொன்னாங்க. அவங்க வந்ததிலிருந்தே, என்னையே தான் மொறைச்சு, மொறைச்சு, பார்ப்பாங்க. ம்ஹீம், நான் தான் அவசரப்பட்டுட்டேன் போலிருக்கு,” என்றான்.

அவன் முடிப்பதற்குள் களுக்கென்று சிரித்தாள் அவன் தங்கை தீபா. தம்பி கார்த்திக் சிரிப்பை அடக்கிக் கொள்வது வெளிப்படையாகத் தெரிந்தது.

ரமாவிற்கு வருத்தமாக இருந்தது. அப்போது அங்கே வந்த அவள் மாமியார் திலகவதி, “ஏன்டா, அவளே கைக்குழந்தைக்காரி. அப்ப கூட, காலையில் எழுந்து அவ்வளவு வேலைகளையும் செய்யறா. அவளைப் போய் இப்படி சொல்றியே?” என்று கூற, ஒரு வழியாக, எல்லோரும் அவரவர் வேலைக்கு கிளம்பி சென்றனர்.

ரமாவுக்கு திருமணம் முடிந்து, ஒன்றரை வருடங்கள் தான் ஆகியிருந்தது. கையில் ஆறு மாத ராகுல். ரமா அழகி தான். ஆனால் இப்போது குழந்தையைப் பார்த்துக் கொண்டு, வீட்டு வேலையையும் செய்வதால், நலுங்காமல் டிரெஸ் செய்ய முடியவில்லை.

வெளியில் காலிங் பெல் ஒலிக்க, திறந்தால், அப்பாவும் அம்மாவும் நின்றுக் கொண்டிருந்தனர். ரமாவுக்கு வாயெல்லாம் பல். அடுத்த தெருவிலிருக்கும் அம்மா அப்பா இப்ப எதுக்கு திடீர்னு வந்திருக்காங்க?

“ரமா, நீ IBPS தேர்வு எழுதின இல்ல? அதுல தேர்வு பெற்று, உனக்கு நம்ம வீட்டு அருகில் இருக்கும் அந்த தேசியமயமாக்கப் பட்ட வங்கியில் வேலை செய்ய, நியமன உத்திரவு வந்திருக்கு. எடுத்தவுடன் ரூ.20,000/- சம்பளம். அடுத்த வாரம்  வேலையில் சேரணும்.”

ரமாவால் நம்பவே முடியவில்லை. எப்போதோ தேர்வு எழுதி, நேர்முகத் தேர்விலும் கலந்துக் கொண்டிருந்தாள். அந்த வேலை தான் இப்போது கிடைத்திருக்கிறது. அவள் அம்மா,  தான் குழந்தையை பார்த்துக் கொள்வதாக கூற, ரமா வேலைக்கு செல்லத் தொடங்கினாள்.

ஒரு மாதத்தில் நிறைய மாற்றங்கள் அவளிடம். தலை முடியை தோளுக்கு கீழ் கத்தரித்து, ஷாம்பு குளியல் போட்டு, தலை முடியை லூசாக விட்டிருந்தாள். புருவத்தை சீராக்கி, கண் மை போட்டுக் கொண்டு, உதட்டுச் சாயம் தடவிக் கொண்டு, நகச் சாயம் பூசிக் கொண்டு, ஆள் பாதி, ஆடை பாதி என்பது சரி தான் போலும். நவ நாகரீக மங்கையாகிப் போனாள் ரமா.

அன்று அலுவலகத்தில் நுழைந்த ரமாவின் அருகில் வந்த கேஷியர், ” மேடம், இந்த ரோஸ் கலர் புடவை செமையாயிருக்கு. இந்த புடவையில், நீங்கள் ஒரு ரோஜா பூ மாதிரி இருக்கிறீர்கள்” என்று கூறி விட்டு, அவள் பதிலை எதிர்பாராமல் சென்று விட்டார். அவர் சொன்னது ரமாவிற்கு பிடிக்கவில்லை  என்றாலும், அவர் உடனே சென்று விட்டதால், ஒன்றும் கூற முடியவில்லை.

அன்று இரவு எல்லோருக்கும் சப்பாத்தியை பறிமாறிக் கொண்டே ரமா கூறினாள். “என்னங்க, இன்னிக்கு எங்க பேங்க்ல ஒரு விஷயம் நடந்தது.”

“என்ன ரமா?”

“எங்க பேங்க்ல ஒருத்தர் உங்க புடவை செமையா இருக்குன்னு சொன்னார்.” செழியனின் முகம் சட்டென்று கருத்தது. வாயருகில் கொண்டு சென்ற சப்பாத்தி துண்டு அப்படியே அந்தரத்தில் நின்றது. கார்த்திக் பேய் முழி முழிக்க, தீபாவிற்கு உணவு தொண்டையில் சிக்கி, விக்கியது.

ஒரு நிமிடத்தில் நிலைமையை உணர்ந்துக் கொண்டாள் ரமா.

“என்னப்பான்னு பயந்து போய் கேட்டேன். இல்லைக்கா, எங்க தங்கச்சியை ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க வராங்க. இது எங்கே வாங்கினீங்க? இது மாதிரி ஒன்னு எடுக்கணும்க்கான்னு சொன்னான். அப்ப தான் எனக்கு உயிரே வந்தது,”  என்றாள்.

வாய் விட்டு சிரித்தான் செழியன். “அவ்வளவு தானே? ஒன்னுன்னா, ஒன்பதை நினைச்சு பயப்படுவ நீ”

நிம்மதி அடைந்தாள் ரமா. நாம் டக்கென்று இவ்வாறு சொன்னது தான் நல்லது. இல்லையென்றால், குடும்ப உறவில் விரிசல் வந்திருக்கும். நம்ம சமூக கட்டமைப்பு அப்படி. இதனால் என்ன ஒரு நன்மையென்றால், இனி செழியனுக்கு எந்த பெண்ணைப் பற்றியும் நம்மிடம் தப்பாக பேச தைரியம் வராது என்ற நம்பிக்கையுடன், தானும் அவர்கள் அருகில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினாள் ரமா.

1 COMMENT

  1. உண்மைதான் ஒரு பொய் மூலம் நம் குடும்ப அமைப்பை விரிசல் இல்லாமல் காப்பாற்ற முடியும் அப்படின்னு இருந்தா அந்த பொய் சொல்வதில் தவறே இல்லை. – ரேவதி பாலு

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...

பஞ்சு பாலசுப்ரமண்ய ஹரிஹரன்!

சிரிகதை : தனுஜா ஜெயராமன் ஓவியம்: தமிழ் அந்தக் கோடி வீட்டு சுந்தரராமன் ஸ்மியூல் பாடகி கல்யாணியோட "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" ன்னு பாவத்தோட பாடி பஞ்சு மாமாவின் வாட்சாபிற்கு அனுப்பி, மாமாவின் வயிற்றெரிச்சலை...

ஒரு பக்கக் கதைகள்!

3
ஓவியம்; தமிழ் துரோகம்! -புதுவை சுபா அதிகாலை 4.00 மணிக்கே அந்த நடுத்தர உணவகம் ஆயத்தமானது. “இன்னும் கொஞ்ச நேரத்துல வாடிக்கையாளர்கள் ‘டீ’க்கு வந்து நிப்பாங்க. இட்லி ஊத்தி எடுக்கணும். சட்னி சாம்பார் தயார் செய்யணும். வேலை...

மனத்துக்   கண்    மாசிலன்     ஆதல்…….

1
சிறுகதை - சாந்தி நாதன் ஓவியம்: லலிதா   மதிய உணவிற்குப் பின் சிறிது உறங்கி எழுந்த ராமநாதன் அறையை விட்டு வெளியே வரவும் , "உள்ளே வரலாமா?" என்று குரல் கொடுத்தவாறே அவர் நண்பர் சடகோபன்...