0,00 INR

No products in the cart.

ஆஸ்கார் விருது பெற்ற ‘கிங் ரிச்சர்ட்’  – யார் அந்த நிஜமான ரிச்சர்ட்?

ஜி.எஸ்.எஸ்.

ரிச்சர்ட் வில்லியம்ஸ் ஒரு முன்னாள் அமெரிக்க டென்னிஸ் பயிற்சியாளர்.  இப்படிச் சொன்னால் பலருக்கும் புரியாது.  பிரபல டென்னிஸ் வீராங்கனைகள் செரினா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸின் தந்தை என்று சொன்னால்… “ஓ, அவரா” என்று புருவங்களை உயர்த்துவார்கள்.  இவரைப் பற்றி சமீபத்தில் மிக அதிகம் பேசப்படுவதற்கு வேறொரு காரணமும் அமைந்திருக்கிறது.  இவரது வாழ்க்கை வரலாறு ‘கிங் ரிச்சர்ட்’ என்ற பெயரில் ஹாலிவுட்டில் திரைப்படமாக எடுக்கப்பட, அவரது பாத்திரத்தை ஏற்று நடித்த வில் ஸ்மித் சிறந்த கதாநாயகனாக ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார்.

லூசியானா மாநிலத்தில் வசித்த ரிச்சர்ட் டவ் வில்லியம்ஸ் (சீனியர்) என்பவருக்கும் ஜூலியா என்பவருக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தன.  அவர்களில் ஒரே மகனாகப் பிறந்தவர் ரிச்சர்ட் வில்லியம்ஸ் (ஜூனியர்).  பள்ளிப்படிப்பை முடித்த பிறகு கலிபோர்னியாவுக்கு இடம் மாறினார்.

ல்டு விஸ்கி’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஒருவரிடம்தான் டென்னிஸ் பயின்றார் இவர். வர்ஜினியா என்ற டென்னிஸ் வீராங்கனை விளையாடுவதை தொலைக்காட்சியில் கண்ட பிறகு தனது இரு மகள்களும் அந்த விளையாட்டில் பெரும் புகழ் அடைய வேண்டும் என்று திட்டமிட்டார்.  சாதாரண திட்டமல்ல, 85 பக்கங்களுக்கு எழுதப்பட்ட திட்டம்.  தன் இரண்டு மகள்களுக்கும் நான்கரை வயது ஆனபோதே அவர்களை டென்னிஸ் விளையாட்டில் சேர்த்துவிட்டார்.  பின்னர் டென்னிஸ் அகாடமியிலிருந்து அவர்களை விலகவைத்து தானே அவர்களுக்கு டென்னிஸ் பயிற்சி கொடுக்கத் தொடங்கினார்.   தன் மகள்களுக்கு ஆடும் திறமையையும், வெல்ல வேண்டும் என்ற வெறி உணர்வையும் ஒருசேர அளித்தார்.

அடுத்த சில வருடங்களிலேயே அவர்கள் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெறத் துவங்கி விட்டார்கள் (விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன், ஆகிய நான்கு போட்டிகளையும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் என்பார்கள்).

1999 யு.எஸ். ஓபன் போட்டியில் செரினா வில்லியம்ஸ் வென்றார்.  அதற்கு அடுத்த ஆண்டு விம்பிள்டன் கோப்பையை வீனஸ் வில்லியம்ஸ் வென்றார்.  அவர் வென்றதும் ஏதோ கூரையே இடிந்து விழும்படி பார்வையாளர்கள் பகுதியில் உரக்கக் கத்தியபடி தொடர்ந்து சில நிமிடங்களுக்கு மேலும் கீழுமாக குதித்தார் அவரது  தந்தை.

ரிச்சர்டு வில்லியம்ஸ் மூன்று முறை திருமணம் செய்து கொண்டவர்.  முதல் மனைவி பெட்டி ஜான்சன் மூலம் ஐந்து குழந்தைகள் பிறந்தன.  பின் அவரை  விவாகரத்து செய்தார்.

1979ல் ஒராஸீன் ப்ரைஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.  அவர்களுக்குப் பிறந்தவர்கள்தான் வீனஸ் மற்றும் செரினா (அடுத்தடுத்த ஆண்டுகளில் இவர்கள் பிறந்தார்கள்).  பின் அவர்கள் தாயை விவாகரத்து செய்தார் ரிச்சர்டு வில்லியம்ஸ்.

அதற்கு அடுத்து ஒரு மளிகைக் கடையின் உரிமையாளராக விளங்கிய ​லஷெய்கா ஜுனைதா கிரஹாம் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.  வீனஸ் வில்லியம்சை விட இவருக்கு ஒரு வயது தான் அதிகம்!  அவர்கள் மூலமாகவும் ஒரு மகன்.  அந்த பெண்மணியையும் விவாகரத்து செய்தார்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியானது அவரது வாழ்க்கை வரலாறான ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படம்.  பின்னர் இது ஓடிடி தளத்திலும் வெளியானது.  இந்த படம் சிறந்த படத்துக்கான பிரிவில் இறுதிச்சுற்றுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

எதற்காக படத்துக்கு ‘கி​ங்’ என்ற பெயர்?  வீனஸ் வில்லியம்ஸின் வாழ்க்கை வரலாறு ஒரு தொலைக்காட்சித் தொடராக வெளியானது.   அதில் வீனஸ் தன் தந்தையை ‘கிங்’ என்று குறிப்பிட அதுவே இப்போது திரைப்படத் தலைப்பாகி இருக்கிறது.

ஜாக் பெலின் என்பவர் ஏற்கனவே எழுதிய நூல்தான் இப்போது திரைப்படம் ஆகியிருக்கிறது. தன் வரலாறு திரைப்படம் ஆவதை பற்றி அறிந்ததும் ‘இது எனக்கு விருப்பமானது அல்ல’.  இதைப் பார்த்து மக்கள் என்னை வெறுத்து விடக்கூடாது என்று கூறினார்.  (79 வயதான ரிச்சர்ட்  வில்லியம்ஸ் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்கிறார்).

‘எப்படியும் நம் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகப் போகிறது.  யாரோ ஒருவர் நம்மைப் பற்றிய அரைகுறை உண்மைகளை கூறுவதைவிட நாமே முழுமையாக உண்மைகளைக் கூறலாமே,’ என்று தீர்மானித்த ‘ரிச்சர்ட்ஸ்’ குடும்பத்தினர் இந்த திரைப்படத்தின் பின்னணியில் பங்கேற்றனர்.  திரைப்படத்தின் தயாரிப்பாளர்களாகவும் வீனஸும் செரினாவும் மாறினர்.  கதையின் நாயகன் ரிச்சர்ட் வில்லியம்ஸ் மட்டும் இதிலிருந்து ஒதுங்கிவிட்டார்.

பிரபல நடிகர் ‘வில் ஸ்மித்’ கதாநாயகனாக நடித்தார்.  இவர்  கிராமி விருது பெற்றவர்.  மென் இன் பிளாக், ஐ, ரோபோட், பர்ஸ்யூட்  ஆஃப் ஹேப்பினஸ் போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களில் தடம் பதித்தவர்.  ஏற்கனவே முகமது அலியின் வாழ்க்கை வரலாறு தழுவிய படத்தில்,  அந்த பிரபல குத்துச் சண்டை வீரரின் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் வில் ஸ்மித்.  வில் ஸ்மித் இந்தப் படத்திற்கான தனது ஊதியமாக 4 கோடி டாலரில், பாதிப் பகுதியை தன்னுடன் நடித்த நடிகர்களுக்கு வழங்கியிருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை பற்றி ‘இது எங்கள் தந்தைக்கான அஞ்சலி மட்டுமல்ல எனக்கும் என் சகோதரி செரீனாவுக்கும் உள்ள பந்தத்தையும் அழகாக விளக்கும் திரைப்படம் இது,’  என்று வீனஸ் கூறியிருக்கிறார்.

செரீனா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் உலகப்புகழ் பெற்று விட்டனர்.  ஆனால் அந்த புகழுக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்த அவரது தந்தையின் ஆழமான நம்பிக்கையும் அற்புதமான திட்டமிடலும் மேற்குறிப்பிட்ட திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...

மால் எனும் மாயா பஜார்!

-மஞ்சுளா சுவாமிநாதன் என் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ  பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும். போன வாரம் சென்னையில...

ஐம்பது வயதிலும் அசத்தும் இரும்புப் பெண்மணி!

சாதனை! -தனுஜா ஜெயராமன். பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி  ரவி.  வேலைக்குச் சென்று கொண்டே வீட்டையும் திறம்பட கவனித்துக் கொண்டு சைக்கிளிங்,...

ரவீந்திரநாத் தாகூர் என்கிற பன்முகக் கலைஞர்!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத்...