0,00 INR

No products in the cart.

சேவை குறைபாடுகளும் நுகர்வோர் உரிமைகளும்!

-தனுஜா ஜெயராமன்

பொதுவாக ஒரு பொருளை அல்லது சேவையை நாம் நுகர்வு செய்யும்போது அதில் ஏதேனும் பிரச்னைகளோ, குறைபாடுகளோ இருந்தால் அதற்கான உரிமைகளை நாம் கேட்டு பெறலாம் என்கிறது நுகர்வோர் உரிமை சட்டம். வெளிநாடுகளில் நுகர்வோர் உரிமை குறித்து ஏராளமான விழிப்புணர்வு இருந்து வருகிறது. நமது நாட்டிலும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் பல இருந்தாலும் அது பெயரளவிலேயே இருந்து வருகிறது என்பது வருத்தம் தரும் விஷயம்தான்.

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் சேவை குறைபாடு என்பது சாதாரணமானது என்ற மக்களின் மனோபாவம் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். இன்றைய பரபரப்பான உலகில் இதற்கெல்லாம் யார் நேரத்தை செலவிடுவது என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.  முதலில் ஏதேனும் சேவைகுறைபாடோ பொருட்களில் தரமில்லை என்றோ உணரும் தருணங்களில் நிச்சயமாக அதனை  அங்கேயே முறையிட்டு தீர்த்துக்கொள்ள நமக்கு முழு உரிமை உண்டு. எல்லாவற்றிற்கும் வழக்கு போடவேண்டுமென்ற அவசியம்கூட இல்லை. நாம் நேரிடையாக முறையிடும்பட்சத்தில் தரமற்ற பொருளை மாற்றி தந்துவிடுவார்கள். சேவை குறைபாடெனில் சேவையின் திறனை அதிகரிக்கவும் செய்வார்கள். குறைந்தபட்சம் நாம் எழுப்பும் கேள்விகளால் அடுத்த வாடிக்கையாளருக்காவது அந்த பிரச்னைகளை செய்யாமல் இருப்பார்கள். ஆனால், இதெல்லாம் நடக்க, நாம் கேள்வி எழுப்புவது  ஒன்றே மிக மிக அவசியம்.

நிறைய வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும்போது அதன் விலையை தரத்தை குறித்து  விசாரித்து வாங்கும் அளவிற்கு அதன் நீடித்த சேவை குறித்த விஷயங்களில் அக்கறை செலுத்துவதில்லை அல்லது அதை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பதுதான் வருத்தமான நிஜம். உதாரணமாக வீட்டு உபயோக  சாதனங்கள் வாங்கும் பலரும் அதில் வழங்கப்படும் கையேடுகளை முழுவதும் படிப்பதில்லை. அதனை பத்திரப்படுத்தி வைப்பதும் இல்லை. ஒரு புதிய பொருள் வாங்கும்போது  அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் இலவச சேவை குறைந்தபட்சம் ஒரு வருடம் இருக்கும். ஒரு வருடம் இலவச மெயின்டெனன்ஸ் எனப்படும் AMC  வசதியினை வழங்குவார்கள். அந்த சேவையை  குறிப்பிட்ட மாத இடைவெளியில் வழங்குகிறார்களா?  அவர்கள்  வருகிறார்களா முறையாக செய்து தருகிறார்களா? இல்லையா? என்பதே பலருக்கும் தெரியாது. குறிப்பிட்ட நிறுவனம் அதனை செய்யவில்லை என்பது சேவை குறைபாடே. அதே போன்று கேரண்டி, வாரண்டி குறித்தும் பலரும் கவலை கொள்வதில்லை. ஒரு பொருளுக்கான கேரண்டி காலத்தில் பொருட்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதன் உதிரி பாகங்களாகவோ அல்லது முழுவதுமாகவோ புதியதாக மாற்றி தரவேண்டும். அதன் வாரண்டி காலத்தில் இலவச பழுது பார்க்கும் செலவு அந்த நிறுவனத்தினுடையது. உதிரி பாகங்களுக்கான செலவினை மட்டும் வாடிக்கையாளர் ஏற்று கொள்ள வேண்டும். பொதுவாக கேரண்டி காலங்கள் குறைவாகவும் வாரண்டி காலங்கள் அதிக பட்சம் பத்து வருடங்களுக்கு மேலாகவும் இருக்கும். அந்த சேவையை பெற நாம் பில்லையும்,அவர்கள் சீல் செய்து தந்த கையேடுகளையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பது மட்டுமே அவசியம். இதில் ஏதேனும் சேவை குறைபாடுகளோ, பிரச்னைகளோ ஏற்பட்டால் நாம் நிறுவனத்திடம்  நேரிடையாக முறையிடலாம். அப்போது கூடுமானவரை அந்த நிறுவனமே பிரச்னைகளை சரிசெய்து தந்துவிடுவார்கள். அப்படியல்லாத பட்சத்தில் மட்டுமே வழக்கு வரை கொண்டு செல்லலாம். அதற்கான முழு உரிமையும் எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு உண்டு.

இத்தகைய சேவைகள் குறைபாடுகள் குறித்த உரிமைகள் தனியார் நிறுவனங்கள், கடைகள் மட்டுமல்ல அரசு நிறுவனங்களுக்குமே கூட பொருந்தும். சமீபத்தில் மின்கட்டணம் சரிவர கட்டியும் வருட கடைசியில் நிலுவை தொகையென ஒரு விண்ணப்பத்தை அனுப்பியிருந்தார்கள். நேரில் சென்று விளக்கம் கேட்க குறிப்பிட்ட மாதத்தில் வெறும் மினிமம் தொகை மட்டுமே கட்டபட்டுள்ளது என காரணம் சொன்னார்கள். அவர்கள் விளக்கம் கேட்ட அந்த குறிப்பிட்ட மாதங்கள் வீடு காலியாக இருந்ததற்கான வாடகை ஒப்பந்த பத்திரத்தை காண்பிக்க பிரச்சனைகள் உடனே களையப்பட்டது. இங்கும் ஆவணங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.

ஒரு பிரபல கடையில்  தள்ளுபடி தினத்தில் குறிப்பிட்ட பொருளை வாங்கியிருந்தேன்.  வீட்டில் வந்து பிரித்து பார்க்கும்போது அது உடைந்திருந்தது. மறுநாள் கடையில் கொடுத்து விளக்கம் கேட்க வேறு மாற்றி தருவதாக கூறினார்கள். அந்த குறிப்பிட்ட பொருள் ஸ்டாக் இல்லை வேறு நிறுவன பொருட்களை வாங்கி கொள்ள சொன்னார்கள். அது சற்று கூடுதல் விலை இருந்தாலும் பரவாயில்லை என கூடுதல் வித்தியாச தொகையை செலுத்த தயாராக இருந்தேன். ஆனால் நேற்று தள்ளுபடி தந்திருந்த தொகையை சேர்த்து முழு தொகைக்கு பில் செய்திருந்தார்கள். ஏனெனில் இன்று தள்ளுபடி இல்லை என்பது அவர்கள் தரப்புவாதம். அது வியாபார தந்திரமாகவும் இருக்கலாம். ஆனால் பழுதான பொருட்களை விற்பது, வேறு ஸ்டாக் இல்லை என்பது, வாடிக்கையாளரின் தவறல்ல. விற்பனையாளரின் தரப்பு தவறுகளே என ஆணித்தரமாக விளக்க சற்று இறங்கி வந்து கூடுதல் தொகையை மட்டுமே வாங்க சம்மதித்தார்கள்.

ஒரு உயர்ரக உணவகத்தில் சாப்பிட்ட தொகைக்கு வரிகள் சேர்த்து போட்ட பிறகும் அதன் கூட பிறகு பார்சல் சார்ஜஸ் என ஒரு தொகையை சேர்த்திருந்தார்கள். விளக்கம் கேட்ட பிறகு தவறுக்கு மன்னிப்பு கேட்டு அந்த கூடுதலாக வசூலித்த தொகையை திரும்ப அளித்தார்கள்.  இது, வாடிக்கையாளர்கள் பில்லை சரிபார்க்க மாட்டார்கள் என நம்பிய அவர்களது வியாபார தந்திரமாக இருக்கலாம். அதேபோன்று வேகாத உணவுகள், தரமற்ற உணவுகள், அளவு குறைவான உணவுகள் குறித்து தைரியமாக அங்கேயே நிராகரிக்கலாம் அல்லது கேள்வி எழுப்பலாம். அதை நாம் கௌரவ குறைச்சலாக நினைக்கவோ, வெட்கபடவோ ஏதுமில்லை.
பொதுவாக எங்கும் எப்போதும் சேவை குறைபாடுகளை நாம் கண்டால் தயங்காமல் தைரியமாக கேள்வி எழுப்ப வேண்டும். பத்து பேர் கேள்வி எழுப்பினால் நான்கு பேர் அதனை உணர்ந்துகொண்டு இருவராவது அந்த தவறுகளை களைய முற்படுவார்கள். இதுபோல் பலர் கேள்வி எழுப்ப அடுத்து வருபவர்களுக்காவது இதனை சரியாக செய்ய வேண்டுமே என தவறுகளை சரிசெய்ய முயல்வார்கள். இதனால் பல தவறுகள் முளையிலேயே கிள்ளி எறியப்படும்.

அவர்களிடம் கேள்வி எழுப்பும் முன்பு நாமும் சரியாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமே. நாம் வாங்கும் பொருட்களுக்கான ரசீது, கையேடுகள் மற்றும் அது குறித்த ஆவணங்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கான உரிமைகளை நாமும் கேட்டு பெற இயலும்.
இனிவரும் காலங்களில் நாம் வாங்கும் பொருட்களுக்கான சேவைகளை தயக்கமின்றி கேட்டு பெறுவோம் உரிமையுடன்!!! நுகர்வுக்கான விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் பழக்குவோம்!!!

1 COMMENT

  1. என்(லேட்)கணவரும் .எங்கள் வீட்டு மாப்பிள்ளையும் இந்த விஷயத்தில் நல்ல தெளிவு . எந்த பொருள் வாங்கினாலும் .கேரண்டி ,வாரணடி கார்டுகளுக்கென தனி ஃபைலே இருக்கிறது .

தனுஜா ஜெயராமன்
சென்னையை சேர்ந்த தனுஜா ஜெயராமன் வளரும் பெண் எழுத்தாளர். M.com படித்து அலுவலக கணக்காளராக பணிபுரியும் அவர் கதைகள் , கட்டுரைகள், ஜோக்ஸ், துணுக்குகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். பல்வேறு முன்னணிப் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. அமேசான் கிண்டிலில் அவரது சிரிப்பு கதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...