0,00 INR

No products in the cart.

ஒளி வாலி!

கதை: லேzy
ஓவியம்: சேகர்

ராமசந்திர ஐயருக்கு அன்று காலை டிபன் சற்று தாமதமாகவே வந்தது. அவருடைய மூத்த பேத்தி ஸ்வேத்தாதான் அன்று டிபன் எடுத்து வந்தாள். “தாத்தா இந்தாங்கோ. உப்புமா, தொட்டுக்க நீங்க கேட்டது போலவே சக்கரை போட்டு கொண்டு வந்திருக்கேன். மெதுவா சாப்பிடுங்கோ, நான் சாப்பிட்டுவிட்டு உங்களுக்கு காப்பி எடுத்துன்டு வரேன்” என்று கூறிக்கொண்டே படி இறங்கினாள் குழந்தை.

“நல்ல சூடா எடுத்துண்டு வா” என்று சொல்லி, ஒரு வாய் உப்புமாவை சக்கரை தொட்டு சாப்பிட தொடங்கினார். மாமி ஞாபகம் வந்தது. “புண்ணியவாதி, அவள் போய் ஏழு வருஷங்கள் முடிந்துவிட்டது. அதுக்கப்புறம், அவரது மூத்த பையன் மொட்டை மாடியில் ஒரு ரூம் கட்டி, அதிலே அவரை தங்க வைத்து விட்டான்.

“அப்பா, மாடி நல்ல Privacy, Safety யும் கூட. உங்களுக்கு இங்க ஏ.சி., டீ.வி, எல்லா வசதியும் பண்ணி கொடுக்கிறேன். வேளாவேளைக்கு சாப்பாடு, டிபன், காப்பியெல்லாம் டான்னு மாடிக்கே வந்துடும்” என்று கூறியிருந்தான். கால்வாசி மாடியில்தான் ரூம் கட்டப்பட்டிருந்தது. மீதி இடம் காலியாக த்தான் இருந்தது. அங்கேதான் அவர் காலையிலும் மாலையிலும் நடப்பதுண்டு.

ரோட்டில் இருந்த பெரிய தூங்குமூஞ்சி மரங்களும் இவர் வீட்டின் மாமரமும், தென்னை மரங்களும் குடை பிடித்தார்போல மாடியில் நல்ல நிழல் கொடுத்தது. முதல் மாடியில் இவரது இரண்டாம் மகன் குடும்பமும், Ground floor ல் மூத்த மகன் குடும்பமும் வசித்து வந்தது.

முதலில் ராமசந்திர ஐயருக்கு, “என்னடா, இப்படி தனியாக மொட்டை மாடியில் கொண்டு தள்ளிவிட்டார்களே?” என்று தோன்றியது. ஆனால், நாட்பட நாட்பட, அவருக்கு இந்த தனிமையும் ஏகாந்தமும் மிகவும் பிடித்துவிட்டது.

அன்று டிபன் சாப்பிட்டுவிட்டு, மொட்டை மாடியில் மர நிழலில் போடப்பட்டிருந்த ஈஸி சேரில் சாய்ந்தார். வானத்தைப் பார்த்தார். முழு நீல வண்ணமாக காட்சி அளித்தது. ஒரே ஒரு சின்னஞ்சிறு வெண்மேகம் மெதுவாக கிழக்கிலிருந்து வடக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அடர்ந்த மரக்கிளைகளுக்கிடையே மறைந்தபடி உட்கார்ந்துகொண்டு குயில்களும், கிளிகளும் மைனாக்களும் ஏதோ புரியாத மொழியில் பேசிக் கொண்டிருந்தன. தென்னங்கீற்றின் மேல் அமர்ந்துகொண்டு ஊஞ்சலாடிக் கொண்டிருந்த அண்டங்காக்காயும் கரைந்து கொண்டிருந்தது. தூரே மாம்பலம் ரயில் நிலையத்தில் ரயில் ஓடும் சப்தமும், காசி விஸ்வநாதர் கோயில் மணியோசையும் ஒன்றாய் கலந்து காற்றில் மிதந்து வந்து இவர் காதிற்கு எட்டியது. லேசான தூக்கம் கண்களை சொக்கியது. எங்கும் அமைதி நிலவியது. அவருக்கு காவிரி ஆறும் கும்பகோணமும் ஞாபகத்திற்கு வந்தன.

ராமசந்திர ஐயர் பூர்வீகம் கும்பகோணம்தான். அந்த படித்துறை, ஆற்றங்கரை. அதில் ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள், அரச மரத்தடி பிள்ளையார், திண்ணையில் ஆரம்பப் பள்ளி என்று எல்லாம் நினைவலைகளாக அவர் மனத்தில் ஓடியது. ஆதி-கும்பேஸ்வரர் கோயிலுக்கு பின்னால் ஒரு தெருவில்தான் அவர் வீடு இருந்தது. நல்ல பெரிய வீடு. பின்னால் தோட்டம், கிணறு எல்லாம் இருந்தது.

அப்பொழுது ராமசந்திர ஐயருக்கு சுமார் 7 வயசு இருக்கும். ஒருநாள் சாப்பிட்டுவிட்டு, எல்லோரும் தூங்கச் சென்றனர். சிறுவன் ராமசந்திரனும், தன் தாய் தந்தையோடு வாசலில் திண்ணையை ஒட்டிய அறையில் படுக்கச் சென்று விட்டான். ஏனோ அறைக்கு சிறுவன் ராமசந்திரனுக்கு தூக்கம் வரவில்லை. மெதுவாக எழுந்து ஜன்னல் வழியாக வாசல்தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ஊரே அடங்கிவிட்டிருந்தது. மணி சுமார் 11.30 இருக்கும்.

அப்பொழுது ஒரு மனிதர் மெதுவாக நடந்துவந்து இவர்கள் வீட்டு வாசலில் உள்ள பெரிய அரச மரத்தடியில் நின்றார். சாலையை உற்று நோக்கியபடி நின்று கொண்டிருந்தார். உடம்பில் எந்த அசைவும் இல்லை. அந்த நபர் வேட்டி மட்டும் அணிந்திருந்தார். அதுவும் முக்கால் வேட்டிதான். காலில் செருப்பு இல்லை. லேசாக நரைத்த முடி, நன்கு வளர்ந்த தாடி மார்பை எட்டியது. சிறுவன் ராமசந்திரன் அவரை கூர்ந்து கவனித்தபொழுது, அந்த நபர் முகத்தில் ஒரு லேசான புன்முறுவல் இருப்பது தெரிந்தது.

சுமார் அரை மணி நேரம் அந்த நபர் கற்சிலை போல அசையாமல் நின்றபடி சாலையை ஊற்று நோக்கியபடி நின்றுகொண்டு புன்முறுவல் செய்து கொண்டிருந்தது, சிறுவன் ராமசந்திரனுக்கு ஒருவித அச்சத்தை உருவாக்கியது. அப்பொழுது அந்த நபரின் உடலிலிருந்து ஒரு மங்கிய ஒளி தோன்றிற்று. ராமசந்திரனுக்கு தூக்கிவாரிப் போட்டது. அவன் காண்பது உண்மையான ஒளிதானா, இல்லை தன் கண்கள்தான் தன்னை ஏமாற்றுகின்றனவா என்று ஒன்றும் புரியாமல் நெஞ்சு படபடக்க அந்த நபரை பார்த்தவண்ணம் ஜன்னலை பிடித்துக்கொண்டு நின்றான் சிறுவனாகிய ராமசந்திரன். அந்த மங்கலான மஞ்சள் நிற ஒளி அந்த நபர் உடல் முழுவதும் உள்ளிருந்து வருவதுபோல தோன்றிற்று. அந்த பித்தரை பார்க்கும்பொழுது ராமசந்திரனின் உடல் ஒரு குலுங்கு குலுங்கியது.

கீழே படுத்திருந்த அவன் தந்தை புரண்டு படுக்கும்பொழுது, ராமசந்திரன் ஜன்னல் அருகே நின்று கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, “டேய், ராமு, இன்னுமா தூங்கல, அடி வாங்கப் போற, வந்து படு” என்றார். சட்டென்று ராமசந்திரன் படுத்துக்கொண்டு தந்தையை கட்டிப் பிடித்துக் கொண்டான்.

“என்னடா, உடம்பு நடுங்குது. எதையாவது பார்த்து பயந்து போய்விட்டாயா?”

“இல்லைப்பா” என்று பயத்தில் பொய் சொன்னது குழந்தை.

மறுநாள் காலை வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த தன் தாத்தாவின், தான் இரவு பார்த்த விஷயத்தைச் சொன்னான் பாலகன் ராமு. அதை முழுவதுமாக கேட்டு தாத்தா, ஏதோ பேய் அறைந்தார் போல அமர்ந்துவிட்டார்.

“டேய் ராமு, இன்னுமாடா நீ குளிக்க வரல. பள்ளிக்கூடம் போற எண்ணம் இல்லையா உனக்கு” என்று அவன் தாய் அதட்டிய குரல் கேட்டு, சிறுவன் ராமு எழுந்து உள்ளே ஓடினான்.

அன்று பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்தபொழுது ராமசந்திரன் தன் வீட்டு வாசலில் அக்கம் பக்கத்தினர் திண்ணையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். யாரும் உரக்க பேசவுமில்லை. யார் முகத்திலும் சிரிப்பும் இல்லை. மெதுவாக குழந்தை உள்ளே சென்றது. ரேழியைத் தாண்டும் பொழுதே வீட்டிலிருந்து பெண்கள் விசும்பும் சப்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்தபொழுது அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது. தாத்தாவை படுக்க வைத்து மாலை போட்டிருந்தார்கள். அவரை சுற்றி அம்மா, சித்தி, அத்தை, பாட்டி எல்லாம் உட்கார்ந்துகொண்டு அழுது கொண்டிருந்தார்கள். அப்பாவும் மீதி ஆண்களும், ஆளுக்கு ஒரு தூணில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தனர்.  அவள் பாட்டி இவனை பார்த்துவிட்டு சொன்னாள், “குழந்தை பள்ளிகூடத்திலிருந்து வந்துட்டான்டீ. வாடா குழந்தை, வந்து தாத்தாவை பாருடா. கண்ணை மூடின்டு திறக்க மாட்டேன்னு அடம் பிடிக்கறாடா. நீ வந்து தாத்தாவை கூப்பிடுடா, நீ கூப்பிட்டா எழுந்திருவாடா செல்லம்” என்று சொல்லி முடிப்பதற்குள் எல்லோரும் ‘ஓ’வென்று அழுதனர்.

து முடிந்து எழுபது எழுபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. தூக்கம் கலைந்து எழுந்தார். ராமசந்திர ஐயர். அப்பொழுது அவர் கடைக்குட்டி பேரன் மேலே வந்தான். அவனைப் பார்த்தும் ராமசந்திர ஐயருக்கு ஒரு சந்தோஷம் பிறந்தது. “வாய்யா, பெரிய மனுஷா வா, வா” என்றார். பேரன் விகாஷ், “தாத்தா நேத்திக்கு என்ன ஆச்சு தெரியுமா?” என்றான். “என்னடா, ஸ்கூல்ல படிக்க சொல்லிட்டாளா?” என்று தான் சொன்ன ஜோக்குக்கு தானே சிரித்துக் கொண்டார்.

“இல்லை தாத்தா, நேத்திக்கு நைட் எனக்கு தூக்கமே வரலையா, நான் எங்க ரூம் ஜன்னல் வழியா பார்த்துண்டிருந்தேன். அப்போ Dirtyயா ஒரு ஆள் ரோட்டுல நம்ம வீட்டு வாசல்ல நின்னுன்டு ஈஈனு சிரிச்சின்டே இருந்தான் தாத்தா. அவன் Body லிருந்து Yellow கலர் லைட் மாதிரி வந்தது தாத்தா. நான் பயந்துட்டேன். அப்போ எங்க அப்பா, டேய் வந்து படுடான்னு மிரட்டினாறா, நான் ஓடி போய் படுத்துட்டேன் தாத்தா” என்றான்.

“டேய், விக்காஷ், It’s getting late for School. வரய்யா இல்லையா” என்று அவர் மருமகள் கத்தும் சப்தம் கேட்டு, குழந்தை விக்காஷ் கீழே இறங்கி ஓடினான். ஓடும்பொழுது, “தாத்தா நாம evening பேசுவோம்” என்று சொல்லிக்கொண்டே சென்றான்.

அவன் போன பாதையை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார் ராமசந்திர ஐயர்.

1 COMMENT

  1. எதிர்பார்த்த முடிவு…ஆனாலும் கோர்வையாய் கதை சொன்ன விதம் அருமை…வாழ்த்துக்கள்

லேZY
‘லேzy’ என்ற புனைப்பெயரில் தனக்கே உரிய, இயல்பான பாணியில், கதை – கட்டுரைகளை எழுதி வருகிறார் ஹரி. தினசரி தான் சந்திக்கும், பழகும் மனிதர்களையே தன் கதைகளுக்கான கதாபாத்திரங்களாக மையப்படுத்தி எழுதுவது இவர் சிறப்பு. அதனாலேயே, அக்கதாபாத்திரங்களின் வயதையொத்த வாசகருக்கு, ஏதோ ஒரு வகையில் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போகும் அனுபவம் கிடைக்கிறது.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...